வெள்ளி, 19 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 10




அப்போதெல்லாம் எங்கள் வங்கியில் கள அலுவலர்கள் குறைவாக
இருந்ததால், ஒரு அலுவலரே ஒன்றுக்கு மேற்பட்ட கிளைகளில்
உள்ள வேளாண்மைக்கடன் அலுவல்களை பார்த்துக்கொள்ளப்
பணிப்பது வழக்கம்.

அதுபோல எனக்கும், நான் வேலை பார்த்த கிளையிலிருந்து
29 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த எங்களது வங்கியின்
இன்னொரு கிளையில் உள்ள வேளாண்மைக் கடன்களையும்
பார்த்துக்கொள்ள பணிக்கப்பட்டிருந்தது.

எனக்காவது பரவாயில்லை.கூடுதலாக ஒருகிளைதான்
ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் கர்நாடகாவில் உள்ள தென் கன்னட
மாவட்டத்தில் பணி ஆற்றிய என் போன்ற கள அலுவலர்களுக்கு 
5 முதல் 6 கிளைகள் தரப்பட்டிருந்தன.

நான் எனது பணித்தலைமையிடத்தில் (Head Quarters) 
வார நாட்களில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் 
கிளைக்கு வரும் விவசாயிகளுக்கு கடன் தரும் பணியைக் கவனித்துக்கொண்டும்,செவ்வாய்க்கிழமை மட்டும் இன்னொரு 
கிளைக்கு சென்று அங்கு வரும் விவசாயிகளுக்கு கடன் தரும் 
பணியை செய்து கொண்டு இருந்தேன்.

அப்படி ஒரு நாள் அடுத்த கிளைக்கு  சென்றபோது, அங்கு 
எனக்காக காத்துக்கொண்டு இருந்த இளைஞரை சந்தித்தேன்.
அவரை அந்த கிளையின் மேலாளர் அவரை ஒரு இளம் 
வழக்கறிஞர் என்றும்  அதே நேரத்தில் வேளாண்மையும் 
செய்பவர்  என்றும் அறிமுகப்படுத்தினார். 

அவருக்கு கரும்பு பயிரிட கடன் வேண்டும் என்றும், 
அதற்காக அவரதுபண்ணையை பார்வை இட வேண்டும் 
எனக் கேட்டுக்கொண்டார். என்னென்ன ஆவணங்கள்
கொண்டுவரவேண்டும் என முன்பே வந்து மேலாளரிடம் 
கேட்டு சென்றிருந்ததால் அவைகளைக் கொண்டு வந்திருந்தார்.

அவரிடம் தேவையான விவரங்களை கேட்டறிந்து விட்டு, 
அவரோடுஅவரது பண்ணையைப் பார்வையிட மேலாளருடன் 
சென்றேன். அந்த பண்ணைக்கு சென்றபோது வயலில் முன்பு 
பயிரிட்டு இருந்த கரும்பு வெட்டப்பட்டு அடிக்கட்டையில் 
புதுத் தளிர் விட்டிருந்தது.

அவர் கடன் கேட்டது மறுதாம்பு (Ratoon) பயிருக்கு. (கரும்பை
வெட்டும்போது, திரும்பவும் புதிதாய் கரும்புப் புள்ளுகளை
(Sugarcane setts)  நடவு செய்வதால் ஏற்படும் செலவைக்
குறைப்பதற்கு அடியில் கொஞ்சம் விட்டு வெட்டுவார்கள். 
அதில் துளிர்த்து வரும் பயிரைத்தான் மறுதாம்பு என்பார்கள்.
அது பற்றி எழுதி உங்களை சலிப்பூட்ட விரும்பவில்லை. )

மொத்தம் எவ்வளவு ஏக்கரில் மறுதாம்பு இருக்கிறது என்பதை
உறுதி செய்து கொண்டு திரும்பும்போது, அந்த வயலில் வெட்டிய
கரும்பை சர்க்கரை ஆலைக்கு அனுப்பாமல் அங்கேயே பாகு 
காய்ச்சி அச்சு வெல்லம் தயார் செய்துகொண்டு இருந்ததைப் 
பார்த்தேன்.

ஏன் சர்க்கரை ஆலைக்கு அனுப்பாமல் வெல்லம் தயாரிக்கிறீகள்?’
எனக் கேட்டதற்கு அப்போது வெல்லத்திற்கு கூடுதல் விலை
கிடைத்ததால் சர்க்கரை ஆலையில் கரும்பைத் தர பதிவு
செய்யவில்லை என்று சொன்னார்.

