செவ்வாய், 18 அக்டோபர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 1

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப் படிப்பை
1962-1966 இல் படித்த வகுப்புத் தோழர்களாகிய நாங்கள், பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 1967 ஆம் ஆண்டு சந்தித்த பிறகு, முதன் முறையாக புதுவையில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 22, மற்றும் 23 நாட்களிலும், இரண்டாவது முறையாக கோடைக்கானலில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9,10, மற்றும் 11 ஆம் நாட்களிலும் சந்தித்தோம்.


மூன்றாவது முறையாக 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13, 14 ஆகிய இரண்டு நாட்களில் அண்ணாமலை நகரில் சந்தித்ததை பிரிந்தவர் கூடினால் .....???????? 1 என்ற தலைப்பில்,2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 இல் எழுதியிருந்தேன்.

அண்ணாமலை நகரில் சந்தித்தபோது நாங்கள் முடிவெடுத்தது போல 2013 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 10 மற்றும் 11 தேதிகளில் நான்காவது முறையாக சேலத்தில் சந்தித்தோம். அதுபற்றி மீண்டும் சந்தித்தோம் 1 என்ற தலைப்பில் எழுதியபோது, நாங்கள் ஏற்காடு சென்றது பற்றியும், ஹொகனக்கல் சென்றது பற்றியும் எழுதியிருந்தேன்.

சேலத்தில் சந்தித்தபோது முதல் நாள் ஏற்காட்டில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு மாலையில் பரிசளிப்பு போன்ற நிகழ்வுகள் முடிந்ததும் எங்களது அடுத்த சந்திப்பை எங்கு வைத்துக்கொள்ளலாம் எப்போது வைத்துக்கொள்ளலாம் என்பது பற்றி விவாதித்தோம்.

2011 ஆம் ஆண்டில் அண்ணாமலை நகரில் கூடியபோது 2016 ஆம் ஆண்டு கோவையில் சந்திக்கலாம் என முடிவெடுத்திருந்தாலும், சிலர் வேறு இடத்தில் சந்திக்கலாம் என விரும்பியதால் திரும்பவும் அது பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டியிருந்தது.

பெரும்பான்மையோர் 2016 ஆம் ஆண்டில் நாங்கள் படிப்பை முடித்து 50 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதால் அந்த பொன் விழா சந்திப்பை தஞ்சையில் வைத்துக்கொள்ளலாம் என விரும்பியபோது, தஞ்சையில் இருக்கும் நண்பர்கள் பாலசுப்ரமணியன், முருகானந்தம், நாகராஜன், நாராயணசாமி ஆகியோர் தாங்கள் அந்த சந்திப்பை பிரமாண்டமாக நடத்துவதாக ஒத்துக்கொண்டனர்.

நண்பர் நாகராஜன், அந்த சந்திப்பின்போது முத்துப்பேட்டை அருகே உள்ள காயல் (Lagoon) அவசியம் பார்க்கவேண்டிய இடம் என்றும் அங்கே சென்று பார்க்க, தான் ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு ஒரு நாள் தேவை என்றும் சொன்னார்.

பல்கலைக் கழகத்தில் படித்து முடித்த 50 ஆம் ஆண்டை,தஞ்சை மாநகரில் சிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடுவது என்றும், மூன்று நாட்களில் முத்துப்பேட்டை காயலை பார்க்க ஒரு நாள் ஒதுக்கிவிட்டு, மீதி நாட்களில் அருகில் உள்ள கோவில்கள் மற்றும் வேளாங்கன்னி மாதா கோயில் நாகூர் தர்கா முதலிய இடங்களுக்கு செல்லலாம் என்றும் எல்லோரும் ஒருமித்து முடிவெடுத்தோம் என்பதை மீண்டும் சந்தித்தோம் 1 இல் எழுதியிருந்தேன்.

தஞ்சையில் சந்திக்கிறோம் என்று முடிவெடுத்ததுமே அந்த சந்திப்பை சிறப்பாக நடத்த தஞ்சை நண்பர்கள் உடனே செயலில் இறங்கிவிட்டார்கள். நானும் மற்ற நண்பர்களுக்கும் எப்போது தஞ்சையில் அந்த பொன் விழா சங்கமம் நடக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தோம்.


தொடரும்


26 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே இந்த சந்திப்பு திருவிழா பற்றி தாங்களை சென்னையில் சந்தித்தபோது சொன்னது முதல் ஆவலுடன் காத்திருந்தேன்
    புகைப்படங்கள் போட்டு இருக்கலாமே....

    தொடரும் போட்டு இருக்கின்றீர்கள் ஆகவே வரும்.
    சுட்டிகளுக்கு செல்கிறேன்
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! புகைப்படங்கள் இல்லாமலா? வரும் பதிவுகளில் படங்கள் இருக்கும்.

      நீக்கு
  2. //தஞ்சையில் சந்திக்கிறோம் என்று முடிவெடுத்ததுமே அந்த சந்திப்பை சிறப்பாக நடத்த தஞ்சை நண்பர்கள் உடனே செயலில் இறங்கிவிட்டார்கள். நானும் மற்ற நண்பர்களுக்கும் எப்போது தஞ்சையில் அந்த பொன் விழா சங்கமம் நடக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். //

    நாங்களும் இந்த இனிய சந்திப்புகள் பற்றி, தொடர்ந்து தங்கள் வலைத்தளத்தினில், தங்களின் தனிப்பாணி எழுத்துக்களில் படிக்கக் காத்திருக்கிறோம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தொடர இருப்பதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  3. வணக்கம்.

    இதுபோன்ற நட்புகளும் தொடர்பும் இருப்பதும் நீள்வதும் வரம்.

