திங்கள், 14 அக்டோபர், 2019

‘பெருமை’ பெயரிலும் வணிகக் குறியிலும் இருந்தால் மட்டும் போதுமா?





ஒரு நிறுவனம் நிலைத்து நிற்க வாடிக்கையாளர்கள் (ஆதரவு) தேவை. வாடிக்கையாளர்கள் இல்லாத நிறுவனம் ஆணிவேர் இல்லாத செடிக்கு ஒப்பாகும். ஏனெனில் ஆணிவேர் இல்லாத செடி நிலைத்து நிற்க முடியாது. அதுபோல் வாடிக்கையாளர்களின் ஆதரவு இல்லாத எந்த நிறுவனமும் நிலைத்து நிற்கமுடியாது.




அதனால் தான் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து அவர்களை தங்கள் நிறுவனத்தின் பற்றுறுதி (Loyal) வாடிக்கையாளர்களாக மாற்ற முயற்சித்துக்கொண்டு இருக்கின்றன.

வாடிக்கையாளர்கள் பற்றி சொல்லும்போது ‘The Customer is King’ என்று சொல்வதுண்டு. ஆனால் நடைமுறையில் அவர்கள் அவ்வாறு  நடத்தப்படுகிறார்களா என்றால் இல்லை என்பதே உண்மை. 

வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்தில்

‘ஒரு அதி முக்கிய வருகையாளர்
அவர் நம்மை சார்ந்து இல்லை
நாம்தான் அவரை சார்ந்து இருக்கிறோம்’  

என்ற தேசத் தந்தையின் கருத்தை  ஏட்டில் மட்டும் எழுதி வைத்துவிட்டு  
வாடிக்கையாளர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் நிறுவனங்கள் பல உண்டு.

ஆனால் புகழ் பெற்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை உதாசீனம் செய்யமாட்டார்கள் என நம்பிக்கை கொண்டிருந்தேன். எனது நம்பிக்கை தவறு என்பதை சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் உணர்த்தியது. 

சென்னை அண்ணா நாரில் உள்ள Prestige Smart Kitchen என்ற அங்காடியில் TTK Prestige Ltd., நிறுவனத்தின் தயாரிப்பான தூண்டு மின் அடுப்பு (Prestige Induction cook top (Model PIC 6.0 V2)) ஒன்றை 29-12-2015  அன்று வாங்கினேன். 



அதை வாங்கியதிலிருந்தே தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தது. இருமுறை சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் சேவை மய்யத்தை தொடர்புகொண்டபோது தொழில் நுட்பப் பணியாளரை அனுப்பி சரி செய்தார்கள்.  

திரும்பவும் இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் அதன் பணிமுறை இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டதால், அவர்களின் மயிலாப்பூரில் உள்ள  சேவை மய்யத்தை தொடர்புகொண்டேன். யாருமே தொலைபேசியை எடுக்கவில்லை. பலமுறை முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

ஒருவேளை தொலைபேசி எண் மாறியிருக்குமோ என்ற ஐயத்தால் எந்த அங்காடியில்  அந்த தூண்டு மின் அடுப்பை வாங்கினேனோ, அவர்களை  தொடர்புகொண்டு விவரத்தை சொல்லி சேவை மய்யத்தின் தொலைபேசி என்னைப் பெற்றுக்கொண்டு திரும்பவும் சேவை மய்யத்தை புதிய எண்ணின் மூலம் தொடர்பு கொண்டேன். அப்போதும் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. 

வேறு வழி இல்லாதாதால் பெங்களூருவில் உள்ள அந்த நிறுவனத்தின் சேவை மய்யத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். பலமுறை முயற்சித்தும் அங்கும் யாரும் தொலைபேசியை எடுத்து பேசாததால், அந்த நிறுவனத்திற்கு நான் பட்ட அல்லல்களை விளக்கி, சென்னை சேவை மய்யத்திலிருந்து ஒரு தொழில் நுட்பப் பணியாளரை அனுப்ப உதவுமாறு  மின்னஞ்சல் ஒன்றை அன்றே அனுப்பினேன்.  

அவர்கள் கோளாறை சரி செய்ய ஏற்பாடு செய்யாவிடினும் பதிலாவது தருவார்கள் என நினைத்தேன். ஆனால் இன்றுவரை எந்த பதிலும் இல்லை. யாரும் வரவும் இல்லை. 

ரூபாய் 4595 மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு,  அந்த ‘பெயர்பெற்ற’ நிறுவனம் ‘விற்பனைக்குப் பின் சேவை’ வசதியை தருவார்கள் எதிர்பார்த்தது தவறு போலும். 

