புதன், 10 ஜூலை, 2013

அரசு நிறுவனங்கள் உண்மையிலேயே மக்களுக்கு உதவியாக இருக்கின்றனவா?




நேற்று (08-07-2013) காலை சென்னை முகப்பேரில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (Employees Provident Fund Organisation) சார்நிலை  வட்டார அலுவலகத்திற்கு (Sub Regional Office) செல்ல வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.

ஒரு தனியார் நிறுவனத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றிய எனது மகள், தனது வேலையை பணிதுறப்பு (Resignation) செய்துவிட்டு வெளி நாடு செல்லுமுன் அவளுக்கு வரவேண்டிய சேமிப்பு வைப்புத் தொகையையும், ஓய்வூதியத்தொகையையும் பெற, அவள் தான் பணிபுரிந்த நிறுவனத்தில் ஒரு விண்ணப்பம் கொடுத்து சென்றிருந்தாள்.

அந்த நிறுவனம்,அந்த விண்ணப்பத்தை சரி பார்த்து, தங்களின் சான்றொப்பத்துடன் (Attestation) என் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். அதோடு அவர்களது பணி தீர்ந்தது. சேமித்த பணத்தை திரும்பப்பெற நாம் தான் EPF அலுவலகத்தில் ஒப்புவிக்கவேண்டும். எனவே,என் மகளின் சார்பாக அதை கொடுக்க அந்த அலுவலகம் செல்லவேண்டியதாயிற்று.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், மய்ய அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் ஒரு அரசு நிறுவனம். அரசு நிறுவனங்கள் எப்படி இயங்கும் என்பது தெரியும் ஆதலால், எப்படி இந்த விண்ணப்பத்தை சேர்ப்பது, சேர்த்தால் எவ்வளவு நாட்களில்/மாதங்களில் வரவேண்டிய பணத்தைத் தருவார்கள் என்ற கவலை எனக்கு இருந்தது.

எங்கள் வங்கியில் முது நிலை மேலாளராக பணிபுரியும் நண்பர் திரு இரவீந்தரன் அவர்களிடம் சொன்னபோது, அவர் தானும் என்னுடன் வருவதாக கூறினார்.

இருவரும் காலை 10 மணிக்கு முன்பு அங்கு சென்றதும், அங்கு வாயிலில் நின்றுகொண்டிருந்த ஊழியர் ஒருவர் இன்முகத்தோடு வரவேற்று என்ன வேண்டும் என்று கேட்டார். அரசு அலுவலகத்தில் தந்த, அந்த வரவேற்பே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

நாங்கள் காரணத்தை சொன்னதும் அங்குள்ள இருக்கையில் அமர 
சொல்லிவிட்டு,  10 மணிக்கு விண்ணப்பத்தை தரலாம் என்றார். அதற்குள் என் நண்பர், ,நாம் இங்கு காத்திருப்பதை விட வட்டார வருங்கால வைப்பு நிதி 
ஆணையர் (Regional Provident Fund commissioner) அவர்களை சந்திக்கலாமே?’ என்றார்.

சரி. அப்படியே செய்வோம். என்றேன்.பிறகு அவர் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அவரது அவரை சந்திக்க சென்றோம். அவரது தனி உதவியாளர் எதற்காக வந்திருக்கிறோம் என கேட்டுவிட்டு உள்ளே செல்ல அனுமதித்தார்.

உள்ளே சென்றதும் எங்களை இன்முகத்தோடு வரவேற்று உட்கார சொல்லிவிட்டு என்ன வேண்டும்?’ கேட்டார் அந்த இளம் வயது ஆணையாளர். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு விஷயத்தை சொன்னதும் எங்கே அந்த விண்ணப்பத்தை கொடுங்கள் பார்ப்போம்?’ என்றார்.

விண்ணப்பத்தை கொடுத்ததும், எல்லா தகவல்களும் சரியாக தரப்பட்டு இருக்கிறதா என பார்த்துவிட்டு, பின் அவரது மடிக்கணினியிலும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த எனது மகளின் கணக்கையும் சரி பார்த்தார்.

பின்னர் எல்லாம் சரியாக இருக்கிறது. எனக் கூறி, அவரது உதவியாளரைக் கூப்பிட்டு, இதை சம்பந்தப்பட்ட பிரிவில் கொடுத்து, இவர்களுக்கு பெறுகை ஒப்பம் (Acknowledgement) பெற்று கொடுங்கள். என்றார். அதையெல்லாம் பிரமிப்போடு பார்த்துக்கொண்டு இருந்தோம் நானும் என் நண்பரும்.

பின்பு பேசிக்கொண்டு இருக்கும்போது சொன்னார். அவரது அலுவலகத்தில் வரும் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு எல்லாம் சரியாக இருந்தால் மூன்று நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும், ஒரு சில விண்ணப்பங்களுக்கு மட்டும் பட்டுவாடா செய்ய 10 நாட்கள் ஆவதாக சொன்னார். அது கூட விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் சரியாக இல்லாததன் காரணத்தால்தான் என்று சொன்னபோது நாங்கள் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டோம்.

அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றி சொல்லி, வெளியே வந்தபோது அவரது உதவியாளர் என்னிடம் பெறுகைஒப்பம் அட்டையைக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு அவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, வெளியே வந்தோம்.

வரும் வழியில் அந்த ஆணையர் தானே விண்ணப்பத்தை சரிபார்த்து ஆவன செய்தது பற்றியும், அந்த அலுவலகம் செயல்படுவது பற்றியும் பேசிக்கொண்டே வந்தோம்.

இது போன்று ஒவ்வொரு அலுவலகத்திலும் அலுவல்கள் செயல் பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்ற எண்ணம் அப்போது வந்தது உண்மை. .

சொன்னால் நம்பமாட்டீர்கள். மதியம் 12 மணிக்கு அந்த அலுவலகத்திலிருந்து எனக்கு வந்த தொலை பேசி செய்தியில் எனது மகளின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பணத்தைத் திருப்பித்தர ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாகவும்,நாளை (அதாவது இன்று) அல்லது மறுநாளுக்குள் என் மகளின் வங்கிக் கணக்கில் அந்த தொகை வரவு வைக்கப்படும் என்று அவர்கள் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை.

மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் போன்று மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணி துரித சேவை செய்யும் அரசு நிறுவனங்கள் இன்னும் பல இருக்கலாம். அவைகளின் எண்ணிக்கை அதிகமாகவேண்டும் என்பதுதான் எனது ஆசை.

இந்த நிகழ்வுக்குப் பின் ஒன்றை தெரிந்து கொண்டேன்.
நாம் நினைப்பதுபோல் எல்லா அரசு அலுவலகங்களும் இல்லை என்பதுதான் அது.

அப்படி நினைக்க காரணம் ஏற்கனவே BSNL லிலும் தென்னக இரயில்வேயிலும் பெற்ற அனுபவம் தான்!
     
பி.கு: வழக்கில் நாம் உபயோகப்படுத்தும் சில ஆங்கில சொற்களுக்கு சரியான தமிழ்ச்சொல் தெரியாதவர்களுக்கு அவை தெரியட்டுமே என்பதால் சில இடங்களில் அவைகளை கொடுத்திருக்கிறேன்.தெரிந்தவர்கள் பொறுத்தருள்க.



வெள்ளி, 5 ஜூலை, 2013

நினைவோட்டம் 64



கல்லூரியில் புகுமுக வகுப்பி‌ல் சேருவதற்கான விண்ணப்பத்தையும் கல்லூரியின் தகவல் தொகுப்பு அறிக்கை (Prospectus) யையும் அனுப்பும்படி அஞ்சல் செய்துவிட்டு காத்திருந்த போது, S.S.L.C. தேர்வு முடிவுகள் வெளியாயின.

நான் நன்றாக தேர்வு எழுதியிருந்ததால்,எனக்கு தேர்வின் முடிவு பற்றி எந்த வித பதற்றமோ கவலையோ மன இறுக்கமோ இல்லை. அப்போதெல்லாம் தேர்வின் முடிவுகள் நாளேடுளில்தான் வெளிவரும். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்களை மாவட்ட வாரியாக வெளியிட நாளேடுகள் இதற்கென்றே தனி இதழே வெளியிடுவார்கள்.

தேர்வின் முடிவுகளைப் பார்க்க (என்னுடையதை மட்டுமல்ல நண்பர்கள் மற்றும் என் உறவினர்களுடையதையும் பார்க்க) நாளேட்டில் அது வெளியான நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, எங்கள் ஊரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்த விருத்தாசலத்திற்கு எங்கள் ஊரை சேர்ந்த ஒருவருடன் சைக்கிளில் சென்றேன்.

(அப்போது எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. சைக்கிள் ஒட்டக் கற்றுக்கொண்ட அனுபவம் பற்றி பின் எழுதுவேன்))

விருத்தாசலத்தில் நாளேடு வாங்கி பார்த்தபோது நான் மட்டுமல்ல, எனது நண்பர்கள் அனைவருமே தேர்வில் வெற்றி பெற்றிருந்தோம். ஊருக்கு உடனே திரும்பி வந்து என் அப்பா அம்மாவிடம் அந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து, அவர்களது ஆசியை பெற்றுக்கொண்டேன்.

