வெள்ளி, 10 மே, 2019

மொழிபெயர்ப்புக் க(கொ)லை! 4






நூல்களை மொழி பெயர்ப்பதற்கும், மேடைப் பேச்சை மொழிபெயர்ப்பதற்கும் அதிக வேறுபாடு உண்டு. நூல்களை மொழிபெயர்ப்போர் ஐயம் இருப்பின் நண்பர்களிடம் கலந்தாலோசித்தோ அல்லது சொற்களஞ்சியத்தை (Dictionary) பார்த்தோ சரியாக மொழிபெயர்க்க முடியும். அதனால் அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் பணியை முடிக்கவேண்டிய அழுத்தம் (Pressure) இருக்காது.



  
ஆனால் மேடைப் பேச்சை மொழிபெயர்ப்பவர்கள் யாரையும் கலந்தாலோசிக்க முடியாது. அதிக நேரமும் எடுத்துக்கொள்ள முடியாது. மேடை பேச்சாளர் பேசியவுடன், மொழிபெயர்ப்பாளர் எந்த வித தயக்கமும் இல்லாமல் உடனே மொழிபெயர்க்கவேண்டும். உடனுக்குடன் மொழிபெயர்க்கும் திறமை இல்லாவிடில், மேடைப்பேச்சாளர் பேசியது மறந்து போக வாய்ப்புண்டு.

மேடைப் பேச்சை மொழிபெயர்ப்போரின் கவனம் பேசுபவரின் பேச்சில் மட்டுமே இருக்கவேண்டும். அவர் பேசுவதை உன்னிப்பாக கேட்டு உள் வாங்கி அதற்கான சொற்களை மனதில் உருவாக்கிக்கொள்ளவேண்டும். இல்லை என்றால் பேச்சாளர் சொன்னது மறந்து விட வாய்ப்புண்டு.

விரைவாக பேசுவது  முக்கியம் என்பதால், மனதளவில் மொழிபெயர்த்ததை சரி பார்க்கக்கூட நேரம் இருக்காது. மேலும் பேச்சாளரின் கருத்தை ஒட்டியே மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும். அவர் சொல்லாததை அவர் சொன்னதுபோல் சொல்வது தவறு,

பேச்சாளரின் பேச்சை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் அவரின் கருத்தை மாற்றாமல் மக்களுக்கு புரியும் முறையில் அவர்கள் மொழியில் சொல்வதே சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான இலக்கணம்.

சுருக்கமாக சொன்னால், மேடைப்பெச்சை மொழிபெயர்ப்பவர் பேசுபவரின்  மொழி மற்றும் மொழிபெயர்க்கின்ற மொழி இரண்டிலும் ஆழ்ந்த அறிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். மேலும் பேசப்படுகின்ற பொருள் பற்றி தெரிந்து  இருக்கவேண்டும்.

பேச்சாளரின் கருத்தை சிதைக்காமலும், தனது சொந்த கருத்தை திணிக்கமாலும் பேச்சாளரின் கருத்தை மொழிபெயர்க்கின்ற மொழியில் தெளிவாக வெளிப்படுத்தும் திறமை கொண்டவராக இருக்கவேண்டும். இதெல்லாம் உடனே வருவதல்ல. சில ஆண்டுகள் மொழிபெயர்த்து அதில் பட்டறிவு பெற்ற பின்னரே சிறப்பாக மொழிபெயர்க்கும் திறமை கைகூடி வரும்.

இங்கே இன்னொன்றையும் சொல்லவேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள் சிறப்பாக மொழிபெயர்க்க மேடைப் பேச்சாளர்களும் உதவ வேண்டும். பேச்சை நீட்டி தொடராமல் சுருக்கமாக சிக்கலில்லாத (Complicated) குழப்பமில்லாத சொற்களை சொல்வதன் மூலம், மொழிபெயர்ப்பாளரின் பணியை எளிதாக்க முடியும்.

பேச்சாளர் நீண்ட நேரம் இடைவெளி விடாது பேசினால் மொழிபெயர்ப்பாளர் எல்லாவற்றையும் உள் வாங்கி மொழிபெயர்த்து சொல்ல இயலாது. அப்போது சில சொற்களை/கருத்துகளை மறந்துபோகவும் வாய்ப்புண்டு. சில சமயம் அவர் தன் போக்கில் மொழிபெயர்க்கவும் வழி வகுத்துவிடும் கீழே குறிப்பிட்டது போல.

ஒரு முறை பேச்சாளர்  ஒருவர் வெளிநாட்டிற்கு சென்றபோது, கூட்டத்தில்  பேசும்போது உள்ளூர் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் உரையாடினாராம், ஆனால் அவர் ஒவ்வொருமுறையும் நீண்ட நேரம் தொடர்ச்சியாய் பேசி மொழிபெயர்ப்பாளரை திண்டாட வைத்துவிடாராம். ஒரு நகைச்சுவை துணுக்கை சொல்லும்போது அதை நீண்ட நேரம் விவரித்து சொல்லிவிட்டு மொழிபெயர்ப்பாளரை பார்த்தாராம்.

உடனே மொழிபெயர்ப்பாளர் எவ்வித தயக்கமும் இன்றி இரண்டே வரிகளில் மொழிபெயர்த்தராம் உடனே அங்கிருந்தோறும் கைத்தட்டி ஆரவாரித்தார்களாம்.

பேச்சாளருக்கோ கூட்டத்தினர் தனது நகைச்சுவையை இரசித்தது மிக்க மகிழ்ச்சியை தந்தாலும், தான் அதை சொல்ல 5 மணித்துளிகளுக்கு மேல் எடுத்துக்கொண்டபோது, எப்படி அதை மொழிபெயர்ப்பாளர் மிக சுருக்கமாக சொன்னார் என்ற ஐயமும் ஆச்சரியமும் ஏற்பட்டதாம்.  

அதுபற்றி மொழிபெயர்ப்பாளரிடம் கேட்டபோது அவர் அமைதியாக சொன்னாராம். ஐயா, நான் கூட்டத்தினரிடம், வந்திருக்கும் விருந்தினர் ஒரு நகைச்சுவை துணுக்கை சொல்லியிருக்கிறார். எனவே கைதட்டுங்கள் என்றேன். என்றாராம்! பேச்சாளருக்கோ என்னவோபோல் ஆகிவிட்டதாம்.

மேடைப்பேச்சை மொழிபெயர்க்கும் அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. அதுபற்றி அடுத்த பதிவில்.

தொடரும்


16 கருத்துகள்:

  1. சமீப காலமாக நடந்த பல மேடைப் பேச்சுக்கள் ஞாபகம் வந்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! உண்மையில் இந்த தொடரை எழுதவேண்டும் என்ற வெகு நாட்களாகவே நினைத்திருந்தேன். ஆனால் எழுதுவதை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன். அண்மையில் தமிழகத்திலும் கேரளாவிலும் நடைபெற்ற கூட்டங்களில் நடந்த மொழிபெயர்ப்பு குழப்பங்கள் (?) இந்த தொடரை எழுதத்தூண்டின.

      நீக்கு
  2. உண்மை.மேடைப் பேச்சை உடனுக்குடன் மொழி பெயர்ப்பதற்குத் தனித் திறமை வேண்டும்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  3. தெரியாத பணியில் ஈடு படக் கூடாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M. பாலசுப்பிரமணியன் அவர்களே! தெரியாத பணியில் ஈடுபடக்கூடாது என்பது சரியே.

      நீக்கு
  4. //மேலும் பேசப்படுகின்ற பொருள் பற்றி தெரிந்து இருக்கவேண்டும்.//

    இதான் இங்கே மிக முக்கியமானது. பிரதமர் மாதிரி பொறுப்புள்ள பதவிகளில் இருப்போரின் பேச்சை மொழிபெயர்ப்பதில் மிகவும் ஜாக்கிரதை உணர்வு வேண்டும். சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி சிக்கல்கள் விளையக் கூடாது. உள் நாட்டு விஷயங்களாக இருந்தாலும் பரவாயில்லை, நம் நாட்டுக்குள் என்றாகி விடும்.
    அயல் நாட்டு ராஜீய உறவுகள் சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்புகளில் மிகுந்த கவனம் வேண்டும். ஜிஎம்பீ ஐயா சொல்லியிருப்பது மிகவும் சரி. தெரியாத பணிகளில் (விளையாட்டுத்தனமாகவோ, கட்சி அனுதாபத்திலோ) ஈடுபடக்கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி, தற்போதெல்லாம் ஆர்வமிகுதியாலும் கட்சி மேலுள்ள பிடிப்பாலும் பேசப்படுகின்ற பொருள் தெரியாதபோதும், மொழிபெயர்த்த அனுபவம் இல்லாவிடினும் பல பேர் மேடைப்பேச்சை மொழிபெயர்க்க தொடங்கிவிட்டார்கள்.

      நீக்கு
  5. சரியான குறிப்புகள். உங்கள் அனுபவம் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் எனது மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றி அறிய ஆவல் கொண்டிருப்பதற்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!

      நீக்கு
  6. தங்களது அனுபவத்தை அறிந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எனது மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றி அறிய ஆர்வம் கொண்டிருப்பதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

      நீக்கு
  7. மேடைப்பேச்சு மொழிபெயர்ப்பு மிகவும் சிரமமான பணியாகும். அண்மையில் இவ்வாறான சில மொழிபெயர்ப்புகளை அரசியல் தலைவர்கள் கூட்டங்களில் பார்த்துள்ளோம், அது தொடர்பான கருத்துப்பரிமாறல்களையும் கண்டுள்ளோம். பேச்சாளர் கூறுவதை உள்வாங்கிக்கொள்ளல், குறுக்கே ஏதேனும் இடையூறு இருப்பின் வரும் சிக்கலை சமாளித்தல், பேச்சாளர் எந்த அளவிற்குப் பேசுகிறார் என்பதை முன்கூட்டி சமாளித்து அறிதல், மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்க்கப்போகின்றாரோ என எண்ணி பேச்சாளர் பேச்சை சுருக்கும்போது, மொழிபெயர்ப்பாளர் வேறுவிதமாகப் புரிந்துகொள்ளுதல் என்ற வகையில் பல சிரமங்கள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பாளர்களை பொத்தாம்பொதுவாக குறை சொல்வதை நான் ஏற்பதில்லை. இச்சூழலில் உங்களின் அனுபவத்தைக் காணக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! எல்லா மொழிபெயர்ப்பாளர்களையும் பொதுவாக் குறை சொல்வது சரியில்லைதான் என்ற தங்களின் கருத்தோடு உடன்படுகின்றேன். மேடைப்பேச்சை மொழிபெயர்ப்பதில் அநேக சிரமங்கள் உண்டு. அந்த சிரமத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் மேடைப்பேச்சை மொழிபெயர்பாது எவ்வளவு கடினம் என்று.

      நீக்கு
  8. அண்மையில் அரசியல் தலைவர்களின் மொழிபெயர்ப்பு நகைச்சுவையில் முடிந்தது ஞாபகம் வந்தது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் சிவா அவர்களே! இந்த தொடர் பற்றி எழுதவேண்டும் என்று முன்பே நினைத்திருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட மொழிபெயர்ப்புகள் ஏற்படுத்திய நகைச்சுவை நிகழ்வுகள் என்னை உடனே எழுதத் தூண்டியது உண்மை.

      நீக்கு