விழுப்புரத்திலிருந்து திருச்சி
செல்லும் ‘பாசஞ்சர்’ இரயில் மதியம் சுமார் 1.00 மணி வாக்கில் விருத்தாசலம் டவுன் இரயில் நிலையம் வந்தபோது, அதில் ஏறி அமர்ந்து எனது கல்லூரி வாழ்க்கைக்கான முதல் பயணத்தை
தொடங்கினேன்.
கல்லூரியில் சேர அனுமதி சீட்டு
பெறப் போகிறோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் எப்படி திருச்சியில் அண்ணனின் வீட்டைக்
கண்டுபிடித்து சேரப்போகிறோமோ என்ற பயமும் இருந்தது.
இடையில் இலால்குடி இரயில்
நிலையத்தில் வண்டி நின்றபோது, அந்த ஊரில் தமிழாசிரியராக பணிபுரிந்து கொண்டு இருந்த என் அத்தான் திரு கோ.
நடேசன் அவர்கள் காபி கொண்டு
வந்து கொடுத்தார்கள். அதோடு திருச்சிக்கு நான் முதன் முதலாக செல்வதால், அப்போது திருச்சியில் ஆவண வரைவாளர் (Draftsman) படிப்பை படித்துக்கொண்டு இருந்த என் அண்ணனின் மைத்துனரும்,
என் மாமா மகனுமான திரு சீனிவாசன்
அவர்கள் என்னை அழைத்துப்போக இரயில் சந்திப்புக்கு வருவார் என்ற நல்ல
செய்தியையும் சொன்னபோது எனது கவலையும் பயமும் உடனே பறந்தோடிவிட்டன.
மாலை 6 மணி அளவில்
திருச்சி சந்திப்பை அடைந்தபோது, என் மாமா மகன் என்னை வரவேற்றார். என்னிடம் ஒரே ஒரு பை மட்டும் இருந்ததால்
அவரது சைக்கிளிலேயே அண்ணன் வீட்டிற்கு சென்றேன்.
வே.நடனசபாபதி
என் அண்ணன் வீடு, திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்
அருகே இருந்த மின் வாரிய துணை மின் நிலைய வளாகத்தில் இருந்தது. அவர் மின்
வாரியத்தில் அப்போது உதவிப் பொறியாளராக இருந்ததால், அவரது
பொறுப்பில் இருந்த அந்த மின் வாரிய துணை மின் நிலைய வளாகத்திலேயே அவருக்கு வீடு (Quarters) ஒதுக்கப்பட்டு இருந்தது.
திருச்சி சந்திப்பிலிருந்து
மிளகுப்பாறை வழியாக என் அண்ணனின்
Quarters ஐ அடைந்தோம்.போகும் வழியில் இரு பக்கமும் வேலிகாத்தான் முட்செடிகள்தான்.
வழியில் எந்தவித மனித நடமாட்டமும் இல்லை. ஆனால் சமீபத்தில் திருச்சி சென்றபோது, அந்த வழியாக போனபோது, அந்த இடமே மாறிப்போய் அருகருகே நெருக்கமாக வீடுகள் எழும்பியிருந்ததைப்
பார்த்து ஆச்சரியப்பட்டேன்.)
மறுநாள் காலை புனித வளவனார்
கல்லூரிக்கு (St.Joseph’s college) என்னை அழைத்து செல்ல அண்ணன் ஒருவரை
ஏற்பாடு செய்திருந்தார். அண்ணன் அன்று வெளியூர் செல்ல இருந்ததால், எங்கள் இருவரையும் அவரது ஜீப்பில் ஏற்றி சென்று திருச்சி சந்திப்பு அருகே
விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
அங்கிருந்து கல்லூரி இருந்த Main Guard Gate செல்ல அந்த நண்பருடன்
TST என சுருக்கமாக அழைக்கப்பட்ட Trichy Srirangam
Transport இன் நகரப்
பேருந்தில் (Town Bus) பயணித்தோம். எனக்கு அதுதான் முதல் Town Bus பயணம். (இந்த TST யை மாணவர்கள் அப்போது தள்ளு சார் தள்ளு என்று
செல்லமாக சொல்வதுண்டு.)
பேருந்து நிறுத்தத்தில் இறங்கி,
கல்லூரியை நோக்கி நடந்தோம்.கல்லூரி அருகே நெடிதுயர்ந்து நின்ற மாதா கோவிலை
பிரமிப்போடு பார்த்துக்கொண்டே, அந்த நண்பருடன் புனித வளவனார் பள்ளி வாயில் வழியாக உள்ளே
நுழைந்தேன்.
