பணியில்
இருப்போர் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் ஓய்வு பெறுவதை பணி மூப்பு அடைதல்
என்கிறோம். நடுவண் மற்றும் மாநில அரசு பணிகளில் இருப்போரின் ஓய்வு பெரும் வயது முதலில் 55 ஆக இருந்து, பின்னர் 58 ஆகி தற்போது
60 ஆகிவிட்டது.
கல்லூரி
பேராசியர்களுக்கும், நீதியரசர்களுக்கும், குறிப்பிட பதவிகளில்
இருப்போருக்கு ஓய்வு பெறும் வயது 65 ஆக இருக்கிறது. ஆனால் இன்னும் பல மாநில அரசுகளில்
ஓய்வுபெறும் வயது 58 ஆகவே இருக்கிறது. தனியார் துறையில் சில நிறுவனங்களில் 55 வயது
ஆனவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிடுகிறார்கள்.
ஆனால் மருத்துவர்களுக்கும்
வழக்கறிஞர்களுக்கும் ஏன் அரசியல்வாதிகளுக்கும் கூட பணி மூப்பு என்பதே இல்லை. அதுபோல
வேளாண் பெருங்குடி மக்களும் தொழில் முனைவோரும் தங்கள் உடல் ஒத்துழைக்கும் வரை பணிபுரிந்து
கொண்டுதான் இருக்கிறார்கள்.
எனவே
இங்கு நான் தரும் ஆலோசனைக் குறிப்புகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பணி
புரிந்து ஓய்வு பெறுவோருக்கு மட்டுமே.
பணி மூப்பு என்பது
பணியில் உள்ள அனைவருக்கும் வருவது எனத்
தெரிந்தாலும் சிலர் பணி மூப்பு காலம்
நெருங்கும்போது ஒருவித சோகத்தோடு இருப்பார்கள். பணியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட
வயதில் ஒய்வு பெற்று இளைஞர்களுக்கு வழி விடவேண்டும் என்பது நடைமுறையில் உள்ள
ஒன்று. இதை மனதளவில் அறிந்துகொண்டு அதை
எதிர் நோக்குபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
எங்கள் பொது மேலாளர் திரு Y.M.Pai சொல்லுவார் 'நாம் பணியில் சேரும்போதே எப்போது ஒய்வு பெறப்போகிறோம் என்பது
தெரியும்.அப்படி இருக்கையில் அதற்காக கவலைப்படுவானேன்?' என்று.
எவ்வளவு யதார்த்தமான
கருத்து!
நடுவண் மற்றும்
மாநில அரசுப்பணியில் உள்ள உயர் அதிகாரிகள் பணி மூப்பு அடைந்து ஓய்வு பெற்றதும், அவர்களால் இயல்பான வாழ்க்கைக்கு வர பல நாட்கள் ஏன் பல மாதங்கள் ஆவதைக் கூட நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
உயர் பதவியில்
இருப்போருக்கு பணியிலே இருக்கும்போது கார் கதவைத் திறந்துவிட
ஒருவர், கோப்புகளை
தூக்கிவர ஒருவர், அலுவலக அறையின் கதவைத் திறந்துவிட ஒருவர் என அநேகம் பேர்
இருப்பர். ஆனால் ஓய்வு பெற்ற மறுநாள் அவரை பார்க்கக் கூட
வீட்டிற்கு ஒருவரும் வர மாட்டார்கள்.
இந்த 'அதிர்ச்சி'யை தாங்கமுடியாத பணி மூப்பு
பெற்ற அலுவலர்களில் பலர் உடல் நிலை சரி இல்லாமல் போவதும், மிக விரைவில்
இவ்வுலகை விட்டு போவதும் நாம் பார்க்கின்ற ஒன்றுதான்.
பணியில் இருக்கும்போது நம்மைச் சுற்றி வந்த
நண்பர்கள் மற்றும்
ஊழியர்கள் ஒய்வு பெற்றதும் திடீரென காணாமல்
போவதுண்டு. காரணம் நம்மால் அவர்களுக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை என்பதுதான்.
இது தான்
நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துகொண்டால், பணி ஓய்வு பெற்றபின் தொடங்கும்
புதிய வாழ்க்கை முறை, மனதளவிலும் உடல் அளவிலும் எந்த மாற்றத்தையும்
ஏற்படுத்தாது எனது கருத்து
பணிஓய்வுபெற்றோர்
எவ்வாறு தங்களது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும் என்பது பற்றிய பதிவு
ஒன்று எழுதவேண்டும் என்று வெகு நாட்களாக நினைத்துக்கொண்டு இருந்தேன்.