தேர்வு முடிவுகள் வந்த ஓரிரு நாட்களில் நான் விண்ணப்பித்திருந்த நான்கு கல்லூரிகளிலிருந்தும் விண்ணப்பமும் தகவல் தொகுப்பு அறிக்கையும் வந்திருந்தன. மதிப்பெண்கள் வரும் வரை காத்திருக்காமல் மற்ற விவரங்களை விண்ணப்பத்தில் நிரப்பி உடனே அனுப்பும்படி சொல்லியிருந்ததால், அதை என் அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்களிடம் காட்டி, எந்தெந்த கல்லூரிகளுக்கு முதலில் அனுப்பலாம் என கேட்டேன்.

முதலில் சென்னையில் உள்ள விவேகானந்தா கல்லூரி மற்றும் சென்னை கிறித்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம் என நினைத்திருந்தாலும், பிறகு சென்னை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என சொல்லிவிட்டார்கள் அண்ணனும் அப்பாவும்.

காரணம் அப்போது திருச்சியில் எனது பெரிய அண்ணன் 
திரு வே.மகாலிங்கம் அவர்கள் தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவிப்பொறியாளராக பணியாற்றிக்கொண்டு இருந்ததால், அவரது வீட்டில் தங்கி இருந்து படிக்கலாம் என முடிவெடுத்ததால்.

அப்போதெல்லாம் PUC யில், இப்போது Plus 2 இல் இருப்பதுபோல் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஒன்றாக படிக்கமுடியாது. இரண்டு பாடங்களும் A, B என வெவ்வேறு Group இல் இருக்கும்.A Group என்றால், கணிதமும் B Group என்றால், அறிவியலும் இருக்கும். ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

A Group எடுத்தால் பொறியியல் படிக்கலாம். B Group எடுத்தால் மருத்துவம்,பல் மருத்துவம்,  கால்நடை மருத்துவம் வேளாண் அறிவியல் போன்ற படிப்புகளை படிக்கலாம். இது Professional Courses என்று சொல்லப்படுகின்ற படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

மறு ஆண்டு மருத்துவம் படிக்க நினைத்ததால், திருச்சியில் இருந்த புனித வளவனார் கல்லூரிக்கும் (St.Joseph’s College) தேசிய கல்லூரிக்கும், (National College) B Group க்கு விண்ணப்பிக்கலாம் என முடிவெடுத்தபோது, இன்னொரு குழப்பம் தலை தூக்கியது.

A Group இல் கணிதம், இயற்பியல், வேதியல் மற்றும் இரண்டு விருப்பப் பாடங்கள் இருக்கும்.(Maths, Physical Sciences and 2 Optional subjects) B Group இல் தாவரவியல், விலங்கியல் மற்றும் இரண்டு விருப்பப் பாடங்கள் இருக்கும்.(Natural Science, Physical Sciences and 2 Optional subjects)

விருப்பப்பாடங்களாக, வணிகவியல் (Commerce), பொருளாதாரம் (Economics), தர்க்கவியல் (Logic), சிறப்புத்தமிழ் (Advanced Tamil), சிறப்பு ஆங்கிலம் (Advanced English) போன்றவைகள் இருந்தன. ஆனால் இந்த விருப்பப் பாடங்களை நம் விருப்பம்போல் தேர்ந்தெடுக்க முடியாது. கல்லூரி அவர்கள் விருப்பம் போல் இரண்டு பாடங்களை தேர்வு செய்து வைத்திருப்பார்கள்.அதைத்தான் நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். இங்கு தான் குழப்பம் வந்தது எந்த விருப்ப பாடங்கள் கொண்ட Group ஐ தேர்வு செய்யவேண்டும் என்பதில்.

கடைசியில் B Group இல் Natural Science, Physical Sciences, Commerce and Logic கொண்ட பிரிவை எனது அண்ணனின் அறிவுரைப்படி தேர்ந்தெடுத்து, இரண்டு கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்தேன்.

கல்லூரிக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்தில், தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பதிவு வைக்கப்பட்ட S.S.L.C புத்தகம், மாவட்ட கல்வி அலுவகத்திலிருந்து எங்கள் பள்ளிக்கு வந்துவிட்டது. தேர்வு எழுதியவர்கள் நேரில் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

(அப்போதெல்லாம் 9 ஆம் வகுப்பில் இருந்து 11 ஆம் வகுப்பு வரை பெற்ற மதிப்பெண்கள் ஒரு புத்தகத்தில் பதிந்து தருவார்கள். இப்போது போல் தனித்தாளில் தருவதில்லை.)

அதற்குள் திருச்சி புனித வளவனார் கல்லூரியிலிருந்து S.S.L.C புத்தகம் பள்ளிக்கு அனுப்பப்பட்டுவிட்டதால், உடனே அதை வாங்கிக்கொண்டு கல்லூரிக்கு வருமாறு அஞ்சலட்டை வந்தது.  

கல்லூரிக்கு செல்லப்போகிறோம் என்ற சந்தோஷத்துடனும், எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறோமோ என ஆவலுடனும், S.S.L.C புத்தகம் பெற எனது பள்ளிக்கு சென்றேன்.




நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி