செவ்வாய், 16 ஜூன், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 30வரமாட்டார் என நினைத்திருந்த அந்த முகவர் சரியாக மாலை 5 மணிக்கு திரும்பவும் வந்தார்! வந்தவர் விடாக்கண்டர் போலும் என எண்ணிக்கொண்டு அவரை உட்கார சொன்னேன். பிறகு ‘சொல்லுங்கள் காலையில் நீங்கள் சொல்ல நினைத்த திட்டம் பற்றி.’ என்றேன்.அவரும் மிக உற்சாகத்தோடு எனது கையில் ஒரு கையேடு ஒன்றை கொடுத்துவிட்டு ’சார். இதை படித்துப்பாருங்கள். எங்களது நிறுவனம் பொது மக்களுக்காக கொண்டுவந்திருக்கும் அருமையான திட்டம் இது. இந்த திட்டத்தில் சேரும் முதலீட்டார்களுக்காக தேக்கு மரக் கன்றுகளை நாங்களே வளர்த்து அவை மரமான பின் அதாவது அவைகள் வணிக உபயோகத்திற்கு பயன்படுகின்ற நிலையில் தருவதே எங்கள் நோக்கம். இதில் நீங்கள் சேர்ந்தால் மட்டும் போதும்.அவைகளை சரியாக பராமரித்து வளர்த்து தருவது எங்களது வேலை. நீங்கள் ஒரு அலகோ (Unit) அல்லது அதற்கு மேற்பட்டோ வாங்கி முதலீடு செய்யலாம்.

எல்லோரும் இப்போது தங்களுக்கென ஒரு வீடு வேண்டும் என விரும்புவதால் வருங்காலங்களில் தேக்கு மரத்தை உபயோகிப்போரின் எண்ணிக்கை கூடும். அதனால் தேக்கு மரக்கட்டைகளின் விலை ஏறும். அப்போது உங்களுக்கான தேக்குமரத்தை வெட்டி விற்பனை செய்யும்போது வரும் இலாபம் நினைத்துப் பார்க்கமுடியாத அளவில் அபரிதமாய் இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு தேக்கு கன்றுக்கான விலையான ரூபாய் 1600 ஐ செலுத்தினால் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூபாய் 60000 க்கு மேல் கிடைக்கும் மேலும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இவைகள் சிறந்த முதலீடாக இருக்கும்.’ என்றார்

நான் அந்த கையேட்டை புரட்டிப் பார்த்துவிட்டு ‘எத்தனை ஆண்டுகளில் நல்ல இலாபம் கிடைக்கும் என்கிறீர்கள்? என்றேன்.

அவர் ‘சுமார் 20 ஆண்டுகளில் நல்ல இலாபம் கிடைக்கும் சார். இது வங்கிகள் தரும் வட்டியைவிட அதிகம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.’ என்றார். அதற்கு நான் ‘அது சரி. நீங்கள் 20 ஆண்டு வளர்ந்த தேக்கு மரம் பார்த்திருக்கிறீர்களா? இருபது ஆண்டுகள் வளர்ந்த மரத்தின் சற்றளவு (Girth) எவ்வளவு இருக்கும்? மேலும் உங்கள் திட்டத்தில் ஒரு ஏக்கரில் 20 ஆண்டுகளில் 400 மரங்கள் இருக்கும் என்றிருக்கிறீர்கள். நன்றாக வளர்க்கப்படும் தோட்டங்களிலே கூட 40 மரங்கள் தான் இருக்கும் என்கிறார்களே அது பற்றி என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, அவர் தயக்கதோடு, ‘சார் இப்போது தான் வேலையில் சேர்ந்திருக்கிறேன். அது பற்றியெல்லாம் தெரியாது.’ என்றார்.

நிச்சயம் அவருக்கு தேக்குமரம் வளர்ப்பது பற்றியோ அதனுடைய வளர்ச்சி பற்றியோ தெரிய வாய்ப்பில்லை என தெரிந்துகொண்டதால், அதுபற்றி மேலும் விசாரிக்காமல் அவைகளை சந்தைப்படுத்துதல் பற்றி கேட்க எண்ணி, ‘சரி. 20 ஆண்டுகளுக்குப் பிறகு தேக்கு மரத்தின் விலை இறங்குமுகமாக இருந்தால் என்ன செய்வது?’ எனக் கேட்டேன்.

