செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 23சென்ற பதிவில் ‘பிரமிட் திட்டம்’ என்றால் என்று அறியுமுன் சில திட்டங்கள் எப்படி பொன்ஃஜி திட்டங்கள் ஆயின என்பதை சொல்வதாக எழுதியிருந்தேன். உண்மையில் சிலர் (இங்கே நான் மிகச் சிலரை மட்டுமே குறிப்பிடுகிறேன்) தங்களது நிறுவனம் மூலம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது மக்களை ஏமாற்றுவதற்காக அந்த திட்டத்தை ஆரம்பிப்பதில்லை.பொதுமக்களிடமிருந்து திரட்டும் பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் இலாபத்திலிருந்து பொது மக்களுக்கு அவர்களது முதலோடு வட்டியையும் திருப்பித் தரும் எண்ணத்தோடு தான் ஆரம்பிக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் செய்துள்ள முதலீட்டின் மதிப்பு அரசின் கொள்கை மாற்றம் காரணமாகவோ அல்லது நாட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாகவோ வேறு பல காரணங்களாலோ குறைய வாய்ப்புண்டு. அந்த நேரத்தில் அவர்களால் வாக்குறுதி தந்தபடி வட்டியை தரமுடியாமல் போகலாம்.

அந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள் அந்த நிறுவனத்தை அணுகி தாங்கள் முதலீடு செய்துள்ள பணத்தைத் திருப்பித்தர கட்டாயப்படுத்தினால், அவர்கள் நிலைமையை சமாளிக்க, புதிதாய் திட்டத்தில் அந்த நிறுவனத்தின் நிதி நிலை அறியாமல் சேருபவர்கள் தரும் பணத்திலிருந்து திருப்பிக் கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஒரு கட்டத்தில் திரும்பப்பெறுவோரின் எண்ணிக்கை கூடுதலாகவும் புதிதாய் சேருபவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கும்போது தான் பிரச்சினையே ஆரம்பமாகும்.

இப்படித்தான் முதலீட்டிலிருந்து வரும் ஆதாயத்தை திருப்பித்தரும் எண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்ட சில நிறுவனங்களின் திட்டங்கள் சூழ்நிலையின் காரணத்தால் பொன்ஃஜி திட்டங்களாக மாறிவிட்டன என்பதுதான் உண்மை.

சில சமயம் பொது மக்களும் அதிக வட்டி கிடைக்கிறதென்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு சில திட்டங்களில் முதலீடு செய்யும்போது தங்களை அறியாமலேயே இதுபோன்ற திட்டங்கள் பொன்ஃஜி திட்டங்களாக மாற காரணமாக இருக்கிறார்கள் என்பதும் வருத்தம் தரக்கூடிய செய்தி.

பொது மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யு முன் அந்த நிறுவனத்தைப் பற்றி தீவிரமாக விசாரித்து முடிவெடுக்கவேண்டும். எதற்காக பணம் திரட்டுகிறார்கள், அப்படி திரட்டிய பணத்தை எங்கே, எப்படி முதலீடு செய்ய இருக்கிறார்கள், அவர்கள் முதலீடு செய்வது சட்டத்திற்கு உட்பட்டதா அவர்களால் நம்முடைய பணத்தை திருப்பித் தர இயலுமா என்ற விவரங்களை முழுதும் அறிந்த பின்னரே அந்த திட்டத்தில் சேரவேண்டும்.

மேலும் ஒரு நிறுவனம் ஆண்டொன்றுக்கு 30 அல்லது 40 விழுக்காடு வட்டி தருவதாக சொன்னால் அதை நம்பி உடனே அங்கே பணத்தை முதலீடு செய்யக்கூடாது. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். நமக்கு 40 விழுக்காடு வட்டி தரவேண்டுமென்றால் நாம் தரும் பணத்தை அந்த நிறுவனம் சரியான படி முதலீடு செய்து அதன் மூலம் குறைந்தது 46 அல்லது 50 விழுக்காடு வட்டி நிறுவனத்திற்கு கிடைத்தால் தான் அவர்களால் வாக்குறுதிப்படி வட்டி தரமுடியும்.

50 விழுக்காடு வட்டியில் எந்த பயனாளியும் (கடன்பெறுவோர்) கடன் பெற்று தொழில் நடத்தி இலாபம் ஈட்டி திருப்பித்தர முடியாது என்பதை நாம் அறிவோம். எனவே இந்த நிறுவனங்கள் நம்மிடம் இருந்து பெறும் பணத்தை நான் முன்பே சொன்னதுபோல் தொழிலில் முதலீடு செய்யாமல் நில உடமைகள்/ஆதனம் (Real Estate) போன்றவற்றில் முதலீடு செய்வார்கள்.