மாத கோவிலை அடுத்து வடபுறத்தில்
Fathers’ Lodge எனப்படும் அருட் தந்தைகள் வசிப்பிடமும், அதன் அருகே பள்ளியும், அதற்கு வடக்கே கல்லூரியும் இருப்பது அங்கு சென்றவர்களுக்கு தெரியும். அப்போது
பள்ளிக்கு முன் ஒரு வாசலும், கல்லூரியில் இருந்த புகழ்பெற்ற Lawley Hall அருகே ஒரு வாசலும், கடைசியில்
கல்லூரி மைதானம் அருகே ஒரு வாசலும் இருந்தன.
புதிய Admission பெற வந்திருந்த மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் Fathers’ Lodge அருகே குழுமியிருந்ததால், அந்த இடமே திருவிழாக்கோலம் களை கட்டியிருந்தது.
கல்லூரியிலிருந்து அஞ்சலட்டை
கிடைக்கப் பெற்றவர்கள் வரிசையில் நின்று தாங்கள் அனுப்பிய விண்ணப்பத்தைப் பெற்று
அதில் S.S.L.C யில் பெற்ற மதிப்பெண்களை
குறிக்குமாறு கல்லூரி ஊழியர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
நானும் வரிசையில் நின்று நான் முன்பு அனுப்பியிருந்த விண்ணப்பத்தை பெற்று
அதில் என்னுடைய மதிப்பெண்களை பதிந்து அந்த ஊழியரிடம் காண்பித்தேன். அவர் என்னிடம் ‘அருகில் உள்ள அறையில் கல்லூரித் தலைவர் (Principal) உள்ளார். நீங்கள் வரிசையில் நின்று உள்ளே அவர் அழைக்கும்போது நீங்கள்
மட்டும் சென்று உங்கள் விண்ணப்பத்தையும் S.S.L.C புத்தகத்தையும் காண்பியுங்கள். உங்களுடன் வந்தவர்கள் வெளியே காத்திருக்கலாம்.’ என்றார்.
நானும் வரிசையில் நின்று என் முறை
வரும் வரை பதட்டத்தோடு காத்திருந்தேன். எனக்கு முன்பு இருந்தவர் உள்ளே சென்று முக மலர்ச்சியோடு
வருவதை பார்த்துக் கொண்டிருந்தபோது, ‘Yes. Come in.’ என்ற கம்பீரக் குரல் கேட்டு உள்ளே தயக்கத்தோடு நுழைந்தேன்.
நினைவுகள்
தொடரும்
இனிய நினைவோட்ட பயணம்... "கண்டிப்பை" அறிய ஆவலுடன்...
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
பதிலளிநீக்குஆஹா, மிரட்டும் வாத்தியும் நடுங்கும் பையனும்? ஓநாய்க்கு முன் ஆட்டுக்குட்டி? காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நான் நடுங்கியது உண்மை. ஆனால் கல்லூரித் தலைவர் என்ன செய்தார் என அறிய காத்திருங்கள்!
நீக்குஏதோ மர்ம நாவல் மாதிரில்ல போகுது? தொகுத்து புத்தகமா போடுங்க. பிச்சிக்கிட்டு போவும் :)
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!
பதிலளிநீக்குநினைவோட்டம் ரசிக்கவைக்கிறது ..!
பதிலளிநீக்குவருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
நீக்குDo you still remember how much was the train ticket from your place to Trichi ? When I first went to Madras the train ticket (Senkottai fast passenger) from Mayuram to Madras was 12.00 Rs, in 1981. I remember, I met a boy of my age, he asked me to buy a half ticket for him.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!. விருத்தாசலத்திலிருந்து திருச்சிக்கு பாசஞ்சர் இரயில் கட்டணம் இரண்டு ரூபாய் என நினைக்கிறேன்.அப்போது விருத்தாசலத்திலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் இரயில் கட்டணம் வெறும் 5 ரூபாய்கள் மட்டும் தான்.
நீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/aged-persons-in-blogs.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தகவலுக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
பதிலளிநீக்குவலைச்சரம் மூலம் வந்தேன். வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநான் பிறந்த ஊர் ஸ்ரீரங்கம் என்பதால் உங்கள் நினைவோட்டங்களை ரசிக்க முடிகிறது. எங்கள் மாமாக்கள் இந்த TST பேருந்துகள் பற்றி சொல்லியிருக்கிறார்கள். (தள்ளு ஸார் தள்ளு) TVS பேருந்துகள் வந்தவுடன் இந்த ஸ்லோகன் தள்ள வேண்டாம் ஸார் என்று மாறிவிட்டதாக மாமா சொல்லுவார்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இரஞ்சனி நாராயணன் அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் TVS பேருந்துகள் பற்றி ‘தள்ளவேண்டாம் சார்’ என சொன்னதுண்டு.