வங்கியில்
பணி புரிந்து ஓய்வு பெற்ற நண்பர் ஒருவர்,
வங்கிப் பணி நிறைவுபெற்று ஓய்வுபெற இருப்போருக்கான கூட்டத்தில் தான்
பேச இருப்பதாகவும், அதில் பேசுவதற்கான குறிப்புகள் ஏதேனும்
தர இயலுமா என என்னிடம் கேட்டார்.
நானும்
வங்கியில் பணி புரிந்தவன் என்பதால் உரிமையுடன் கேட்டார் என நினைக்கிறேன்.அவருக்குத்
தந்த அந்த குறிப்புகள் மற்ற துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
என்பதால் அவைகளை இங்கே தருகிறேன்.
தொடரும்.
பணி ஓய்வு - இங்கே பலருக்கும் பிரச்சனை தான். பணியிட மாற்றம் கூட சிலருக்குப் பிடிப்பதில்லை. உங்கள் அனுபவங்களிலிருந்து சொல்லப் போகும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! எனக்கு தெரிந்ததை எழுத இருக்கிறேன். தொடர இருப்பது அறிந்து மகிழ்ச்சி!
பதிலளிநீக்குநல்லதொரு தொடக்கம் நண்பரே இது பலருக்கும் பயனாகும் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅதானே அரசியல்வாதிகளுக்கு சாகும்வரை ஓய்வு இல்லையே...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! அரசியல்வாதிகளுக்கு அவர்கள் இறக்கும் வரை ஓய்வு இல்லை என்பதுதான் உண்மை!
நீக்குநன்று...கட்டுரையின் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன். வா.நேரு
பதிலளிநீக்குவருகைக்கும்,பதிவை தொடர இருப்பதற்கும் நன்றி முனைவர் வா.நேரு அவர்களே!
நீக்குநீங்கள் கூறியதுபோல பணி ஓய்வை எதிர் பார்த்து காத்திருப்போருக்கு அது பெரிய இழப்பாக தெரிவதில்லை. எனக்கும் அப்படித்தான். தொடர்ந்து படிக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு TBR.ஜோசப் அவர்களே!
பதிலளிநீக்குஓய்வு பெற இருப்பொர் எஞ்சிய காலத்துக்கக திட்டமிட வேண்டும் முக்கியமாக உடல் நலத்துக்காக உங்கள்பதிவும் இதனையே சொல்லும் என்று நம்புகிறேன் அதற்காககாத்திராமல் என் எண்ணங்களைக்கூறுவது சரியல்ல அல்லவா
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசூப்பிரமணியம் அவர்களே! எனது பதிவுக்காக காத்திராமல் தங்களது மேலான கருத்துக்களை தரலாம்.அது மதிப்புக்கூட்டலாகத்தான் (Value addition) இருக்கும்.
நீக்குஅந்த சமயத்தில் அவரவர் வீட்டில், ஒரு குழந்தையை பார்த்துக் கொள்ளவது போல் இருக்க வேண்டும்...
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குநல்ல கருத்துக்கள்! நிறைய பேருக்கு உபயோகப்படும்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி மனொ சாமினாதன் அவர்களே!
நீக்குதாங்கள் தொடர இருக்கும் இந்தத் தொடரை மிகுந்த ஆவலுடன், தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன். அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. பாராட்டுகள் + வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
நீக்கு//உயர் பதவியில் இருப்போருக்கு பணியிலே இருக்கும்போது கார் கதவைத் திறந்துவிட ஒருவர், கோப்புகளை தூக்கிவர ஒருவர், அலுவலக அறையின் கதவைத் திறந்துவிட ஒருவர் என அநேகம் பேர் இருப்பர்.//
பதிலளிநீக்குஉண்மைதான்.
ஆனால் ஓய்வு பெற்ற மறுநாள் ....... ஒரு மஞ்சள் பையுடன் ரேஷன் கடை க்யூவில் ஜீனி வாங்கிவர நிற்கும் அவல நிலைக்கு ஆளான மிக உயர்ந்த அதிகாரி ஒருவரை அடியேன் அறிவேன்.
வீட்டின் மேலிடத்து உத்தரவு ஆச்சே .... மறுக்க முடியாதே !
