வெள்ளி, 15 மே, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 28


மோசடி நிறுவனங்கள் பொது மக்களின் பணத்தை வெகு எளிதாக சுருட்ட முடிவதன் காரணம் மக்களின் நினைவாற்றல் குறைவும், குறைந்த நாட்களில் அதிக இலாபம் ஈட்டவேண்டும் என்ற பேராசையும் தான் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.இல்லாவிடில் ஏற்கனவே தேக்கு மர வளர்ப்பு திட்டம், ஆடு வளர்ப்பு திட்டம், வீட்டிற்கே வந்து காய்கறி மற்றும் நெல்லூர் அரிசி தரும் திட்டம், மஞ்சள் கடம்பு மர (Adina cordifolia) வளர்ப்பு திட்டம் காந்த படுக்கை விற்பனைத் திட்டம் போன்ற திட்டங்களில் பணத்தை தொலைத்த மக்கள் திரும்பவும் ஈமு கோழி வளர்ப்பு போன்ற திட்டத்தில் பணத்தை இழப்பார்களா என்ன?

2006 ஆம் ஆண்டு வாக்கில் பெருந்துறையில் ஒரு நிறுவனம், ஒப்பந்த பண்ணை (Contract Farming) என்ற அடிப்படையில் ஈமு கோழி வளர்ப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் ரூபாய் 1.5 இலட்சம் முதலீடு செய்வோருக்கு இரண்டு ஆண்டுகளில் முதலீட்டு பணத்தோடு வருமானமாக ரூபாய் 1.44 இலட்சம் தரப்படும் என்று அறிவித்து முதலில் வந்தவர்களுக்கு சொன்னபடி கொடுத்து மக்களிடையே நம்பிக்கையை விதைத்தது.

மேலும் அந்த நிறுவனம் பல இடங்களில் ஈமு கோழி இறைச்சி உணவகங்களை பிரபலங்களைக் கொண்டு திறந்தும், தனது விளம்பரங்களில் பிரபலங்கள் சிலர் அந்த திட்டம் பற்றி சிபாரி செய்வதுபோல் விளம்பரப்படுத்தியும், அநேகம் பேரை தூண்டில் போட்டு இழுத்தது. அதை நம்பி சேர்ந்தவர்கள் பின்னர் அந்த நிறுவனம் சொன்னபடி செய்யாததால் ஏமாந்தது தான் மிச்சம்.

ஈமு கோழியின் ஒரு முட்டையை ரூபாய் 1200 க்கு விற்கலாம் என்றும் அதனுடைய தோல், இறகு, இறைச்சி போன்றவைகளுக்கு நல்ல கிராக்கி இருக்கும் என்று] கவர்ச்சிகரமான அறிவிப்பால் மயங்கி ஏமாந்தவர்கள் பல்லாயிரம்.

ஈமு கோழி பற்றியும் அதன் முட்டை மற்றும் தோல், இறகு, இறைச்சி போன்றவைகளை எப்படி சந்தைப்படுத்துவது பற்றி அறியாத மக்கள் இந்த மாயச் சூழலில் மாட்டிக்கொண்டது வேதனைக்குறியதே

அந்த நிறுவனத்தை தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் புற்றீசல் போல் முளைத்து மக்களின் பணத்தை சுரண்டிவிட்டார்கள்.

இந்த மோசடி நிறுவனங்கள் பற்றி காவல் துறைக்கு வந்த புகார்கள் மட்டுமே 9000 க்கு மேலாம். அவர்களின் கணிப்புப்படி இந்த மோசடியில் மக்கள் இழந்த தொகை 150 கோடி ரூபாய்கள் இருக்கும் என்பதுதான். ஆனாலும் இந்த மோசடி நிறுவனங்கள் சுருட்டிய தொகை 500 கோடி ரூபாய்கள் இருக்கலாம் என்கிறார்கள் அந்த பகுதியிலுள்ளோர்.

அந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை மூடிவிட்டு காணாமல் போனதும் அவர்கள் தந்த ஈமு கோழிகளை பராமரிக்க முடியாமல் மக்கள் அவைகளை வீதியில் அலையவிட்டதும், பின்பு அரசின் கால்நடைத்துறை அந்த கோழிகளை பராமரித்து பின்னர் அவைகளை வளர்க்க யாரும் இல்லாததால் இறைச்சி வணிகர்களுக்கு குறைந்த விலைக்கு ஏலம் விட்டது வேறு கதை.