அவர் ‘அப்படியெல்லாம் ஆகாது சார். நாளாக நாளாக விலைவாசி ஏறும்போது இதனுடைய விலையும் ஏறும்.’ என்றார்.

நான் உடனே, ‘இப்போது உங்கள் நிறுவனம் போல் பல நிறுவனங்கள் தேக்கு மர திட்டத்தை தொடங்கியிருப்பதால் எதிர்காலத்தில் அதிக அளவில் தேக்கு மரம் உற்பத்தியாகி அவைகள் சந்தைக்கு வரும்போது சந்தையில் அதன் காரணமாக Glut ஏற்பட்டால் அதாவது தேவைக்கு அதிகமாக இருந்தால் அப்போது விலைகுறைய வாய்ப்புண்டா இல்லையா?’ என்றேன்.

அதற்கு அவர் ‘அப்படியெல்லாம் நடக்காது. சார்.’ என்றார். ‘சரி. உங்கள் கருத்துப்படி சந்தையில் தேக்கம் ஏற்படாது என்று எடுத்துக்கொண்டாலும், எதிர்காலத்தில் மக்களின் முன்னுரிமை (Preference) யும், விருப்பமும் மாறி தேக்கு மரத்தை பயன்படுத்தாமல் அலுமினியத்தை அல்லது வேறு உலோகத்தை சன்னல் போன்றவைகளை செய்ய பயன்படுத்தினால் அப்போது சந்தையில் வரும் தேக்கு மரத்திற்கு கிராக்கி (Demand) குறையுமல்லவா? அதனால் நிச்சயம் தேக்குமரக் கட்டைகளின் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்புண்டு. அதனால் முதலீட்டாளர்களுக்கு நட்டம் வரும் அல்லவா?’ என்றேன்.

நான் இவ்வாறு கேள்விகள் கேட்க ஆரம்பித்ததும் ,அவர் பொறுமை இழக்க ஆரம்பித்துவிட்டார் என்பதை அவரது முகமே காட்டிவிட்டது. இந்த ஆளிடம் இந்த திட்டத்தை விற்கமுடியாது என்ற முடிவோடு ‘என்ன சார் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே பார்க்கிறீர்களே?’ உங்ககளுக்கு விருப்பம் இல்லையென்றால் சொல்லுங்கள் சார். நான் மேற்கொண்டு உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என்றார்.

அதற்கு நான், நண்பரே. பொறுமை இழக்காதீர்கள். பணத்தை முதலீடு செய்பவன் நான். எனது முதலீடு மோசமில்லாமல் அசலாவது திரும்பி வருமா என்ற எண்ணத்தில் எனக்கு ஏற்படும் ஐயங்களுக்கு பதில் சொல்லவேண்டியது உங்கள் கடமை. நீங்கள் ஒரு முதலீட்டுத் திட்டத்தை மக்களிடம் எடுத்து செல்லும்போது அதனுடைய சாதக பாதகங்கள் பற்றி அவர்கள் கேட்கும்போது விளக்கவேண்டியது உங்கள் வேலை அல்லவா? ஏன் உங்கள் நிறுவனத்தில் இது பற்றியெல்லாம் சொல்லித் தரவில்லையா?’ என்றேன்.

அவர் உடனே.’ சார். உங்களுக்கு இதில் விருப்பம் இல்லை என நினைக்கிறேன். வருகிறேன்.’ என சொல்லிவிட்டு செல்ல முற்பட்டார்.

நான் அவரிடம் ‘இருங்கள். இப்போதுதான் இந்த நிறுவனத்தில் சேர்ந்தேன் என்கிறீர்கள். இதற்கு முன் எங்கு வேலை செய்தீர்கள்?’ என்று கேட்டதற்கு அவர் தந்த பதில் ஆச்சரியத்தை தந்தது.

