வியாழன், 24 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 34

மதிய உணவு அருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னந்தோப்பில் சைவம் மற்றும் அசைவம் உண்ணுபவர்களுக்கு தனித்தனி இடங்களில் வரிசையாய் மேசைகளும் நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தன. தஞ்சை நண்பர்கள் குழு சார்பாக நண்பர் நாகராஜன் அவருடைய மகன் திரு சாமிநாதன் மூலம் அங்கே சுவையான சைவ மற்றும் அசைவ உணவுகளை பரிமாற ஏற்பாடு செய்திருந்தார்.




நானும் என் துணைவியாரும் சைவ உணவு உள்ள பகுதிக்கு சென்று அமர்ந்தோம். அங்கே எங்களுக்கு சாப்பிட இனிப்பு ரொட்டி (Bread Sweet), வெஜிடபிள் பிரியாணி, பூக்கோசு 65 (Cauliflower 65), உருளைக்கிழங்கு குருமா, உருளைக்கிழங்கு வறுவல், தயிர் வெங்காயம், தயிர் சாதம், ஊறுகாய், வாழைப்பழம், பன்னீர் சோடா வெற்றிலை பாக்கு எனத் தந்து எங்களை திக்குமுக்காட வைத்துவிட்டனர் தஞ்சை நண்பர்கள். அதுவும் அந்த பன்னீர் சோடாவின் சுவையை இன்னும் மறக்க முடியவில்லை. அப்படி ஒரு சுவை!

அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு, இனிப்பு ரொட்டி (Bread Sweet), வெள்ளாம் பொடி பக்கோடா, ஆட்டுக்கறி பிரியாணி, நண்டு சம்பல், இறால் மீன் குழம்பு (Prawn Gravy), வஞ்சிரம் மீன் வறுவல், காடை வறுவல், தயிர் சாதம், ஊறுகாய் பன்னீர் சோடா வெற்றிலை பாக்கு என பரிமாறி அவர்களையும் திக்குமுக்காட வைத்துவிட்டனர் தஞ்சை நண்பர்கள்.

வெகு நாட்களுக்குப் பிறகு, கிராமிய சூழலில் மின் விசிறியின் கீழ் அமராமல் இயற்கை அன்னையின் காற்று எங்களை வருட, தென்னந்தோப்பின் நிழலில் அமர்ந்து சாப்பிட்டது மறக்கமுடியாத ஒரு புதிய அனுபவம்.

அசைவ உணவுப்பகுதியில் திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள் எடுத்த படங்கள் சில.


அசைவ உணவு பரிமாற ஆரம்பித்தபோது எடுத்த படம்


நண்பர் பாலு மற்றும் அவரது மருமகன் திரு N.சிவகுமார் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க பின்னால் நண்பர் நாகராஜன் நண்பர்களுக்கு பன்னீர் சோடா கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.


இடமிருந்து வலமாக நண்பர்கள் அய்யம்பெருமாள் மற்றும் பிச்சைதுரை


இடமிருந்து வலமாக நண்பர்கள் சரவணனும் கோவிந்தசாமியும்


நண்பர் நாகராஜன் பேரப் பிள்ளைகளுடன்.


நண்பர் நாகராஜனின் பேரப்பிள்ளைகளும் மகளும்


இன்முகத்தோடு உணவு பரிமாறியவர்கள்

உண்ட களைப்பு தொண்டர்களுக்கே உண்டு என்கிறபோது 3 மணி நேரத்திற்குமேல் படகில் பயணித்த எங்களுக்கு இல்லாமல் போகுமா? சாப்பிட்டபின் எல்லோரும் கூடி பேசுமுன்,ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தவர்களை திருமதி அய்யம்பெருமாள் அவர்களின் பலனி (Ipad) படம் எடுக்கத் தவறவில்லை.


நண்பர் சக்கரவர்த்தி சிந்தனையில் ஆழ்ந்திருக்க, அவரது பின்னால் திருமதி முத்துக்குமாரன் மற்றும் திருமதி கோவிந்தசாமி


இடமிருந்து வலமாக நண்பர்கள் சுப்ரமணியன், நாச்சியப்பன் மற்றும் சக்கரவர்த்தி


இடமிருந்து வலமாக திருமதி ஹரிராமன், திருமதி முத்தையா மற்றும் என் துணைவியார்


இடமிருந்து வலமாக நண்பர்கள் அழகப்பன், நடராஜன் மற்றும் T.N.பாலசுப்ரமணியன்

அடுத்த சந்திப்பை எங்கு நடத்தலாம் என்பதைப் பற்றி பேசி முடிவெடுக்க எல்லோரும் உணவருந்திய பின் அங்கேயே கூடிப் பேசினோம்.


