புதன், 23 ஏப்ரல், 2014

நினைவோட்டம் 78எங்கள் புனித வளவனார் கல்லூரியில் நான் படித்தபோது திங்கள் முதல் 
வெள்ளி வரை காலை 10 மணிக்கு துவங்கும் வகுப்புகள், சனிக்கிழமை 
மட்டும் காலை 9 மணிக்கே துவங்கும்.


அன்று நடத்தப்படும் முதல் வகுப்பு  பாடம் பல்கலைக் கழக பாடத் 
திட்டத்தில் இல்லாத ஒன்று. அதனால் அந்த பாடத்திற்கு பல்கலைக் கழகம் 
நடத்தும் தேர்வுகிடையாது. கிறித்துவ மாணவர்களுக்கு Catechism  
(சமயத்துறையில் வினாவிடையாக கற்பிப்பது) என்ற பாடமும், மற்ற 
மதத்தினருக்கு அறநெறி அறிவியல் (Moral Science) என்ற பாடமும் உண்டு.

பொதுவாக எங்கள் கல்லூரியில் விடுப்பு (Leave) எடுக்க வேண்டுமென்றால் 
விடுதியில் தங்கி இருந்து படித்தால் விடுதிக் காப்பாளரும், வீட்டிலிருந்து 
வந்து படித்தால் பெற்றோர் அல்லது காப்பாளரும் கடிதம் கொடுத்தால்தான் 
விடுப்பு தருவார்கள். ஆனால் கல்லூரிக்கு வந்துவிட்டு இந்த வகுப்புக்கு 
மட்டும் விடுப்பு கேட்டால் தர மாட்டார்கள். கண்டிப்பாக ஒவ்வொருவரும் 
இந்த வகுப்புக்கு வருகை தரவேண்டும்.

இந்த வகுப்பை முழு நேர ஆசிரியர்கள் எடுக்கமாட்டார்கள். கிறித்துவ 
குருமார்களாக ஆக வேண்டி பயிற்சியில் இருப்போர் தான் வந்து பாடம் 
எடுப்பார்கள். அவர்கள் அனைவரும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு 
அல்லது மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படிப்போராக இருப்பார்கள்.

எங்கள் அறநெறி அறிவியல் பாடத்தில், தனி மனித ஒழுக்கம் பற்றியும், 
தவறு செய்வது பாவம் என்றும், அப்படி செய்வோர் தண்டிக்கப்படுவர் 
என்றும்,  தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்போருக்கு பாவ மன்னிப்பு 
உண்டும் என்பது போன்ற நீதி போதனைகள் இருக்கும்.

ஆண்டு இறுதியில் பல்கலைக் கழகத் தேர்வுக்கு முன்பு இந்த பாடத்திற்கு 
கல்லூரியில் தேர்வு நடக்கும். தேர்வில் முதலாவதாக வரும் மாணவனுக்கு 
பரிசு உண்டு. நான் அதுபற்றி மேலும் சொல்லாததிலிருந்து நான் பரிசு 
எதுவும் பெறவில்லை என்பதை அறிந்துகொண்டிருப்பீர்கள்!

அப்போதெல்லாம் S.S.L.C  மற்றும் PUC படிப்போருக்கு  ஆண்டு இறுதித் 
தேர்வுக்கு முன் டிசம்பர் மாதம் நடக்கும் அரை ஆண்டுத் தேர்வு Selection  
தேர்வு எனப்படும். அதில் வெற்றி பெற்ற மாணவர்களே  இறுதித் தேர்வை 
எழுத அனுமதிக்கப் படுவார்கள். 

எங்கள் கல்லூரியில் அரை ஆண்டுத் தேர்வான Selection தேர்வுக்கு முன் 
ஒரு தேர்வு நடத்துவார்கள்.அது ஒரு  Revision தேர்வு போல.அதில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை அழைத்து அறிவுரை கூறி Selection தேர்வுக்கு 
நன்றாக படிக்க சொல்லி ஊக்கப்படுத்துவார்கள்.

இந்த தேர்வு நடத்துவதன் காரணமே எல்லா மாணவர்களும் Selection  
தேர்வில் வெற்றி பெற்று ஆண்டு இறுதித் தேர்வை எழுதவேண்டும் 
என்பதால் தான்.                                                                      

எங்கள் புனித வளவனார் கல்லூரியில் படிப்புக்கு மட்டும் தான் 
முக்கியத்துவம் என்று எண்ணவேண்டாம். விளையாட்டிற்கும் இன்ன பிற 
பாடத் திட்டம் சாரா செயல்களிலும் ( Extra curricular activities) மாணவர்கள் 
பங்கேற்க ஊக்குவிப்பார்கள்.

நான் முன்பே நினைவோட்டம் 72 இல் சொன்னதுபோல் கேரளாவைச் 
சேர்ந்த திரு ஜோசப் அவர்கள் தான் எங்கள் கல்லூரியில் உடற்கல்வி 
ஆசிரியர். No.4.Madras Group N.C.C.R என்ற நான் சேர்ந்திருந்த தேசிய 
மாணவர் படைக்கும் அவரே Commanding Officer. மிகவும் கண்டிப்பானவர்.
     
மாணவர்கள் அனைவரும் கட்டாயம் ஏதாவது ஒரு விளையாட்டைத் 
தேர்ந்தெடுத்து விளையாடவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார். 
ஏனோ தெரியவில்லை எனக்கு விளையாட்டில் அத்தனை ஈடுபாடு 
ஏற்படவில்லை. இருந்தாலும் அவருக்கு பயந்து கொண்டு விளையாட்டுக்கான நேரங்களில் நானும் பெயருக்கு கால் பந்து விளையாட்டில் பங்கு 
பெறுவதுண்டு.

உடற்கல்வி ஆசிரியராக திரு ஜோசப் அவர்களுடைய ஊரில் பணியாற்றும் 
வாய்ப்பு எனக்கு பிற்காலத்தில் கிடைக்குமேன்றோ, 34  ஆண்டுகள் கழித்து 
அவரை திரும்பவும் நினைக்கப் போகிறேன் என்றோ அப்போது தெரியவில்லை. 
1993-97 ஆண்டுகளில் கேரளாவில் கோட்டயத்தில் உள்ள எங்கள் வங்கியின் 
கிளையில் முதன்மை மேலாளராக பணியாற்றியபோது தான் அந்த நிகழ்வு 
நடந்தது.

ஒரு நாள் ஒரு வயதான பெண்மணியும் அவர் மகனும் என் அறைக்கு 
வந்தனர்.அந்த பெண்மணியின் மகன், தான் தென் அமெரிக்க நாடான அர்ஜண்டைனாவில் பணி புரிவதாகவும், தனது தாயாரின் சேமிப்பு கணக்கு  
மற்றும் அவரது NRE கணக்கு பற்றி சில ஐயங்களை கேட்க விரும்புவதாகவும் சொன்னார்.

அவர் கேட்ட விவரங்களை சொன்ன பிறகு  என்னைப் பார்த்து உங்கள் 
பெயரையும் நீங்கள் பேசுவதையும் பார்த்தால் தமிழர் போல் தெரிகிறதே. 
எந்த ஊர்?’ எனக் கேட்டார். நான் பதில் சொன்னதும் திருச்சி சென்றதுண்டா?’ 
என்றார்.

அங்குதான் புனித வளவனார் கல்லூரியில் நான் புகுமுக வகுப்பு படித்தேன். 
என்றதும், அவர் மகிழ்ச்சியோடுஎன் தந்தை அங்குதான் உடற்கல்வி ஆசிரியராக இருந்தார்.உங்களுக்குத் தெரிந்திருக்குமே என்றதும் எனக்கு ஒரே ஆச்சரியம். 


திரு ஜோசப் அவர்களின் மகனா நீங்கள்? கண்டிப்புக்கு பெயர் போன எங்கள் ஆசிரியரின் மகனை பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவர் எப்படி இருக்கிறார்? 
அவரை பார்க்க முடியுமா?’என்றேன்.

உடனே அவர் என் தந்தை காலமாகிவிட்டார். அவரின் மாணவர் ஒருவரை 
எங்கள் ஊரிலேயே பார்ப்பதும், அவரை நீங்கள் இன்னும் நினைவு 
வைத்திருப்பதை அறிவதில் எனக்கும் மகிழ்ச்சிதான். எனக் கூறிவிட்டு 
அவர் தாயாரிடம் என்னைப்பற்றி மலையாளத்தில் சொன்னார்.  

அதைக் கேட்டதும் அவர் முகத்தில் ஏற்பட்ட சந்தோஷத்தை என்னால் 
காண முடிந்தது. அவரிடம். சொன்னேன்.அம்மா. உங்களுக்கு சேவை 
செய்வது என் ஆசிரியருக்கு செய்வது போல் உள்ளது.எந்த உதவி 
வேண்டுமானாலும் தயங்காமல் சொல்லுங்கள். என்றேன்.அதற்கு 
அவர் நன்றி சொல்லிவிட்டு விடைபெற்று சென்றார்.

சிலரை, அதுவும் ஆசிரியர்களை எப்போதும் மறக்காதிருக்க இது போன்ற 
நிகழ்வுகள் நடக்கும் போலும்.   

எனக்கு விளையாட்டில் ஈடுபாடு ஏற்படாததற்கு  ஒரு சில காரணங்கள் 
உண்டு. அரியலூரில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் ஆண்டு 
விழாவில் நடந்த ஒட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடியபோது 
என்னோடு ஓடி வந்த பையன் என் காலை (வேண்டுமென்றோ அல்லது 
தெரியாமாலோ) தட்டியதால், எல்லோர் முன்னாலும் உருண்டு கீழே 
விழுந்தது எனக்கு அவமானமாகப் பட்டது. அதற்குப் பிறகு விளையாட்டு 
மைதானம் என்றாலே எட்டிக்காய் தான்.

எனக்குத் தான் விளையாட்டில் ஈடுபாடு இல்லையே தவிர  என் சகோதரர்கள் நால்வரில் மூவர் விளையாட்டு வீரர்களாக இருந்தார்கள். தமிழ் நாடு மின் வாரியத்தில் முதன்மைப் பொறியாளராகவும், மின்வாரிய இயக்குனர் குழுவில் 
தொழில் நுட்ப உறுப்பினராகவும் (Technical Member) இருந்த என்   
மூத்த அண்ணன் திரு மகாலிங்கம் ஒரு கோல்பந்து விளையாட்டு(Hockey) வீரர். வேளாண் மரபியல் விஞ்ஞானியான என் இரண்டாவது அண்ணன் முனைவர் சிவசுப்ரமணியன் ஒரு கால் பந்து (Foot Ball) விளையாட்டு வீரர். தமிழ்நாடு 
கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்த என் நான்காவது அண்ணன் முனைவர் ஞானப்பிரகாசம் ஒரு குத்துச்சண்டை 
(Boxing) வீரர்.

மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (District Institute for Education 
and Training) பேராசிரியராக பணியாற்றிய என் மூன்றாவது அண்ணன் 
திரு சபாநாயகம் அவர்கள் பல்கலைக் கழகத்தில் படிக்கும் நேரம் தவிர 
மற்ற நேரங்களில் கதை எழுதுதல் ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல் 
என்ற போன்ற கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தததால் எந்த விளையாட்டிலும் அவர் அதிகமாக ஈடுபாடு கொண்டிருக்கவில்லை.

அவரோடு தங்கி மூன்று ஆண்டுகள் படித்ததால் அவருடைய தாக்கமோ 
என்னவோ எனக்கும் படம் வரைதல் போன்ற  செயல்கள் . மேல் ஈடுபாடு 
ஏற்பட்டதே தவிர விளையாட்டில் அல்ல. அதனால் பள்ளியிலும் 
விளையாட்டுக்கான நேரங்களில் நானும் கும்பாலோடு கும்பலாக ஏதேனும் 
ஒரு விளையாட்டை விளையாடியதுண்டு.

ஆனால் பின்னாட்களில் வங்கியின் தலைமையகத்தில் பணியாற்றியபோது 
உடுப்பியில் நடக்கும் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட (Ball Badminton) 
போட்டிகளைப் பார்த்ததும் நாமும் விளையாடினால் என்ன என்ற எண்ணம் 
வந்தது. 

ஆனால் அப்போது என்னோடு பணியாற்றிய நண்பர் திரு பரமேஸ்வரன் 
(அவர் அந்த விளையாட்டில் பல பரிசு பெற்றவர்) இதைவிட நீங்கள் 
இறகுப்பந்து (Shuttle Cock) விளையாட்டை சுலபமாக கற்றுக்கொள்ளலாம்.
நான் கற்றுத்தருகிறேன். என சொல்லி கற்றுக் கொடுத்தார்.

மூன்று ஆண்டுகள் அவரோடு விளையாடி பெற்ற அனுபவம் பின்பு 
கடலூரில் வங்கியாளர்கள் மன்றம் (Bankers Club) நடத்திய இறகுப்பந்து 
இரட்டையர் போட்டியில் இரண்டாம் பரிசு பெற உதவியது.
நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி

20 கருத்துகள்:

 1. வணக்கம்

  நன்றாக உள்ளது... தொடருங்கள்...ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

   நீக்கு
 2. வாழ்வில் எத்தனை எந்தனை மாற்றங்கள்... திருப்பங்கள்... சில ஆசிரியர்களை இல்லை இல்லை வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுத்த குருக்களை மறக்க முடியாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 3. படிக்க சுவாரஸ்யமான சுகமான நினைவலைகள்!
  த.ம - 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 5. //அதில் வெற்றி பெற்ற மாணவர்களே இறுதித் தேர்வை
  எழுத அனுமதிக்கப் படுவார்கள். //


  அதில் தோல்வியுற்றவர்கள் என்ன செய்வார்கள்? மீண்டும் அதே வகுப்பில் படிப்பார்களா?

  இன்றைய காலத்தில், ஆசிரியர்களும் மாணவர்களும் மாறிவிட்டார்கள். தங்கள் காலம் போல ஒன்றிரண்டுபேர் இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! Selection தேர்வில் தோல்வியுற்றவர்கள் அந்த ஆண்டு தேர்வு எழுத முடியாது. மறு ஆண்டு தான் எழுதலாம்.

   நீக்கு
  2. மறு ஆண்டு எழுதலாம். ஆனால் மீண்டும் அதே பள்ளி, கல்லூரியில் படித்து எழுத முடியுமா, அல்லது தனியாக வீட்டிலிருந்து படித்து எழுதவேண்டுமா? நாங்கள் படிக்கும் காலத்தில் தோல்வியடைந்த பாடங்களை மற்றும் மீண்டும் எழுதினால் போதுமானது. தாங்கள் படித்தபொழுது ஒவ்வொருமுறையும் அனைத்து பாடங்களையும் எழுதவேண்டுமென்று நினைக்கிறேன்.

   நீக்கு  3. Selection தேர்வில் வெற்றி பெறாதவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில்/கல்லூரியில் இறுதி ஆண்டு வரை படிக்கலாம். ஆனால் எல்லா பாடங்களையும் மறு ஆண்டுதான் எழுதமுடியும். இறுதி ஆண்டுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள். எந்த பாடத்தில் தோல்வியடைந்தார்களோ அதை மட்டும் திரும்ப எழுதினால் போதும்.

   நீக்கு
 6. ஹாக்கியை கோல்பந்து என்று குறிப்பிடுவதை இப்போதுதான் காண்கிறேன். நல்ல தமிழாக்கம். ஜோசப் என்று பெயர் வைத்தாலே கண்டிப்பான பேர்வழிகளாகத்தான் இருப்பார்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நான் முன்பே சொன்னபடி ஜோசப் என்ற பெயருள்ளவர்கள், படைக்கும் திறன் கொண்டவர்களாகவும், சில சமயம் பிடிவாதம் கொண்டவர்களாகவும், தன் மதிப்பு குன்றாதவர்களாகவும் இருப்பார்களாம்!

   கண்டிப்பானவர்கள் தான் கருணையுடன் இருப்பார்கள். இது என் சொந்த அனுபவம்.

   நீக்கு
 7. உங்கள் இந்தப் பதிவு எனக்கு ஒரு பதிவு எழுதக் கரு கொடுத்துவிட்டது. நினைவுகள் சுகமானவை/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! எனது பதிவு தாங்கள் ஒரு பதிவிட கரு கொடுத்துவிட்டது என்பதில் மகிழ்ச்சியே.

   நீக்கு
 8. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  பதிலளிநீக்கு
 10. இத்தணை நாட்கள் இவற்றை படிக்கவில்லையே என்று வருந்துகிறேன் மற்றவற்றையும் படிக்க வேண்டும். எனது தமிழை செப்பனிட உதவும்🙏

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரகுநாதன் அவர்களே! எனது பதிவு தங்களுக்கு உதவுமானால் மகிழ்ச்சியே!

   நீக்கு