‘சார். இதற்கு முன்பு AC Plant விற்பனை முகவராக இருந்தேன்.;என்றார்.

‘ஓ. AC Plant ஐ விற்பனை செய்துவிட்டு Teak Plant விற்க வந்துவிட்டீர்களா? பரவாயில்லை. நான் இதில் சேர விரும்பாததன் காரணம் நீங்கள் சொல்வதுபோல் இந்த திட்டத்தின் மூலம் அவ்வளவு வருமானம் வர வாய்ப்பில்லை என்பதால் தான். இனியாவது வேறு யாரையும் இந்த திட்டத்தில் சேர்க்க முயலுமுன்பு தேக்கு மரம் பற்றி படித்து நன்றாக தெரிந்துகொண்டு நான் கேட்ட கேள்விகளுக்கான பதில்களையும் தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.’ என்றேன்.

அவரும் ஒரு அசட்டு சிரிப்போடு. ‘வருகிறேன்.சார் ‘என்று சொல்லி சென்றார். அந்த திட்டத்தில் ஓட்டை உள்ளது என்பதை அவர்கள் ஒரு ஏக்கரில் 400 மரங்கள் இருக்கும் என்று சொல்லியிருப்பதை வைத்தே அறிந்துகொண்டதால் அதில் சேரவில்லை. தேக்கு மரம் பற்றி கல்லூரியில் படித்திருந்ததால் என்னால் அவரை மடக்க முடிந்தது. இல்லாவிடில் நானும் ஏமாந்திருப்பேன்.

எல்லோருக்கும் எல்லா விஷயமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் திடீரென முடிவெடுக்காமல் நமக்கு ஏற்படுகிற திட்டம் பற்றிய ஐயங்களை ஒரு முறைக்கு இருமுறை கேட்டுத் தெரிந்து கொண்டபின் சிந்தித்து முதலீடு செய்யலாம். ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். நாம் அதிக கேள்விகள் கேட்க ஆரம்பித்தாலே நம்மை ஏமாற்ற நினைத்து வருபவர்கள் உஷாராகி இடத்தை விட்டு அகன்று விடுவார்கள்

இது போன்ற திட்டங்களில் சேர்க்க நம்மை அணுகும் முகவர்கள் இரண்டு வித அஸ்திரங்களை உபயோகித்து நம்மை வீழ்த்த பார்ப்பார்கள். முதலில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் அஸ்திரம் நமது முதலீட்டிற்கு கிடைக்கும் வருமானம் (Return on investment) பற்றிய கவர்ச்சிகரமான அறிவிப்பு தான். பொதுவாக அனைவரும் தாங்கள் செய்யும் முதலீட்டிற்கு வங்கிகள் தரும் வட்டி விட அதிக வருமானம் தர வேண்டும் என் எதிர்பார்ப்பார்கள்.

அது தப்பு இல்லை என்றாலும் அதிக வருமானம் தரக்கூடிய அளவிற்கு அந்த திட்டத்தை செயல் படுத்தமுடியுமா என்பதை சிந்திக்காமல் முதலீடு செய்தால் நிச்சயம் நமது பணம் திரும்பி வராது என்பதே உண்மை. ஆனால் வரும் முகவர்கள் தங்களது சாதுர்ய பேச்சால் நம்மை சிந்திக்க விடாமல் நமது எண்ணத்தை திசை திருப்பி இனிக்க இனிக்க பேசி தங்களது காரியத்தை சாதித்து விடுவார்கள்.

அவர்கள் எடுக்கும் இரண்டாவது அஸ்திரம் நமது குழந்தைகள் மேல் உள்ள பாசத்தை. நம் குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் வளர்ந்து திருமண வயதை எட்டும்போது அவர்களது திட்டம் மூலம் ஈட்டும் வருமானம் நம்மை கடன் வாங்காமல் தாராளமாக செலவழிக்க உதவும் என்பதை சொல்லி நம்மை அந்த திட்டத்தில் சேரவைத்துவிடுவார்கள்.