நீக்குபசுமை நிறைந்த நினைவுகள் சுவாரசியமாக சொல்கிறீர்கள்.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!
நீக்கு// திருச்சி சந்திப்பிலிருந்து மிளகுப்பாறை வழியாக என் அண்ணனின் Quarters ஐ அடைந்தோம்.போகும் வழியில் இரு பக்கமும் வேலிகாத்தான் முட்செடிகள்தான். வழியில் எந்தவித மனித நடமாட்டமும் இல்லை. ஆனால் சமீபத்தில் திருச்சி சென்றபோது, அந்த வழியாக போனபோது, அந்த இடமே மாறிப்போய் அருகருகே நெருக்கமாக வீடுகள் எழும்பியிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.) //
பதிலளிநீக்குஇப்போது அந்த பகுதியே முற்றிலும் மாறிவிட்டது. அந்த பகுதியில் புதிய கலெக்டர் அலுவலகம், அரசு போக்குவரத்துக் கழகம், மருத்துவக் கல்லூரி , செவிலியர் கல்லூரி என்று நிறைய கட்டிடங்கள் வந்துவிட்டன.
// இந்த TST யை மாணவர்கள் அப்போது தள்ளு சார் தள்ளு என்று செல்லமாக சொல்வதுண்டு.//
அந்த கம்பெனி பேருந்துகள் நடுவழியில் அடிக்கடி நின்று விடும். ஸ்டார்ட் ஆகும்வரை பயணிகள் பஸ்சைவிட்டு இறங்கி தள்ளுவார்கள். அதுதான் தள்ளு சார் தள்ளு TST. இந்த கம்பெனியில்தான் நம்ப சிவாஜி கணேசன் கொஞ்சநாள் மெக்கானிக் வேலை பார்த்தார்.
// கல்லூரியிலிருந்து அஞ்சலட்டை கிடைக்கப் பெற்றவர்கள் வரிசையில் நின்று தாங்கள் அனுப்பிய விண்ணப்பத்தைப் பெற்று அதில் S.S.L.C யில் பெற்ற மதிப்பெண்களை குறிக்குமாறு கல்லூரி ஊழியர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். //
அந்த காலத்தில் அந்த கல்லூரியும் பள்ளியும் கண்டிப்புக்கு பெயர் போனவை. நான் அங்கு படிக்கவில்லை.
உங்கள் பதிவு எங்கள் திருச்சியைப் பற்றியது என்பதால் கொஞ்சம் அதிகமாக எழுதி விட்டேன். மன்னிக்கவும்.!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! திருச்சி உங்கள் ஊர் என்பதால் அதைப்பற்றி அதிகம் எழுத நினைப்பதில் தவறில்லை. உங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்பது உண்மை
நீக்குஉங்களது நினைவோட்டம் படித்தேன். வலைச்சரம் பார்த்து இங்கு வந்தேன். நினைவோட்டத்தின் காலம் புரியவில்லை. உங்கள் ப்ரொஃபைல் பார்த்து வயது தெரிந்து கொள்ளமுடியவில்லை. வயது முதிர்ந்தவர்களுக்குக் கை கொடுப்பது வலையில் எழுத பழைய நினைவுகளே. நானும் விதி விலக்கல்ல. பள்ளி நாட்கள் என்ற தலைப்பில் , வெகு காலம் கழிந்தபிறகு என் பள்ளிக்குச் சென்றுவிட்டு வந்தபிறகு எழுதினேன். நான் 1954-ல் SSLC தேர்வானேன்.
பதிலளிநீக்குgmbat1649.blogspot.in/2011/12/blog-post_26.html நினைவுகள் சுகமானவைதானே.
முதல் வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே. 1960 இல் ஜூன் திங்களில் கல்லூரியில் சேர சென்றபோது நடந்த நிகழ்வுகளைத்தான் எழுதியுள்ளேன். நான் S.S.L.C எழுதிய ஆண்டு 1960. இதிலிருந்தே எனது அகவையைத் தெரிந்துகொள்ளலாம்.தங்கள் பதிவை அவசியம் படிப்பேன். ‘நினைவுகள் சுகமானவை.’ என்ற உங்கள் கருத்து தான் என் கருத்தும்.
நீக்குவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆண்டுகள் பல கடந்த பின்னும்,சின்னச் சின்ன நிகழ்வுகளைக் கூட நினைவில் கொணர்ந்து எழுதுவது பிரமிக்க வைக்கிறது
அருமையான நினைவுகள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
நீக்குதொடர்பதிவு அழைக்கிறார் குட்டன் அவர்கள்...!
பதிலளிநீக்குவிசிட் : http://kuttikkunjan.blogspot.in/2013/07/blog-post_24.html
தகவலுக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்கு