புதன், 21 ஆகஸ்ட், 2013

நினைவோட்டம் 69





வகுப்புத் தொடங்கும் மணியை அடித்ததும், அறிவிப்புப் பலகையின் முன்
நின்றிருந்த கூட்டம் முழுதும் திடீரென கலைந்து செல்ல, நான் மட்டும் 
தன்னந்தனியாய் அங்கு செய்வதறியாது நின்றிருந்தேன்.

அதுவரை கேட்ட இரைச்சல் சொல்லிவைத்தாற்போல் திடீரென நின்றுவிட்டது. ஆயிரக்கணக்கான  மாணவர்களும் ஆசிரியர்களும் உள்ள ஒரு கல்லூரியில் 
இருப்பது போன்றே தோன்றவில்லை எனக்கு. ஒரு சிறிய ஊசி கீழே விழுந்தால் ஏற்படும் ஒலியைக் கூட கேட்கக்கூடிய அளவுக்கு அப்படியொரு
ஒரு அரவமின்மை.

அப்போது எனக்குப் பின்னால் ‘சரக் சரக்’ என எழுந்த சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அங்கே கல்லூரி முதல்வர் மதிப்பிற்குரிய அருட் தந்தை எரார்ட் 
(Rev Fr Ehrhart  SJ) அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்ததும்
என்னுள் இருந்த பயமும், படபடப்பும்  இன்னும் கூட ஆரம்பித்தது.

ஆனால் அவர் புன்னகையுடன் என் அருகில் வந்து. ‘ஏன் இங்கு நின்று கொண்டு இருக்கிறாய்?’ வகுப்புக்கு செல்லவேண்டியது தானே?’ என்றார் ஆங்கிலத்தில்.
எனக்கோ தொண்டை வறண்டு, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
போன்ற பிரமை. வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.

உடனே அவர் அதே புன்னகை மாறாமல் ‘உனது D.No. என்ன என்று கேட்டார்?’ அப்போது தட்டுத்தடுமாறி ‘எனக்குத் தெரியாது.’ என்று ஆங்கிலத்தில்
பதிலளித்தேன். அவர் எனது தோளின் மேல் கை போட்டு ‘என்னுடன் வா.’
என்று கூறி கல்லூரி அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.

அவரைப் பார்த்ததும் எழுந்து நின்ற எழுத்தர் ஒருவரிடம், என்னைக்காட்டி
‘இந்த பையனுடைய Department No. மற்றும் வகுப்பு அறை எண் என்ன வென்று 
பார்த்து சொல்லுங்கள்.’ என்றார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது D.No.  
என்றால் Department No. என்று!  

அந்த எழுத்தர் எனது பெயரையும், Group யும்  கேட்டபோது, நான் எனது 
பெயரை சொல்லி Natural Science, Physical Sciences, Commerce, Logic Group 
என்றேன். அந்த Group இல் ஒரு வகுப்பு மட்டும் இருந்ததால், உடனே அவர் 
அருகில் இருந்த பேரேட்டை (Ledger) பிரித்துப் பார்த்து, எனது D.No. என்ன என்று பார்த்துவிட்டு,அது 2292 என்றும் எனது Section ‘E’ என்றும் சொன்னார்.

உடனே முதல்வர் அவர்கள், அதே பரிவுடன் தோளில் கை போட்டு என்னை அழைத்துக் கொண்டு எனது வகுப்பு இருந்த முதல் தளத்திற்கு அழைத்து
சென்றார்.  

இந்த இடத்தில் புனித வளவனார் கல்லூரியில் வகுப்புக்கள் இருந்த அமைப்பு
பற்றி சொல்லவேண்டும் என எண்ணுகிறேன். கல்லூரியில், கிழக்கு திசை
நோக்கி இருந்த Lawley Hall என அழைக்கப்பட்ட இரு தளங்கள் உயரம் 
கொண்ட பெரிய கலையரங்கம் (Auditorium) த்தின் இரு பக்கங்களிலும் முதல் தளத்திலும்,கீழ் தளத்திலும் வரிசையாய் வகுப்பறைகள் இருக்கும்.

