பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும், எனது கைத்தொலைபேசி ஒலித்தது. யாரென்று பார்த்தால் நண்பர் மீனாட்சி சுந்தரம். அவருடன் பேசியபோது நான் எங்கிருக்கிறேன் என்று விசாரித்தார், பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் அமர்ந்துவிட்டதாக சொன்னவுடன், தான் பொள்ளாச்சி வந்துவிட்டதாகவும் அங்கு ‘ரத்னா ஸ்குயர்’ (Rathna Square) என்ற விடுதியில் நண்பர் செல்லப்பாவுடன் இருப்பதாகவும் சொன்னார்.
பொள்ளாச்சியை அடைந்ததும் பேருந்து நிலையம் போகவேண்டாமென்றும், ஊரின் நுழைவாயிலிலுள்ள மகாலிங்கபுரம் வளைவு அருகே இறங்கி, சிறிது தூரம் நடந்தால் விடுதிக்கு வந்துவிடலாமென்றும், அந்த விடுதியின் வாயிலிலேயே தான் காத்திருப்பதாகவும் சொன்னார். முன்பே பொள்ளாச்சியில் பணி புரிந்திருப்பதால் அந்த இடம் தெரியும் என்று சொல்லிவிட்டேன்.
அரசுப் பேருந்து பயணிக்கத் தொடங்கியதும் எனது மனமும் பின்னோக்கி பயணித்தது. பொள்ளாச்சியில் தான் எனது வங்கிப்பணி தொடங்கியது. 1970 ஆண்டு மே திங்களிலிருந்து 1973 ஆம் ஆண்டு மே திங்கள் வரை மூன்று ஆண்டுகள் பொள்ளாச்சியில் பணிபுரிந்தேன். சனியன்று வங்கியில் அரை நாள் தான் பணி என்பதால் சனியன்று மாலை புறப்பட்டு கோவை சென்று விடுவேன்.
கோவையில் எனது வகுப்புத் தோழர் கனகசபையும், எங்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உழவியல் விரிவுரையாளராக இருந்து பின்னர் எங்களோடு தேசிய விதைக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றிய திரு ஜெகநாதன் அவர்களும் ராம் நகரில் அறையொன்றில் தங்கியிருந்தார்கள்.
அவர்களோடு சனியன்று இரவு திரைப்படம் பார்த்துவிட்டு, ஞாயிறன்று வெளியே சென்றோ அல்லது பேசிக்கொண்டு இருந்தோ பொழுதைப் போக்கிவிட்டு, இரவு தங்கிவிட்டு திங்களன்று காலை 6 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு சென்றுவிடுவேன்.
அதனால் இந்த பொள்ளாச்சி- கோவை சாலை எனக்கு மிகவும் பழக்கமான ஒன்று. ஆற்றுப்பாலம் மற்றும் குறிச்சி தொழிற்பேட்டையைத் தாண்டியவுடன் ஒரு இரயில்வே கேட் இருக்கும். சிலசமயம் வருகின்ற இரயில்களுக்காக கேட் அடைக்கப்பட்டிருந்தால் பேருந்து, சரக்குந்து போன்ற வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் சிற்றூந்துகள், மகிழுந்துகள் போன்ற சிறிய வாகனங்கள் செல்ல சற்று தள்ளி நிலக்கீழ் பாலம் (Underground Bridge) ஒன்று இருக்கும்.
ஆனால் இப்போது அந்த இரயில்வே கேட் இருந்த இடத்தில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதால் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. நான் பயணம் செய்த பேருந்து அந்த மேம்பாலத்தில் ஏறி இறங்கியவுடன், எனது கண்கள் அங்கிருந்து சற்று தள்ளி மேற்கு புறத்தில் இருக்கும் புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவிலைத் தேடியது. இந்த கோவில் என்னால் மறக்கமுடியாத ஒன்று.
நான் முதன் முதலாக 1971 ஆம் ஆண்டு ஜாவா மோட்டார் சைக்கிளை கோவையில் வாங்கியவுடன், இந்த கோவிலில் வைத்து பூஜை செய்து தான் பொள்ளாச்சிக்கு எடுத்து சென்றேன். அப்போது எனக்கு மோட்டார் சைக்கிள் ஒட்டத் தெரியாதாகையால், பொள்ளாச்சியை சேர்ந்த கந்தசாமி என்ற நண்பர்தான் அதை எனக்காக பொள்ளாச்சிக்கு ஒட்டி வந்தார். அப்போது அவர் கோவை மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். (தற்போது மருத்துவர் கந்தசாமி பொள்ளாச்சியில் மருத்துவ சேவை செய்து வருகிறார்.)
அவர் தான் இந்த கோவிலுக்கு சென்று பூஜை செய்து போகலாம் என்று சொன்னார். அப்போதும் சரி, இப்போதும் சரி கோவை சுற்றுவட்டாரத்தில் புதிய வாகனங்கள் வாங்குவோர் இந்த ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு வந்த வாகனங்களின் சாவியை வைத்து பூஜை செய்யாமல் வாகனங்களை ஓட்டுவதில்லை. அன்றைக்கு நான் பார்த்தபோதும் அதிக புதிய வாகனங்கள் பூஜைக்காக வந்திருப்பதைக் கண்டேன்.
கோவிலைத் தாண்டியவுடன் கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள் கோவைக்குள் நுழையாமல் நேரே செல்ல புறவழிச்சாலை இருப்பதையும், அதன் அருகே கல்வி நிறுவனங்கள் பல இருப்பதையும் கண்டேன். சிற்றூராக இருந்த மலுமிச்சம்பட்டி இன்று பல்வேறு தொழிற்சாலைகளைக் கொண்ட புறநகராக மாறியிருப்பதையும், ஒத்தக்கால் மண்டபத்தில் இருந்த பிரிமியர் நூற்பாலை அருகே பல கல்வி நிறுவனங்கள் தோன்றியிருப்பதையும் கண்டு வியந்தேன்.
சாலையில் பயணிக்கும்போது மற்றொரு மாற்றத்தையும் கண்டேன். அப்போது இருந்த சாலைக்கும் இப்போது உள்ள சாலைக்கும் பெரும் வேறுபாடு இருப்பதையும், . தற்போது சாலை விரிவாக்கத்திற்காக சாலையின் இருமருங்கிலும் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு சாலை வெறுமையாய் இருப்பதையும் கண்டேன். மேலும் சாலையில் இருந்த ஏற்றமும் இறக்கமும் சமன் செய்யப்பட்டுள்ளதையும், விரிவாக்க சாலை போடும் பணி நடந்துகொண்டு இருப்பதையும் கண்டேன்.
அப்போதெல்லாம் இரு பக்கமும் மரங்கள் அணிவகுத்த நிற்க ஏற்றமும் இறக்கமும் உள்ள இந்த சாலையில் போட்டிபோட்டுக் கொண்டு பேருந்துகள் சீறிப் பாய்ந்து செல்லும் போது அதில் பயணிப்பதே ஒரு சுகானுபவமாகவும், பயமாகவும் இருக்கும்.
30 கி.மீ தொலைவில் இருந்த கிணத்துக்கடவை பேருந்து அடைந்தபோது, மிகப்பெரிய மேம்பாலம் கட்டப்பட்டுக்கொண்டு இருப்பதைக் கண்டேன். 70 களில் பத்து அல்லது பதினைந்து கடைகள் கொண்ட ஊராக இருந்த கிணத்துக்கடவு இன்று மிகப்பெரிய ஊராக அவதாரம் எடுத்திருப்பதைப் பார்க்கமுடிந்தது.
இந்த ஊரைப்பார்க்கும் போது, 1972 ஆம் ஆண்டு இங்கிருந்து மேற்கே உள்ள வீரப்பகவுண்டனூர் என்ற ஊருக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு வாடிக்கையாளரைப் பார்க்க சென்றபோது நடந்த ஒரு நிகழ்வு மனதில் படம் போல் ஓடியது
தொடரும்
இரு பக்கமும் மரங்கள் அணிவகுத்த நிலை, இனி வருங்காலத்தில் இருக்காது போல...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பல்லாண்டுகள் நிழல் கொடுத்துவந்த மரங்களை வெட்டித்தள்ளி சாலைகளை பொட்டல் காடுகள் போல் ஆக்கிவிட்டார்கள். அந்த மரங்களை வேரோடு பிடுங்கி தள்ளி நட்டிருக்கலாம். அதற்கான தொழில்நுட்பம் நமக்கு தெரிந்திருந்தும் ஏனோ செய்யவில்லை. அதற்கான தண்டனையை நிச்சயம் இயற்கை நமக்கு கொடுக்கும்.
நீக்குசொல்லிச் செல்லும் பாங்கு ரசிக்க வைக்கிறது நண்பரே...
பதிலளிநீக்குவீரப்ப கவுண்டன் புதூர சம்பவம் பற்றிய விடயங்களை அறிய ஆவலுடன்...
வருகைக்கும் பதிவை இரசித்தமைக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! வீரப்ப கவுண்டன் புதூர் சென்றபோது நடந்த நிகழ்வு பற்றி அறிய காத்திருப்பதற்கும் நன்றி!
நீக்குஎன்றோ நடந்தவைகளை நேற்று நடந்ததைப் போன்று சுவாரஸ்யத்துடன் எழுதுவது உங்களுக்கு கைவந்த கலை . அருமை.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு T.B.R ஜோசப் அவர்களே! தங்களைப் போன்றோர் தரும் ஊக்கமே கடந்த கால நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து எழுதத்தூண்டுகிறது என்பதே உண்மை.
நீக்குபொள்ளாச்சி என்றவுடன் பொள்ளாச்சி மஹாலிங்கம் நினைவு யாரும்க்கும் வராமல் இருக்காது. நான் என் பதிவில் பவானி சங்கமேஸ்வரர் ஆலய புதுப்பித்தல், குடமுழுக்கு பற்றியெல்லாம் சமீபத்தில் எழுதியிருந்தேன் அல்லவா?.. அது பொள்ளாச்சி மஹாலிங்கம் குடும்பத்தினரின் ஏற்பாடு தான்.
பதிலளிநீக்குஅதே மாதிரி கோவை என்றால் ஜி.டி..நாயுடு அவர்களின் அரிய
அறிவியல் ஆராய்ச்சிகளின் நினைவுகள்.
இந்நாளைய இளைஞர்களுக்கு இவர்களைப் பற்றியெல்லாம் அறிமுகங்கள் இல்லாது போனது தமிழகத்தின் தலைவிதி.
கிணத்துக்கடவு ஊரை நினைத்தவுடனே அமெரிக்காவும், ஆப்ரஹாம் லிங்கன் உருவ பொம்மைச் சிலையும் நினைவுக்கு வந்தாலும் அந்த நினைவுகளையெல்லாம் கடந்து போகவேத் தோன்றுகிறது.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! பொள்ளாச்சி என்றதும் அருட்செல்வர் திரு மகாலிங்கம் அவர்களைப் பற்றி நினைக்காமல் இருக்கமுடியாது. அவரை பற்றி தனியாகவே ஒரு பதிவில் எழுதலாம்.
நீக்குஅந்த நாட்களிலேயே பொள்ளாச்சியில் நிறைய தொழிற்கூடங்களையும் தொழிற்சாலைகளையும் நிறுவி பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர் அவர். வள்ளலார் இராமலிங்க அடிகளின் சமரச சன்மார்க்க சங்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.
நான் பொள்ளாச்சியில் பணிபுரிந்தபோது கிணத்துக்கடவு ஒரு சிற்றூர் தான்.
I had visited Pollachi once to attend a marriage. Nice place. Full of coconut trees, green fields. And your narration is interesting and lucid.
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! நான் பணிபுரிந்த ஊர்களிலே பொள்ளாச்சிதான் எனக்குப் பிடித்த ஊர். மரியாதையோடு பழகும் மக்கள், மிதமான தட்பவெட்ப நிலை, இரண்டு பருவக்காற்றுகள் தரும் மழை, எங்கு நோக்கினும் தென்னந்தோப்புகள், என்று சொல்லிக்கொண்டே போகலாம். சும்மாவா சொன்னார்கள் பொள்ளாச்சி,ஏழைகளின் உதகை; என்று.
நீக்குநினைவலைகள்....
பதிலளிநீக்குபொள்ளாச்சி வழியே இரண்டு மூன்று முறை சென்றதோடு சரி. உங்கள் சந்திப்பு பற்றி அவ்வப்போது படிப்பதில் மகிழ்ச்சி.
தொடர்கிறேன்.
வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்குகும்பகோணத்தில் பிறந்த எனக்கு எங்கெங்கல்லாம் கோயில் உள்ளதோ அங்கு செல்வது வழக்கம். அவ்வகையில் கோவையில் பணியாற்றியபோது முதலில் அனைத்து கோயில்களுக்கும் சென்றேன். அவ்வகையில் 1980களில், ஈச்சனாரி கோயில் சென்றுள்ளேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! தாங்களும் ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு சென்றது அறிந்து மகிழ்ச்சி!
நீக்கு