’பெரிய வீடு என்று பிச்சை எடுக்கப் போனானாம்
கரியை எடுத்து முகத்தில் பூசினார்களாம்’ 

என்று எங்கள் ஊர் பகுதியில் சொல்லப்படும் ஒரு சொல்லாடல் ஏனோ என் நினைவுக்கு வருகிறது.  

ஒரு பொருளை விற்றபின் அதற்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கு அதனால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க உதவமுடியாதவர்கள் எதற்காக சேவை மய்யம் ஒன்றை பெயரளவில் தேவையில்லாமல் வைத்திருக்கவேண்டும். 

ஒருவேளை விற்பனைக்குப்பின் சேவை செய்தால் அவர்களது பெருமை (Prestige)  குறைந்துவிடும் என்று நினைத்துவிட்டார்களோ?

வாடிக்கையாளர்களின் ஆதரவு இல்லாத எந்த நிறுவனமும் நிலைத்து நிற்கமுடியாது என்பது அவர்களுக்குப் புரிந்தால் சரி. 


25 கருத்துகள்:

  1. வாடிக்கையாளரை குறித்து தேசத்தந்தை குறிப்பிட்டதை நினைத்து நான் பலமுறை ஐயப்பட்டது உண்டு காரணம் எனது அனுபவம்.

    இன்று தாங்களும் அதை வலுப்படுத்தி விட்டீர்கள். இதற்கு அடிப்படை காரணம் நிறுவனர் அன்றி வேறு யாராக இருக்கமுடியும் ?

    எல்லோரும் விளம்பரத்தை நம்பி வியாபாரம் செய்பவர்கள் இதுவே அடிப்படை காரணம்.

    மக்கள் தரம் கண்டு பொருள் வாங்கும் நிலை வராதவரை இதில் மாற்றம் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் தரம் கண்டு பொருள் வாங்கும் நிலை வராதவரை இதில் மாற்றம் வராது./

      இதை பொருட்களை வாங்கிம பிறகுதானே தெரிகிறது. பிரஸ்டிஜ் ஒரு குக்கர்களுக்கு பெயர்பெற்ற நிறுவனமாக இருந்தது. ஆகவே அவர்கள் அறிமுகப்படுத்தும் மற்ற பொருட்களும் தரமுள்ளதாகத்தான் இருக்கும் என்று நம்புவதில் தவறில்லையே?

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! மக்கள் தரம் கண்டு ஒரு பொருளை வாங்கும் நிலை இங்கு வராத காரணம் குறிப்பிட்ட நிறுவனத்தின் பேரில் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையும், அந்த நிறுவனத்தின் பற்றுறுதி (Loyal) வாடிக்கையாளர்களாக இருப்பதும் தான் காரணம். இது மாறும் வரை இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கும் போலும்.

      நீக்கு
    3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நீங்கள் சொல்வதும் சரிதான். அந்த நிறுவனத்தின் அழுத்த சமைகலம் (Pressure Cooker) மக்களிடையே நற்பெயரை பெற்றிருப்பதால் அந்த நிறுவனத்தின் மற்ற பொருட்களும் அவ்வாறு இருக்கும் என நம்பியதன் தவறால் ஏற்பட்ட நிகழ்வு இது என்பது உண்மைதான்.

      நீக்கு
  2. எங்கள் வீட்டிலும் இதே கம்பெனியின் இதே அடுப்பு கடந்த 7-8 வருடங்களாக உள்ளது. தாங்கள் சொல்வதுபோல நானும் பலமுறை அதை சர்வீஸ் செய்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ரூபாய் 500 to 700 செலவழித்துள்ளேன். உடனே ரிப்பேர் செய்யும் ஆசாமிகள் நம் வீட்டுக்கு வந்துவிட மாட்டார்கள்.

    பலமுறை நானே நேரில் அடுப்பைத் தூக்கிக்கொண்டு, ஆட்டோ வைத்துக்கொண்டு சர்வீஸ் செண்டருக்குச் சென்று சரி செய்து வந்துள்ளேன். சரி செய்து கொடுக்க 4-5 நாட்கள் ஆக்குவார்கள். போகவும் வரவும் தனித்தனியே ஆட்டோ செலவு செய்யணும். என் இல்லத்திலிருந்து மிகத் தொலைவில் அந்த சர்வீஸ் சென்டர் உள்ளது.

