பொதுமக்களிடமிருந்து பெறுகின்ற வைப்புகளுக்கு வட்டியை தருவதும் அந்த வைப்புகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை தேவையானவர்களுக்கு கடனாக கொடுத்து வட்டியைப் பெற்று இலாபம் ஈட்டுவதுமே வங்கிகளின் தலையாய பணி. சுருக்கமாக சொன்னால் சேமிக்க விரும்புவோரிடமிருந்து பணத்தைப் பெற்று, வேண்டுவோருக்கு அதை கடனாக கொடுப்பதுதான் வங்கிகளின் வேலை.
எனவே வங்கிகளில் மக்கள் சேமிப்பதற்காக வைக்கப்படும் வைப்புகள் அங்கு இருப்பதில்லை.அவை தேவையானவர்களுக்கு கடனாக கொடுக்கப்பட்டு, தவணை முறையில் அவைகளை வட்டியோடு வசூலித்து சேமிப்பாளர்களுக்கு விரும்பும்போது வட்டியோடு தரப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.
வங்கியில் குறிப்பிட்ட காலத்திற்கு வைப்புத்தொகையாக வைத்துள்ள வாடிக்கையாளர் விரும்பினால், அந்த காலத்திற்கு முன்னரே முழுப்பணத்தையும் திரும்பப்பெற முடியும். ஆனால் வங்கிகளால் கடனாக கொடுத்த பணத்தை கடனாளிகள் ஒழுங்காக தவணையை செலுத்திக் கொண்டிருந்தால் மீதமுள்ள தொகையை குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு முன்னர் தரும்படி கடன் பெற்றோரை வற்புறுத்த முடியாது. (இப்போது காலக்கெடு முடிந்த பிறகு கூட வங்கிகளால் கொடுத்த கடனை வசூலிக்க முடியவில்லை என்பது ஊரறிந்த இரகசியம்)
இப்படி பெறுகின்ற வைப்புகளை கடனாக கொடுத்து திரும்ப பெற்று சேமிப்பாளர்களுக்கு தருவது என்பது, எல்லோரும் நினைப்பதுபோல் எளிது அல்ல. வங்கிகள், சொத்து - கடன் மேலாண்மை (Asset Liability Management) மூலம் இதை சமாளிக்கின்றன என்பது பலர் அறியாத தகவல் (அதைப் பற்றி மேலும் விரிவாக எழுதி உங்களின் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை.)
இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் வங்கியின் வாடிக்கையாளர்கள் நினைத்தால் தங்கள் வைப்புகளை அவை முதிர்வு அடையுமுன்பே உடனே திரும்பப் பெறமுடியும். ஆனால் வங்கிகள் நினைத்தால் கூட தாங்கள் கடனாக கொடுத்த பணத்தை உடனே பெறமுடியாது.
ஒரு கணம் நினைத்துப்பாருங்கள். ஒரு குறிப்பிட்ட வங்கியில் பணத்தை சேமித்த அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரே சமயத்தில் வங்கிக்கு சென்று பணத்தைக் கேட்டால் என்னவாகும் என்று!
மேலே சொன்னது போன்ற நிகழ்வு கிட்டத்தட்ட ஒரு வங்கியில் ஏற்பட்டது. அந்த வங்கி இப்போது அண்டை மாநிலம் ஒன்றில் தலைமையகத்தைக் கொண்டு இந்தியா முழுதும் அநேக கிளைகளோடு இன்றும் சிறப்பாக பணியாற்றிவருகிறது.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னால் அது ஒரு சோதனையை சந்திக்க நேர்ந்தது. குறிப்பிட்ட சமுதாயத்தால் நடத்தப்பட்ட அந்த வங்கியில், அந்த மாநிலத்தில் இருக்கும் ஒரு பெரிய வழிபாட்டிடம் அதிக அளவில் வைப்புகளை வைத்திருந்தது. என்ன காரணத்தாலோ அந்த வழிப்பாட்டிட அறங்காவலர்களுக்கும் வங்கி மேலிடத்திற்கும் மனத்தாங்கல் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் செய்த முதல் வேலை உடனே அந்த வங்கியில் வைத்திருந்த அத்தனை வைப்புக்களையும் திரும்ப பெற்றதுதான்.