ஏனெனில் இப்போது எல்லோருடைய கவனமும் இந்த சொத்துகளின் மேல் இருப்பதால் முதலீடு செய்த நிலங்களின் விலையில் நல்ல மதிப்பேற்றம் (Appreciation) இருக்கும் என்றும் தேவைப்படும்போது அவைகளை விற்று பணமாக்கி திருப்பித்தரலாம் என்று எண்ணியும் முதலீடு செய்வார்கள்.

ஆனால் அவைகள் நினைத்தபடி மதிப்பேற்றம் இல்லாமல் போனால், அவைகளை விற்று முதலீட்டாளர்களுக்கு குறித்த நேரத்தில் வட்டியை தரமுடியாது. ஓரிரு மாதங்கள் வட்டி தராதபோது மக்களுக்கு ஐயம் ஏற்பட்டு எல்லோரும் வந்து பணத்தைக் கேட்கும்போது யாராலும் உடனே திருப்பித் தரமுடியாது. அந்த நேரத்தில் அவர்கள் செய்யக்கூடிய ஒன்று இரவோடு இரவாக ‘மாயமாகி’ப் போவதுதான்.

எனக்குத் தெரிந்து ஒரு நல்ல நிதி நிறுவனம் மேலே குறிப்பிட்ட காரணத்தால் வட்டி தரமுடியாதபோது, முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் தந்த நெருக்கடியால் எப்படி உடைந்துபோனது என்பதை அடுத்து பார்ப்போம்.

தொடரும்

26 கருத்துகள்:

 1. நண்பரே தாங்கள் சொல்வதைப் பார்த்தால் நிதி நிறுவனங்கள் மூடுவதற்க்கு காரணம் மக்கள் என்று சொல்வது போல் வருகிறதே.... எப்படியாயினும் கொடுத்த பணத்தை அதிக லாபத்துடன் எதிர் பார்க்கிறார்கள் முடியாத பட்சத்தில் கொடுத்தது திரும்பினால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் மாறி விடுகிறார்கள்....
  பார்ப்போம் அடுத்து என்னவென்று ....
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் எழுப்பிய ஐயத்திற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! தாங்கள் எனது கருத்தை. சரியாய் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். சில சமயம் பொதுமக்களும் தங்களை அறியாமலேயே ஒரு சில திட்டங்கள் பொன்ஃஜி திட்டங்கள் ஆக காரணமாகிவிடுகிறார்கள் என்று தான் குறிப்பிட்டுள்ளேன். பணத்தை முதலீடு செய்யுமுன் விசாரித்து செய்திருந்தால் இதுபோன்ற நிலை வராது என்பது என் கருத்து.

   நீக்கு
 2. ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 23
  பதிவினை படித்தறிந்தேன் பயன் தரும் பல செய்திகள் பளிச்சிட்டன!
  நிதி நிறுவனங்களின் செயல் பாடுகள் தெள்ளத் தெளிவுற அழகுற
  அம்சமாக விளக்கப் பட்டு உள்ளது!
  மொத்தத்தில் "பேராசை பெரு நஷ்டம்" என்பதை இந்த பதிவின் மூலம்
  நயம்பட நாசூக்காக நவின்றுள்ளீர்கள் அய்யா!
  தொடருகிறோம். அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றோம்! நன்றி!

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

   நீக்கு
 3. நீங்கள் சொல்வது நல்ல நேர்மையான நிதி நிறுவனத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம், ஆனால் மற்ற நிறுவனங்களுக்கு....
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! நானும் நேர்மையான நிறுவனங்கள் சில இருக்கின்றன என்பதைத் தான் குறிப்பிட்டிருக்கிறேன். நேர்மையற்றவர்கள் மக்களின் அறியாமையை காசாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் தான் கவனமாக இருக்கவேண்டும் என்பதை தெரிவிக்கவே இந்த பதிவு. மற்றபடி ஏமாற்றும் நிறுவனங்களை நான் ஆதரிக்கவில்லை.

   நீக்கு
 4. வங்கியாளரான உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கிறது. பல நல்ல நிலையிலுள்ள நிறுவனங்கள் கூட தாங்கள் வாங்கியுள்ள கடன்களை ஒரே நேரத்தில் அடைக்க முடியாது என்று கேள்விப்பட்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே! நான் சொல்ல வந்தது சில சமயம் பொது மக்களின் ஆசை(!) யும் அறியாமையையும் கூட இது போன்ற நிறுவனங்கள் தோன்ற காரணம் என்பது தான். வங்கியாளனான நான். வாங்கிய கடனை திருப்பிக்கட்டாத நிறுவனங்களை எப்படி ஆதரிப்பேன்?

   நீக்கு
 5. வணக்கம்
  ஐயா.

  பதிவை அசத்தி விட்டீங்கள்.. ஐயா... நன்றாக உள்ளது... தொடருங்கள் அடுத்த பகுதியை.
  த.ம3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. தாங்கள் கூறுவது போன்ற ஒரு நிறுவனத்தை எனக்குத் தெரியும். அதன் உரிமையாளர், தனது பிள்ளைகள் அமெரிக்காவில் படித்தபொழுது உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கக்கூடாது, அது உதவி தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே என்று கூறியவர். ஆனால், வேலை செய்தவர்கள் ஏமாற்றியதால் கம்பெனிக்கு கெட்டபெயர். எப்படியிருந்தாலும், கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்க்கு புத்தி எங்கே, என்றுதான் கேள்வி வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

   நீக்கு
 8. நம்பினால் கண்ணை மூடிக் கொண்டு... சின்ன சந்தேகம் கிளப்பி விடும் போது, நம்பினவர்கள் அறிவாளிகள் ஆகி.... அடுத்த பதிவை ஆவலுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 9. ஏமாறமாட்டேன் என்று எசசரிக்கையாக் இருப்பவர்களையும் ஏமாற்றிவிடுவது நாந்து கொண்டுதான் இருக்கிறது
  தங்கள் அனுபவப் பதிவுகள் அனைத்தும் பாடங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே!

   நீக்கு
 10. ஐயா

  இந்திய அரசாங்கமே கடனை அடைக்க மேலும் கடன் வாங்கி வட்டி என்பதே பட்ஜெட்டின் ஒரு பெரிய தொகை ஆக்கி ரூபாயின் மதிப்பை வெகுவாக குறைத்து விட்டார்கள். எனக்குத் தெரிந்து ஒரு டாலருக்கு 5 ரூபாய் என இருந்த மாற்று இப்போது 62 ரூபாய் வரை வந்துவிட்டது.

  இப்படி இருக்கும்போது பொதுமக்கள் கடன் வாங்கி முதல் உண்டாக்கப் பார்க்கிறார்களே தவிர சேமிப்பை முதல் ஆக்க எண்ணுவதில்லை. வட்டி என்ற இலவச இணைப்பிற்கே ஆசைப்படுகிறார்கள். இதுவும் அதிக வட்டி திட்டங்கள் தோன்ற ஒரு காரணம் எனலாம்.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே!

   நீக்கு
 11. நிதி நிறுவனங்களின் செயல் பாடுகள் தெளிவுற
  விளக்கப் பட்டு உள்ளது!....

  விளக்கமாக உள்ளது.
  நன்றி சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

   நீக்கு
 12. பெரும்பாலும், யாரும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பத்தில் சீட்டு நடத்துதல், நிதி நிறுவனம் போன்ற தொழில்களை யாரும் தொடங்குவதில்லை; எதிர்பாராத பொருளாதார சூழ்நிலைதான் அவர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது என்பதனை நன்கு விளக்கமாகச் சொன்னீர்கள்.

  த.ம.7 (தாமதத்திற்கு மன்னிக்கவும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 13. நமக்கு 40 விழுக்காடு வட்டி தரவேண்டுமென்றால் நாம் தரும் பணத்தை அந்த நிறுவனம் சரியான படி முதலீடு செய்து அதன் மூலம் குறைந்தது 46 அல்லது 50 விழுக்காடு வட்டி நிறுவனத்திற்கு கிடைத்தால் தான் அவர்களால் வாக்குறுதிப்படி வட்டி தரமுடியும்.

  உண்மை தான். இதைப் புரிந்து கொண்டால் அதிக வட்டிக்கு ஆசைப்பட மாட்டார்கள்.....

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

  பதிலளிநீக்கு
 15. சீக்கிரம் பணக்காரனாக ஆக வேண்டும் என்று எண்ணி அதிக வட்டிக்கு முதலீடு செய்தால் கோவிந்தா, கோவிந்தா தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கு நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! 'பேராசை பெரு நஷ்டம்.' என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

   நீக்கு