செவ்வாய், 30 ஜூலை, 2013

நினைவோட்டம் 67

புகுமுக வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை, கல்லூரித் தலைவர் பெற்றுக்கொண்டிருந்த அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த நான், உள்ளே வரச்சொன்ன கம்பீரக் குரல் கேட்டு தயக்கத்தோடு நுழைந்தேன்

அங்கு இருந்த பெரிய மேசை அருகே இருக்கையில், ஆஜானுபாகுவான தோற்றத்தில் தும்பைப்பூ போன்ற தூய வெண்ணிறத்தில் மேல் அங்கி (Gown) உடுத்தி, இடுப்பில் சிகப்பு வண்ணத்தில் நாடா அணிந்து  சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார் கல்லூரி முதல்வர். (அவர் மதிப்பிற்குரிய அருட் தந்தை எரார்ட் 
(Rev Fr Ehrhart SJ) என பின்னர் தெரிந்துகொண்டேன்.)

அவரைப் பார்த்ததுமே அவர் வெளி நாட்டவர் என தெரிந்தது. அங்கு செல்லும் வரை எனக்குத் தெரியாது அந்த கல்லூரியின் முதல்வர் ஒரு வெளிநாட்டவராய் இருப்பார் என்று.

என்னைப் பார்த்ததும் ‘Come on my dear boy’ என்று அவர் அன்போடு அழைத்த போதும், எனக்குள் இருந்த பயம் இன்னும் அதிகமாயிற்று. காரணம் அவரோ ஒரு வெளிநாட்டுக்காரர்.அதுவரை நான் பள்ளியில் ஆங்கிலத்தை ஒரு 
பாடமாக எடுத்துப் படித்திருந்தாலும் தமிழ் வழிக் கல்வியில் படித்திருந்ததால், ஆங்கிலத்தில் பேசிப் பழக்கமில்லை. அவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் 
எப்படி ஆங்கிலத்தில் பதில் சொல்வது என்று  நினைத்தபடியே கதவருகேயே 
நின்றேன்.

அதற்குள் வெளியே இருந்தவர் நான் தயங்கி கதவருகேயே நிற்பதைப் பார்த்து. 
உள்ளே போய் விண்ணப்பத்தைக் கொடுங்கள். என்றார். தயங்கி உள்ளே சென்று முதல்வரிடம் எனது விண்ணப்பத்தை தந்தேன். எனது மதிப்பெண்களைப் 
பார்த்துவிட்டு முகத்தில் புன்னகை தவழ எந்த Group வேண்டும்?’ என ஆங்கிலத்தில் கேட்டார். நான் ஒரே வரியில் ’Science Group” என்றதும், ஏன் கணக்கில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறீர்களே? Maths Group எடுத்துக்கொள்ளலாமே?’ என்றதும், எனக்கு திருப்பி எப்படி பதில் சொல்வதென தெரியவில்லை.

பிறகு திக்கித்திணறி ‘I want to study M.B.B.S.’ என்றேன். உடனே அவர் 
புன்முறுவலோடு, ‘O.K. You will receive the admission card in due course.’ 
என சொல்லிவிட்டு எனது விண்ணப்பத்தில் கையொப்பமிட்டார்.

மிக்க மகிழ்ச்சியோடு ‘Thanks sir.’ என்றேன்.உடனே அவர் சிரித்துக்கொண்டே 
'Don’t say Sir. Say Father.’ என்றார். ’Yes Father.’ என சொல்லிவிட்டு  தேர்வில் வெற்றிபெற்றது போன்ற உணர்வோடு வெளியே வந்தேன்.

பயந்துகொண்டே உள்ளே சென்ற என்னை, பள்ளியில் படித்து வரும் மாணவனுக்கு தயக்கம் இருக்கும் என்பதை உணர்ந்து, மதிப்பிற்குரிய  அருட் தந்தை எரார்ட் அவர்கள் சிரித்தமுகத்தோடு உள்ளே அழைத்ததையும், அன்போடு பேசி நான் கேட்ட Group ஐ தந்ததையும், 53 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நினைக்கும்போது, அளவில்லா மகிழ்ச்சியைத் தந்த அந்த நிகழ்வு, ஏதோ நேற்றுதான் நடந்ததுபோல் இருக்கிறது.  