அவர்கள் இவ்வாறு வைப்புகளை ஓட்டு மொத்தமாக வழித்து எடுத்துவிட்டார்கள் என்ற தகவல் எப்படியோ(?) மக்களுக்கு தெரிந்துவிட்டது. காரணம் இல்லாமல் யாரும் எல்லா வைப்புகளையும் ஒரே நேரத்தில் எடுக்கமாட்டார்கள். வங்கி சரியான முறையில் நடக்கவில்லை போலும்.ஏதோ தவறு நடந்திருப்பது தெரிந்ததால் தான் இது நடந்திருக்கிறது. இனி நமது வைப்புகளும் அங்கிருந்தால் பாதுகாப்பு இல்லை என நினைத்து மக்கள் சாரிசாரியாய் வங்கி கிளைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள், தாங்கள் போட்ட பணத்தைத் திரும்பப் பெற.
ஆனால் அப்போது அந்த வங்கியின் முதன்மை நிர்வாகியாக இருந்தவர் ரிசர்வ் வங்கியிலிருந்து வந்தவர். அவருக்குத் தெரியும் இது ஒரு தற்காலிக பின்னடைவு தான் என்று. இதுபோன்ற வைப்புகளை திரும்பக் கேட்போருக்கு உடனே கொடுக்க ஆரம்பித்தால் மக்களின் அவநம்பிக்கை போய்விடும் என்று அவர் அறிந்திருந்தார்.
உடனே அவர் ரிசர்வ் வங்கியை அணுகி உண்மை நிலையை விளக்கி உதவ கேட்டுக்கொண்டார். அவர்களும் வங்கியின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்ததால் தற்காலிகமாக உதவ முன் வந்தார்கள்.
அந்த வங்கியின் முதன்மை நிர்வாகி, வங்கியில் எந்த வித பிரச்சினை இல்லையென்றும், வங்கியின் நிதி நிலை உறுதியாக இருப்பதாகவும், இருப்பினும் விரும்பும் வாடிக்கையாளர்கள் தேவைப்படின் எந்நேரமும் வங்கியின் கிளைக்கு வந்து தங்களது வைப்புகளை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் வங்கியின் சார்பாக ஒரு விளம்பரத்தை நாளேடுகளில் வெளியிட்டார்.
முதல் இரண்டு மூன்று நாட்கள் பணத்தை திரும்பப்பெற வந்தோர் கூட்டம் அதிகமாக இருந்தது உண்மை. ஆனால் யாருக்கு எந்த வித சாக்குப்போக்கும் சொல்லாமல் பணம் திருப்பித் தரப்படுகின்றது என்ற தகவல் வெளியானதும் பணத்தை திரும்பப்பெற வந்தோர் கூட்டம் குறையத் தொடங்கியது.
பின்னர் முன்பு பணத்தை திரும்பப் பெற்றவர்கள் புதிய வைப்புகளில் வைக்க திரும்பவும் வந்ததால் நிலைமை மாறி வங்கியும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தனது வங்கிப் பணியை தொடர்ந்து செய்யத் தொடங்கியது. இன்றும் செய்துகொண்டு இருக்கிறது.
இதுவே ஒரு தனியார் நிறுவனமாக இருந்தால் என்னவாயிருக்கும். நிச்சயம் எல்லோருக்கும் அவர்களது பணத்தை கேட்டவுடன் திருப்பித் தர முடிந்திருக்காது. உடனே அந்த நிறுவனம் மக்களின் கோபத்தை/தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் அலுவலகத்தை மூடிவிட்டிருக்கும். மக்களும் காவல் நிலையத்திற்கு அலைந்து கொண்டிருந்திருப்பார்கள் தங்கள் புகார்களை பதிவு செய்ய.
வேறொரு தனியார் நிறுவனத்தில் இது போன்ற நிகழ்வு நடந்தபோது என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
தொடரும்
அந்த மாதிரி நிலைமையை சமாளிக்க ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை வைத்திருப்பதாக அறிகிறேன். அது என்ன காஷ் ரிசர்வ் ரேஷியோ.?
பதிலளிநீக்குவருகைக்கு, நன்றி திரு G.M பாலசுப்ரமணியன் அவர்களே! வங்கிகள் தங்களிடம் வாடிக்கையாளர்கள் வைக்கும் வைப்புக்கள் அனைத்தையும் கடனாக தர முடியாது. ‘வங்கிகளின் ஒழுங்கு முறை விதிகள்’ படி வங்கிகள் தாங்கள் பெற்றுள்ள வைப்புக்களில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை ரிசர்வ் வங்கியில் Cash ஆக வைக்கவேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களது வைப்புகளை திரும்பப்பெற விரும்பும்போது வங்கிகள் கையில் இருப்பு இல்லாமல் தவிக்கக்கூடாது என்பதற்காக இந்த கட்டுப்பாடு உள்ளது. எவ்வளவு விழுக்காடு Cash ஆக வைக்கவேண்டும் என்பதை Section 42(1) of the RBI Act, 1934 படி ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் இதை Cash Reserve Ratio (பண இருப்பு விகிதம்) என்பார்கள்.இப்போது உள்ள Cash Reserve Ratio விகிதம் 4 சதம் ஆகும். ரிசர்வ் வங்கி CRR ஐ பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் கருவியாகவும் உபயோகப்படுத்ததும் , இப்போதைக்கு இது போதும் என எண்ணுகிறேன். விரிவாக சொல்லவேண்டுமென்றால் தனியாக ஒரு பதிவிட வேண்டியிருக்கும்.
நீக்குஎல்லோரும் அறிய வேண்டிய தகவல்கள். – தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குத.ம.1
வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ் மண வாக்கிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
நீக்குஏமாறுவதில்தான் இத்தனை வகைகளா ? இல்லை ஏமாற்றுவதில்தான் இத்தனை வகைகளா ?
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! உண்மையில் வங்கியில் நடந்த நிகழ்வு வங்கி ஏமாற்றியதால் அல்ல. வங்கி யாரையும் ஏமாற்றவில்லை. வதந்தி காரணமாகவே பொது மக்கள் வங்கியை முற்றுகையிட்டனர். ஆனால் வங்கி வைப்புகளை திரும்பக்கேட்ட அனைவருக்கும் அவைகளை கொடுத்ததால் இதில் எந்த ஏமாற்று வேலையும் இல்லை.
நீக்கு"//இப்போது காலக்கெடு முடிந்த பிறகு கூட வங்கிகளால் கொடுத்த கடனை வசூலிக்க முடியவில்லை என்பது ஊரறிந்த இரகசியம்) //"
பதிலளிநீக்கு- உண்மை. உண்மை.
தனியார் நிறுவனத்தில் நடக்கும்போது தானே அது பெரிய விஷயமாக அறியப்படுகிறது. அடுத்த பதிவை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே!
நீக்குநல்ல தலைவர்.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!
நீக்குசுவாரஸ்யமான தகவல்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு கவிப்ரியன் அவர்களே!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
சொல்லிய விதம் நன்று... தொடருங்கள் அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!
நீக்குவங்கிகளும் ஒருவகையில் வட்டிக்கடைகள்தான் என்று தோன்றுகிறது. அறிந்திராத தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! வங்கிகளின் முதன்மைப் பணியே வைப்புகளைப் பெற்று அவைகளை கடனாக தந்து இலாபம் ஈட்டுவதுதானே!
நீக்குமுதன்மை நிர்வாகியின் அனுபவம் காப்பாற்றியது...
பதிலளிநீக்குஅடுத்த பதிவை ஆவலுடன்...
வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குதங்கள் தளம் முதல் முறை வருகிறேன். அறியத் தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி மகேஸ்வரி பாலசந்திரன் அவர்களே!
பதிலளிநீக்குமிக மோசமான சிக்கலை அனாயசமாக எதிர்கொண்ட அதிகாரிகள் பாராட்டப்படவேண்டியவர்கள். இவ்வாறான சூழலில் அமைதி காப்பது பெரும் பலனைத்தரும்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும்
நீக்குநன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!
அய்யா,
பதிலளிநீக்குதங்களின் தளத்துக்கு நான் வருவது இதுதான் முதல் முறை...
அறியாத பல தகவல்கள்... ஏமாற்ற இத்தனை வழிகளா என விழி பிதுங்குவதுடன்... சேமிப்புக்கு முன்னால் எவ்வளவு யோசிக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது உங்கள் பதிவு.
எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சாமானியன் அவர்களே! தங்களது பதிவையும் படித்து பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.
நீக்குஅய்யா வணக்கம்,
பதிலளிநீக்குஇதை நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.
ஒட்டுமொத்தமாய் எல்லோரும் வங்கியில் இருந்து தங்கள் சேமிப்பை எடுத்தால் என்னாகும்....?!!!
தெளிவான பதில் கிடைத்தது.
நன்றி!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!
நீக்கு