என்னோடு வந்த அந்த கிளை மேலாளர் அச்சுவெல்லம் தயாரிப்பதை அதுவரை பார்த்ததில்லையாம்.ஆதலால் அதைப்பார்த்து 
ஆச்சரியப்பட்டு அதிக நேரம் அது பற்றி விசாரித்துக்கொண்டு 
இருந்தார்.

கிளைக்கு திரும்பும்போது, அந்த வழக்கறிஞர்/விவசாயி கடன் 
எப்போதுகிடைக்கும்?’ எனக் கேட்டார்.அதற்கு நான் பொங்கல் விடுமுறைக்குஊருக்கு போக இருப்பதால் இன்றே எனது 
பரிந்துரையை மேலாளரிடம் கொடுத்துவிடுவேன். அவரது 
பரிந்துரையுடன் தலைமை அலுவலகம் அனுப்பினால் இன்னும் 
ஒரு வாரத்தில் ஒப்பளிப்பு (Sanction) வந்துவிடும்.’என்றேன்.

அவரும் சரி என்று திரும்பிவிட்டார்.எனது பரிந்துரையை எழுதி
மேலாளரிடம் கொடுத்துவிட்டு, நானும் எனது தலைமையகம்
திரும்பிவிட்டேன்.மறு நாள் மதியம் எனது பணியிடத்தில் 
அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது அந்த 
வழக்கறிஞர் வந்தார்.

எனக்கு ஒரே ஆச்சரியம். அவரது கடன் விண்ணப்பத்திற்கான 
எனதுபரிந்துரையை, ஆய்வு செய்த அன்றே கொடுத்துவிட்டதால் திரும்பவும்எதற்காக வருகிறார் என்று எனக்கு புரியவைல்லை.

அவரைப் பார்த்ததும். ஏது சார் இந்த பக்கம்? நான் நேற்றே எனது
ஆய்வு அறிக்கையைக் கொடுத்துவிட்டேனே.வேறு ஏதாவது பிரச்சினையா?’என்று கேட்டேன்.

அதற்கு அவர் இல்லை சார். அதெல்லாம் ஒன்றுமில்லை.
இங்குள்ள நீதிமனறத்தில் ஒரு வழக்குக்காக வாதாட வந்தேன்.
அப்படியே உங்களையும் பார்த்துப் போகலாம் என வந்தேன். 
என்றார்.

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு பொங்கல் 
விடுமுறைக்காகஉங்கள் ஊருக்கு பேருந்தில்எங்கள் ஊர் 
வழியாகத்தானே செல்லவேண்டும். நீங்கள் எப்போது எந்த 
பேருந்தில் செல்வதாக இருக்கிறீர்கள்?’ என்றார்.

எதற்காக கேட்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு நீங்கள் வரும் 
சமயம் தெரிந்தால் உங்களை எங்கள் ஊர் பேருந்து 
நிறுத்தத்தில் சந்திக்கலாம் என்பதற்காகத்தான் கேட்டேன். 
என்றார்.

இங்குதான் பார்த்துவிட்டீர்களே.அங்கு எதற்குப் 
பார்க்கவேண்டும்?’ என்றேன்.


தொடரும்

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 9





பத்திரங்களுக்கான முதிர்வுத் தொகையை திரும்பப் பெற 
ரிசர்வ் வங்கிக்கு தட்டச்சு செய்து கொடுத்த கடிதத்தைப் 
பெற்றுக்கொண்ட சென்ற அந்த விவசாயி பற்றி நான் மறந்து விட்ட நிலையில், ஒரு வாரம் கழித்து முகத்தில் சந்தோஷம் பொங்க, 
அவர் என்னிடம் வந்தார்.

அவர் கையில் ரிசர்வ் வங்கியிலிருந்த வந்த கடிதமும், அந்த 
வங்கியின் பத்திரத்தில் அவரது முதலீட்டுப் பணத்தின்  முதிர்வுத் தொகைக்கான கேட்பு காசோலையும் (Demand Draft) இருந்தது. 

உள்ளூர் பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க அந்த கேட்பு  காசோலையையும் கடிதத்தையும்,என் கையில் கொடுத்துவிட்டு
வராது என நினைத்து இருந்த பணத்தைப் பெற, நீங்கள் செய்த 
உதவிக்கு ரொம்ப நன்றி சார். நீங்கள் இந்த தொகையைப் பெற உதவியதால், உங்கள் வங்கியிலேயே இதை நிரந்தர வைப்பி‌ல்  
(Fixed Deposit) வைக்க விரும்புகிறேன்.அதிக வட்டி தரும் 
திட்டத்தின் கீழ் இதை வைப்பாக வையுங்கள்.என்றார்.

