புதன், 13 மார்ச், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 36




ஒரு நாள் காலை எனது அறைக்கு, நான் எதிர்பாராத ஒருவர் வந்தார் என்று சொன்னேன் அல்லவா? அவர் வேறு யாருமல்ல. பெங்களூருவில் எங்கள் வங்கியில் வேலை பார்த்துவரும் எனது  நண்பர் தான்.

அவரைப் பார்த்ததும் ஆச்சரியத்தோடு வரவேற்று, என்ன திடீரென இந்த பக்கம்? LFC  (Leave Fare Concession) யில் வந்திருக்கிறீர்களா?  எனக் கேட்டேன். அதற்கு அவர் இல்லை.இல்லை. நான் வந்தது வேறொன்றுக்காக.நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் என்னை தவறாக எண்ணக்கூடாது. உண்மையான நிலை தெரியாமல் இங்கு வந்துவிட்டேன். என்று  தயக்கத்தோடு சொன்னார்.

அவர் சொல்லச்‌ சொல்ல எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. என்ன நடந்தது என்றால், நான் அந்த வாடிக்கையாளர் தந்த One Time Settlement திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததும், எப்படி என்னை ஒப்புக்கொள்ள வைப்பது என அவர் யோசித்திருக்கிறார்.

அவரது கெட்ட நேரம் அப்போது அவரை ஆதரித்த துணைப் போதுமேலாளர் திருவனந்தபுரத்திலிருந்து மாற்றலில் சென்றுவிட்டார். அப்போது தற்காலிகமாக  தலைமைப் பொறுப்பேற்றிருந்த உதவிப் பொது மேலாளர் ஏற்கனவே தற்காலிக மிகைப்பற்று (Overdraft) பற்றி பேசியபோதே கிளையில் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டதால், நிச்சயம் இதற்கு உதவமாட்டார் என்று அவருக்குத் தெரியும்.  

என்ன செய்வது என்ற அவர் குழப்பத்தில் இருந்தபோது, அவரது மருத்துவமனையில் பணியாற்றிய எங்கள் வங்கியின் முன்னாள் முதன்மை மேலாளர், அவருக்கு ஒரு யோசனை சொல்லியிருக்கிறார். அதாவது  எனக்கு வேண்டிய நண்பர் மூலம் எனக்கு அழுத்தம் கொடுத்தால் நான் ஒத்துக்கொள்வேன் என்று. மேலும் அவர் சொல்லியிருக்கிறார் தான் சென்னையில் சில ஆண்டுகள் பணியாற்றியபோது தனக்கு பழக்கமான நண்பர் ஒருவர் எனக்கும் நண்பர் என்றும் அவரை வரச்சொல்லி என்னிடம் பேசச் சொல்லலாம் என்றும் சொல்லியிருக்கிறார்.

அதற்கு அந்த வாடிக்கையாளர் அப்படியென்றால் நீங்கள் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.என்றதும், அந்த முன்னாள் முதன்மை மேலாளர் உடனே எனது நண்பர்  எங்கிருக்கிறார் என்று விசாரித்திருக்கிறார். அவர் பெங்களூருவில் இருக்கிறார் எனத்தெரிந்ததும், அவரைத் தொலைபேசியில் கூப்பிட்டு, உங்களால் ஒரு வேலை ஆகவேண்டியிருக்கிறது. எனவே இன்றிரவே பயணித்து இங்கு வரவும். மிகவும் அவசரம்.’ எனக் கூறியிருக்கிறார்.

அப்போது கூட அது என்ன வேலை என்று சொல்லவில்லை. கூப்பிட்டவர் பழைய நண்பர் என்பதாலும், அவசரம் என்று சொன்னதாலும், எனது நண்பரும் என்ன ஏது என்று கேட்காமல் அன்றிரவே பேருந்தில் பயணித்து நான்  இருந்த ஊருக்கு வந்திருக்கிறார். வந்ததும் தான் விவரத்தை சொல்லியிருக்கிறார்கள். அவர் என்னிடம் பேசி, அந்த வாடிக்கையாளரின் கோரிக்கையை ஏற்று அதை திருவனந்தபுரம் அலுவலகத்திற்கு சிபாரிசு செய்ய உதவ வேண்டுமென்று.

அப்போதே என் நண்பர் சொல்லிவிட்டாராம் அது தன்னால் முடியாது என்று. வந்ததுதான் வந்தோம் பார்த்துவிட்டுப் போகலாமே என்று என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.