    இது மென்மேலும் தொடரவேண்டும்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பதிவைத் தொடர இருப்பதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நான்கு ஆண்டுகள் நெருங்கிப் பழகியதால் ஏற்பட்ட நட்பு எங்களுடையது. நீங்கள் கூறியதுபோல் இது ஒரு வரமே.
      படிப்பை முடித்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு வகுப்புத் தோழர்கள் அனைவரின் முகவரியை கண்டுபிடிக்க கஷ்டப்பட்டு முயற்சித்து, 40 ஆம் ஆண்டில் முதல் சந்திப்பை நடத்தினோம். அப்போது நான் பதிவுலகில் இல்லாததால் அந்த சந்திப்பு பற்றி எழுதவில்லை. அதற்கு பிறகு தொடர்ந்து சந்தித்துக்கொண்டு இருக்கிறோம். அடுத்து எங்கு, எப்போது சந்திக்க இருக்கிறோம் என்பதை பதிவில் சொல்லுவேன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், வரும் பதிவுகளை படிக்க காத்து இருப்பதற்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே!

      நீக்கு
  5. அருமையான நிகழ்வை கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள். தொடர்கிறேன்.
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.P.செந்தில் குமார் அவர்களே!

      நீக்கு
  6. நம்மோடு படித்த பட்ட வகுப்புத் தோழர்களை ஒரு இடத்தில், குழுவாக மீண்டும், மீண்டும் சந்திப்பது என்பது மகிழ்வான விஷயம்தான். தொடர்ந்து எழுதுங்கள். தொடர்கின்றேன்.

    என்னைப் போன்றவர்களுக்கு, உடன் பணி புரிந்த Pensioners Association கூட்டம் மட்டுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நம்மோடு பணிபுரிந்தவர்களோடு சந்திப்பதைவிட நம்மோடு படித்தவர்களுடன் சந்திப்பது அதிக மகிழ்ச்சியை தருவதை நாங்கள் உணர்ந்தோம்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருகைக்கும், ஆவலோடு காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே

      நீக்கு
  8. பழைய நண்பர்களை சந்திப்பதில் கிடக்கும் மகிழ்ச்சி அலாதியானது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே! பழைய நண்பர்களை சந்திப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானதுதான்.

      நீக்கு
  9. இப்படியொரு பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் இது ஒரு பாக்கியம் தான்.

      நீக்கு
  10. நீங்களாவது நினைவு வைத்து சந்திக்கிறீர்கள் எனக்கும் அம்பர்நாத் ஆலும்னி மீட் நாக்பூரில் நடப்பதாக அழைப்பு வந்திருக்கிறது பதிவர் சந்திப்புதான் எங்கே எப்போது என்று தெரியாமலேயே இருக்கிறது தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! எனது வகுப்புத்தோழர்கள் அனைவரின் முகவரி, தொலைபேசி எண், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவைகளை எனது மடிக்கணினியில் சேமித்து வைத்திருக்கிறேன். அதனால் அவர்களை தொடர்பு கொள்ளுவது எளிதாக உள்ளது. ஒவ்வொரு தடவை சந்திக்கும்போதும் கடைசி நாளன்று அடுத்து சந்திக்கும் ஆண்டையும், இடத்தையும் அந்த சந்திப்பை பொறுப்பேற்று நடத்தும் நண்பர்களையும் முடிவு செய்வதால் குழப்பம் ஏதும் இல்லை.

      நீக்கு
  11. ஆரம்பமே ஒரு சுவையான நீண்ட நட்புறவு கட்டுரைக்கு அஸ்திவாரமிடுவது போல இருந்தது. சுவாரஸ்யம்.

    வரவிருக்கும் கட்டுரைத் தொடர்களில் புகைப்படங்கள் இடுவீர்கள் போலிருக்கு. முத்துப்பேட்டை காயல் விஜய பகிர்வுக்காகவும் காத்திருக்கிறேன்.

    என் மனைவி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.எட்., மற்றும் எம்.எட்., கல்வி முடித்தவர். அவர் ஆசிரியையாக பணியாற்றியமையால் தொலைதூரக்கல்விப் படிப்பில் இது சாத்தியமாயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! இந்த கட்டுரை சற்று நீண்டு இருக்கும் என்பது உண்மைதான். ‘பருப்பில்லாத கல்யாணமா/’ என்பதுபோல் புகைப்படங்கள் இல்லாத கட்டுரையா? நிச்சயம் புகைப்படங்களை வெளியிடுவேன். அப்போதுதான் முத்துப்பேட்டை காயலை படிப்பவர்கள் முன் கொண்டுவர இயலும்.

      தங்கள் துணைவியாரும் நான் படித்த, தமிழ் வளர்த்த பல்கலைக் கழகத்தில் படித்தவர் என்பதை அறியும்போது மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.

      நீக்கு
  12. இத்தனை ஆண்டுகள் கழித்து நண்பர்கள் தொடர்ந்து சந்திப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய தருணமே. இது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி திருமதி கலையரசி அவர்களே!

      நீக்கு
  13. வாழ்க்கையில் கடமைகளும், எதிர்பார்ப்புகளும், கபடமும், அதிகம் இல்லாத நாட்களுக்கு திரும்ப முடியாது, அதிகபட்சம் அசைபோட்டு பார்க்கலாம். அந்த சமயங்களில் அதே நிலையில் இருந்தவர்களுடன் இருப்பது என்பது அந்த நேரத்திலாவது அந்த வயதுக்கு செல்லும் பிரமையைக் கொடுக்கும். தங்களின் அனுபவங்களை அறியக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். அந்த பழைய நாட்களுக்கு செல்ல இயலாதுதான் ஆனால் வகுப்புத் தோழர்களை சந்தித்து பழைய நிகழ்வுகள் பற்றி பேசும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

      நீக்கு