இது போன்ற திட்டங்களில் மக்களின் பணம் எவ்வளவு முடக்கப்பட்டு / சுருட்டப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்தால் பேரதிர்ச்சியாக இருக்கும். இந்தியா முழுவதும் சுமார் ஆறு கோடி மக்களின் 80,000 கோடி ரூபாய்கள் பொன்ஃஜி திட்டங்களில் முடங்கியிருப்பதாக மய்ய புலனாய்வு செயலகத்தின் (Central Bureau of Investigation) இயக்குனர் திரு அருள் சின்ஹா அவர்கள் தெரிவித்த தகவலை ஏப்ரல் 28 நாளிட்ட The Hindu Business Line வெளியிட்டிருக்கிறது.

இதுவரை  87 நிறுவனங்கள் இது போன்ற பொன்ஃஜி திட்டங்களின் மூலம் சுமார் 342 கோடி ரூபாய்களை நம் நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ள மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு காணாமல்(!) போய்விட்டதென சென்ற ஆண்டு வந்த தகவல் ஒன்றும் தெரிவிக்கிறது.

இதில் 26 நிறுவனங்கள் குஜராத் மாநிலத்திலும், ஒன்றுபட்டிருந்த ஆந்திர மாநிலத்தில் 13 நிறுவனங்களும், தமிழ் நாட்டில் 10 நிறுவனங்களும், மகாராஷ்டிர மாநிலத்தில் 9 நிறுவனங்களும், தில்லி, மேற்கு வங்காளம், மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 5 நிறுவனங்களும், உத்திர பிரதேசத்தில் 4 நிறுவனங்களும் செயல்பட்டனவாம்.

அநேகம் பேர் இது போன்ற ஏமாற்றுத் திட்டங்களில் ஏமாந்து பணத்தை பறி கொடுத்திருப்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியும், மக்கள் அதை வெகு விரைவில் மறந்து, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஏமாற்றி பிழைப்போர்களின் வலையில் வீட்டில் பூச்சிகள் வீழ்ந்து பணத்தை தொலைப்பதை என்னவென்று சொல்ல

இதுபோன்ற திட்டங்களில் நம்மை சேர அழைப்பவர்கள் பிடியிலிருந்து தப்புவது என்பதே ஒரு கலை தான். என்னை இதுபோன்ற திட்டங்களில் சேர அணுகியவர்களை சமாளித்தது பற்றி அடுத்த பதிவில் சொல்லுவேன்.


தொடரும்32 கருத்துகள்:

 1. ஐயா வணக்கம்.

  இது போன்ற விளம்பரங்களை ஊடகங்களில் கண்ட போது நானும் நினைத்ததுண்டு.
  இதெல்லாம் எப்படி என்று............
  கடைசியில்தான் தெரிந்தது இதுவும் மோசடி.

  இப்படி எல்லாம் புதிது புதிதாகச்சிந்தித்து ஏமாற்றுப் பேர்வழிகள் களம் இறங்குவதும், மக்களும் மீண்டும் மீண்டும ஏமாந்து போவதும் எளிதில் பணம் ஈட்ட நினைக்கின்ற பேராசைதான்.

  அதை அணையிடத் தங்களின் பதிவுகள் உதவும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! எவ்வளவுதான் நாம் உரத்த குரலில் சொன்னாலும் சம்பந்தபட்டவர்கள் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே இது போன்ற மோசடிகளிலிருந்து தப்பமுடியும். நான் வழக்கமாக மேற்கோள் காட்டும் எனக்குப் பிடித்த சொல்லாடலை சொல்லலாமேன எண்ணுகிறேன். Tell them and tell them that you have told them. Having told them tell them that you have told them.

   நீக்கு
 2. //அநேகம் பேர் இது போன்ற ஏமாற்றுத் திட்டங்களில் ஏமாந்து பணத்தை பறி கொடுத்திருப்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியும், மக்கள் அதை வெகு விரைவில் மறந்து, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஏமாற்றி பிழைப்போர்களின் வலையில் வீட்டில் பூச்சிகள் வீழ்ந்து பணத்தை தொலைப்பதை என்னவென்று சொல்ல//

  இது மிகவும் வேதனையளிக்கும் செய்திதான்.

  விழிப்புணர்வு தரும் தங்களின் தங்கமான பதிவுக்கு நன்றிகள். தொடரட்டும் தங்களின் இதுபோன்ற சேவைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு
 3. அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொல்வதுபோல, உங்கள் பதிவுகள் அனைத்தும் விழிப்புணர்ச்சியைத் தூண்டும் பதிவுகள். இவைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நூலாக வெளி வர வேண்டும்.

