சனி, 2 செப்டம்பர், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 36

அனைவருக்கும் தியாகத் திருநாள் நல் வாழ்த்துகள்!


அந்த தென்னந்தோப்பு வீட்டிலிருந்து புறப்பட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் முத்துபேட்டைக்கு வரும் அனைத்து மக்களும் செல்லக்கூடிய இடமான, ஹழரத் ஷைக் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் எனும் பெருந்தகையின் நினைவிடமான முத்துப்பேட்டை தர்கா ஆகும்.இதை ஜம்பவனோடை தர்கா எனவும் அழைக்கிறார்கள்.





முத்துப்பேட்டை தர்கா (நன்றி கூகிளாருக்கு)

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த தர்கா இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள பழமையான இஸ்லாமிய கட்டிடங்களில் ஒன்று. இங்கு அனைத்து சமுதாய மக்களும் வருகிறார்கள் என்றும் இங்கே அடக்கம் செய்யபட்டுள்ள ஹழரத் ஷைக் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள சமூக சம உரிமை, பாகுபாடின்மை ஆகியவற்றை வலியுறுத்தியவர் என்றும் சொல்லப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் இந்த இடம் காடு சூழ்ந்த நிலப்பகுதியாக இருந்ததாம். இந்த இடத்தில் இருந்த நிலத்திற்குச் உரிமையாளரான கருப்பையா கோனார் என்பவர் தனது ஆட்களுடன் நிலத்தை உழுதுகொண்டு இருந்தபோது, ஒரு இடத்தில் ஏர் முனை பட்டபோது அங்கே ரத்தம் பீறிட்டு அடித்தாம். உடனே அவருடைய கண்கள் பார்வையிழந்ததால் ஒன்றும் புரியாமல் வீட்டுக்குச் சென்றாராம்.

கண் பார்வை போய்விட்ட கவலையோடும் ஆழ்ந்த வருத்தத்துடனும் உறங்கச் சென்ற. கருப்பையா கோனாரின் கனவில், கம்பீரமான ஓர் அரபுப் பெருமகன் காட்சியளித்து அன்று காலை நிலத்தை உழுதபோது ஏர் முனை பட்ட இடம் தமது உடல்தான் என்றும் அந்த இடத்தில் தாம் அடக்கமாகி நீண்ட காலம் ஆகிறது என்றும் தெரிவித்து தமது பெயர் ஷேக் தாவூத் என்றும் கூறினாராம்.

பின்னர் அவர் “கவலை வேண்டாம். உனக்கு கண் பார்வை திரும்பக் கிடைக்கும் நீ அருகே உள்ள நாச்சிகுளம் கிராமத்தில் இருக்கும் எனது சீடர்களான வட இந்தியாவைச் சேர்ந்த கபீர் கான், ஹமீத் கான் என்ற இருவரையும் நேரில் சென்று இங்கு அழைத்து வா. நீங்கள் மூவரும் திரும்பி வந்து பார்க்கும் சமயத்தில் இரத்தம் பீறிட்டிருந்த இடத்தில் இரண்டு முனைகளிலும் மலர்கள் பூத்திருப்பதைக் காண்பீர்கள்” என்று கூறிவிட்டு அந்தப் பெருமகன் மறைந்துவிட்டாராம்.

கருப்பையா கோனார் கனவு கலைந்து துாக்கமும் கலைந்து கண்ணைத் திறந்து பார்த்தபோது அவருக்கு பார்வை கிடைத்துவிட்டதாம். தனது மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டதோடல்லாமல், கனவில் வந்த பெரியவர் கூறியபடி நாச்சிக்குளம் சென்று அந்த வட இந்தியர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வந்தாராம்.

பிறகு அவர் தமக்குச் சொந்தமான அந்த நிலத்தை ஷேக் தாவூது மகான் பெயரில் பதிவு செய்து வைத்துவிட்டாராம். பொது மக்கள் அந்த இடத்திற்கு அதிகமாக வர ஆரம்பித்ததால் அங்கு ஒரு தர்காவைக் கட்ட முடிவு செய்து பதினைந்து வளைவு மண்டபங்களுடன், 77 முழ நீளம், 29 முழ அகலம்,8 முழ உயரமுடைய நான்கு பக்கச் சுவர் கட்டினார்களாம். (ஒரு முழம் என்பது 46.6666 சென்டிமீட்டர்) அங்கே மலர்கள் பூத்திருந்த இடம் ஷேக் தாவூது பெருமகனாரின் அடக்க தலமாக ஆக்கப்பட்டதாம்.


