S.S.L.C புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, உடனே திருச்சி செல்ல
வேண்டியிருந்ததால், பயணத்திற்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு
மறு நாளே விருத்தாசலம் சென்றேன்.
பள்ளியை அடைந்தபோது S.S.L.C தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் தலைமை ஆசிரியர்
அறைக்கு வெளியே இருந்த மரத்தின் கீழ் நின்று கொண்டு தலைமை ஆசிரியரின் வருகைக்காக காத்துக்கொண்டு
மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். நானும் அவர்களோடு கலந்துகொண்டேன்.
தலைமை ஆசிரியர் வந்ததும், கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து
வந்திருந்த S.S.L.C புத்தகங்கள் கட்டைப்பிரித்து
உதவியாளர் தர, தலைமை ஆசிரியார் ஒவ்வொருவராக கூப்பிட்டு
அவைகளை கொடுத்து வாழ்த்து சொன்னார். என் முறை வந்தபோது புத்தகத்தை
பெற்றுக்கொண்டேன்.
பள்ளியில் தேர்வு எழுதிய
மாணவர்களில், நான் மூன்றாவது
இடத்தில் வந்திருப்பதாக சொன்னபோது மிகவும்
சந்தோஷமாக இருந்தது.முதல் இரண்டு இடத்தையும் வழக்கம்போல்,
எனது வகுப்பு மாணவிகள் பெற்றிருந்தார்கள். ஆனால் கணிதத்தில் நான் மாவட்டத்தில்
இரண்டாவதாக வந்திருந்தேன்.
புத்தகத்தை ஆவலோடு பிரித்து
பார்த்தபோது நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், இந்த மதிப்பெண்களுக்கு புனித வளவனார்
கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற ஐயம் இருந்தது.
நான் பெற்ற மதிப்பெண்கள் | மாநில சராசரி மதிப்பெண்கள் | |
பொதுத்தமிழ் & சிறப்புத்தமிழ் | 120 / 200 | 91 / 200 |
ஆங்கிலம் | 58 / 100 | 40 / 100 |
தொகுப்பு கணிதம் (Composite Maths) | 86 / 100 | 48 / 100 |
பொது அறிவியல் | 63 / 100 | 45 / 100 |
சமூகவியல் | 59 / 100 | 41 / 100 |
இந்தி | Absent | |
மொத்தம் | 386 / 6௦௦ | 265 / 600 |
இன்றைய மாணவர்கள் வாங்கும்
மதிப்பெண்களைப் பார்க்கும்போது இது குறைவாகத் தோன்றலாம். ஆனால் அப்போதைய
ஆசிரியர்கள் கணக்கு பாடத்தைத் தவிர மற்ற பாடங்களுக்கு நன்றாக எழுதியிருந்தாலும்
அதிக மதிப்பெண்கள் தருவதில்லை.அதுவும் தமிழில் இப்போது தருவது போல் 100 க்கு
100 மதிப்பெண்கள் தந்ததில்லை. மாநில சராசரி மதிப்பெண்கள் 600க்கு 265
என்று இருப்பதிலிருந்தே இதை தெரிந்துகொள்ளலாம்.
ஏன் நான் இந்தி தேர்வுக்கு
செல்லவில்லை எனபதை பற்றி முன்னரே நினைவோட்டம் 59 இல் எழுதியிருக்கிறேன். அப்போது
இந்தி பாடம் கட்டாய பாடமாக இல்லாததால் தேர்வு எழுதி மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும்
அவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை.
இந்தி கட்டாய பாடமாக இல்லாததால்
மாணவர்கள் அதில் ஈடுபாடு காட்டமாட்டார்கள். ஆசிரியர்களும் பாடம் நடத்தாமல் கரும்பலகையில்
இந்தி எழுத்துக்களை எழுதிவிட்டு 'ஏதாவது படிங்கடா’ என்று சொல்லிவிட்டு அமர்ந்து விடுவார்கள்.