அப்போது நான் கேட்டேன். என்ன இது? வாருங்கள் என்று சொன்னால் உடனே கிளம்பிவிடுவீர்களா? என்ன விஷயமாக வரச்சொல்கிறீர்கள் என கேட்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றவில்லையா? தெரிந்திருந்தால் நீங்கள் இப்படி அவஸ்தைப்பட்டு இரவு முழுதும் பயணித்து வந்திருக்க வேண்டியதில்லையே?’ என்றேன்.

அப்போது அவர் சொன்னார். சபாபதி. உங்களைப்பற்றி எனக்குத் தெரியும். இந்த விஷயத்தை என்னிடம் முன்னரே தொலைபேசியில் சொல்லியிருந்தால் நான் நிச்சயம் சொல்லியிருப்பேன். சபாபதி முடியும் என்றால் நிச்சயம் செய்வார். இல்லாவிட்டால் செய்யமாட்டார். எனவே நான் அங்கு வந்து எதுவும் ஆகப்போவதில்லை என்று. ஆனால் அவர் என்னிடம் எதுவும் சொல்லாமல் அவசரம் என்று சொன்னதால், உதவி தானே கேட்கிறார். போய்த்தான் வருவோமே என்று வந்தேன்.

இப்போது கூட இங்கு வருவதற்கு முன், சபாபதி எனக்கு Senior ஆனாலும் நல்ல நண்பர்.நண்பராயிருந்தாலும் எங்களுக்கிடையே ஒரு மெல்லிய திரை உண்டு. அதைத் தாண்டி நான் செல்ல விரும்பவில்லை. அவரும் விரும்பமாட்டார். அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும் எனவே இது பற்றி நான் அவரிடம் பேசமாட்டேன். ஆகையால் என்னால் இந்த விஷயத்தில் உதவ முடியாது என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன். எனவே என்னைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றார்.

அதற்கு நான், என்னை சிக்கலில் அவர் மாட்டிவிட்ட நிகழ்வு பற்றி சொல்லிவிட்டு சொன்னேன். சிலர் தேர்வில் சரியாக எழுதாமல் அந்த விடைத்தாள்களை துரத்தி சென்று அதை திருத்தும் ஆசிரியர் யார் என கண்டுபிடித்து அவரின் நண்பரின் மூலம் வெற்றிபெற தேவையான மதிப்பெண்கள் முயற்சிப்பார்களே அதுபோலத்தான் இவரும்.

இங்கே சரியாக வணிகம் செய்யாமல்,வங்கியில் வாங்கிய கடனை குறைத்துக் கட்ட/தள்ளுபடி செய்ய, எனது நண்பரான உங்கள் மூலம் முயற்சிப்பதிலிருந்தே இந்த வாடிக்கையாளர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும். இவர் ஒரு நேர்மையானவர் அல்லர்.

நல்ல வேளை இவருக்கு உதவுதாக நீங்கள் வாக்குறுதி கொடுக்கவில்லை. அப்படியே நீங்கள் வாக்குறுதி கொடுத்துவிட்டு, என்னிடம் சிபாரிசு செய்து இருந்தாலும் நான் என் நிலையை மாற்றிக் கொண்டிருக்கமாட்டேன். உங்களுக்கும் எனக்கும் வீணே மன வருத்தம் தான் ஏற்பட்டு இருக்கும். அப்படியில்லாமல் நீங்களே எனது கணிப்பு சரியாக இருக்கும் என சொல்லிவிட்டதால், உங்களை நான் ஏன் தப்பாக நினைக்கிறேன். நீங்கள் போய் வாருங்கள். என வழி அனுப்பி வைத்தேன்.

அதற்குப் பிறகும் அந்த வாடிக்கையாளர் நேரே வந்து சார் எப்படியாவது இதை முடித்துக் கொடுங்கள். என்று பலமுறை கேட்டும் நான் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன். நான் அந்த கிளையில் இருந்தவரை அவர் சொன்ன திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 

நான்  மாற்றலாகி வந்தவுடன் அவர் சொன்னாராம், நானும் எவ்வளவோ மேலாளர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் போல் பார்த்ததில்லை என்று.

நிச்சயம் அது பாராட்டு இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும் எனக்கு அது ஒரு வகையில் பாராட்டே!

இனி வேறொரு வாடிக்கையாளர் பற்றி அடுத்த பதிவில். 