படம் உதவி கூகிளார்

ஷேக் தாவூது அவர்களைப் பற்றிய விவரம் கிடைக்கவில்லையென்றாலும், அவர் யாகூப் நபியின் வழித்தோன்றல்களான பனீ இஸ்ராயீல் குல மரபைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. ஷேக் தாவூது அவர்கள் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகரின் காலத்துக்கு முன்பே வாழ்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

இறைநேசர் ஷேக் தாவூது அவர்கள் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே முத்துப்பேட்டைக்கு வந்து, மத நல்லிணக்கத் தொண்டாற்றிப் பல அற்புதங்களை நிகழ்த்திவிட்டு அடக்கமானதாக சொல்கிறார்கள்.எனினும், இருநுாறு ஆண்டுகளுக்குப் பிறகே அவர்கள் அங்கு அடக்கமாகியிருப்பது கண்டறியப்பட்டதாம்.

முத்துப்பேட்டை இறைநேசர் தலைசிறந்த மருத்துவராக விளங்கினார் என்றும் மருத்துவர்கள் புறக்கணித்த நோயாளிகளை அவர் குணப்படுத்தினார் என்றும் செய்வினை, சூனியம், சித்த சுவாதீன இழப்பு, பிள்ளைச் செல்வமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தர்காவில் தங்கிப் பரிகாரம் பெற்றுச் சென்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

தர்காவில் தங்குகிறவர்களின் கனவில் ஷேக் தாவூது அவர்கள்தோன்றி அறுவை சிகிச்சை செய்வதாகவும், அதற்குப் பிறகு அவரகள் குணமடைந்துசெல்வதாகவும் அறுவை சிகிச்சையின்போது உதவிபுரியும் தாதியாக ஒரு பெண்மணி தோன்றுவார் என்றும் சொல்கிறார்கள். முத்துப் பேடடையில் அடக்கமாகியுள்ள பாத்திமா நாச்சியார் எனும் இறைநேசச் செல்வியே அவர் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

மனம் மற்றும் உடல் சார்ந்த நோய்கள் உள்ளவர்கள் இங்கு வருவதால் குணமாகுகிறது என்ற நம்பிக்கையால் இந்த தர்காவிற்கு அனைத்து மத மக்களும் பெருமளவில் வருகிறார்களாம்.

அப்படிப்பட்ட புகழ்வாய்ந்த தர்காவிற்குள் நாங்களும் நுழைந்தோம். தர்காவின் முகப்பைப் பார்த்ததும் இதை எங்கோ முன்பே பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் மனதில் நிழலாடியது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ’நாதஸ்வரம்’ என்ற தொடரில் கதாநாயகனின் சித்தப்பாவின் மனச்சிதைவு நோய்க்காக அவரை இங்கு அழைத்து வந்து சிகிச்சை பெறுவதுபோல் காட்டிய காட்சி அப்போது நினைவுக்கு வந்தது.

நாங்கள் உள்ளே சென்றதும், இறைநேசர் ஷேக் தாவூது அவர்களின் அடக்கத்தலத்திற்கு ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டோம். உள்ளே சென்று மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தபோது அங்கிருந்தவர் சொன்னார். ‘இந்த தர்காவிற்கு அதிகம் வருவது இந்துக்கள் தான்.’ என்று. அதைக் கேட்டபோது மக்கள் நம்பிக்கையின் முன் மதமாச்சரியங்கள் மறைந்து போகின்றன போலும் என்று நினைத்துக்கொண்டேன்.

அங்கிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டோம். எங்கு சென்றோம் என்பதை அடுத்த பதிவில் சொல்வேன்.

தொடரும்








14 கருத்துகள்:

  1. பக்ரீத் பெருநாள் அன்று பொருத்தமான தர்ஹா விடயத்தை தந்தமைக்கு நன்றி நண்பரே தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! விரைவில் இந்தக் தொடர் முடிய இருப்பதால் இந்த பதிவையும் இதர பதிவுகளையும் முன்பே எழுதி வைத்துவிட்டு, வரிசையாய் பதிவிட்டுக்கொண்டு இருக்கிறேன். தற்செயலாக இந்த பதிவு தியாகத் திருநாள் அன்று அமைந்துவிட்டதால் அனைவருக்கும் வாழ்த்து கூறி பதிவிட்டிருக்கிறேன்.

      நீக்கு
  2. சுவாரஸ்யமான செய்திகள்.
    வாசித்தேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!

      நீக்கு
  3. நீங்கள் இந்த பதிவை வெளியிடும் நாளும், பக்ரீத் பண்டிகையும் எதேச்சையாகவே அமைந்ததில் ஆச்சரியம்தான். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! இந்த பதிவை வெளியிட்ட நாள் தியாகத் திருநாளாக அமைந்தது மட்டுமல்ல, நாங்கள் சென்ற ஆண்டு முத்துப்பேட்டை தர்காவிற்கு சென்ற நாள் தியாகத் திருநாளுக்கு முதல் நாள் என்பதும் ஆச்சரியமே!

      நீக்கு
  4. முத்துப்பேட்டை தர்காவிற்குச் சென்றுள்ளேன். இப்பகுதியில் காண வேண்டிய இடங்களில் அதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! அப்படியென்றால் நீங்களும் முத்துபேட்டை காயலைப் பார்த்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

      நீக்கு
  5. ஸ்வாரஸ்யமான தகவல்கள். தற்செயலாகவே ஈகைத் திருநாள் அன்று இப்பதிவு வந்ததில் மகிழ்ச்சி.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! இந்த பதிவு தியாகத் திருநாள் அன்று வந்திருப்பது எனக்கும் மகிழ்ச்சியே!

      நீக்கு
  6. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 02-09-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து:

    //நாங்கள் உள்ளே சென்றதும், இறைநேசர் ஷேக் தாவூது அவர்களின் அடக்கத்தலத்திற்கு ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டோம். உள்ளே சென்று மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தபோது அங்கிருந்தவர் சொன்னார். ‘இந்த தர்காவிற்கு அதிகம் வருவது இந்துக்கள் தான்.’ என்று. அதைக் கேட்டபோது மக்கள் நம்பிக்கையின் முன் மதமாச்சரியங்கள் மறைந்து போகின்றன போலும் என்று நினைத்துக்கொண்டேன்.//

    ’மக்களின் நம்பிக்கையின் முன் மதமாச்சரியங்கள் மறைந்து போகின்றன’ எனத் தாங்கள் நினைத்துக்கொண்டது மிகவும் சரியே.

    இதுபோல பல ஊர்களிலும், பல இடங்களிலும், பல வழிபாட்டு ஸ்தலங்களிலும், வேற்று மதத்தவரின் வருகை என்பது அன்றாடம் ஆங்காங்கே நடைபெற்றுத்தான் வருகின்றன.

    அவரவர் செல்லும் வழிகளும், அவரவர் வழி பாட்டு முறைகளும், தெய்வ சக்தியின் திருவுருவங்களும் (உருவம்-அருவம்-அரு உருவம் போன்ற முன்றும்) வேறுபாடாக இருப்பினும், இந்தப்பிரபஞ்சம் பூராவுமே, ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும், ஒவ்வொரு வஸ்துக்களுக்குள்ளும் வியாபித்திருக்கும் ’பரம்பொருள்’ ஒன்றே தான் என்ற ‘ஆத்ம ஞானம்’ ஏற்பட்டு விட்டால் பிறகு ஜாதிமத பேதங்கள் காணாமலே போய்விடும்.

    சர்வ ஜீவன்களிடமும், என்றும் அழிவில்லாத சாஸ்வதமான பகவான் மட்டுமே குடி கொண்டுள்ளார் என்ற நினைப்பு ஏற்படுமானால் அன்பும், பண்பும், ஒற்றுமையுடன், சகோதரத்துவமும் மக்களிடையே தழைத்தோங்கும்.

    இந்த ‘ஆத்மஞான நிலை’யை எல்லோரும் அடைந்துவிடும் போது, ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவுகளுக்கோ, கோப தாபங்களுக்கோ, தன்னுடையது .... பிறருடையது என்ற வித்யாசமான எண்ணங்களுக்கோ, போட்டி, பொறாமை, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற தீய செயல்களுக்கோ இடமே இருக்காது.

    படங்களும், பகிர்வும் வழக்கம் போல் அருமையாக உள்ளன.
    பாராட்டுகள். வாழ்த்துகள். மேலும் தொடரட்டும்.

    அன்புடன் VGK


    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் பாராட்டுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      //சர்வ ஜீவன்களிடமும், என்றும் அழிவில்லாத சாஸ்வதமான பகவான் மட்டுமே குடி கொண்டுள்ளார் என்ற நினைப்பு ஏற்படுமானால் அன்பும், பண்பும், ஒற்றுமையுடன், சகோதரத்துவமும் மக்களிடையே தழைத்தோங்கும்.// என்ற தங்களின் கருத்து எனக்கும் ஏற்புடையதே.


      யேசு என்பது பொன்னி நதி
      அல்லா என்பது சிந்து நதி
      ராமன் என்பது கங்கை நதி
      நதிகள் பிறக்குமிடம் பலவாகும் – எல்லா
      நதிகளும் கலக்குமிடம் கடலாகும்...!!!...

      என்ற கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் எனக்கு நினைவுக்கு வருகிறது.

      நீக்கு