    தேடிப்பிடித்து வேறு ஒரு போன் நம்பர் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அவசர ஆத்திரத்திற்கு பயன்படக் கூடும். அதற்கும் மிகவும் பொறுமை வேண்டும். ஒன்றை அழுத்தவும், இரண்டை அழுத்தவும், மூன்றை அழுத்தவும் என வெறுப்பேற்றி விடுவார்கள். அது ஆடோமேடிக் கம்ப்ளைண்ட் புக்கிங் நம்பராகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! ‘பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரத்தில் குடியிருக்கவேண்டும்’ என்ற பழமொழிக்கேற்ப, நிறுவனத்தின் பெயரைப்பார்த்து வாங்கியதற்கு அனுபவிக்கத்தான் வேண்டும் போல.

      நீக்கு
  3. FOR PRESTIGE INDUCTION STOVE REPAIRS, PLEASE CONTACT THE FOLLOWING NUMBER PREFERABLY FROM JIO PHONE (NOT THROUGH BSNL PHONE):

    1 8 0 0 1 2 3 3 3 4 4 1 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நிறுவனத்தின் தொடர்பு எண்ணை பகிர்ந்தமைக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  4. Big companies do not provide after sale service. Nowadays, banks do not disclose even the direct contact number of their branches. For example, if you look for the direct contact number of HDFC, or Axis Bank mount road branch, they display a common number which is a call center. Previously, customers were provided the direct telephone number of the branch and the branch head. So expressing a grievance to bank has become a task. And direct visit to the branch s almost impossible for senior citizen and is not relished by the bank management. For raising a grievance in grievance portal, registration process fails. Even when you get call center number, several times, authentication fails and our grievances are not registered. This way customers grievances are never heard. Even if you successfully register your grievance, it is closed by the bank as solved giving some vague reply. Customer service takes a back seat. I have similar experiences. With Make my trip,and it took one year to get refund of cancelled air ticket and more than 50 emails.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Absolutely true. More & more automztion & digitalisation of banking transactions has mode the life of senior citizens a hell.

      நீக்கு
    2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! ‘விற்பனைக்குப்பின் சேவை’ என்பது தற்போது ஏட்டளவில் மட்டும் உள்ளது என்பது அண்மைக்கால நிகழ்வுகள் தெரியப்படுத்துகின்றன.
      மூத்த குடிமக்கள் வங்கிக்கு சென்று அலையவேண்டாமே என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட இணைய சேவையும் மன உளைச்சலைத்தான் தருகின்றன. வங்கிகளில் கொண்டுவந்துள்ள தன்னியக்கமாக்கல் (Automation) வங்கிகளின் இயக்கத்தையே நிறுத்திவிட்டன என்றே சொல்லலாம். திரு டிபிஆர். ஜோசப் அவர்களின் கருத்து சரியே.

      நீக்கு
  5. பிரஸ்டிஜ் முன்பு போல் இல்லை. ப்ரஸ்டிஜே இல்லாத நிறுவனமாகிவிட்டது. எனக்கும் பல கசப்பு அனுபவங்கள் உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர். ஜோசப் அவர்களே! தங்களின் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன். அவர்கள்பெயருக்குத் ஏற்றாற்போல் நடக்கவில்லை. இப்படி நடந்தால் மக்களே அவர்களை புறக்கணித்துவிடுவார்கள்.

      நீக்கு
  6. பெரிய நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்வதில்லை. பிராண்ட் பெயர் மட்டும் கொடுத்தால் போதும். சீன நிருவனங்கள் அந்த பெயரில் எந்த பொருள் வேண்டுமானாலும் பாதி விலையில் உற்பத்தி செய்து கொடுப்பார்கள். ஆகவே உங்கள் பிரெஸ்டிஜும் சீனத்தயாரிப்பு ஆக இருக்கும். இதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்றால் அட்டைப்பெட்டியில் made in china காணும். இரண்டாவதாக இது போன்ற பொருட்கள் கியாரண்ட்டி வரையே செயல்படும். அதற்கு பின்னர் அவை பழுதஅடைந்தால் தூக்கி போட்டு விட்டு வேறு ஒன்று வாங்க வேண்டும். 
    உங்களுக்காவது அடுப்பு தான். நான் 40 இன்ச் சாம்சங் டிவி 48000 போட்டு வாங்கியது. சரியாக 4 வருடம் சென்றபின்னர் பழுதானது.சாம்சங் சேவை மையத்தில் தெரிவித்தவுடன் அவர்கள் அதை கொண்டு போய் சரி செய்து கொண்டு வந்தார்கள்.ஆனால் கொண்டு வந்து வைத்தவுடன் வேலை செய்யவில்லை. திரும்ப கொண்டு போய் கொண்டு வந்து என்று 4 தடவை போய் வந்தது. 6000 ரூபாய பில். ரிப்பர் காரண்டீ 3 மாதம். அதற்கப்புறம் ரிப்பேர் செய்வதனால் மீண்டும் பணம் கட்டவேண்டும். சரியாக 3 மாதத்தில் டிவி மீண்டும் கேடானது. 
    இதற்கு எல்லாம் போம் வழி ஒன்று தான். மேல்நாட்டவர் போல ரிப்பேர் என்றால் வேறு பொருள் வாங்க வேண்டியதுதான்.
     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் இனி வாங்குகின்ற நுகர் பொருட்கள் பழுதானால், அவைகளை சரி செய்வ்தை விட்டுவிட்டு புதிய ஒன்றை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்.