தொடரும்








20 கருத்துகள்:

  1. Ipad-க்கான தமிழாக்கம் வினோதமாகப் பட்டது.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! பலகை கணினி என்பதே சுருக்கப்பட்டு பலனி என அழைக்கப்படுகிறது. இந்த சொல்லை இதற்கு முன்பே இந்த தொடரின் 25 ஆவது பகுதியில் குறிப்பிட்டு இருந்தேனே.

      நீக்கு
  2. பரம திருப்தி - மனதிற்கும் என்பது புரிகிறது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! உண்மைதான். எல்லாவற்றிற்கும் திருப்தி தான்!

      நீக்கு
  3. Ipad-க்கான தமிழாக்கம் இன்றே அறிந்தேன் நன்றி.

    அழகிய புகைப்படங்களுடன் வழக்கம் போல் விவரிப்பு அருமை நண்பரே

    விருந்தோம்பல் சிறப்பாக இருந்தமை அறிந்து மகிழ்ச்சி
    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!


      நீக்கு
  4. இந்த பொன் விழா சந்திப்புக்கு ஒருவருக்கு என்ன செலவாயிற்று செயற்குழு எல்லாம் இருந்ததா. முன்பே சொல்லி யிருந்தால் எனக்கு மறந்து விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் கேட்ட விவரங்களை விரைவில் முடிய இருக்கும் இந்த தொடரில் காண்பீர்கள்

      நீக்கு
  5. சூப்பர் விருந்து!உண்ண உங்களுக்கு.,படிக்க,பார்க்க எங்களுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இந்த சந்திப்பில் உணவு உபசரிப்பின் உச்சத்தைக் கண்டோம்.

      நீக்கு
  6. விருந்தோம்பல் பண்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. த.ம. வாக்குடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், விருந்தோம்பல் பண்பை போற்றியமைக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

      நீக்கு
  7. விருந்தோம்பல் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருந்தோம்பலை பாராட்டியமைக்கும், நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

      நீக்கு
  8. தென்னஞ் சோலை விருந்தை ரசித்தேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தென்னந்தோப்பு விருந்தை இரசித்தமைக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே!

      நீக்கு
  9. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 24-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து.


    பூக்கோசு 65 (Cauliflower 65), பலனி (Ipad) போன்ற தமிழாக்கங்கள் வியக்க வைத்தன


    //அதுவும் அந்த பன்னீர் சோடாவின் சுவையை இன்னும் மறக்க முடியவில்லை. அப்படி ஒரு சுவை! //


    பன்னீர் சோடா எங்கள் ஊரான திருச்சியிலும் தஞ்சையிலும் மட்டுமே மிகச்சுவையாக கிடைக்கின்றது என பலரும் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். அதையே தாங்களும் இங்கு சொல்லியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.


    பகிர்வுக்கு நன்றிகள்.


    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தமிழ் சொற்களை மேலும் பயன்படுத்த ஊக்கமளித்தமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
      பன்னீர் சோடா திருச்சி மற்றும் தஞ்சையில் மட்டும் சுவையாய் இருக்கிறது என்ற தகவல் எனக்கு புதியது. உண்மையில் அந்த பன்னீர் சோடாவின் சுவையை இன்னும் என்னால் மறக்க இயலவில்லை.

      நீக்கு
  10. அடுத்த சந்திப்பு ... தொடர்ந்திட வாழ்த்துகள். திருச்சி பன்னீர் சோடாவை விட தஞ்சை பன்னீர் சோடாவில் தித்திப்பு மற்றும் Gas இரண்டும் அதிகமாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எங்களது சந்திப்பு தொடர வாழ்த்தியமைக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தஞ்சை பன்னீர் சோடா திருச்சி பன்னீர் சோடாவை விட எவ்வகையில் மாறுபட்டது என தெரிவித்தமைக்கு நன்றி!

      நீக்கு