நாங்களும் காலாண்டு அரை
ஆண்டுத்தேர்வுகளில் இந்தி தேர்வில் தரும் கேள்வித்தாளைப் பார்த்து அதையே திருப்பி
எழுதி கொடுத்துவிடுவோம். ஆசிரியர்களும் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் தருவது உண்டு.
இந்திப்பாடங்கள்
நடத்தப்படாததால் நிச்சயம் தேர்வை எழுதி
நல்ல மதிப்பெண்கள் பெறமுடியாது.அப்படியே கேள்விகளைத்திருப்பி எழுதினாலும் ஒற்றைப்பட இலக்கத்தில் தான்
மதிப்பெண் கிடைக்கும்.
இந்தி பாடத்திற்கு பெறப்போகும்
ஒற்றைப்பட இலக்க மதிப்பெண்ணை எங்களது
S.S.L.C புத்தகத்தில், பதிவு செய்ய விரும்பாததால்,எனது வகுப்பு மாணவர்களில் பெரும்பான்மையோர்
இந்தி தேர்வைப் புறக்கணிக்க முடிவு செய்தோம்.
தேர்வை எழுதாவிட்டால் Absent என குறிப்பிட்டாலும் ஒற்றை
இலக்க மதிப்பெண்ணை விட தேவலாம் என்பதால் எடுத்த முடிவு அது. மேலும் நாங்கள் தேர்வு
எழுத சென்று, ஒன்றும்
எழுதாமல் வெறும் தாளை கொடுத்து வந்தாலும், அதைத் திருத்தும்
ஆசிரியருக்கு ஒரு தாளுக்கு 50 காசுகள் கிடைக்கும். அது ஏன் அவருக்கு போய்
சேரவேண்டும் என்ற ‘நல்ல’ எண்ணத்தாலும்
அந்த தேர்வை புறக்கணித்தோம்.
(அந்த சிறுபிள்ளைத்தனத்தை இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது.)
நாங்கள் பிரிவு உபசார விழாவில்
எடுத்துக்கொண்ட புகைப்படத்தை யார் யார் கேட்டிருந்தார்களோ அவர்களுக்கு புகைப்படம்
எடுக்க ஏற்பாடு செய்த வகுப்புத்தோழர்
திரு கிருஷ்ணன் கொடுத்தார். என்ன
காரணத்தாலோ அப்போது நான் அதை நான் வாங்கவில்லை.
(இப்போதும் நான் சந்திக்கும் எனது
வகுப்பு நண்பர்களிடம் அந்த புகைப்படம் இருக்கிறதா
என கேட்டுக்கொண்டுதான்
இருக்கிறேன்.)
நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு
S.S.L.C புத்தகத்துடன்
அன்று மதியம் திருச்சிக்கு செல்லும் ‘பாசஞ்சர்’ இரயிலில் திருச்சிக்கு
பயணமானேன்.
. .
நினைவுகள் தொடரும்
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
அந்த புகைப்படம் தவறவிட்டதின் ஏக்கம் புரிகிறது... விரைவில் கிடைக்கட்டும்...
பதிலளிநீக்குஇனிய நினைவுகளை தொடர்கிறேன்...
தொடர்வதற்கு நன்றி திரு திண்டுக்கல் தனபால்ன் அவர்களே!
நீக்குபரவாயில்லை, நல்ல மார்க்குகள்தான். நான் SSLC யில் 326/500 தான் வாங்கியிருந்தேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே! இப்போது மாணவர்கள் பெரும் மதிப்பெண்களைப் பார்க்கும்போது நாம் இந்த கால்த்தில் படிக்கவில்லையே என்ற ஏக்கம் வருவது உண்மை.
நீக்குI still remember, those days if someone fails in S.S.L.C he has to write all the subjects gain to pass. Now, I believe, one can just write the failed paper to clear the S.S.L.C. Also my seniors used to complain, composite maths is one of the toughest subject to pass. One should be really very good to get a rank in that subject. Those days, one cannot memorise and get good marks in maths. Were there any electives in those days for S.S.L.C?
