மறு நாள் (31-08-18) காலை வழக்கம் போல் 5.30 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு பொள்ளாச்சி புறப்பட
ஆயத்தமானேன். 6 மணிக்கு நண்பர் திரு இந்திரஜித் நான் எழுந்துவிட்டதை அறிந்து
தேநீர் அருந்த கூப்பிட்டார். கீழே சென்று தேநீர் அருந்தியதும், ‘சார்.
வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பார்த்துவிட்டீர்கள். மேல் தளத்தை (Terrace) பார்க்கவில்லையே. வாருங்கள் பார்க்கலாம் என்று அழைத்து சென்றார்.
மேலே
சென்றதும் அவரது வீட்டைச் சுற்றியுள்ளவைகளைத்தான் மேலிருந்து பார்க்கப்போகிறோம் என
நினைத்த எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அங்கே அவர் வீட்டிற்கு தேவையான மின்சாரம்
பெறவும் வெந்நீர் பெறவும் சூரிய ஆற்றல் (
Solar Energy ) மூலம் மின்சாரம் தயாரிக்கும் ‘சூரிய பலகம்’ களை (Solar Panels) நிறுவியிருந்தார்.
இவைகளை
நிறுவுவதற்கு ஆரம்ப முதலீடு சற்று கூடுதலாக இருந்தாலும் நடுவண் அரசின் மரபு சாரா
எரிசக்தித் துறை அந்த முதலீட்டில் 30 விழுக்காடு மானியமாக தருகிறது என்பதும், இவைகளை நிறுவ வங்கிகள் நீண்டகால
கடன் தரும் என்பதும்,இவைகளை நிறுவிய பிறகு மின் தடங்கலோ
அல்லது வழக்கமான பராமரிப்பு என்ற பெயரில் நடக்கும் மின் தூண்டிப்போ இருக்காது
என்பதும், 25 ஆண்டுகள் இவை பயன்பாட்டில் இருக்கும் என்பதும்
மாதாந்திர மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்பதும் பலர் அறியாதவை. (இது பற்றி தனி பதிவே எழுதலாம்)
வங்கியாளர்
மற்றும் வேளாண் பொறியாளரான நண்பர் திரு இந்திரஜித் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம்
பெறும் பலன்கள் பற்றி அறிந்திருந்ததால்
வீடுகட்டும்போதே இவைகளை நிறுவிவிட்டார்.
கீழே உள்ள படம் அவர்
வீட்டில் மின்சாரம் பெற அமைத்திருக்கும் சூரிய
பலகம் (Photovoltaic solar
panels)
கீழே உள்ள படம் வெந்நீர்
பெற அமைத்திருக்கும் சூரிய சுடுநீர் சூடாக்கி (Solar water heater)
மேலிருந்து
சுற்றி உள்ள இடங்களைப் பார்த்துவிட்டு கீழே வந்தபோது திருமதி இந்திரஜித் அவர்கள் காலை
சிற்றுண்டி தயாராக இருப்பதாகவும் சாப்பிடலாம் என்றும் சொன்னார்.
அவர் பரிமாறிய
சூடான இட்லிகளையும் சுவையான சாம்பார் மற்றும் சட்னிகளை சாப்பிட்டு அவர் எனக்காக சிரமப்பட்டு
சுவையான சிற்றுண்டியை தயாரித்ததற்கு நன்றி
சொல்லிவிட்டு பொள்ளாச்சி பயணிக்க ஆயத்தமானேன்.
சரவணம்பட்டியிலிருந்து
பொள்ளாச்சி பேருந்துகள் புறப்படும் உக்கடம்
பேருந்து நிலையம் உள்ள இடம் 12 கி.மீ இருந்ததால், நண்பருக்கு தொந்தரவு தராமல் அழைப்பூர்தி (Call Taxi) மூலம் பயணிக்க முடிவெடுத்து திரு இந்திரஜித் அவர்களை
ஒரு அழைப்பூர்திக்கு ஏற்பாடு செய்ய சொன்னேன்.
அவர் ஏற்பாடு
செய்திருந்த அழைப்பூர்தியின் ஓட்டுனர் வீட்டை
கண்டுபிடிக்க முடியாமல் சுற்றிக்கொண்டு இருப்பதை அறிந்ததும், ஓட்டுனரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க சொல்லிவிட்டு திரு இந்திரஜித்தும் அவரது மகனும்
என்னை அவர்களது மகிழுந்துவில் அழைத்து சென்று அந்த அழைப்பூர்தியில் ஏறிச் செல்ல உதவினார்கள்.
அவர்களுக்கு
நன்றி சொல்லிவிட்டு அதில் பயணித்து உக்கடம் பேருந்து நிலையம் சென்று பொள்ளாச்சி
செல்லும் அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். முன்பெல்லாம் (70 களில் ) உக்கடத்தில் பேருந்து
நிலையம் இல்லாதபோது பேருந்துகள் சாலையிலேயே நிறுத்தப்பட்டு
புறப்படத் தயாராக இருக்கும்.
ஐந்து மணித்துளிகள் இடைவெளியில் பேருந்துகள் புறப்பட்டதால் நம்மைக் கையை பிடித்து இழுக்காத குறையாக நடத்துனர்கள்
போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் பேருந்தில் பயணிக்க சொல்வார்கள். அப்போது எல்லா பேருந்துகளும்
தனியார் வசம் தான் இருந்தன. அப்போது கோவை பொள்ளாச்சிக்கு பேருந்து கட்டணம் ஒரு ரூபாய் தான். ஒரு மணிக்குள்ளாகவே கொண்டு போய்
சேர்த்து விடுவார்கள்.
ஆனால் இந்த
தடவை நான் அரசு பேருந்தில் ஏறியதன் காரணம் இடையில் அதிக இடங்களில் நிற்காது என்பதால்
தான். பேருந்தில் சன்னலோரம் அமர்ந்து பேருந்து பயணிக்கத் தொடங்கியதும் கோவை பொள்ளாச்சி
சாலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என அறிய வெளியே பார்க்கத் தொடங்கினேன்.
தொடரும்
தொடர் மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது கோவை டூ பொள்ளாச்சி கட்டணம் ஒரு ரூபாய் ஆச்சர்யமாக இருக்கிறது இன்று நகரப்பேருந்துக்கே பத்து ரூபாய் தேவைப்படுகிறது.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! அப்போது பொள்ளாச்சியில் உணவகத்தில் மதிய சாப்பாடு கூட ரூபாய் ஒன்றுதான் என்றால் நம்பமுடிகிறதா? அப்போது கோவை ஆர்.எஸ்.புறத்தில் இருக்கும் அன்னபூரணாவில் மதிய சாப்பாடு ஐந்து ரூபாய்கள் தான்!
நீக்குபயணத்தை தொடர்கிறேன்... சூரிய பலகம் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுங்கள்... பலருக்கும் உதவும் ஐயா...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! சூரிய ஆற்றலை பயன்படுத்துவது பற்றி எழுதலாமேன இருக்கிறேன். ஆலோசனைக்கு நன்றி
நீக்குஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு புதுச்செய்தியைச் சொல்லிச் செல்வது தங்கள் வழக்கம். இந்தத் தடவை சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறுவது பற்றி. படங்களுடன் விவரிப்பு சிறப்பாக இருந்தது.
பதிலளிநீக்குஆனால் நம் நாட்டில் எந்த புது விஷயத்தையும் ஆரம்பத்தில் அமுலுக்குக் கொண்டு வருவதற்குள் படுகிற பாடு இருக்கிறதே, அம்மம்ம...
இப்பொழுது மின்சார கார்கள் அறிமுக காலம். சென்னை முழுவதற்குமாக நாலே இடங்களில் (மெட்ரோ ஸ்டேஷன்கள் வெளிப்புறம்) காருக்கான மின்சாரம் சார்ஜ செய்வதற்காக சார்ஜிங் நிலையங்கள் வைத்திருக்கிறார்களாம்!
நீக்குவருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவிஅவர்களே! வங்கியில் பணியாற்றியபோது சூரிய ஆற்றலை பயன்படுத்துவது பற்றியும் அதை பயன்படுத்தும் பயனீட்டாளர்களுக்கு கடன் தருவது பற்றியும் விளக்குவதற்காக வங்கி அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட Capacity building எனப்படும் அறிவுத்திறனை மேம்படுத்தும் பயிற்சி முகாமில் பயிற்சி தருபவனாக கலந்துகொண்டிருப்பதால் இந்த புதிய பயன்பாட்டை மக்களிடையே மட்டுமல்லாமல் வங்கியாளர்களிடமே எடுத்துச் செல்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தவன் நான்.