வெளியே காத்துக்கொண்டிருந்த, என்னை அழைத்து வந்த நண்பரிடம், கல்லூரியில் சேர இடம் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை சொல்லிவிட்டு, கல்லூரி முதல்வரை Sir’ என அழைத்ததையும், அதற்கு அவர் Father’ என அழைக்க வேண்டும் என சொன்னதையும் சொன்னேன்.

அதற்கு அவர் சொன்னார். பாதிரியார்களை Father என்றுதான் அழைக்கவேண்டும். உங்கள் ஊரில் Church இல்லையா? இருந்திருந்தால் தெரிந்திருக்குமே. என்றார். 

எங்கள் ஊரில் Church இருக்கிறது. ஆனால் நான் அங்கு போனதில்லையால் எனக்கு அதைப்பற்றித் தெரியவில்லை. மேலும் எனக்கு நெருங்கிய வகுப்புத்தோழனே ஒரு கிறித்துவர் தான். ஆனால் இதைப்பற்றியெல்லாம் பேசியதில்லை. என்றேன்.

பிறகு அவர் என்னை என் அண்ணன் வீடு வரை அழைத்து சென்று விட்டுவிட்டு திரும்பிவிட்டார்.அன்று மாலை அண்ணன் Camp இல்  திரும்பியவுடன் அவரிடம் கல்லூரியில் இடம் கிடைத்ததை சொல்லிவிட்டு,  மறு நாள் காலை இரயிலில் கிளம்பி விருத்தாசலம் வந்து ஊர் திரும்பிவிட்டேன்.  

ஊருக்கு வந்து அப்பாவிடம் செய்தியை சொன்னபோது சந்தோஷப்பட்டார்கள். நான்  அதுவரை அரைக் கால்சட்டையைத்தான் அணிந்திருந்தேன். கல்லூரிக்கு Pant அணிந்து செல்ல வேண்டும் என்பதால், என் அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்கள், Pant க்கு  துணி வாங்கி தைப்பதற்கு  அளவு கொடுக்க  என்னை விருத்தாசலம் அழைத்து சென்றார்.

அங்கு மாப்பிள்ளை செட்டியார் கடை என அழைக்கப்பட்ட துணிக்கடையில் இரண்டு Pant களுக்கான துணியையும், Slack Shirt என அழைக்கப்பட்ட அரைக்கை சட்டை நான்கு தைக்க, துணிகளையும் வாங்கிக்கொண்டு எங்களது ஆஸ்தான தையல்காரரான திரு விருத்தகிரியிடம் அழைத்து சென்றார்.  ஏன் அவரை  ஆஸ்தான தையல்காரர் என்றேன் என்றால், அவரது தந்தை காலத்தில் இருந்தே  எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் உடைகள் தைக்க அவர்களிடம் தான் கொடுப்போம்.

(எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.எங்களுக்கு தைக்க வேண்டிய துணிகள் நிறைய இருக்கும்போது எங்கள் ஊரிலிருந்து எங்கள் மாட்டு வண்டியை  அனுப்பினால், அவர்கள் இருவரும் தையல் இயந்திரத்தோடு எங்கள் ஊருக்கு வந்து 4 அல்லது 5 நாட்கள் எங்கள் வீட்டில் தங்கி அனைத்தையும் தைத்துக் கொடுத்து சென்றதுண்டு.)

பின்பு  எனது உடைகள் மற்றும் புத்தகங்களை வைக்க ஒரு டிரங்க் பெட்டி என்று சொல்லப்பட்ட இரும்பு பெட்டிக்கும் என் அண்ணன் ஆர்டர் கொடுத்தார். இப்போது Moulded பெட்டிகள், Stylish PP Moulded Products மற்றும்  Sky Bags உபயோகிக்கும் இளைய தலைமுறையினருக்கு இந்த பெட்டிகள் எப்படி இருக்கும் எனத்தெரியாது என்பதால் அவர்களுக்காக அதனுடைய படங்களை கீழே தந்துள்ளேன்.

சாம்பல் வண்ணம் பூசப்பட்ட அந்த பெட்டியின் விலை அப்போது வெறும் பத்து ரூபாய்கள் தான்.அது இன்னும் என்னோடு இருக்கிறது பத்திரமாக. பழைய நினைவுகளின் சாட்சியாக!  

