புதன், 19 டிசம்பர், 2012

வீட்டுத் தோட்டத்தில் Bamboo வளர்த்தால் பாம்பு வருமா?




இரண்டு நாட்களுக்கு முன்பு, என்னுடன் பணியாற்றியவரும் 
எனது நண்பருமான திரு L.N.கோவிந்தராஜன் அவர்கள், 
வீட்டுத் தோட்டத்தில் மூங்கில் வைக்கலாமா வைத்தால் 
பாம்பு வரும் என்று சொல்வது உண்மையா என எங்கள் 
வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான  
Google குழுமத்தின் மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தார். 

அவரது கேள்விகளுக்கான விடைகளை தெரிவித்திருந்தேன். 
அதை பதிவுலக நண்பர்களுக்கும் தெரிவிக்க நினைத்ததின் 
விளைவே இந்த பதிவு.

உண்மையில் மூங்கில் சுற்றுசூழலுக்கு தோதான (Eco-friendly), கட்டுமானத்திற்கு உபயோகமான, வேகமாக வளரும் ஒரு புல் 
வகையைச் சேர்ந்த தாவரம் தான் என்றாலும் வீட்டில் 
வளர்க்கக்கூடாது என்பதற்கான முக்கியமான 
காரணங்கள் ஐந்து. 

1.அடுத்த வீட்டை நோக்கி தாவும் அபாயம்:
சில மூங்கில்கள் ஒரே நாளில் மூன்றடிக்குமேல் வளரும் 
தன்மை உடையவை. அந்த அசுர வளர்ச்சியின் காரணமாக 
அவை எந்த வித எல்லைக்கும், வேலிக்கும் கட்டுப்படாமல் 
அடுத்த வீட்டை நோக்கிக் கூட படையெடுத்து வளர 
வாய்ப்புண்டு. அதனால் நமக்கும் அடுத்த வீட்டுக்காரருக்கும் 
மன வருத்தமும், ஒருவேளை அவர் நீதி மன்றம் சென்றால் 
நமக்கு பாதகமும் பண விரயமும் ஏற்பட வாய்ப்புண்டு.

2.பல் திறப்பட்ட பயிரினங்களை அழிக்கும் அபாயம்.
(Invasive threat to biodiversity)
அநேக மூங்கில் வகைகள் அயற் பண்புடைய 
படையெடுக்கும் தாவரங்கள் (Exotic Invasive Plants) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மூங்கில்களின் கிழங்குகள்  
(Rhizomes) பக்கவாட்டில் அதிவேகமாக  ஊடுருவுவதால் 
தோட்டத்தில் உள்ள மற்ற செடிகளை வளர விடாமல் 
செய்ய வாய்ப்புண்டு. அவ்வாறு அவைகள் பரவுவதை, 
கற்காரை(concrete) அல்லது உலோகத்தகடு (Metal)  
அல்லது அழுத்தம் கொடுத்து பதப்படுத்தப்பட்ட 
மரத்துண்டு (Pressure-treated wood) போன்றவைகளை 
ஒன்றரை அடி ஆழத்திற்கு கீழே மூங்கிலை சுற்றி 
வைத்து  தடுக்கமுடியும் என்றாலும் அதற்காகும் 
செலவு மிக மிக அதிகம்.

3.தேவையில்லாத வளர்ந்த மூங்கிலை அடியோடு 
நீக்க பல ஆண்டுகள் பிடிக்கும்: தேவையில்லாத 
மூங்கிலை அழிக்கவேண்டுமானால் கீழே உள்ள 
வேர்களையும், கிழங்குகளையும் அடியோடு எடுத்தால்தான் 
ஒழிக்கமுடியும். அப்படியே எடுத்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாயுள்ள கிழங்குகள் திரும்பவும் முளை 
விட்டு துளிர்க்க வாய்ப்புண்டு.எனவே இதை சொல்வது 
எளிது. செயலாக்குவது கடினம். தொடர்ந்து இரண்டு 
ஆண்டுகள் அந்த இடத்தை உழுதால் மட்டுமே   
இது சாத்தியம். 