இதற்கு அரசு வங்கிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவரும் ஒத்துழைத்தால் தான் இந்த திட்டம் வெற்றிகரமாக நடைபெறும். காத்திருப்போம் அந்த நாட்களுக்கு.
I have seen solar panels in roof tos of apartments. Good to know that Our Sri.Indrajit had taken initiative to install one at him to reduce EB cost and aso eco friendly.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு L.N. கோவிந்தராஜன் அவர்களே! சூரிய ஆற்றலைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு தனது மின்சார செலவு கணிசமாக குறைந்திருப்பதாக சொல்கிறார் நண்பர் திரு இந்திரஜித்.
நீக்குஇத்தகைய சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்துக்கொள்ளும் தகடுகளை ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் என் மகள் வசிக்கும் காலனியில் (கோலாலம்பூரில்) காணலாம். ஆனால் ஏனோ நம் நாட்டில் இது இன்னும் பிரபலமடையவில்லை. அடிக்கடி மின் தடை ஏற்படும் நம் சென்னையில் இது நிச்சயம் அவசியம்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு டிபிஆர் ஜோசப் அவர்களே! நீண்ட இடைவெளிக்ககுப் பின் வலையுலகம் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. நானும் முன்பு போல் அடிக்கடி வலையுலகம் வராததால் தாங்கள் திரும்பவும் பதிவிடத்தொடங்கியதை அறியவில்லை. தங்களின் பதிவுகளை படித்து எனது கருத்துகளை கண்டிப்பாக தெரிவிப்பேன்.
நீக்குசூரிய ஆற்றலை பயன்படுத்துவது ஏன் நம் நாட்டில் இன்னும் பிரபலமடையவில்லை என்பதற்கு பல காரணங்கள் உண்டு. சூரிய ஆற்றலை பயன்படுத்த உதவும் சாதனங்களின் விலை அதிகம் என்பதால் இதற்கு மக்களிடையே வரவேற்பில்லை என்பது முதல் காரணம். நடுவண் அரசு ஆரம்ப விலையில் 30 விழுக்காடு மானியம் தருகிறது என்ற தகவல் மக்களிடையே போய்ச்சேரவில்லை என்பது இரண்டாவது காரணம். வங்கிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மக்கள் அந்த சாதனங்களை வாங்க கடன் தரத் தயங்குவது மூன்றாவது காரணம். அதற்கும் மேலாக மாநில அரசுகள் ( கர்நாடக அரசு நீங்கலாக) இதில் தீவிரம் காட்டாததும் மற்றுமொரு காரணம்.
விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புவோம்.
தொடர்ந்து வாசிக்கிறேன். உங்களது அனுபவங்கள் எங்களுக்கு ஒரு பாடமாக அமைகிறது.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவ்ர்களே!
நீக்குநல்ல கட்டுரை. சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தகடுகள் - சில மாநிலங்கள் இதில் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கின்றன. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் நிறைய வீடுகள் - ஓட்டு வீடுகளில் கூட சின்னச் சின்ன அளவில் இந்த சூரிய ஒளி சேகரிக்கும் தகடுகள் நிறுவி தங்கள் வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தினை பெறுகிறார்கள். நிறைய குஜராத் மாவட்டங்களில் இந்த வசதி பரவி இருக்கிறது. தலைநகர் தில்லியில் கூட இப்போது பல அரசு அலுவலகங்களில் இந்த பலகைகளை மேல் தளத்தில் அமைத்து வருகிறார்கள்.
பதிலளிநீக்குMinistry of Non-conventional Energy Sources இந்தத் திட்டத்திற்கு நிறைய Subsidy அளிக்கிறது.
உங்கள் பயணம்/சந்திப்பு பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ள தொடர்கிறேன்.
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! கர்நாடகவில் கூட இந்த சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெற மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அங்குள்ள மாநில அரசும் தேவையான உதவிகளை செய்கிறது. . தமிழ் நாட்டில் இன்னும் மக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதும் மாநில அரசும் அதிகமாக ஆர்வம் காட்டவில்லை என்பதும் வேதனைக்குரியதே.
நீக்குதொடர்வதற்கு நன்றி!