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! உயர் அதிகாரிகளுக்கு சேவகம் செய்யும் முறை ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது.அவர்கள் போன பிறகும் அந்த வழக்கம் தொடர்வது நிறுத்தப்படவேண்டும். அப்போதுதான் பணி ஓய்வுக்குப் பின் அதுபோன்ற வசதி இல்லையே என்ற குறை பலரது மனதைப் பாதிக்காமல் இருக்கும்.
நீக்குசரியாகத்தான் ஆரம்பித்துள்ளீர்கள். பணி நிறைவு பெற்று இரண்டாண்டுகள் ஆகும் நிலையில் உங்களது பதிவை தொடர்ந்து ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் பதிவை தொடர இருப்பதற்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே! தாங்கள் பல்கலைக்கழகப்பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும், ஆய்வுப்பணியிலிருந்தும் எழுத்துப்பணியிலிருந்தும் ஓய்வு பெறவில்லை. எனவே தங்களைப்போன்று இன்னும் சுறுசுறுப்புடன் இருப்போருக்கு எனது பதிவு பயன்படுமா எனத் தெரியவில்லை. இருப்பினும் தங்களது மேலான கருத்துகளை பின்னூட்டங்களில் எதிர்பார்க்கிறேன்.
நீக்குபணியில் இருக்கும்போது கிடைக்கும் உபரி மரியாதைகள் என்பது ஆங்கிலேயர் உருவாக்கி வைத்த வழக்கம். அது ஒரு விதத்தில் நான் அரசன், நீ அடிமை என்று இந்தியர்களுக்கு சுட்டிக் காட்டும் உபமானம் ஆக இருந்தது. ஆனால் ஆங்கிலேயர் சென்ற பின்னும் பின்னர் வந்த IAS IPS அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இவ்வழக்கத்தை விட மறுத்து தொடர்கதையாக்கினர்.
பதிலளிநீக்குஆனால் இங்கு கேரளத்தில் சுதந்திரம் பெரும் முன்னரே சமத்துவம் சகோரத்துவம் என்ற அடிப்படையில் கம்யூனிசம் வேரூன்ற இது போன்ற அடிமை சின்னங்கள் ஒழிந்தன. ஆக பணியில் இருப்பவருக்கு கிடைக்கும் மரியாதை என்பது உத்தியோகத்திற்கு மட்டும் தான். அந்த உத்தியோகத்தில் இருந்து மாறியவுடன் தோழமை தான். ஆக இப்பிரச்சினை கேரளத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தவில்லை எனலாம்.
தற்போது கேரளத்தில் அரசு ஊழியர் ஓய்வு பெரும் வயது 56. ஒய்வு பெற்றவர்கள் பெரும்பாலும் தனியாரிடமோ, அல்லது சொந்தமாகவோ சில பணிகளில் சிறிது காலம் உழைக்கின்றனர். அவர்களுக்கு ஓய்வின் வெறுமை என்பது இல்லை. வயதின் முடியாமை மட்டுமே அவர்களின் பிந்திய ஓய்வின் காரணம்.
பின் வரும் தொடர்களுக்கு காத்திருக்கிறேன். பஸ்ழய பதிவர்கள் திரும்பி வருவது மகிழ்ச்சி.
Jayakumar
வருகைக்கும் விரிவான விளக்கத்தோடு கூடிய கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் பதிவுலகம் வர இயலவில்லை. அதனால் தங்களைப் போன்றோரின் மேலான கருத்துக்களை அறியவும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
நீக்குநானும் கேரளாவில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளதால், அங்குள்ள வாழ்க்கை முறைக்கும் மற்ற மாநிலங்களில் உள்ள வாழ்க்கை முறைக்கும் உள்ள வேறுபாட்டை அறிவேன்.
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இங்கே தமிழ் நாட்டில் இன்னும் ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளன்று அரசுப் பணியில் உள்ளோர் பழங்களை வாங்கிக்கொண்டு போய் அமைச்சர் மற்றும் மேலதிகாரிகளைப் பார்த்து வாழ்த்து சொல்லிவருவது என்கிற பழக்கம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து தொடர்கிறது. முதலில் எலுமிச்சை பழம் கொண்டுசென்றவர்கள் தற்போது ஆப்பிள் கொண்டு செல்கிறார்கள். அதில் தான் மாற்றம் .மற்றபடி இந்த அடிமைப் பழக்கம் அப்படியே தொடர்கிறது என்பதுதான் வேதனை.
எனது பதிவு பொதுவாக பணியிலேயே உழன்றுவிட்டு ஓய்வு பெற்றபின் அதை நினைத்து கவலைப்பட்டு தன்னை வருத்திக்கொள்வோருக்கானது.பணி ஓய்வுபெற்றவர்கள் தங்களை எவ்வாறு வேறு வழிகளில் ஈடுபடுத்திக் கொண்டு சுறுசுறுப்பாக இருக்கலாம் என்பதை எனக்குத் தெரிந்தமுறையில் சொல்ல இருக்கிறேன். தங்களின் மேலான கருத்துகளை எதிர்நோக்குகிறேன்.
சரியாகச் சொல்வதென்றால் எப்பொழுதுடா பணி மூப்பு ஓய்வு பெறுவோம் என்று அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் நான் காத்திருந்தேன். அதனால் அந்த நாள் வந்த பொழுதும் வழக்கம் போலவான ஒரு நாளாகத் தான் அந்த நாளும் இருந்தது. நிறைவான ஏறத் தாழ 40 வருடத் தொடர்ப் பணிக்காலம். சிலர் பணி மூப்பு ஓய்வு பெரும் நாளன்று மாலை நடைபெறும் விடைபெறும் விழாவிற்காக தன் குடும்பத்தையே அலுவலகத்திற்கு வரவழைத்திருப்பார்கள். நான் என் மனைவியைக் கூட அலுவலத்திற்கு வரச் சொல்லியிருக்கவில்லை..
பதிலளிநீக்குவிழா முடிந்தவுடன் மாலை மரியாதையுடன் அலுவலக வேனில் நண்பர்கள் வீட்டில் கொண்டு போய் விடுவது வழக்கம். நான் வசித்தது அப்பார்ட்மெண்ட்டில். ஏறத்தாழ 60 குடியிருப்புகள். நாங்கள் வேனிலிருந்து இறங்கியதும் கூட வந்த அலுவலக தோழர்கள் வாழ்த்துக் கோஷங்களுடன் என்னை வீட்டிற்குள் அழைத்துச் சென்ற தோழமை அன்பு நானே எதிர்பார்க்காதது.
தொழிற்சங்க சிவப்புக் கொடிகளையும் வாழ்த்துக் கோஷங்களையும் பார்த்து எங்கள் குடியிருப்பு வாசிகள் அசந்து போய் விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
அதே போல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியையான என் மனைவி விருப்ப பணி ஓய்வு பெற்ற நாளன்று நான் அவர்களின் பள்ளியில் நடபெற்ற விடைபெறும் விழாவிற்குச் செல்ல வில்லை. எங்கள் இருவருக்குமே அரசுப் பணியாற்றிய காலம் ஒரு குறிப்பிட்ட கால கட்ட வாழ்க்கை அமைப்பைக் கடந்து செல்வது போலவே இருந்திருக்கிறது.
என்னைப் பொறுத்த மட்டில் வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அடுத்த கட்ட வாழ்வை மகிழ்ச்சியோடு எதிர் நோக்கிக் காத்திருந்தேன் என்றே சொல்ல வேண்டும். வரப்போவதை வரும் முன் யோசித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்வது என் வழக்கம். எல்லா விஷயங்களிலும் இன்றளவும் அப்படித் தான்.
வருகைக்கும், விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! குடும்பத்தையே விட்டு பத்து ஆண்டுகள் தனியாக வேறு மாநிலங்களில் இருக்க நேர்ந்ததால்,நானும் தங்களைப்போலவே எப்போது பணி மூப்பு அடைவோம் என்று காத்திருந்தேன்.
நீக்குஎனது பணி மூப்பு நாளன்று,எனது மனைவியும் அலுவலகம் வரவில்லை. மேலும் நான் தனியாக இருந்ததால் யாரும் வீடு வரை வந்து விட்டு செல்லவில்லை.
வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அடுத்த கட்ட வாழ்வை மகிழ்ச்சியோடு எதிர் நோக்கிக் காத்திருந்து, வரப்போவதை வரும் முன் யோசித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும் தங்களின் வழக்கம் எல்லோராலும் பின்பற்றவேண்டிய ஒன்று.
தாங்கள் எல்லா விஷயங்களிலும் அதுபோல் இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள்!
பயனுள்ள பகிர்வு ஐயா
பதிலளிநீக்குபயனுள்ள பதிவும் கூட
2022 இல் ஓய்வு பெற இரூக்கும் எனக்கு, ஒரு வழி காட்டித் தொடர்
தொடர்கிறேன் ஐயா
நன்றி
வருகைக்கும், பாராட்டுக்கும் ,தொடர்வதற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! இந்த தொடரில் சொல்ல இருக்கும் ஆலோசனைகள் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
பதிலளிநீக்கு