4.பயிர்க்கொல்லி (Herbicide) உபயோகிப்பது கடினம்:   
மூங்கிலை அழிக்க பயிர்க்கொல்லி உபயோகிக்கலாம்.
ஆனால் ஒரு முறை தெளித்தால் மட்டும் போதாது. 
பல முறை தெளிக்கவேண்டும். இந்த முறையிலும் 
அழிக்க பல ஆண்டுகள் ஆகலாம். மேலும் 
இயற்கை(உயிரி)வேளாண்மை செய்பவர்களாயிருந்தால் 
இந்த முறையைப் பின்பற்ற முடியாது.

5.வீட்டில் வளர்க்க சரியான மூங்கிலைத் 
தேர்ந்தெடுப்பது கடினம்: பரவும் வகை மூங்கிலைவிட 
கொத்துகொத்தாக வளரும் மூங்கிலை சிலர் சிபாரிசு 
செய்தாலும் அவைகளும் பக்கவாட்டில் வளரும் என்பதும் 
உண்மை.



 


(படங்கள் தந்த கூகிளார்க்கு நன்றி)    


மூங்கில் வளர்த்தால் பாம்பு வருமா என்றால் வரும் 
என்கிறார் எனது நண்பரும் என்னோடு வங்கியில் பணிபுரிந்து 
தற்போது வேளாண்மை செய்து வரும் திரு மாணிக்க சுந்தரம் 
அவர்கள். அவர் தற்சமயம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே 
அவரது பண்ணையில் 5 ஏக்கரில் மூங்கில் நட்டிருக்கிறார். 

அதில் சாரைப்பாம்புகளும் நல்ல பாம்புகளும் அதிகம்
வருவதாக சொன்னார். அவைகள் வருவதற்கு காரணம் 
மூங்கில் உள்ள இடம் குளிர்ச்சியாக இருப்பதால், தங்க 
வசதியாய் இருப்பதாலும் மேலும் மூங்கிலில் கூடுகட்டும் 
பறவைகள் உணவாக கிடைப்பதாலும் வருகின்றனவாம். 

பாம்புகள் பற்றி அவர் கவலைப்படுவதில்லை காரணம் 
இயற்கையின் கொடையால் Biological Control எனப்படும் 
உயிரினக் கட்டுப்பாடு நடக்க, அங்கே மயில்களும் 
நிறைய வருகின்றவாம் பாம்புகளை பிடித்து சாப்பிட! 

வீட்டுத் தோட்டத்தில் மூங்கிலை வளர்த்தால் பாம்புகள் 
அங்கே புகலிடம் தேடி வர வாய்ப்புண்டு என்பதால் 
வீட்டருகே வளர்ப்பது நல்லதல்ல. வணிக ரீதியாக 
வளர்ப்போரும் வேளாண் பெருமக்களும் மூங்கிலை 
வளர்க்கட்டும். 

நாம் அந்த மூங்கிலால் கிடைக்கும் பயனை 
அனுபவிப்போம்!    

 




 

வெள்ளி, 14 டிசம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 20



கல்விக்கடன் பெற்று, திருப்பி அதைக் கட்டாமல் இருந்த, 
அந்த பொறியியல் பட்டதாரி சொன்னது போலவே அன்று 
மதியமே எங்கள் கிளைக்கு வந்தார். அவர் வந்ததும், 
மேலாளரும் சார்பு மேலாளரும் எனது அறைக்கு வந்து 
எங்களது உரையாடலில் கலந்து கொண்டனர்.

அவரை வரவேற்று உட்கார சொன்னதும், அவர் கேட்ட 
முதல் கேள்வி ‘என்னை எதற்காக சந்திக்க விரும்பினீர்கள்?’ என்பதுதான்.அப்போது கூட அவருக்கும் எங்கள் வங்கிக்கும் 
தொடர்பு இருப்பதுபோல காட்டிக்கொள்ளவில்லை! 
(ஒருவேளை அவர் நினைத்திருக்கலாம் அவரது கடனை 
தள்ளுபடி செய்திருப்போம் என்று.)

