புதன், 5 அக்டோபர், 2016

எழுதிக்கொண்டு இருப்பதை நிறுத்தினால் என்னவாகும்?

2009 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 30 ஆம் நாள் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பதிவுலகம் நுழைந்த நான் தொடர்ந்து 9 ஆண்டுகள் இடைவிடாது எனது வலைப்பக்கத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.




பதிவுலகத்தில் நான் நுழையக் காரணமாக இருந்த மதிப்பிற்குரிய நண்பர் திரு அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்கள், 02-08-2013 ஆம் நாளன்று, நான் பதிவிட்ட, முதல் பதிவின் சந்தோசம் என்ற தொடர் பதிவுக்கு எழுதிய பின்னூட்டத்தில், தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது எப்படி? என்னும் தலைப்பில் நான் ஒரு பதிவிடவேண்டும் என்று எனக்கு வேண்டுகோள் விடுத்தார்.

வலைப்பதிவு ஆரம்பிக்க எனக்கு கற்றுக்கொடுத்த ஆசானான அவரது வேண்டுகோளை ஏற்றும் நானும் தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது எப்படி? என்ற பதிவை 10-08-2013 ஆம் நாளன்று வெளியிட்டேன். அதில் ‘வாரம் ஒருமுறையாவது பதிவிட்டு களத்தில் இருப்பது.’ என்பது எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட கட்டுப்பாடு என்று சொல்லியிருந்தேன்.

அதையும் கூடியவரை கடைப்பிடித்து வந்தேன். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல சிலசமயம் பணிச்சுமை காரணமாக ஒரு மாதத்தில் 3 பதிவுகள் மட்டுமே வெளியிட முடிந்தது.

ஆனால் அதையும் ஒழுங்காக கடைப்பிடிக்கமுடியவில்லை. சென்ற பதிவில் சொல்லியிருந்தது போல், வீட்டை சீரமைக்கும் பணியை மேற்பார்வையிடுவதில் முனைப்பாக இருந்ததால், 27-08-2016 க்கு பிறகு 23-09-2016 வரை வலைப்பக்கமே வர இயலாததால், எழுதுவதற்கு பல தகவல்கள் இருந்தும் எழுத இயலவில்லை.

சென்ற பதிவில் ‘ஓரிரு நாட்களில் பதிவிட ஆரம்பித்துவிடுவேன்.’ என்று சொல்லியிருந்தேனே ஒழிய, நினைப்பதை பதிவிட தட்டச்சு செய்ய, மடிக்கணினி முன் அமர்ந்தபோது ஏனோ மேற்கொண்டு உத்வேகம் வராததால் தட்டச்சு செய்யமுடியவில்லை.

காரணம் என்னவாயிருக்கும் என யோசித்தபோது, எழுதுவதை சுமார் ஒரு மாத காலம் நிறுத்தியதுதான் என்பதை புரிந்துகொண்டேன். அப்போது தான் என் நினைவுக்கு வந்தது எனக்குப் பிடித்த எழுத்தாளர் திரு தேவன் அவர்களின் அறிவுரை.

‘மிஸ்டர் வேதாந்தம்’ என்ற புகழ்பெற்ற நாவலில் ‘குஞ்சலம்’ என்ற இதழின் ஆசிரியர் வேதாந்தம் என்ற எழுத்தாளருக்கு சொல்வதுபோல் எல்லா எழுத்தாளர்களுக்கும் இவ்வாறு சொல்லுவார்.

‘’எழுத்தாளன் என்பவன் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். பேனாவை சற்று ஒதுக்குப்புறமாக வைத்து ஓய்வு கொடுத்துவிட்டால் அப்புறம் அதன் அருகில் கையைக்கொண்டுபோவது சிரமம். பேனாவும் ‘கன’க்கும்;அதைக் காகிதத்தில் ஓட்டுவது, தேர் இழுக்கிற மாதிரி இருக்கும்.படிக்கிற பேருக்கும் உலுக்கு மரம் போடுகிறமாதிரி தோன்றும். பேனா ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்; அப்போதுதான் எழுத்தாளனுக்கும் எளிது; வாசகருக்கும் சுகம் ‘’

அவர் மேலும் சொல்லுவார்.

‘எழுத எழுதத்தான் மெருகு ஏறும். வார்த்தைப் பிரயோகம் சுபாவமாக வரும்’ என்று.

என்ன அனுபவபூர்வமான அறிவுரை! எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தினால் திரும்பவும் தொடங்கும்போது அது சிரமம் என்றும், வேகம் வராது என்பதையும் அவர் அன்றே சொல்லியிருக்கிறார். எழுதுவது மட்டுமல்ல வேறு சில பழக்கங்களையும் நிறுத்திவிட்டால் பின்னர் அவைகளை தொடர நினைக்கும்போது சோம்பல் நம்மைக் கட்டிப்போட்டுவிடும்.

எனவே பதிவுலகில் உள்ள நண்பர்கள் அனைவரும் முடிந்தவரை எழுதிக்கொண்டு இருப்போம். நம்முடைய எண்ணங்களை, அனுபவங்களை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வோம்.