      நீக்கு
  7. //மய்யத்தை///

    மய்யம் என்று வாசித்த கணத்திலேயே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! மய்யம் என்று வாசித்த கணத்திலேயே...என்று ஆரம்பித்து நிறுத்திவிட்டீர்கள். அதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.

      தமிழின் இலக்கணமான தொல்காப்பியத்தில் , "ஐ" வரிசை எழுத்துகளுக்கு அருகில் உயிரெழுத்து வரும்போது அதை இரண்டு விதமாகவும் (மையம், மய்யம்) எழுதலாம் என்ற விதி உள்ளதாக தமிழறிஞர்கள் கூறுகின்றனர்.

      மையம் என்றும் மய்யம் என்றும் நடுவம் என்றும் எழுதலாம் என படித்திருக்கிறேன். தங்களின் கருத்து என்ன என்று அறிய ஆவல்

      நீக்கு
  8. பெரும்பாலும் பெரிய கம்பெனிகளின் சேவை மய்யங்கள் தனிப்பட்ட service provider-களால் நிர்வகிக்கப் படுகின்றன. ஏர்டெல்- டாடா ஸ்கை எல்லாம் இப்படித் தான். Service provider-கள் நம் வீட்டிற்கு வந்து சேவை அளித்தால் அதற்கு தனியே ஒரு தொகை தர வேண்டும். இவர்களுக்கு இதான் வரும்படியே.

    Warranty காலம் இருந்தால் சில கம்பெனிகள் வீட்டிற்கே தன் கம்பெனி சேவை மய்ய ஆட்களைக் கொண்டு பழுது பார்க்கிறார்கள்.
    கம்பெனிக்கு எடுத்துச் சென்று பழுது பார்ப்பதென்றாலும் அதை தங்கள் செலவில் செய்கிறார்கள். நீங்கள் AMC போட்டிருந்தாலும் இந்த சேவை உண்டு. அனுபவப்பட்டதால் சொல்கிறேன்.

    Warranty -- AMC இரண்டுமே வாங்கிய பொருட்களின் பழுது நீக்கலைத் தீர்மானிக்கின்றன.

    என் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இதே பிராண்ட் அடுப்பு தொந்தரவு இன்றி செயல்பட்டு வருகிறது. ஆனால் அதை காலை வேளை பால் காய்ச்ச மட்டுமே நாங்கள் உபயோகிக்கிறோம்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. ஒரு பொருளை விற்று கிடைக்கும் இலாபத்தைவிட விற்பனைக்கு பிந்திய சேவையில் தான் அதிக இலாபத்தைப்பெறுகிறார்கள். என் செய்ய.

      எங்கள் வீட்டிலும் வெந்நீர் வைக்கவும் பால் காய்ச்சவும் மட்டுமே அந்த தூண்டு மின் அடுப்பை பயன்படுத்தினோம். என்ன காரணமோ தெரியவில்லை.பழுது ஏற்பட்டுவிட்டது. திரு ஜெயக்குமார் அவர்கள் சொன்னதுபோல் புதியது ஒன்றை வாங்கவேண்டும். இல்லாவிடில் வழக்கம்போல் எரிவாய்வு அடுப்பை பயன்படுத்தவேண்டியதுதான்.

      நீக்கு
  9. சில நிறுவனங்கள் தரும் வாரண்டி கார்ட் அந்த பேப்பர் மதிப்பை விட குறைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியன் அவர்களே! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி புதிய மாதவி அவர்களே! அது இப்போது ‘பெயர் போன’ நிறுவனமாகிவிட்டது.

      நீக்கு
  11. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் சேவை என்ற சொல்லை கொச்சையாக்கியுள்ளனர். நாமே அவர்களுக்கு வியாபாரப்பொருளாகத் தெரிகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! அவர்களது நுகர் பொருளை வாங்க பலர் இருப்பதால், நம் போன்றோர் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை.

      நீக்கு