ஒரே வாரத்தில் Pant தைத்து திரு விருத்தகிரி கொடுத்துவிட்டார். அதைப் போட்டு சரி பார்த்தபோது ஏற்பட்ட சந்தோஷம் சொல்லில் அடங்காது. ஏதோ பெரிய மனுஷன் ஆனதுபோல பரவசம். கல்லூரியில் படிக்கப் போவதால் இனி நாம் அரைக் கால்சட்டையை அணிவதிலிருந்து விடுதலை என நினைத்தேன்.

ஆனால் பின்னர் வேளாண் அறிவியல் படிக்கும்போது, காலையில் பண்ணைப் பயிற்சிக்கு செல்லும்போது நான்கு ஆண்டுகள் அரைக் கால்சட்டையைத்தான் அணியப் போகிறேன் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை!

புனித வளவனார் கல்லூரியிலிருந்து சேர்க்கை அட்டையை (Admission Card) எதிர்பார்த்துக்கொண்டு இருந்தபோது, திருச்சி தேசியக் கல்லூரியிலிருந்தும்  
S.S.L.C புத்தகத்தோடு வரும்படி அஞ்சல் வந்தது. ஏற்கனவே சேர்க்கை உறுதி ஆகிவிட்டபடியால் நான் அங்கு செல்லவில்லை.

மறு வாரத்தில் திருச்சி புனித வளவனார் கல்லூரியிலிருந்து, சேர்க்கை 
அட்டையோடு கல்லூரி திறக்கும் நாள் மற்றும் கல்லூரிக்கு கட்டவேண்டிய 
தொகை குறித்த கடிதத்தையும் அனுப்பியிருந்தார்கள்.
  
நானும் கல்லூரிக்கு செல்ல தயாரானேன்.


நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி

23 கருத்துகள்:

 1. கேட்ட Group கிடைத்த... முதலில் Pant அணிந்த... அந்த சந்தோச நினைவுகள் வரிகளில்...

  தொடர வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 2. ஐயா!நான் எம்.எஸ்ஸி படிக்கப் போகும்போதே டிரங்க் பெட்டிதான்!புக முக வகுப்புப் படிக்கையில் நான்கு முழம் வேட்டி!
  அருமையான பகிர்வு

  பதிலளிநீக்கு
 3. // சாம்பல் வண்ணம் பூசப்பட்ட அந்த பெட்டியின் விலை அப்போது வெறும் பத்து ரூபாய்கள் தான்.அது இன்னும் என்னோடு இருக்கிறது பத்திரமாக. பழைய நினைவுகளின் சாட்சியாக! //

  மறக்க முடியாத பழைய ட்ரங்க் பெட்டி.. என்னிடமும் ஒரு ட்ரங்க் பெட்டி, ஒரு மரப் பெட்டி இன்னும் உபயோகத்தில் உள்ளன..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! டிரங்க் பெட்டி வாங்குமுன்பு என்னிடமும் ஒரு மரப்பெட்டி இருந்தது. ஆனால் அது இப்போது என்னிடத்தில் இல்லை.

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 5. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. //ஆனால் பின்னர் வேளாண் அறிவியல் படிக்கும்போது, காலையில் பண்ணைப் பயிற்சிக்கு செல்லும்போது நான்கு ஆண்டுகள் அரைக் கால்சட்டையைத்தான் அணியப் போகிறேன் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை!//

  You were not happy to wear it on the field. But, I believe today’s students would be happy to wear half trousers to even classes! Time has changed.

  பதிலளிநீக்கு
 7. //கல்லூரியில் படிக்கப் போவதால் இனி நாம் அரைக் கால்சட்டையை அணிவதிலிருந்து விடுதலை என நினைத்தேன்.//

  You were not happy to wear it on the field. But, I believe today’s students would be happy to wear half trousers to even classes! Time has changed.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! வயலில் வேலை செய்யும்போது அரைக் கால்சட்டை அணிந்து வேலை செய்வதுதான் சௌகரியம். நான் எழுதியது 1960 இல் ஒரு 15 வயது மாணவனாக இருந்தபோது எனக்கிருந்த மன நிலையை.