எனவே கவர்ச்சிகரமான திட்ட அறிவிப்பையும், இனிக்க பேசி நம்மை இழுக்க நினைப்போரையும் இனம் கண்டுகொண்டாலே நமது முதலுக்கு மோசமில்லை.
தொடரும்


33 கருத்துகள்:

 1. உங்கள் பதிவின் மூலம் தேக்கு மரத் திட்டத்தின் குறைபாடுகள் அதில் நடக்கும் மோசடி பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டேன். நீங்கள் சுட்டிக் காட்டியது போல எல்லா தேக்கு மரத் திட்டங்களும் மோசடியாகவே முடிந்தன.

  த.ம.1

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும்,கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 2. நல்ல பொறுமைசாலிதான் நீங்க. பேங்க் வேலைல எத்தனை பேரைப் பார்த்திருப்பீங்க. நாங்கன்னா மொதல்லியே போய்ட்டு வாங்கன்னு சொல்லி விரட்டியிருப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வங்கிப் பணியில் இருப்போருக்கு பொறுமை முக்கியம். பணியில் சேர்ந்த ஆரம்பத்தில் அது இல்லாவிட்டாலும், பின்னர் அதை வளர்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். இல்லாவிடில் பல தரப்பட்ட வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்வது கடினம்.
   அதனால் தானோ என்னவோ அவரை புறக்கணிக்கவில்லை. அதே நேரத்தில் ஏமாறவும் இல்லை.

   நீக்கு
 3. எல்லாவற்றிக்கும் பதில் சொல்லும் கில்லாடிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்... சிறிது அசந்தால் அம்பேல்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே! நீங்கள் சொல்வது சரி தான்.

   நீக்கு
 4. ஆள் தெரியாம வந்து மாட்டிக்கிட்டு நொந்து நூலாயிட்டார் முகவர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 5. நானும் இதில் சேர்ந்து ஏமாந்தவர்களில் ஒருவன்தான். எனக்கு இந்தத்திட்டத்தில் சேரும் போதே மிக நன்றாகத் தெரியும் .... இதில் போடும் பணம் நிச்சயமாகத் திரும்பியே வராது என்று.

  இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலை + வேறொரு நண்பரின் தொடர் தொல்லைகளால், அன்று என்னை இதில் மனமில்லாமல் சேர வைத்தது. நல்லவேளையாக உஷாராக, ஒரேயொரு யூனிட்டுக்கு மட்டுமே அந்தக் காலத்தில் சுமார் ரூபாய் இரண்டாயிரத்திற்குள் பணம் கொடுத்து நான் சேர்ந்திருந்தேன்.

  அதற்காக அவர்கள் எனக்கு அளித்துள்ள, தேக்கு மரம் போன்ற வழவழப்பான காகிதங்கள் மட்டும் இன்னும் பத்திரமாக என்னிடம் உள்ளன. அதில் ஜோராக வளர்ந்த தேக்குமரப் படங்கள் தோப்புக்களாக கண்ணுக்குக் குளிமையாக காட்சியளிக்கின்றன :))))))))

  பயனுள்ள இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும்,கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! உங்களைப்போல பலர், நண்பர்களின் முக தாட்சயணத்திற்காக இந்த திட்டத்தில் பணத்தை போட்டதுண்டு.

   நீக்கு
 6. சமாளிக்கத் தெரிந்திருக்கவேண்டும் இல்லையெனில்....
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும்,கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 7. இந்த முதலீடு பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் யாரும் என்னை அணுகவில்லை. இதில் ஏமாறவும் இல்லை. விழிப்புணர்ச்சி தேவை என்பதை அழகாகச்சொல்லி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டிற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

   நீக்கு
 8. லாபம் என்கிற லக்ஸ் சோப்பு போட்டு தங்களை குளியலில் மணக்க வைக்க வந்தரை ஆப்பு வைத்து (மன்னிக்கவும் இந்த வார்த்தை பிரயோகத்திற்காக அய்யா) அனுப்பி விட்டீர்களே அய்யா!
  பாவம் வேலைக்கு லாயக்கு இல்லை என்று அவரை அந்த நிறுவனம் பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பி இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
  "செய்யும் தொழிலை திறம்பட உணர்ந்து செயல்பட தவறி விட்டார்.
  நட்புடன்,
  புதுவை வேலு
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! நான் எந்த வித புகாரும் தெரிவிக்காத நிலையில் அந்த நிறுவனம் அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கமாட்டார்கள்.

   நீக்கு
 9. ஐயா வணக்கம்.

  அனுபவப்பாடங்கள் ஒவ்வொன்றும் மிக அருமையாக உள்ளது.

  உங்கள் பழைய பதிவுகளைப் பார்த்து வருகிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

   நீக்கு
 10. வந்தவருக்கு தொழில் எப்படி செய்யணும்னு இலவசமாகக் கத்துக்கொடுத்துவிட்டீர்கள். அவருக்கு எப்படியிருந்தாலும் அது ஆதாயம்தான். தங்களுக்குப் பொறுமை அதிகம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். என்னிடம் பேசியபிறகு மற்றவர்கள் எப்படி கேள்வி கேட்பார்கள் என்ன பதில் சொல்லவேண்டும் என்பதை தெரிந்து கொண்டிருப்பார்.

   நீக்கு
 11. வெகு சாமர்த்தியமாக ஆளை மடக்கிவிட்டீர்கள் எல்லோருக்கும் இது ஒரு பாடம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

   நீக்கு
 12. மக்கள் இன்றும் இப்படி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

  பதிலளிநீக்கு
 14. நல்ல பதிவு. இதுவே சுமார் 15 வருடங்களுக்கு முன்பு மக்கள் அறியும் வண்ணம் பத்திரிகை களில் வந்து இருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் பணத்தை (திரு வை.கோ. அவர்கள் போல்) பறி கொடுத்து இருக்க மாட்டார்கள். ஏக்கருக்கு 400 என்பது போல், தேக்கு மரம் எல்லா இடங்களிலும் செழித்து வளராது என்ற உண்மையும் பலரும் அறிய வாய்ப்பு இல்லை. நானும் ஒரு வங்கியாளன் என்ற முறையிலும் உங்கள் பதிவுகளை படிக்கும் போது எனது எண்ண ஓட்டங்கள் பின்னோக்கி சென்று மகிழ்வு கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டிற்கும், கருத்துக்கும் நன்றி திரு பரமசிவம் அவர்களே! அரசு செய்திருக்கவேண்டிய பணியை நம் போன்றோர் இப்போதாவது பணி ஓய்வுக்குப் பின் பதிவின் மூலம் செய்யமுடிகிறதே என்று திருப்தி அடையவேண்டியதுதான்

   நீக்கு
 15. ஐயா வணக்கம் தங்கள் வலைக்கு இது என் முதல் வருகை !

  ''நுகர்வோர் இறைமை '' என்பதை சந்தைப் பொருட்கள் கொள்வனவு செய்யும் ஒவ்வொருவரும் அறிந்து இருத்தல் அவசியம் அதுபோல முதலீட்டாளன் என்னும் நிலையில் இருப்பவன் உங்களைப்போல் தூரநோக்கோடு சிந்திக்காத வரையில் விளைவுகள் பூஜ்ஜியமே !

  நல்லதோர் பதிவு நன்றி ஐயா
  தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  தமிழ்மணம் +!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும்,கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சீராளன் அவர்களே!

   நீக்கு
  2. முதல் வருகைக்கும்,கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சீராளன் அவர்களே!

   நீக்கு
 16. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (25/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும். எனது பதிவுகளில் சில திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை தெரிவித்தமைக்கும் நன்றி!

   நீக்கு
 17. மரியாதைக்குரிய அய்யா V.N.S அவர்களுக்கு வணக்கம்! தமிழ் வலைப்பக்கம் உங்களது கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

  நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப் பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

  தங்களின் வலைத்தளத்தினை இன்று (25.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
  நினைவில் நிற்போர் - 25ம் திருநாள்
  http://gopu1949.blogspot.in/2015/06/25.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும். எனது பதிவுகளில் சில திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை தெரிவித்தமைக்கும் பாராட்டுக்கும், எனது பதிவை தொடர்வதற்கும் நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு