திங்கள், 30 மார்ச், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 26




நமது அண்டை மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட குழுமம் ஒரு நிதி நிறுவனத்தை நல்ல முறையில் நடத்தி வந்தது. அந்த நிதி நிறுவனத்தை அதனுடைய நிறுவனர்கள் பல ஆண்டுகள் சிறப்பாக நடத்தி வந்தனர்.கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பங்குதாரர்களுக்கு தவறாமல் கணிசமான ஈவுத்தொகையை தந்து வந்தனர்.



அந்த நிறுவனர்களின் மேலாண்மைத் திறனை அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் நன்கு அறிந்திருந்ததால் அந்த நிதி நிறுவனத்தில் தாங்களும் பங்குதார்கள் ஆகி தங்களது முழு ஆதரவையும் தந்து அது மென் மேலும் வளர உதவினார்கள்.

ஆனால் அந்த நிறுவனத்திற்கும் சோதனை ஒன்று வந்தது. தனது வணிகத்தை மேலும் பெருக்க மக்களிடமிருந்து வைப்புகளை பெற்ற அந்த நிறுவனம், அதை தொழில் முனைவோருக்கு கடன் கொடுத்து வணிகம் செய்ததோடு மட்டும் இருந்திருக்கலாம். அதோடு வேறு துறையில் கால் பதிக்கவும் விரும்பினார்கள்.

நில உடைமைகள் (Real Estate) துறையில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் குறுகிய காலத்தில் இலாபம் பார்த்ததால், அந்த நிறுவனத்தை நடத்தியவர்கள் தாங்களும் அதுபோல சம்பாதிக்கலாம் என்று அந்த துறையில் காலடி எடுத்து வைத்ததுதான் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு.

முன்பே சொன்னது போல் பொது மக்களிடமிருந்து திரட்டிய வைப்புகளை ஆக்க வளமுடைய தொழிலில் (Productive Business) முதலீடு செய்யாமல் ஊக்க வாணிபத்தில் முதலீடு செய்பவர்களால் ஒருவேளை அவர்கள் முதலீடு செய்துள்ள வணிகம் சந்தையில் சுணக்கமோ அல்லது தொழிலில் மந்த நிலையோ ஏற்பட்டால் நிச்சயம் முதலீட்டார்களுக்கு திரும்ப அவர்களது ‘அசலை’க்கூட தர இயலாது என்பது உண்மை.

மேற்சொன்ன நிகழ்வு தான் அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டது. திடீரென நில உடமைகளின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால், அதில் முதலீடு செய்த பணத்தை அந்த நிறுவனத்தால் உடனே எடுக்க முடியவில்லை. அந்த நிறுவனத்தில் கால வரை வைப்பு (Fixed Deposit) வைத்தவர்களில் சிலர் முதிர்வு தேதியில் நிறுவனத்தை அணுகியபோது அவர்களால் அதை திருப்பித் தர இயலவில்லை. அதற்கு பதில் அந்த வைப்புகளை மேலும் சில மாதங்கள் நீட்டிக்க கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

அவ்வளவுதான்.அந்த நிறுவனம் வைப்பு முதிர்வு நாளில் பணத்தைத் திரும்பத் தராமல் முதிர்வு தேதியை நீட்டிக்கிறது என்ற செய்தி வாய்மொழி தகவலாக பரவ ஆரம்பித்ததும் எல்லா முதலீட்டார்களும் நிறுவனத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள தொகையைத் திரும்பப்பெற.

இப்படி மக்கள் பணத்தை உடனே திரும்பத்தர நெருக்கடி கொடுக்க ஆரம்பித்ததும் அந்த நிறுவனத்தின் தலைவர் உடனே அந்த மாநில உயர்நீதி மன்றத்தில் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நிலையைக் குறிப்பிட்டு தாங்கள் முதலீட்டார்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும் அவர்களது பணத்தை தவணை முறையில் திருப்பித் தருவதாகவும் உறுதிமொழி அளித்து விண்ணப்பித்தார்.

ஆனால் பொது மக்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் தினம் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அந்த நிறுவனத் தலைவருக்கு முதலீட்டாளர்களில் பலரை நேரடியாகத் தெரியுமாதலால் தானே நேரே பேசலாம் என எண்ணி அவர் அவர்களிடம் பேச வெளியே வந்தார்.

தங்களுடைய பணம் கிடைக்காத ஆத்திரத்தில் அவர்கள் அவரை இழித்துப் பேசியும், செருப்புக்களை அவர் மேல் விட்டெறிந்தும் தங்கள் கோபத்தை காண்பித்தனர். இத்தனைக்கும் முதலீட்டார்களில் பலரும் அவர்களது குடும்பத்தினரும், அவரது மற்றும் அவரது அண்ணனது உதவியால் வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் பணி கிடைக்கப்பெற்றவர்கள்.

இதை எதிர்பார்க்காத அவர் மனமுடைந்து வருத்தத்தோடு திரும்பிவிட்டார். மொத்தத்தில் பணம் போட்டவர்களுக்கு முழுதும் திரும்பக் கிடைக்கவில்லை. இதில் இன்னொரு சோகம்(?) என்னவென்றால் 2001 ஆம் ஆண்டில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் விருப்ப ஓய்வு பெற்ற பலர் (இதில் அதிகாரிகளும் அடக்கம்) அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தங்களுக்கு கிடைத்த ஓய்வூதியப் பணம் முழுவதையும் தாங்கள் பணிபுரிந்த வங்கியில் வைப்புகளாக வைக்காமல் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததுதான்.

முதலீடு மற்றும் நிதி மேலாண்மை போன்றவற்றில் அதிக பரிச்சயம் இல்லாத பொது மக்கள் அதிக வட்டி கிடைக்கிறதென்று முதலீடு செய்வதை அவர்களது அறியாமை காரணம் என எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் வங்கியில் பணியாற்றியவர்களுக்கு, திரட்டப்படுகின்ற வைப்புக்களை அவற்றுக்கு தரப்படும் வட்டியோடு வங்கியின் அலுவலக செலவையும் (Overhead Charges) சேர்த்து கடனாக தந்தால் தான், முதலீட்டார்களின் பணத்தை வாக்குறுதி அளித்த வட்டியுடன் திருப்பித்தரமுடியும் என்ற அடிப்படை உண்மை தெரிந்திருந்தும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்ததை என்னவென்று சொல்ல!

துரதிர்ஷ்டவசமாக அந்த ஓய்வு பெற்ற வங்கியாளர்கள் தங்களது ஓய்வுக்குப் பின் கிடைத்ததை சரியாக முதலீடு செய்து மகிழ்ச்சியாக வாழாமல் அந்த நிறுவனம் அதிக வட்டி தருகிறேன் என்றதும் பெற்ற பணம் முழுதையும் தொலைத்துவிட்டு பின்னாட்களில் மாதம் 2000 ரூபாய்க்கும் 3000 ரூபாய்க்கும் கணக்கெழுதும் வேலையில் சேர்ந்தார்கள் என்பதுதான் வேதனையான தகவல்.

நம்மிடம் உள்ள சேமிப்புகளில் 25 விழுக்காட்டை தங்கத்திலும் 25 விழுக்காட்டை அசையா சொத்துகளிலும் 25 விழுக்காட்டை பங்குகளிலும் 25 விழுக்காட்டை வங்கிகளில் வைப்புகளாக முதலீடு செய்யவேண்டும் என நிதி ஆலோசகர்கள் சொல்வார்கள். இது ஒரு பொதுவான விதி மட்டுமே. இந்த விழுக்காடு விகிதம் நபருக்கு நபர் அவர்களது வயது, அவர்களின் மாத வருமானம் போன்ற காரணிகளால் மாறுபடலாம்.

வேறு சில நிகழ்வுகள் வரும் பதிவுகளில்.




தொடரும்



26 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள் அடுத்த பகுதியை த.ம1


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  2. வாழ்க்கைப் பயனுடைமைக்கான வழிகாட்டிப் பதிவு..
    வழக்கம்போல் உங்களின் மொழிச்சரளத்தில்..

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! இந்த பதிவு சிலருக்கு பயனுள்ளதாக இருக்குமானால் எனக்கு மகிழ்ச்சியே.

      நீக்கு
  3. பைனான்ஸ் நிறுவனங்கள் அனைத்திலும் இந்த ரிஸ்க் இருக்கத்தான் செய்யும் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நேர்மையாய் நடக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இடர்ப்பாடு உண்டு தான். அதையும் சமாளித்து வருவதுதான் அவர்களின் வேலை.

      நீக்கு
  4. முதலீடு செய்யும்முன் யோசிக்க பல கருத்துக்கள் கூறி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே!

      நீக்கு
  5. //இது ஒரு பொதுவான விதி மட்டுமே. இந்த விழுக்காடு விகிதம் நபருக்கு நபர் அவர்களது வயது, அவர்களின் மாத வருமானம் போன்ற காரணிகளால் மாறுபடலாம்.//