  என்னதான் இது மாதிரி சீட்டுக்களில் சேரக் கூடாது என்று நினைத்தாலும், பலரும் அதில் முதலில் சேர்ந்த நண்பர்கள் மூலம் தான் முகத்தாட்சணைக்காக சேர்ந்து பின்பு அவதிப் படுகிறார்கள் என்பது கண்கூடு.
  த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! இது போன்றவைகளில் முகதாட்சண்யம் பார்க்கத் தேவையில்லை. நட்டம் ஏற்பட்டால் அந்த நண்பர்களா வந்து அதை ஈடு கட்டப் போகிறார்கள்.

   நீக்கு
 4. இதைப் பற்றி நான் ஒரு பதிவு போட்டிருந்தேன்.
  லிங்க்: http://swamysmusings.blogspot.com/2012/05/blog-post_29.html
  ஆனால் மக்கள் இதையெல்லாம் யோசிக்க மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! தங்களின் “ஈமு கோழி வாங்கலியோ? ஈமு கோழீஈஈஈஈஈ:: என்ற பதிவை படித்தேன். தங்களுக்கே உரித்தான நகைச்சுவையோடு மக்களை ஏமாற்றும் அந்த திட்டம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்.

   நீக்கு
 5. விதம் விதமான விளம்பர உத்திகள் மூலமாக நம்மை ஈர்த்துவிடுகிறார்கள். பின்னர்தான் தவறுசெய்துவிட்டோம் என உணர்கிறோம். தொடர்ந்து படிப்பினை பெற்றுவருகிறோமே தவிர திருந்துவதாக இல்லை. பயனுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 6. மோசடி நிறுவனங்கள் பொது மக்களின் பணத்தை வெகு எளிதாக சுருட்ட முடிவதன் காரணம் மக்களின் நினைவாற்றல் குறைவும், குறைந்த நாட்களில் அதிக இலாபம் ஈட்டவேண்டும் என்ற பேராசையும் தான்.
  100க்கு100 உண்மையான வார்த்தைகள் நண்பரே இதற்க்கு மேல் விவரிக்க முடியாது அருமை
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 7. எப்படி சமாளித்தீர்கள் / தப்பித்தீர்கள் என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! பொறுத்திருங்கள் நடந்ததை அறிய.

   நீக்கு
 8. விழிப்புணர்வை ஏற்படுத்தும்
  அழியா சிறப்புமிக்க பதிவு
  பதிவு செய்துகொண்டேன்!நன்றி அய்யா!

  (சிறப்புமிக்க த ம 7)
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

   நீக்கு
 9. விளக்கமான நல்ல பதிவு! மீண்டும் மீண்டும் மக்கள் ஏமாறுவது எப்படி படித்தவர்கள் கூட இதில் ஏமாறுவது வருந்தத் தக்கதாம்!
  நலமா! நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா, வணக்கம். நலம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

   நீக்கு
 10. வித விதமாக சிந்தித்து ஏமாற்றுகிறார்கள். ஏமாற நம் மக்கள் தயார் மீண்டும் மீண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

   நீக்கு
 11. " நான் அந்தத் திட்டத்தில் சேர்ந்து ஏமாறுகிறேன் - பார்க்கிறாயா?
  எவ்வளவு பந்தயம்?" என்று கேட்கும் மக்கள் இருந்திட அந்த ஏமாற்று நிறுவனங்களுக்கு என்ன கவலை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களே!

   நீக்கு
 12. விழிப்புணர்வுப் பதிவே தான் அனைத்தும்.
  நான் தான் வரவில்லை.. முயற்சிப்பேன்.

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 14. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருஇரத்தினவேல் நடராஜன் அவர்களே!

   நீக்கு
 15. ஐயா, தங்களை தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ள முயன்றேன். முடியவில்லை. தங்களது 'ஏமாற்றுவதும் ஒரு கலைதான்' தொடரை எங்களின் நாளிதழில் பிரசுரிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். அதற்கு தங்கள் அனுமதி வேண்டும். தங்களின் பதிலை என்னுடைய மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.

  senthil.msp@gmail.com

  நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு S.P.செந்தில் குமார் அவர்களே! தங்களுக்கு எனது பதிலை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளேன்.

   நீக்கு
 16. உங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். வலைச்சரத்தில் தங்களை ஜீஎம்பி ஐயா அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! திரு GMB அவர்கள் வலைச்சரத்தில் இன்று என்னை அறிமுகப்படுத்தியதை அறிவித்தமைக்கு நன்றி!

   நீக்கு
 17. இன்றைய வலைச்சரத்தில் ஐயா GMB அவர்கள் - தங்களைக் குறிப்பிட்டு சிறப்பித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது வலைத்தளத்திற்கு முதன் முறையாக வந்துள்ள தங்களுக்கும், என்னை வலைச்சரம் மூலம் தங்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா திரு G.M.B அவர்களுக்கும் நன்றி!

   நீக்கு