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது உண்மைதான். தொகுப்பு கணிதம் (Composite Maths) உண்மையில் கடினமான ஒன்றுதான். அதனால் பலர் பொது கணிதம் (General Mathematics) படிப்பதை தேர்ந்தெடுத்து விடுவார்கள். அந்த காலத்தில் தொகுப்பு கணிதம் தான் விருப்பப் பாடம் (Elective subject).
நீக்குபள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில், நான் மூன்றாவது இடத்தில் வந்திருப்பதாக சொன்னபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
பதிலளிநீக்குசந்தோஷப் பகிர்வுகள்.. வாழ்த்துகள்..!
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
நீக்குசார்,நானும் அந்த ரேஞ்சில்தான்(380)!..பாசஞ்சர் ரயிலில் தொடங்கிய பயணம் பி வாழ்க்கையில் எக்ஸ்பிரஸ் ஆகப் போய் விட்டது!
பதிலளிநீக்குநல்ல பகிர்வு
வருகைக்கு, நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நம் இருவருக்கும் ஒரே எண்ணஅலை இருக்கும்போது, ஒரே ரேஞ்சில் மதிப்பெண்கள் இருப்பது சரிதானே.
நீக்குஇந்த பதிவு என்னையும் அறியாமல் கன்ணீரை வரவழைத்து விட்டது.
பதிலளிநீக்குதொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படித்தது, S.S.L.C யில் பாஸ் செய்தது, பள்ளிக்குச் சென்று சர்டிபிகேட் வாங்கியது போன்ற நினைவுகளை நினைக்கும்போது இப்போதும் மனது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இந்த வாழ்க்கையில் இனிமேல் அதுமாதிரியான அனுபவங்கள் இனி வரப்போவதில்லை என்பதை நினைக்கும் போது மனது அலை பாய்கிறது.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!உண்மைதான் அந்த நாட்கள் இனி திரும்பி வரப்போவதில்லைதான்.நினைத்துப் பார்த்து சந்தோஷப்படவேண்டியதுதான்.
நீக்குSir, the way you remember your school days remind our own school times. Those are the days, our resources were very less, still we enjoyed each and every moment of our life. Nowadays resources are abundant but the happiness vanished from our life. The new generation will not be able to understand the standard of life of those days. Please continue the good work sir.....
பதிலளிநீக்குவருகைக்கும் தங்களது மேலான கருத்துக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே! அப்போது வள ஆதாரங்கள் குறைவுதான். ஆனால் மகிழ்ச்சி இருந்தது.இன்றோ நிலைமை தலைகீழ் என்பதை சரியாய் சொன்னீர்கள். நன்றி!
நீக்குநானும் அந்த காலத்தில் தொகுப்பு கணிதம்தான் எடுத்திருந்தேன். பழைய நினைவுகளை அசைபோடுவதே ஒரு அலாதி இன்பம்தான். உங்களுடைய அலுவலக அனுபவங்களைப் பற்றியும் எழுதுங்களேன். என்னுடைய வங்கி அனுபவங்களைப் பற்றி திரும்பிப்பார்க்கிறேன் என்று சுமார் மூன்றாண்டு காலம் எழுதினேனெ. நீங்கள் நினைத்துப்பார்க்கிறேன் என்று தலைப்பிட்டுள்ளீர்கள். நேரம் கிடைக்கும்போது படித்துபாருங்கள். (http:ennulagam.blogspot.com)
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி திரு டி.பி.ஆர். ஜோசப் அவர்களே! நானும் எனது வங்கி அனுபவங்களை வெவ்வேறு தலைப்புகளில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். தங்களது ‘திரும்பிப்பார்க்கிறேன்’ தொடரை விரும்பிப்படித்தவன் நான். அதுவும் நீங்கள் ஆய்வுக்கு செல்லும்போது நடந்த நிகழ்வுகளை விவரித்ததை படித்து மிகவும் இரசித்தவன் நான். இன்னொரு செய்தியையும் சொல்லவிரும்புகிறேன். எனது பதிவை படித்துவிட்டு மறைந்த பதிவர் திரு டோண்டு இராகவன் அவர்கள் என்னை தங்களது பதிவையும் பார்க்க பரிந்துரைத்திருந்தார்.
நீக்கு