எனக்குள் கோபம் வந்த போதும், அதைக் 
காட்டிக்கொள்ளாமல் முகத்தில் புன்முறுவலை 
வரவழைத்துக்கொண்டு ‘நீங்கள் ஏற்றுமதி வணிகம் 
செய்வதாக அறிகிறேன். வணிகம் எப்படி இருக்கிறது?’ 
என்றேன். அதற்கு அவர் ‘நன்றாக இருக்கிறது. இதைக் 
கேட்கவா என்னை சந்திக்க விரும்பினேர்கள்?’ என்றார்.

‘இல்லை. இல்லை. உங்களை சந்திக்க விரும்பியதற்கு 
வேறொரு காரணமும் உண்டு. அதை பின் சொல்கிறேன். 
நீங்கள் இப்போது எந்த வங்கியில் கணக்கு 
வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர் வணிகம் ஆரம்பித்ததிலிருந்தே கணக்கும் 
வைத்திருக்கும் வங்கி ஒன்றின் பெயரை சொன்னார்.
(அது இந்தியாவின் பெரிய வங்கி ஆகும்)

பணத்தை திருப்பிக் கட்டும் எண்ணம் இருந்திருந்தால், 
எங்கள் வங்கியில் கணக்கை ஆரம்பித்து இருப்பார். 
வேறொரு வங்கியில் கணக்கை ஆரம்பித்திருக்கிறார் 
என்று அறிந்தபோதே இவர் Wilful Defaulter தான் என நினைத்துக்கொண்டேன்.

எனவே இவரிடம் சிரித்துப் பேசி பிரயோசனமில்லை 
என எண்ணி, சற்று வேகமாக கேட்டேன். ‘இந்த வங்கியில் 
நீங்கள் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க கடன் பெற்றீர்களா 
இல்லையா?’ என்று. எனது கேள்வியை அவர் 
எதிர்பார்க்கவில்லை போலும். 

சிறிது தயங்கி, ‘ஆமாம்.’என்றார். உடனே நான் ‘வாங்கிய 
கடனை படித்து முடித்து பணியில் அமர்ந்த பிறகோ 
அல்லது ஒரு ஆண்டு கழித்தோ கடன் பெற்ற

தொகையை வட்டியோடு 7 ஆண்டுகளில் திருப்பிக் 
கட்டவேண்டும் என உங்களுக்குத் தெரியாதா? 
வங்கி மூலம் படித்துவிட்டு நல்ல முறையில் வணிகம் 
செய்யும் நீங்கள், வங்கிக்கு ஒரு பைசா கூட கட்டாதது 
ஏன் ?’ என்றேன். 

அதற்கு அவர், நானோ அல்லது எனது சக அலுவலர்களோ 
எதிர்பார்க்காத பதிலை சொன்னார். ‘கட்டவேண்டும் என்பதை மறந்துவிட்டேன்’ என்று.

உடனே நான் குரலை உயர்த்தி, ‘என்ன இப்படி 
பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறீர்கள்? கடன் எங்கே 
வாங்குவது எனத் தெரிந்த உங்களுக்கு அதை 
திருப்பிக்கட்டவேண்டும் எனத் தெரியாதா? படித்து முடித்து 
தொழில் ஆரம்பித்தபோது கணக்கு தொடங்கினீர்களே, 
அப்போதுகூட  அதை இந்த வங்கியில் தொடங்கவேண்டும் 
என எண்ணம் வரவில்லையே உங்களுக்கு.

கைதூக்கிவிட்ட வங்கியையும், அதில் பெற்ற கடனையும் 
மறந்துவிட்டேன் என சொல்வது, வளர்த்து ஆளாக்கிய 
பெற்றோரை மறந்துவிட்டேன் என சொல்வது போல. 
இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாயில்லயா? நீங்கள் 
கல்லூரியில் கற்றுக்கொண்ட பாடம் இதுதானா? படித்தபின் வேலையில்லாமல் இருந்தால் கடனை திருப்பி கட்டுவது 
கடினம்தான்.