தொடரும்

வெள்ளி, 8 மார்ச், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 35



என்னை சிக்கலில் மாட்டிவிட்ட வாடிக்கையாளர் அந்த நிகழ்வுக்குப் பிறகு வங்கிக்கு வரவேயில்லையில்லை என சொல்லியிருந்தேன் அல்லவா? ஆனால் அவர் எப்படி திரும்பவும் என்னை தொடர்புகொண்டார்.நேரடியாக அல்ல.

அவரது நிறுவனம் இலாபகரமாக நடக்காததால் ஒட்டுப்பலகைகள் தயாரிப்பை நிறுத்திவிட்டார். எந்த வித வருமானமும் இல்லாததால் வங்கிக்கு கட்டவேண்டிய தவணைத்தொகையையும் கட்டவில்லை.

அவரது கணக்கு வாராக் கடன்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால், கடனை அடைக்க சொல்லி வங்கியிலிருந்து கேட்பு அறிவிக்கை (Demand Notice) அனுப்பியதும், நிறுவனத்தை விற்று கடனை அடைப்பதாக பதில் எழுதியிருந்தார். 

அந்த சொத்துக்கள் யாவும் எங்கள் வங்கிக்கு அடமானமாக வைத்திருந்ததால் அவைகளை விற்றால்தான் கடனை அடைக்க முடியும் என்ற நிலை.எனவே அதை விற்பனை செய்வதற்கு வாங்குவோரைத் தேடிக்கொண்டிருந்தார்.  

அப்போது வங்கியில் ரிசர்வ் வங்கியின் வழி காட்டல் படி ஒரே தவணையில் கடனை அடைக்கும் (One Time settlement) திட்டத்தை கொண்டு வந்தார்கள். அதன்படி எந்த வாடிக்கையாளர் தொழிலில்  நஷ்டம் அடைந்து நிலுவையில் உள்ள பணத்தை கட்டமுடியாத நிலை ஏற்படுகிறதோ, அப்போது வங்கியை அணுகி தன்னால் கட்டக்கூடிய பணத்தை கட்ட ஒப்புக்கொண்டால் வங்கி அதை ஏற்றுக்கொள்ளலாம்.

அப்போது வங்கி அபராத வட்டியையோ அல்லது வட்டியையோ தள்ளுபடி செய்து பணத்தை பெற்றுக்கொண்டு கணக்கை முடிக்கலாம்.ஆனால் இது கணக்கிற்கு கணக்கு மாறுபடலாம். இதன் மூலம் வங்கியில் உள்ள நாள் பட்ட வாராக் கடன்களை  கழித்துவிட (To get rid of) முடியும்  ஆனால் வாடிக்கையாளரின் சொத்தின் மதிப்பு நிலுவையில் உள்ள கடன் மதிப்பிற்கு சரிசமமாக (அதாவது 100 விழுக்காடு) இருக்குமானால் வங்கி One Time settlement க்கு ஒப்புக்கொள்ளாது.

(இதற்கு மேல் இந்த திட்டம் பற்றி இங்கு விரிவாக பேசவேண்டாம் என நினைக்கிறேன்)

எங்கள் கிளையில் நான் அங்கு சென்று பணியில் சேருவதற்கு பல ஆண்டுகள் முன்பு, முதன்மை மேலாளராக இருந்தவர் பணி மூப்பு அடைந்து ஓய்வு பெற்றபின், அந்த வாடிக்கையாளரின்  தந்தை பெயரில் இருந்த அறக்கட்டளை நடத்தி வந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகியாக  சேர்ந்துவிட்டார். 

அவரின் யோசனைப்படி அந்த வாடிக்கையாளர் அவரது உதவியாளர் மூலம் One Time settlement க்கு தயாராக இருப்பதாக கடிதம் அனுப்பியிருந்தார்.

அவரது சொத்தின் மதிப்பு அன்றைய நிலையில் எவ்வளவு எனத் தெரியாததால், வங்கியின் மதிப்பீட்டாளரை (Valuer) அவரது சொத்தின் மதிப்பை ஆய்ந்து அறிக்கை தரச் சொன்னேன். 

அந்த மதிப்பீட்டாளர் மாநில அரசில் பொதுப்பணித்துறையில் துணை முதன்மை பொறியாளராக இருந்தவர். மிகவும் நேர்மையானவர் அவர் என்னைப் பார்க்க வந்தபோது, சார். இன்றைய சந்தை நிலவரப்படி அந்த சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என நினைக்கிறீர்களோ அதைத் தாருங்கள்.என்றேன்,

ஆனால் அவர் அந்த சொத்தை மதிப்பீடு செய்ய சென்றபோது அந்த வாடிக்கையாளர் சொன்னாராம், தயை செய்து மதிப்பைக் குறைவாகத் தாருங்கள்.அப்போதுதான் எனக்கு வங்கியில் சலுகை கிடைக்கும். என்று. அதற்கு அந்த மதிப்பீட்டாளர் சொல்லியிருக்கிறார். வங்கியில் சந்தை நிலவரப்படி மதிப்பிடுங்கள் என்கிறார்கள். ஆனால் நீங்களோ குறைத்து மதிப்பிடுங்கள் என்கிறீர்களே.நான் உண்மையான மதிப்பைத்தான் தருவேன். என உறுதியாக கூறியிருக்கிறார்.

அந்த சொத்துக்களின் மதிப்பு அறிக்கையைப் பார்த்துவிட்டு அவரது  One Time settlement கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன்.

அதற்குப் பிறகு ஒரு நாள் காலை எனது அறைக்கு, நான் எதிர்பாராத ஒருவர் வந்தார். அவர் வேறு யாருமல்ல. பெங்களூருவில் எங்கள் வங்கியில் வேலை பார்த்துவரும் எனது நண்பர் தான். அவர் எதற்காக வந்திருக்கிறார் எனக் கேட்டதும் அவர் சொன்ன பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்.


தொடரும்

ஞாயிறு, 3 மார்ச், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 34


அழைப்பு மணி ஒலி கேட்டு கதவைத் திறந்து பார்த்ததும், அங்கே நிற்பவரை கண்டு கோபமும், ஆச்சரியமும் ஏற்பட்டதன் காரணம் G.R Form தராமல் என்னை சிக்கலில் மாட்டிவிட்ட அதே வாடிக்கையாளர் அங்கே நின்று கொண்டிருந்ததுதான்.

நான் பணியில் இருந்தபோது எந்த வாடிக்கையாளரையும் எனது வீட்டிற்கு வரவழைத்து பேசியதில்லை. அவர்கள் எனது வீட்டிற்கு வருவதையும் விரும்பியதில்லை.

இவர் எதற்காக  வந்திருக்கிறார் என யோசித்துக்கொண்டே, வந்தவரை திருப்பி அனுப்பாமல் உள்ளே வாருங்கள். உட்காருங்கள். எனக் கூறிவிட்டு, என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்? இன்னும் 1 மணி நேரத்தில் கிளையில் இருந்திருப்பேனே. அங்கு வந்திருக்கலாமே. என்றேன்.

அவர் சிறிது நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்தார். எனக்கோ சீக்கிரம் குளித்துவிட்டு. காலை சிற்றுண்டியை உணவகத்தில் முடித்துவிட்டு அலுவலகம் செல்லவேண்டுமே என்ற பரபரப்பு.

அடுத்த நகரிலிருந்து சில அலுவலர்கள் காலை 8 மணி இரயிலில் வருவார்கள். நான் தனியாக இருந்ததால், வங்கியின் வெளிக்கதவின் சாவிகளை வாங்கி வைத்திருந்தேன். அதனால் சீக்கிரமே வீட்டை விட்டு கிளம்பி காலை 8 மணிக்குள் அவர்கள் வருவதற்குள் கிளைக்கு சென்றுவிடுவேன்.

என்னிடம் சாவிகள் இருந்ததால் சீக்கிரம் செல்லவேண்டுமே என நினைத்துக்கொண்டு, எதற்காக வீடு தேடி வந்தீர்கள்? என்ன வேண்டும் என சீக்கிரம் சொல்லுங்கள்.நான் குளித்து  முடித்து வங்கிக்கு கிளம்பவேண்டும். என்றேன்.

அவர் தயங்கித் தயங்கி, சார். ஒருவருக்கு 25,000 ரூபாய்க்கு காசோலை கொடுத்திருக்கிறேன். இன்று அது Clearing இல் வரும். தொழில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக வணிகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் எனது கணக்கில் பணம் இல்லை. நீங்கள் அந்த காசோலையை திருப்பி அனுப்பாமல் Pass செய்து  தற்காலிக மிகைப்பற்று (Overdraft) தந்தால் கண்டிப்பாக ஒரு வாரத்திற்குள் அதை கட்டி நேர் செய்துவிடுவேன். என்றார்.

எனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, உங்களுக்கு உதவி செய்து நான் பட்ட மன கஷ்டம் போதும். அதனால் இந்த முறை உங்களுக்கு உதவுவதாக இல்லை. ஏனெனில் நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுகிறவர் அல்லர். உங்கள் வேலை முடிந்ததும் வங்கியை மறந்துவிடுவீர்கள். எனவே நீங்கள் போகலாம்.’ என்றேன்.

அவர் திரும்பவும் அழாக்குறையாக, சார். நீங்கள் இந்த தடவை உதவி செய்யாவிட்டால் எனக்கு இந்த ஊரில் உள்ள மரியாதையே போய்விடும். அப்புறம் நான் தெருவில் தான் நிற்கவேண்டி இருக்கும். எனவே பழையதை நினைக்காமல் எனது மானத்தைக் காப்பாற்றுங்கள். நான் நிச்சயம் இந்த தடவை, ஒரே வாரம் என்று சொன்னாலும் சொன்னபடி அதற்குள் கட்டிவிடுவேன்.என்றார்.

ஐயா. நான் உதவி செய்யாவிட்டால் நீங்கள் தெருவில் நிற்கவேண்டும் என சொல்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு உதவி செய்தால் நான் வெளியே போகவேண்டியிருக்கும். எனவே என்னால் உதவி செய்யமுடியாது. நீங்கள் போகலாம். என்றேன் கண்டிப்பான குரலில்.

நான் அப்படி பேசியும் அவர் சிறிதும் கலங்காமல், சார் வேண்டுமானால் திருவனந்தபுரத்தில் உள்ள உங்கள் Boss இடம் இது பற்றி பேசி உங்களிடம் பேச சொல்லட்டுமா?’ என்றார்.

உடனே நான் கோபத்தோடு, உங்கள கணக்கில் தற்காலிக மிகைப்பற்று தருவதென்பது எனது விருப்புரிமை (Discretion). அது உங்களது கடந்தகால வணிக நடவடிக்கைகளைப் பார்த்து அனுமதிப்பது. நீங்கள் எங்கள் வங்கியின் சேர்மன் உட்பட யாரிடம் பேசினாலும் இந்த தடவை நான் கேட்பதாக இல்லை. நீங்கள் போகலாம். எனக் கூறி  வெளியே அனுப்பிவிட்டேன்.

நான் வங்கிக்கு வழக்கம் போல் 8 மணிக்கு சென்றுவிட்டேன். காலை 10 மணிக்கு எனக்கு திருவனந்தபுரம் அலுவலகத்தில் இருந்து தொலை பேசி அழைப்பு வந்தது. ஆனால் இந்த முறை பேசியவர் உதவிப் பொது மேலாளர். அவர் என்னிடம், அந்த வாடிக்கையாளர் பற்றிய விவரம் கேட்டார்.

நான் நடந்ததை சொன்னதும் அவர், அந்த வாடிக்கையாளர் தனக்கு தற்காலிக மிகைப்பற்று தர எனக்கு அறிவுரை சொல்லுமாறு அவரிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அதற்கு அவர் நான் ஒன்றும் செய்யமுடியாது. சபாபதி தான் முடிவெடுக்கவேண்டும் எனவே அவரிடமே பேசிக்கொள்ளுங்கள். என கூறிவிட்டதாகவும் சொல்லிவிட்டு, நீங்கள் எது உசிதமோ அதை செய்யுங்கள். எனக்கூறி தொலைபேசியை வைத்துவிட்டார்.  

நான் அப்படி கண்டிப்பாக பேசியும், அந்த வாடிக்கையாளர் துணைப் பொது மேலாளரை  தொடர்பு கொண்டிருக்கிறார். அன்றைய தினம் துணைப்போதுமேலாளர் ஊரில் இல்லாததால் வேறு வழியின்றி உதவிப் பொது மேலாளரை தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்  என பின்னர் அறிந்துகொண்டேன்.

நான் அன்று  Clearing இல் வந்த அந்த காசோலையை திருப்பி அனுப்ப சொல்லிவிட்டேன். அதற்குப்பிறகு அந்தக் வாடிக்கையாளர் வங்கிக்கு வரவேயில்லை. சரி தொல்லை விட்டது என எண்ணிக் கொண்டிருந்தபோது  திரும்பவும் அந்த வாடிக்கையாளர் என்னிடம் வந்தார். நேரடியாக அல்ல.



தொடரும்