செப்டம்பர் மாதம் 11,12 தேதிகளில் தஞ்சையில் வகுப்பு நண்பர்களின் சந்திப்பு நடைபெற்றது அது பற்றி அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன்.



32 கருத்துகள்:

  1. முடிந்தவரை எழுதுவோம். தஞ்சை வந்திருந்ததை முன்கூட்டி தெரிவித்திருந்தால் சந்தித்திருப்பேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே! தஞ்சையில் நடந்த எங்கள் சந்திப்பின் இடைவேளையின் போது, தங்களையும் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களையும் சந்திக்க எண்ணினேன். ஆனால் நாங்கள் தங்கியிருந்த இரண்டு நாட்களில், முதல் நாள் காலை ஏழு மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை தொடர் நிகழ்ச்சிகள் இருந்தன. , இரண்டாம் நாள் காலை முத்துப்பேட்டை போய் விட்டு திரும்பியபோது இரவு மணி 7.30 ஆகிவிட்டது. அன்றிரவே சென்னை திரும்ப வேண்டியிருந்ததால் தங்களியெல்லாம் சந்திக்க இயலவில்லை. கண்டிப்பாடாக் அடுத்தமுறிய தஞ்சை வரும்போது அவசியம் சந்திப்பேன்.

      நீக்கு
  2. //‘மிஸ்டர் வேதாந்தம்’ என்ற புகழ்பெற்ற நாவலில் ‘குஞ்சலம்’ என்ற இதழின் ஆசிரியர் வேதாந்தம் என்ற எழுத்தாளருக்கு சொல்வதுபோல் எல்லா எழுத்தாளர்களுக்கும் இவ்வாறு சொல்லுவார்.

    ‘’எழுத்தாளன் என்பவன் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். பேனாவை சற்று ஒதுக்குப்புறமாக வைத்து ஓய்வு கொடுத்துவிட்டால் அப்புறம் அதன் அருகில் கையைக்கொண்டுபோவது சிரமம். பேனாவும் ‘கன’க்கும்;அதைக் காகிதத்தில் ஓட்டுவது, தேர் இழுக்கிற மாதிரி இருக்கும்.படிக்கிற பேருக்கும் உலுக்கு மரம் போடுகிறமாதிரி தோன்றும். பேனா ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்; அப்போதுதான் எழுத்தாளனுக்கும் எளிது; வாசகருக்கும் சுகம் ‘’

    அவர் மேலும் சொல்லுவார்.

    ‘எழுத எழுதத்தான் மெருகு ஏறும். வார்த்தைப் பிரயோகம் சுபாவமாக வரும்’ என்று. //

    எந்தக் காலத்திற்கும், அனைத்து எழுத்தாளர்களுக்கும் பொருந்தக்கூடிய மிகவும் அருமையான வரிகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! திரு தேவன் அவர்கள் தந்த அறிவுரை ‘எந்தக் காலத்திற்கும், அனைத்து எழுத்தாளர்களுக்கும் பொருந்தக்கூடிய மிகவும் அருமையான வரிகள்.’ என்ற தங்களின் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன்.

      நீக்கு
  3. என் எழுத்துகளில் முன்பு இருந்த ஃப்லோ இப்போது இல்லை என்று நண்பர் ஒருவர் நினைக்கிறார் அதுவும் சரியோ என்று எனது முந்தைய எழுத்துகளைப் படித்தால் எனக்கும் தோன்று கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! தங்கள் எழுத்துக்களில் முன்பு இருந்த வேகம் இப்போது இல்லை என்று நான் சொல்லமாட்டேன். நமது பார்வையின் கோணம் மாறிவிட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

      நீக்கு
  4. அதாவது ,எழுதுவது என்பது கரடி வாலைப் பிடித்த மாதிரி:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! எழுதுவது என்பது கரடி வாலைப் பிடித்தது போலவா இல்லை புலி வாலைப் பிடித்தது போலவா ?

      நீக்கு
  5. பதிவுலகைத் தாண்டி வெளியே நிறையப் படியுங்கள். யாராவது எழுதிய ஏதாவது ஒன்றில் உங்கள் உடன்பாடு இல்லையென்றாலே எழுதுவதற்கான urge மனசைப் பிறாண்டும். எந்த வேலையானும் ஒதுக்கி வைத்து விட்டு உடனே எழுதத் தொடங்குகள். எழுதியதை சீர்படுத்தி விட்டால், அற்புதமாக அமைந்து விடும்.

    வாள் பிடித்த கையும் பேனா பிடித்த கையும் சும்மா இருந்ததாக சரித்திரம் இல்லை. சோதித்துத் தான் பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். பதிவுலகைத்தாண்டி படிக்கவேண்டியது அநேகம் உள்ளன. தங்களின் ஆலோசனைப்படி நடப்பேன். நன்றி!

