வெள்ளி, 11 ஏப்ரல், 2014

கடவுச்சீட்டை(Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 2Navins Presedium என்ற பெயரில் உள்ள கட்டிடத்தில் உள்ள இரண்டு தொகுப்புகளில் (Blocks) எந்த தொகுப்பில்  Passport Seva Kendra இயங்குகிறது என்பதை  அங்கிருந்த பாதுகாப்பு ஊழியரிடம் விசாரித்து அது இரண்டாவது தொகுப்பில் இயங்குவதை அறிந்து அந்த கட்டிடத்தை அடைந்தோம்.


அந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் PSK இருந்ததால் மின்தூக்கி (Lift) இருந்தும் நடந்தே செல்லலாம் என நினைத்து படியருகே சென்றபோது, மேலே செல்ல வழிவிட்டு வரிசையாய் ஒருவர் ஒருவராய் ஒவ்வொரு படியிலும் துவாரபாலகர்கள் போல் அமர்ந்திருந்தனர்.

ஏன் இவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். ஒரு வேளை இன்னும் அலுவலகம் திறக்கவில்லையோ என நினைத்து மேலே சென்று பார்த்தபோது, அலுவலகம் திறந்திருப்பதையும், சிலர் அவர்களுக்கு கொடுத்த நேரத்தில் உள்ளே சென்று முன்னிலையாக காத்துக்கொண்டு நிற்பதையும்  கண்டோம்.

அந்த இடம் சிறியதாக இருந்ததால் எங்களைப்போல் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வந்தவர்கள் அங்கு நிற்க கூட இடம் இல்லாததால் வரிசையாய் படியில் அமர்ந்திருக்கிறார்கள் என அறிந்து நாங்களும் திரும்ப கீழே வந்து  அந்த படிகளில் இடம் இல்லாததால் அடித்தளம் (Basement) செல்லும் படியில் அமர்ந்துகொண்டோம்.

என் மகளுக்கு மதியம் 12.45 க்குத்தான் முன்னிலையாகவேண்டும் என்றிருந்தாலும் காலை 11.55 மணிக்கே நாங்கள் சென்றுவிட்டதால் வேறு வழியின்றி காத்திருக்கவேண்டியதாயிற்று. இந்த இடத்தில் PSK வை குறை சொல்லிப் பயனில்லை. இடம் இல்லாத காரணத்தால் நெருக்கடியைத் தவிர்க்க வேண்டித்தான் 15 மணித்துளிகள் இடைவெளியில் ஒவ்வொருவருக்கும் நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே சென்றது நம் குற்றம் அல்லவா?

என் மனைவியும் மகளும் பேசிக்கொண்டிருக்க, நான் எனது கைபேசியில் Sudoku விளையாடிக்கொண்டு நேரத்தைக் கழித்தேன். சரியாக 12.40 மணிக்கு என் மகள் முதல் தளம் செல்ல ஆவணங்களோடு புறப்பட்டபோது, அவளிடம் உனது வேலை முடிந்ததும் உடனே வந்து பங்கீட்டு அட்டையை  (Ration card) அம்மாவிடம் கொடுத்துவிடு.ஏனெனில் அவளுக்கும் அதனுடைய படியைத்தான் (Copy) முகவரி சான்றாக கொடுத்திருக்கிறேன். என்றேன்.அவளும் சரி எனக் கூறி சென்றாள்.

என் மனைவிக்கு முன்னிலையாக ஒதுக்கப்பட்ட நேரம் மதியம் 1.45 என்பதால் அதுவரை படியிலேயே அமர்ந்து காத்திருந்தோம். எப்படியும் என் மகள் அவளது வேலையை முடித்துவிட்டு மதியம் 1.30 மணிக்கு வந்துவிடுவாள். அவளிடம் பங்கீட்டு அட்டையைப் பெற்று உள்ளே செல்லலாம் என எண்ணியிருந்த எங்களுக்கு அவள் மதியம் 1.40 வரை வெளியே வராதது ஆச்சரியத்தையும் கவலையும் தந்தது.

பங்கீட்டு அட்டையின் மூல ஆவணம் இல்லாவிட்டால் ஆவணங்கள் சரி பார்க்கும் இடத்தில் திருப்பி அனுப்பிவிடுவார்களே என எண்ணி உடனே அவளுக்கு இன்னுமா வேலை முடியாவில்லை?’ என குறுஞ்செய்தி அனுப்பியதற்கு அவள் மதியம் 1.30 மணியிலிருந்து 2 மணி வரை உணவு இடைவேளை என்பதால் காத்திருப்பதாக பதில் அனுப்பினாள்.

உணவு இடைவேளை நேரத்தில் ஏன் சந்திப்பு முன்பதிவு (Appointment) தருகிறார்கள் எனத் தெரியவில்லை. சரி வந்தது  வரட்டும் என எண்ணி மதியம் 1.40 க்கு நானும் என மனைவியும் முதல் தளம் சென்றோம். அங்கிருந்த ஒரு பெண் ஊழியர் மதியம் 1.45 க்கு முன்னிலையாகவேண்டியவர்கள் மட்டும் வரிசையில் நில்லுங்கள் என்றார்.
 
நாங்கள் அவ்வாறே நின்றதும் அந்த பெண் ஊழியர் சரியாக 1.45 மணிக்கு எல்லோரையும் விண்ணப்ப படிவ இரசீதை சரி பார்த்து உள்ளே அனுப்பத் தொடங்கினார். என் மனைவியை  உள்ளே செல்ல அனுமதித்தபோது நானும் அவளுடன் செல்ல நடந்தேன். அவர் என்னிடம் எங்கே உங்களின் விண்ணப்ப படிவ இரசீது?’ என்று கேட்டதற்கு நான் மூத்த குடிமக்களுக்கு துணையாக ஒருவர் செல்லலாம் என்பதால் என் மனைவிக்கு துணையாக வந்திருக்கிறேன். என்றேன்.
 
அவர் என் பேச்சை நம்பாமல் என் மனைவியிடம் என்ன நீங்கள் Senior Citizen?’ என்ற போது, நான் வேண்டுமானால் Passport ஐ பார்த்து தெரிந்துகொள்ளுங்களேன்.  என்றேன். அவர் ஒன்றும் சொல்லாமல் என்னையும் உள்ளே அனுப்பினார். அவர் அவ்வாறு கேட்டது என் மனைவிக்கு மகிழ்ச்சியே. காரணம் சொல்லவா வேண்டும்? 
  
உள்ளே சென்றதும் நேரே இருந்த  Token தரும் Counter க்கு சென்று  வரிசையில் நின்றோம். முழுதும் குளிரூட்டப்பட்டிருப்பத அந்த அறையில் உட்கார இருக்கைகள் இருந்தும் உட்கார வேண்டியிருக்கவில்லை. அந்த Counter இல் இருந்தவர்கள் TCS நிறுவனத்தை  சேர்ந்தவர்கள் எனக் கேள்விப்பட்டேன்.

எங்கள் வரிசையில் முன்னால் இருந்தவர் ஏதோ பல ஐயங்கள் பற்றி கேட்டபோதும் அந்த பெண் ஊழியர் சளைக்காமல் புன்முறுவலுடன் பதிலளித்துக்கொண்டு இருந்தார். அதற்குள் அடுத்த Counter இல் இருந்த ஆண் ஊழியர் நாங்கள் நின்று கொண்டு இருப்பதைப் பார்த்து எங்களுக்கு உதவ என் மனைவியிடமிருந்து விண்ணப்ப இரசீதை வாங்கிக்கொண்டார்.

(இந்த இடத்தில் அரசு ஊழியர்கள் இருந்திருந்தால் இப்படி நடந்துகொண்டு இருப்பார்களா என்ற கேள்வி என் மனதில் எழாமல் இல்லை. ஏனென்றால் தன்னுடைய Counter எதிரில் பொது மக்கள் நின்றுகொண்டு இருந்தால் கூட அப்போது கைப்பேசியில் பேசிக்கொண்டும் அல்லது சக ஊழியரிடம் அரட்டை அடித்துக்கொண்டும் இருப்பதைத்தானே பார்க்கிறோம் நாம்.)
  
அவர் ஆவணங்களைக் கேட்டபோது பழைய கசவுச்சீட்டு(Passport) மற்றும் அதனுடைய படி (Copy) மற்றும் பங்கீட்டு அட்டையின் படியை என் மனைவி கொடுத்தார். அவைகளை வாங்கி சரி பார்த்துவிட்டு பங்கீட்டு அட்டையின்(Ration Card) மூல ஆவணம் எங்கேயென்று கேட்டபோது நான் உள்ளே என் மகள் எடுத்து சென்றிருக்கிறாள்.இன்னும் வெளியே வரவில்லை. இருவருக்கும் அதுதான் மூல ஆவணம். என்றேன்.

அதற்கு அவர் பரவாயில்லை.  உள்ளே சொல்லுங்கள். என்று சொல்லிவிட்டு பங்கீட்டு அட்டையின் படியையும், கடவுச்சீட்டையும்  திருப்பி கொடுத்து விட்டு, விண்ணப்பபடிவ இரசீதையும் கடவுச்சீட்டின் படியையும் தன்னோடு வைத்துக்கொண்டார். பிறகு எங்களிடம், எங்களை அடுத்த அறைக்கு அனுப்பினார். நாம் Ration Card இன் மூல ஆவணத்தைத் தராததால் தான் Token தரவில்லையோ என்னவோ என எண்ணிக்கொண்டே உள்ளே சென்றோம்.

அடுத்து இருந்த விசாலமான அறையில் இருந்த அநேக இருக்கைகளில் எங்களைப்போல் வந்தவர்கள் அமர்ந்திருக்க நாங்கள் காலியாக இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். எங்களுக்கே எதிரே மின்னணு திரை ஒன்று அடுத்து உள்ளே செல்லவேண்டியவர்கள் பற்றிய விவரத்தைக் காட்டிக்கொண்டு இருந்தது.
   
நாங்கள் அமர்ந்து ஒரு மணித்துளி கூட ஆகியிருக்காது. என் மனைவியின் ஆவணங்களை சரி பார்த்த அதே ஊழியர் உள்ளே வந்து அந்த அறையின் மூலையில் இருந்த கணினியில் ஏதோ பதிவு செய்து விட்டு என் மனைவியின் பெயரை சொல்லிக் கூப்பிட்டார்.

அவரது இருக்கைக்கு சென்றதும், என் மனைவி கொடுத்த ஆவணங்களை ஒரு கோப்பில் இட்டு கையில் கொடுத்துவிட்டு கூடவே S 29 என இலக்கமிட்ட ஒரு துண்டு சீட்டையும் கொடுத்தார். பின்னர் எதிரே உள்ள திரையில் எந்த Counter க்கு நீங்கள் போகவேண்டும் என வந்ததும் உள்ளே செல்லலாம். என்றார்.

அதை வாங்கிக்கொண்டு என் மனைவி இருக்கைக்கு வந்து 
அமர்வதற்குள்ளேயே S 29 போகவேண்டிய Counter  A2 என திரை காட்டியது. 
எங்களுக்கு ஒரே ஆச்சரியம். அதிக நேரம் காக்க வைக்காமல் இவ்வளவு 
சீக்கிரத்தில் உள்ளே அனுப்புகிறார்களே என்று.  


அந்த கோப்பு, Token மற்றும் கடவுச்சீட்டுடன் அடுத்த அறைக்கு சென்றோம்.  அங்கு சென்றதும் கவனித்தேன். உள்ளே A, B, C என மூன்று அறைகளில்  
Counter கள் இருப்பதையும்  A Counter உள்ள அறையில் A1, A2 என 
வரிசையாய் இலக்கமிட்ட பல Counter கள் இருப்பதையும் அதில் 
ஒவ்வொன்றிலும் துடிப்பான இளம் ஊழியர்கள் அமர்ந்திருக்க, 
அவர்களுக்கெதிரே எங்களைப் போன்றோர் அமர்ந்து 
பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்தோம்.

என் மனைவிக்கு ஒதுக்கப்பட்ட A2 Counter க்கு சென்றபோது அங்கிருந்த பெண் ஊழியர் எங்களை புன்முறுவலோடு வரவேற்று அமரச் சொன்னார். அப்போதே எங்கள் வேலை முடிந்துவிட்டது போல உணர்ந்தேன்.

தொடரும்


14 கருத்துகள்:

 1. வியப்படைந்த காரணம் புரிகிறது... அடுத்து எளிதாக முடிந்து விடவில்லை என்பதும் புரிகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! பொறுத்திருக்கவும் என்ன நடந்தது என அறிய.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! உண்மையில் எனக்கு இது புதிய அனுபவம் தான்.

   நீக்கு
 3. முக்கியமான பாதுகாப்பு சம்பந்தமுள்ள துறையையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு, அரசாங்கம் கள்ளுக்கடையை எடுத்து நடத்துகிறது. ஜனநாயகம் போகிறபோக்கு கேட்கவே கொடுமையாக உள்ளது. பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலை. எப்படியோ , பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் வேலை நடந்தால் போதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உண்மையில் தனியார் துறையின் பங்களிப்பு ஆவணங்களை பரிசீலிப்பதும் புகைப்படம் எடுப்பதும் விரல்களின் இரேகைகளை படம் எடுப்பதும் தான். பாதி வேலைகளை அரசு ஊழியர்கள் அதுவும் அலுவலர்கள் தான் செய்கிறார்கள். எப்படியோ பொதுமக்களுக்கு உதவினால் சரிதான்!

   நீக்கு
 4. நல்ல அனுபவம் தான்....

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு
 5. தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் சேவை என்றால் என்ன என்று தெரிகிறது. சுவையாக கொண்டு சொல்கிறீர்கள். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

   நீக்கு
 6. வித்தியாசமான அனுபவம்..

  பாஸ்போர்ட் அலுவலகத்தில் செல்போன்கள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என காவலர் எச்சரித்தும் பலர் மீறவே முயல்கிறார்கள்..

  காவலர் பரிசோதித்து வாங்கி ஸ்விட்ச் ஆஃப் செய்து அனுப்புகிறார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே.உள்ளே செல்லும்போது கைப்பேசியை அணைத்தே வைக்கவேண்டும் என்பது விதி. ஆனால் யாரும் அதை சரியாக கடைப்பிடிப்பதில்லை. காவலர்களும் பணிச்சுமை காரணமாக இதைக் கவனிப்பதில்லை.

   நீக்கு
 7. 2016 இல் தான் பார்க்கவேண்டும்.
  //அவர் அவ்வாறு கேட்டது என் மனைவிக்கு மகிழ்ச்சியே. காரணம் சொல்லவா வேண்டும்? //
  நகைச்சுவை கலந்து அருமையான நடை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! 2016 ஆம் ஆண்டு நீங்கள் கசவுச்சீட்டைப் புதிப்பிக்க செல்லும்போது இன்னும் பல மாற்றங்களும் நல்ல முன்னேற்றங்களும் இருக்கலாம்.

   நீக்கு