வெள்ளி, 5 ஜூலை, 2013

நினைவோட்டம் 64கல்லூரியில் புகுமுக வகுப்பி‌ல் சேருவதற்கான விண்ணப்பத்தையும் கல்லூரியின் தகவல் தொகுப்பு அறிக்கை (Prospectus) யையும் அனுப்பும்படி அஞ்சல் செய்துவிட்டு காத்திருந்த போது, S.S.L.C. தேர்வு முடிவுகள் வெளியாயின.

நான் நன்றாக தேர்வு எழுதியிருந்ததால்,எனக்கு தேர்வின் முடிவு பற்றி எந்த வித பதற்றமோ கவலையோ மன இறுக்கமோ இல்லை. அப்போதெல்லாம் தேர்வின் முடிவுகள் நாளேடுளில்தான் வெளிவரும். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்களை மாவட்ட வாரியாக வெளியிட நாளேடுகள் இதற்கென்றே தனி இதழே வெளியிடுவார்கள்.

தேர்வின் முடிவுகளைப் பார்க்க (என்னுடையதை மட்டுமல்ல நண்பர்கள் மற்றும் என் உறவினர்களுடையதையும் பார்க்க) நாளேட்டில் அது வெளியான நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, எங்கள் ஊரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்த விருத்தாசலத்திற்கு எங்கள் ஊரை சேர்ந்த ஒருவருடன் சைக்கிளில் சென்றேன்.

(அப்போது எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. சைக்கிள் ஒட்டக் கற்றுக்கொண்ட அனுபவம் பற்றி பின் எழுதுவேன்))

விருத்தாசலத்தில் நாளேடு வாங்கி பார்த்தபோது நான் மட்டுமல்ல, எனது நண்பர்கள் அனைவருமே தேர்வில் வெற்றி பெற்றிருந்தோம். ஊருக்கு உடனே திரும்பி வந்து என் அப்பா அம்மாவிடம் அந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து, அவர்களது ஆசியை பெற்றுக்கொண்டேன்.

தேர்வு முடிவுகள் வந்த ஓரிரு நாட்களில் நான் விண்ணப்பித்திருந்த நான்கு கல்லூரிகளிலிருந்தும் விண்ணப்பமும் தகவல் தொகுப்பு அறிக்கையும் வந்திருந்தன. மதிப்பெண்கள் வரும் வரை காத்திருக்காமல் மற்ற விவரங்களை விண்ணப்பத்தில் நிரப்பி உடனே அனுப்பும்படி சொல்லியிருந்ததால், அதை என் அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்களிடம் காட்டி, எந்தெந்த கல்லூரிகளுக்கு முதலில் அனுப்பலாம் என கேட்டேன்.

முதலில் சென்னையில் உள்ள விவேகானந்தா கல்லூரி மற்றும் சென்னை கிறித்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம் என நினைத்திருந்தாலும், பிறகு சென்னை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என சொல்லிவிட்டார்கள் அண்ணனும் அப்பாவும்.

காரணம் அப்போது திருச்சியில் எனது பெரிய அண்ணன் 
திரு வே.மகாலிங்கம் அவர்கள் தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவிப்பொறியாளராக பணியாற்றிக்கொண்டு இருந்ததால், அவரது வீட்டில் தங்கி இருந்து படிக்கலாம் என முடிவெடுத்ததால்.

அப்போதெல்லாம் PUC யில், இப்போது Plus 2 இல் இருப்பதுபோல் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஒன்றாக படிக்கமுடியாது. இரண்டு பாடங்களும் A, B என வெவ்வேறு Group இல் இருக்கும்.A Group என்றால், கணிதமும் B Group என்றால், அறிவியலும் இருக்கும். ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

A Group எடுத்தால் பொறியியல் படிக்கலாம். B Group எடுத்தால் மருத்துவம்,பல் மருத்துவம்,  கால்நடை மருத்துவம் வேளாண் அறிவியல் போன்ற படிப்புகளை படிக்கலாம். இது Professional Courses என்று சொல்லப்படுகின்ற படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

மறு ஆண்டு மருத்துவம் படிக்க நினைத்ததால், திருச்சியில் இருந்த புனித வளவனார் கல்லூரிக்கும் (St.Joseph’s College) தேசிய கல்லூரிக்கும், (National College) B Group க்கு விண்ணப்பிக்கலாம் என முடிவெடுத்தபோது, இன்னொரு குழப்பம் தலை தூக்கியது.

A Group இல் கணிதம், இயற்பியல், வேதியல் மற்றும் இரண்டு விருப்பப் பாடங்கள் இருக்கும்.(Maths, Physical Sciences and 2 Optional subjects) B Group இல் தாவரவியல், விலங்கியல் மற்றும் இரண்டு விருப்பப் பாடங்கள் இருக்கும்.(Natural Science, Physical Sciences and 2 Optional subjects)

விருப்பப்பாடங்களாக, வணிகவியல் (Commerce), பொருளாதாரம் (Economics), தர்க்கவியல் (Logic), சிறப்புத்தமிழ் (Advanced Tamil), சிறப்பு ஆங்கிலம் (Advanced English) போன்றவைகள் இருந்தன. ஆனால் இந்த விருப்பப் பாடங்களை நம் விருப்பம்போல் தேர்ந்தெடுக்க முடியாது. கல்லூரி அவர்கள் விருப்பம் போல் இரண்டு பாடங்களை தேர்வு செய்து வைத்திருப்பார்கள்.அதைத்தான் நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். இங்கு தான் குழப்பம் வந்தது எந்த விருப்ப பாடங்கள் கொண்ட Group ஐ தேர்வு செய்யவேண்டும் என்பதில்.

கடைசியில் B Group இல் Natural Science, Physical Sciences, Commerce and Logic கொண்ட பிரிவை எனது அண்ணனின் அறிவுரைப்படி தேர்ந்தெடுத்து, இரண்டு கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்தேன்.

கல்லூரிக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்தில், தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பதிவு வைக்கப்பட்ட S.S.L.C புத்தகம், மாவட்ட கல்வி அலுவகத்திலிருந்து எங்கள் பள்ளிக்கு வந்துவிட்டது. தேர்வு எழுதியவர்கள் நேரில் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

(அப்போதெல்லாம் 9 ஆம் வகுப்பில் இருந்து 11 ஆம் வகுப்பு வரை பெற்ற மதிப்பெண்கள் ஒரு புத்தகத்தில் பதிந்து தருவார்கள். இப்போது போல் தனித்தாளில் தருவதில்லை.)

அதற்குள் திருச்சி புனித வளவனார் கல்லூரியிலிருந்து S.S.L.C புத்தகம் பள்ளிக்கு அனுப்பப்பட்டுவிட்டதால், உடனே அதை வாங்கிக்கொண்டு கல்லூரிக்கு வருமாறு அஞ்சலட்டை வந்தது.  

கல்லூரிக்கு செல்லப்போகிறோம் என்ற சந்தோஷத்துடனும், எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறோமோ என ஆவலுடனும், S.S.L.C புத்தகம் பெற எனது பள்ளிக்கு சென்றேன்.
நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி 

16 கருத்துகள்:

 1. சரியான நேரத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே...!

  ஆவலுடன் தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்வதற்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 2. //அப்போதெல்லாம் 9 ஆம் வகுப்பில் இருந்து 11 ஆம் வகுப்பு வரை பெற்ற மதிப்பெண்கள் ஒரு புத்தகத்தில் பதிந்து தருவார்கள்.//

  I remember one also had to give two identification marks. I remember one of my friend told me he failed, just by one number.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். அந்த S.S.L.C புத்தகத்தின் முதல் பக்கத்தில் பெயரோடு, தந்தை பெயர், மதம், சாதி மற்றும் இரு அடையாளக் குறிகளையும் பதிவார்கள்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 4. பதில்கள்
  1. தொடர்வதற்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 5. மலரும் நினைவுகள் அருமை அய்யா.தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. தொடர்வதற்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!நிச்சயம் நான் பெற்ற மதிப்பெண்கள் பற்றி அடுத்த பதிவில் எழுதுவேன். ஆனால் அது ஒன்றும் Magical Figure அல்ல!

   நீக்கு
 8. சுவாரஏயமாகப் போகும்போது தொடரும் போட்டு விட்டீர்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! ‘தொடரும்’ எனப் போட்டால்தானே சுவாரஸ்யம் கூடும்!

   நீக்கு
 9. // அப்போதெல்லாம் தேர்வின் முடிவுகள் நாளேடுளில்தான் வெளிவரும். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்களை மாவட்ட வாரியாக வெளியிட நாளேடுகள் இதற்கென்றே தனி இதழே வெளியிடுவார்கள். //

  உங்கள் வரிகள் என்னையும், எனது S.S.L.C ரிசல்ட்டை பேப்பரில் பார்த்த அந்த சந்தோஷமான நாளுக்கு, அழைத்துச் சென்றுவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே !

   நீக்கு