    தாங்கள் கடைசியில் கூறியுள்ள இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    தங்கத்தை வாங்கி வைத்து அதனைப் பாதுகாப்பது கஷ்டம். அசையாச் சொத்துக்களை உடனடியாக பணமாக்க இயலாது. பங்குச்சந்தை பலநேரங்களில் காலை வாரிவிட்டுவிடும். வங்கிகளில் வைப்பாக வைப்பதே ஓரளவு அதிக பாதுகாப்புக்கும், ஆபத்துக்கு உதவுவதாக இருக்கக்கூடும் என்பது என் சொந்த அனுபவம்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நம்மைப்போன்ற மூத்த குடிமகன்கள் பங்கு சந்தைப் பக்கமே போகாமலிருப்பது நல்லது. குறைந்தது 60 லிருந்து 70 விழுக்காடு வங்கியில் வைப்புகளாய் இருந்தால் அவசரத்திற்கு உபயோகப்படும். நான் குறிப்பிட்ட பொது விதி, பணியில் சேர்ந்துள்ள இளைஞர்களுக்கு. அவர்கள் கூட பங்கு சந்தை பற்றி அறியாமல் முதலீடு செய்வது சரியல்ல. அதற்கு பதில் சமநல நிதியில் (Mutual Fund) முதலீடு செய்யலாம். நமது வழக்கப்படி பெண்ணின் திருமணத்திற்கு தங்கம் தரவேண்டியிருப்பதால் இளம் வயதினர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது

      நீக்கு
  6. நீங்கள் கூறியது போல் விழுக்காடு விகிதங்களில் வேறு ஒன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். உடனடி பணம் பண்ணும் வகையில் 60% வரையும் நன்கு அறிந்தால் மட்டும் 20% or 15% பங்கு வர்த்தகத்திலும் மீதம் அசையா சொத்துகளில் போடலாம். எனினும் உங்களின் இந்த பதிவு மிக மிக அருமையாக இருந்ததால் இப்பதில் அளிக்கிறேன். நல்ல அறிவுரை கூறி உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பரமசிவம் அவர்களே! நானும் உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். அதனால் தான் முதலீடு செய்வதை பொது விதி என்று எழுதியிருந்தேன். பங்கு சந்தை பற்றி தெரியாதவர்கள் ,அதை அறிந்துகொள்ளாமல் முதலீடு செய்வது சரியல்ல என்பதுதான் எனது கருத்தும்.

      நீக்கு
  7. அருமையான பகிர்வு. பலர் அதிக வட்டி கிடைக்கும் என ஆசைப்பட்டு மோசம் போவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. படித்தவர்கள் கூட ஏமாந்து போவது தான் கொடுமை. ஆசை யாரை விட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! பேராசை பேரு நஷ்டம் என்பதை ஏனோ பலர் மறந்துவிடுகின்றனர்.

      நீக்கு
  8. சேர்த்து வைப்பதற்கும் சில வரம்புகள் இருந்தால்தான் சமூகத்துக்கு நல்லது. பரம்பரைக்கு பொருள் சேர்த்து வைப்பவர்களால் சமூகமே மோசமான மன நிலைக்கு தள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! செல்வம் ஒரே இடத்தில் குவிவதும் நாட்டிற்கு நல்லதல்ல என்பது தான் என் கருத்தும்

      நீக்கு
  9. எந்த நேரத்தில் எது காலை வாரி விடும் என்பதே தெரியவில்லையே...

    நன்றாக யோசித்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் பகிர்வு... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .
      வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  10. தங்களது பதிவுகள் எச்சரிக்கைப் பதிவுகளாகவும் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவனவாகவும் உள்ளன. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  11. Is this Anubhav Case?

    About the comment in Kandasamy Aiya's blog about "wife delivery". this was told to me by your colleague T. Muralidharan who has since retired. He is my cousin.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குழுமத்தில் நடந்தது.

      தாங்கள் என் நண்பர் திரு T.முரளீதரன் அவர்ளின் உறவினர் என்பதை அறிந்து மகிழ்ச்சி!

      நீக்கு
  12. பல ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வந்த நிறுவங்கள் ஆர்வக் கோளாறு காரணமாக சிக்கல்களில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  13. முதலீட்டு யோசனைகள் நன்று மக்களுக்கு பயனுள்ள பதிவு தொடரட்டும் வாழ்த்துகள்
    தமிழ் மணம் நவரத்தினம்
    நண்பரே என்னை நினைவு இருக்கிறதா ? எனது பெயர் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மணவாக்கிற்கும் நன்றி திரு KILLERGEE அவர்களே! இரண்டு நாட்கள் கேரளா போயிருந்ததால் தங்களது பின்னூட்டத்தை பார்க்கவில்லை. தங்களை நினைவிருக்கிறதா என கேட்டுள்ளீர்கள். மறந்திருந்தால் தானே நினைப்பதற்கு! எனது மடிக்கணினி தொல்லை கொடுக்க ஆரம்பித்திருப்பதால் முன்போல் எழுதவோ, பின்னூட்டம் இடவோ முடியவில்லை. விரைவில் சரிசெய்து உங்கள் முன் இருப்பேன்.

    பதிலளிநீக்கு