      நீக்கு
  6. எழுதுவதற்கு விடயம் நம்மைச்சுற்றி நிறைய உள்ளது என்பது எனது கருத்து நண்பரே

    அதை கூர்ந்து நோக்கும் திறன் இருந்தால் போதும் ஆகவே தொடர்ந்து எழுதுங்கள்
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் ஆலோசனைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERJI அவர்களே! எழுத எனக்கு தகவல்கள் இல்லாமல் இல்லை. சில நாட்கள் பதிவுலகம் விட்டு வேறு பணி நிமித்தம் ஒதுங்கி இருந்ததுதான் சோம்பலை வளர்த்துவிட்டது அவ்வளவுதான்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  8. தாங்கள் மீண்டு வருவதற்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ‘யோக்கியன்’ வலைப்பதிவின் நண்பரே!

      நீக்கு
  9. வணக்கம்.

    வலையுலகில் எனக்கு மிக மூத்தவர். உங்களது முந்தைய பதிவுகளைப் பின்னோக்கிப் போய் அனைத்தையும் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு உண்டு.
    தங்களைப் போலவே பதிவுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் வந்தேன்.
    ஆனால் எதை எப்படி எழுதுவது என்ற சோர்வு எனக்கு இதுவரை இல்லை.

    வலைத்தளம் ஆரம்பித்த பிறகுதான் தட்டச்சுக் கற்றேன்.

    இடைவெளி அதில் சுணக்கம் ஏற்படுத்துமோ என்ற அச்சம் இருந்தது.

    ஆனால் அதுவும் இல்லை.

    எதைத் தொடவது தொடங்கியதை எப்படி முடிப்பது என்ற அச்சம் இருந்தது உண்மை.

    ஆனால் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் தங்கள் பதிவைப் படித்ததும் எழுந்தது.

    தொடர்கிறேன்.

    தம

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! எழுத சோர்வு ஏற்பட்ட காரணம் சில நாட்கள் எழுதுவதை நிறுத்தியதால் தான். தங்களைப்போன்றோர் தரும் ஊக்கத்தால் அதிலிருந்து மீண்டு திரும்பவும் எழுத இருக்கிறேன்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே

      நீக்கு
  11. உண்மை.இதை இப்போது நான் உணர்கிறேன்.எழுத நினைத்தாலும் எண்ணம் ஓடுவதில்லை.நாமா ஒரு காலத்தில் சில நாட்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதினோம் என்று மலைப்பாக இருக்கிறது.அதெல்லாம் ஒரு காலம்.இனி முடியும் எனத் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களை பின்னூட்டத்தில் காண்பது மகிழ்ச்சியாய் உள்ளது. தாங்கள் முக நூல் பக்கம் சென்றுவிட்டதால் வலைப்பக்கம் வரவில்லை அவ்வளவே திரும்பவும் வாருங்கள். தங்களுக்கு நாள் தோறும் பதிவிட நேரம் இல்லையென்றாலும் வாரம் ஒருமுறையாவது பதிவிடலாம். இந்த வாரமே தொடங்குங்கள். காத்திருக்கிறோம் (பதிவுலகின்) கபாலிக்காக!

      நீக்கு
  12. நல்லதொரு பகிர்வு. சில சமயங்களில் எழுதுவதற்கு நிறைய விஷயம் இருந்தும் எழுத முடிவதில்லை. இந்த மாதம் எனது பதிவுகளில் இடைவெளி! சில சமயங்களில் பதிவுகள் எழுதுவது நிறுத்தினால், மீண்டும் தொடர அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது.

    தொடர்ந்து எழுதுவோம்..... உங்கள் தஞ்சை அனுபவங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! எங்களது தஞ்சை சந்திப்பில் எடுத்த சில புகைப்படங்களுக்காக காத்திருக்கிறேன். விரைவில் எழுத ஆரம்பித்துவிடுவேன்.

      நீக்கு
  13. இனிய "சரஸ்வதி பூஜை/ விஜய தசமி"
    நல்வாழ்த்துகள்

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி திரு புதுவை வேலு அவர்களே!தங்களுக்கும் எனது தங்களுக்கும் எனது "சரஸ்வதி பூஜை, விஜய தசமி" நல்வாழ்த்துகள்!

      நீக்கு
  14. பலபேர் வருவதில்லை என்பதே முக்கிய காரணம்! இது என் கருத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரி என்றாலும், பலர் நம் தளத்திற்கு வருவதில்லை என்பதற்காக நாம் எழுதுவதை நிறுத்தவேண்டாம் என்பது என் கருத்து.

      நீக்கு
  15. True. Even morning walks/exercise etc would be difficult to resume once one gives a break . Thanks for reproducing the observations of Devan. Vasudevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! எதையும் நிறுத்திவிட்டு பின்னர் தொடங்குவதென்பது சற்று கடினமானதுதான்

      நீக்கு
  16. when jayakanthan was not writing anything nobody dared to ask him the reason
    such was his magnificent writing.....hope you would recollect this incident of jayakanthan...... good wishes

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Nat Chander அவர்களே! சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் எங்கே நான் எங்கே? அவரோடு ஒப்பிடும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் அல்லன். ஆனால் அவர் என் அண்ணனின் நண்பர் என்பதால் அவரைப் பற்றி இங்கு குறிப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியே.

      நீக்கு