   நீக்கு
 8. அன்றைய நிலை அப்படி. இன்று பாதிரியாரானாலும், கன்னியரானாலும் அன்று நீங்கள் பார்த்த புன்முறுவல், அன்பான பேச்சு ஆகியவற்றை பார்க்க முடிவதில்லை. இன்று கல்வி வணிகம் ஆக்கப்பட்ட சூழலில் அனைத்து கல்லூரி முதல்வர்களுடைய பேச்சிலும் மனிதம் இருப்பதில்லை.

  உங்களுடைய பழைய நினைவுகள் அந்த காலம் மீண்டும் வராதா என்ற ஏக்கத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர். ஜோசப் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான் இன்று கல்வியை போதிப்பவர்கள் இல்லை.அதை விற்பவர்கள் தான் இருக்கிறார்கள். உண்மையில் அந்த காலம் பொற்காலம் தான். அது இனி வர வாய்ப்பே இல்லை!

   நீக்கு
 9. நான் விடுதியிலிருந்து படித்ததில்லை. முதல் முதலாக பணியில் சேரும்போது (1956) இதே டிரங்குப் பெட்டி 10 ரூபாய்க்கு வாங்கி, அதில்தான் என் உடைமைகளைப் போட்டு கொண்டு போனேன். ரொம்ப நாள் அந்தப் பெட்டியை வைத்திருந்தேன். என்னைக் கேட்காமல் என் வீட்டுக்காரி அதை யாருக்கோ தானம் கொடுத்து விட்டாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நானும் புகுமுக வகுப்பு படிக்கும்போது விடுதியில் தங்கி படிக்கவில்லை. ஆனாலும் மறு ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படிக்க இருந்ததால் என் அண்ணன் பெட்டி வாங்கிக் கொடுத்தார்.

   நீக்கு
 10. தங்கள் பதிவு பார்த்தேன் - வாசித்தன்.
  இனிய நினைவுகள்.

  நானும் ஸ்ரான்லிக் கல்லூரியில் ஸ்கொலசிப்பில் எடுபட்டு தங்கிப் படிக்க இப்படி ஓர பெரிய டிரங்குப் பெட்டியில் உடைமைகள் கொண்டு சென்றது நினைவிற்கு வருகிறது.
  முன்பு போல கருத்திட ஆசை தான் ஆடும் பிரச்சனை தீர்க்கவில்லை. அதனால் இழுபடுகிறது.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! இந்த ‘ஆடும்’ பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள்.

   நீக்கு
 11. சுவையான அனுபவங்கள். வெகு சமீப காலம்வரை எங்கள் வீட்டிலும் நீங்கள் சொல்லியிருக்கும் டிரங்கு பெட்டி இருந்தது. அந்தக் காலத்தில் பத்து ரூபாய் என்பது மிக உயர்ந்த விலை, இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இரஞ்சனி நாராயணன் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். அந்த காலத்தில் பத்து ரூபாய்கள் என்பது விலை அதிகம். ஏனெனில் அப்போது காப்பி வெறும் 12 பைசாக்கள் தான்!

   நீக்கு
 12. முதன் முதலில் பேண்ட் மறக்கமுடியாத அனுபவம்தான் ஐயா. பெயவனாய் மாறிவிட்ட உணர்வு மறக்க முடியாததுதான். டிரங்க் பெட்டியைப் பார்த்தால், அந்தகால நினைவுகள் கூழன்று அடிக்கின்றன ஐயா. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

   நீக்கு
 13. It is amazing that you have been preserving the trunk even after half a decade. ( How ever this did not surprise me for I know how you have been meticulously preserving old photographs / drawings etc). The excitement experienced while shifting into full pants and the way the same has been described is wonderful. You have rightly echoed the feelings of all . I too was reminded of the times when I had to make a transition to pants from half pants. The gentle and the pleasant demeanor of the Principal made me wonder why such species have become rare. Nice blog .. a mini " AUTOGRAPH" ! VASUDEVAN

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நாம் படித்தபோது இருந்த ஆசிரியர்கள் போன்றவர்கள் இப்போது குறைவாக காணப்படுகிறார்களே என்ற வருத்தம் எனக்கும் உண்டு. அந்த வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள்!

   நீக்கு