ஆனால் நீங்களோ ஏற்றுமதி வணிகத்தை இலாபகரமாக 
நடத்திக் கொண்டு  இருக்கிறீர்கள்.அப்படி இருக்கும்போது 
வாங்கிய கடனை திருப்பிக் கட்டாமல் இருப்பது எப்படி 
நியாயம் ஆகும்? 

உங்களைப்போல படிக்க கடன் வாங்கியவர்கள் எல்லோரும்  
திருப்பிக் கட்ட மறந்துவிட்டால் நாங்கள் எப்படி மற்ற 
தகுதியுள்ள மாணவர்களுக்கு உதவி செய்யமுடியும்?’ 
என நான் பொரிந்து தள்ளிவிட்டேன்.

நான் கோபமாக பேசுவதை பார்த்த எனது சக அலுவலர்கள் 
என்னை சாந்தமாக பேசும்படி கண்ணால் எனக்கு சைகை 
காட்டினார்கள்.

நான் சற்று உரக்க கோபமாக பேசியது, அதுவும் மற்ற 
இரு அலுவலர்கள் முன் பேசியது சங்கடத்தை 
உண்டாக்கியது போலும். சிறிது நேரம் அவர் பதில் 
ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தார்.

அந்த இறுக்கத்தைக் குறைக்க ‘சரி நடந்ததைப்பற்றி 
பேசவேண்டாம். முழுத் தொகையையும் எப்போது கட்டி 
கணக்கை முடிக்கிறீர்கள்?சொல்லுங்கள். 
இல்லாவிட்டால் நாங்கள் மேல் நடவடிக்கை 
எடுக்கவேண்டியிருக்கும்.’ என்றேன்.

அவர் உடனே எனது சார்பு மேலாளர் பக்கம் 
(அவர் உள்ளூர்க்காரர்) திரும்பி நான் கட்ட வேண்டியது 
எவ்வளவு எனச் சொல்லுங்கள்.’ என்றார். அவர் 
அந்த விவரத்தை கையிலேயே கொண்டு வந்திருந்ததால் 
உடனே அந்த தொகையை சொன்னார்.

அவர் ‘இதோ வருகிறேன்’. என்று கூறி வெளியே 
சென்றார். அவர் சென்றவுடன் எனது மேலாளரும், 
சார்பு மேலாளரும், ‘என்ன சார். இப்படி குரலை 
உயர்த்தி பேசிவிட்டீர்கள்? இங்கேயெல்லாம் இப்படி 
பேசமாட்டார்கள்?  நல்ல வேளை அவர் திருப்பி 
ஒன்றும் சொல்லவில்லை.’ என்றார்கள். 

‘நம் மீது நியாயம் இருக்கும்போது நாம் ஏன் 
பயப்படவேண்டும்.’ என்று சொல்லிக்கொண்டு 
இருக்கும்போதே, அவர் திரும்பவும் வங்கி காசோலை 
புத்தகத்துடன் உள்ளே வந்தார்,
 
வங்கிக்கு தரவேண்டிய தொகையை காசோலையில் 
எழுதி கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு. ‘சாரி. பணத்தை 
திருப்பிக் கட்டாதது  எனது தவறுதான்.’ என்று என்னிடம் 
சொல்லிவிட்டு நிற்காமல் உடனே கிளம்பிவிட்டார்.

எனது சக அலுவலர்கள் மட்டுமல்ல நானும் அவர் 
உடனே பணத்தை தருவார் என்று எதிர்பார்க்கவில்லை. 
‘சார். நீங்கள் அப்படி பேசியதால் அவர் கட்டமாட்டார் என நினைத்தோம்.ஆனால் அவர் உடனே பணத்தை 
கொடுத்ததுதான் ஆச்சரியமாக  இருக்கிறது.’ என்று 
சக அலுவலர்கள் சொன்னார்கள்.

அதற்கு நான் சொன்னேன். ‘எங்கள் ஊரில் சொல்வார்கள் 
“ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கற, பாடிக் கறக்கிற 
மாட்டை பாடிக் கற.” என்று. அதைத்தான் செய்தேன் 
இப்போது. ஆனால் இந்த முறையை 
எல்லோரிடமும் உபயோகிக்கக்கூடாது.’ என்றேன்.


தொடரும்