நான் அதை வாங்கிக்கொண்டு இதற்கெல்லாம் எதுக்குங்க நன்றி.உங்கள் பணம் வந்துவிட்டதல்லவா? அதுவே போதும். 
என்றேன்.பின்  வைப்புத்தொகை வைப்பதற்கான விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கிக்கொண்டு, ‘இன்று இந்த காசோலையை  ஸ்டேட் வங்கிக்கு அனுப்பி பணத்தைப் பெற்ற பிறகு வைப்புத்தொகைக்கான  இரசீதை தயார் செய்து வைக்கிறோம்.
நாளைவந்து அதை பெற்றுக்கொள்ளுங்கள்.என்றேன்.அவரும் 
'சரி.'எனக் கூறி சென்றார்.

மறு நாள் வந்த அந்த வாடிக்கையாளரிடம், அவரது 
வைப்புத்தொகைக்கான இரசீதைக் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டுசார் ஒன்று கேட்பேன். தப்பாக எடுத்துக் 
கொள்ள மாட்டீர்களே?’ என்று தயங்கிக்கொண்டே கேட்டார். 

அதெல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டேன். சொல்லுங்கள். 
என்றேன். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?’ என்று நான்எதிர்பார்க்காத கேள்வியை அவர் கேட்டதும் எனக்கு 
ஓரே அதிர்ச்சி.

அதை வெளிக்காட்டாமல், இன்னும் இல்லை. ஏன் கேட்கிறீர்கள்?’என்றேன்.அதற்கு அவர், சும்மாதான் கேட்டேன். என்று சொல்லிவிட்டுஅடுத்துஒரு கேள்வியைக் கேட்டார் பாருங்கள்.அதைக்கேட்டதும் அவர் எதற்காக முதற் கேள்வியைக் கேட்டார் என்பதை தெரிந்துகொண்டேன்.

அவர் கேட்ட இரண்டாவது கேள்வி நீங்கள் எந்த வகுப்பு எனத் தெரிந்துகொள்ளலாமா?’ என்பதுதான். அதற்கு நான் சிரித்துக்கொண்டே,  ‘பள்ளியில்S.S.L.C படிக்கும்போது 
முதல் வகுப்பு. ஆனால் கல்லூரியில் படித்தபோது,
இரண்டாம் வகுப்புதான். என்றேன். 

எனது இந்த பதிலை எதிர்பார்க்காத அவர். இல்லை சார். நான் அதைக்கேட்கவில்லை.நேரடியாகவே கேட்கிறேன். 
தவறாக எண்ணவில்லை என்றால் நீங்கள் என்ன ஜாதி 
என்பதை நான் தெரிந்துகொள்ளலாமா?’என்றார்.

நான் அது தெரிந்து உங்களுக்கு என்ன ஆகப்போகிறது. நான் எந்தப்பிரிவாக இருந்தாலும், இந்த வங்கியில் உங்களைப் போன்றவர்களுக்குசேவை செய்ய இருக்கும் 
அலுவலர் பிரிவைச் சேர்ந்தவன் (Officers Community).  
அவ்வளவுதான்.' என்றேன்.

உடனே அவர் நான் கோபப்படுவதாக எண்ணி சார் 
தவறாக கேட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். 
ஒருவேளை நீங்கள் எங்களவரோ என்ற சந்தேகத்தில்தான் 
அவ்வாறு கேட்டேன்.’ என்றார்.

அதற்கு நான் மன்னிப்பதற்கு இதில் ஒன்றுமில்லை. நானும் தப்பாகஎடுத்துக் கொள்ளவில்லை. ஒன்று மட்டும் சொல்லுவேன். நான் உங்களவர் இல்லை என்பதுதான். 
என்றேன். 

அவரும் அதைக்கேட்டு ஏமாற்றத்தோடு  என்னிடம்  விடைபெற்று சென்றார். பொதுவாக கிராமத்தில் உள்ளவர்கள்  மற்றவர்களைப் பற்றி அறிந்துகொள்ள அதீத ஆர்வம் 
காட்டுவார்கள் என்று எனக்குத் தெரியும். என்பதால் அதை 
பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

என்னை அவரது உறவினராக மாற்ற எண்ணினாரோ 
என்னவோ எனக்குத்  தெரியவில்லை.ஆனால் நான் அந்த உதவியை செய்ததின் மூலம் அவருக்கும் வங்கிக்கும் 
ஒரு உறவை (Banker-Customer Relationship) ஏற்படுத்தினேன் 
என்பது மட்டும் நிச்சயம்.

தொடரும்