அந்த வகுப்பறைகளின் நுழை வாசல் உள்ள பக்கத்தில் சன்னல்களுடன் கூடிய வராந்தாவும், Auditorium உள்ள மறுபக்கத்தில் சன்னல்களும் இருக்கும். அந்த சன்னல்கள் வழியே பார்த்தால் கலையரங்கம் முழுதும் தெரியும் வண்ணம்
அவைகள் கட்டப்பட்டிருக்கும்.

எனது வகுப்பறை Lawley Hall இன் தென்பகுதியில் இருந்த முதல் தளத்தில் இருந்ததால், கல்லூரி முதல்வர் அவர்கள் என்னை அங்கு அழைத்து சென்றார். 
நானோ அவருடன் மிகுந்த கூச்சத்தோடும் பயத்தோடும் சென்றேன். பல
வகுப்பறைக் கடந்து சென்றபோது அங்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த
ஆசிரியர்களின் குரலைத் தவிர வேறு ஓசை ஏதும் கேட்கவில்லை.

எனது வகுப்பு அறை முன் சென்றதும் அங்கு அப்போதுதான் வகுப்பை நடத்த ஆரம்பித்திருந்த ஆங்கிலப் பேராசிரியர் கல்லூரி முதல்வரைப் பார்த்ததும்
வணக்கம் சொல்லிக்கொண்டே வெளியே வந்தார். அவரிடம் ‘என்னைக் காட்டி.
இதோ உங்கள் வகுப்பு மாணவன். உள்ளே அனுமதியுங்கள்.’ என்னைப் பார்த்து.
‘இனி காலை வகுப்பு தொடங்கு முன் வகுப்பில் இருக்கவேண்டும். அதோடு
D.No. யும் மறக்காதிருக்கவேண்டும்.’ எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஒரு முதல்வரே கல்லூரிக்கு புதிதாய் வந்துள்ள மாணவனை அழைத்து
சென்று வகுப்பில் விடுவது என்பது எப்போதுமே நினைத்துப் பார்க்கமுடியாத
ஒன்று. அது அவரது வேலையும் அல்ல. இப்போது நினைத்தாலும் அந்த காட்சி
என் மனக்கண் முன் நிழலாடும்போது, அது ஒரு கனவோ என எண்ணத்
தோன்றுகிறது.

அவர் நினைத்திருந்தால் எனது வகுப்புப் பிரிவை, அந்த எழுத்தர் சொன்னதும் 
என்னை அங்கு போகச் சொல்லியிருக்கலாம். அல்லது  கல்லூரியில் உள்ள உதவியாளர் ஒருவரை  என்னுடன் அனுப்பி வகுப்பறையைக் காட்டச் சொல்லியிருக்கலாம். ஆனால் பெற்றோர் வந்து தங்களது பிள்ளைகளை விட்டு செல்வது போல பொறுப்புடன் அவரே வந்து என்னை விட்டு சென்றதை
என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை.

அவர் கண்டிப்பானவர்தான் ஆனால் அதே நேரம் மாணவர்களிடம், அதுவும்
புதிய மாணவர்களிடம் பரிவுடனும் கனிவுடனும் நடந்துகொள்வார் என்பதை
பின்னர் கேள்விப்பட்டேன். அந்த அனுபவத்தை நான் கல்லூரியில் சேர்ந்த
முதல் நாளே பெற்றேன்.

எனது வகுப்பில் இருந்த ஆங்கிலப் பேராசிரியர் (அவர் திரு பானுமூர்த்தி 
அவர்கள் என பின்னர் அறிந்துகொண்டேன்)  என்னை உள்ளே வரச் 
சொன்னதும், நான் நுழைந்தபோது வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் என்னையே பார்த்தது என்னவோபோல் இருந்தது.

வேகமாக உள்ளே சென்று காலியாக இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து 
கொண்டேன். நான் உட்கார்ந்ததும் அருகில் இருந்த மாணவர் என்னைப்
பார்த்து புன்னகைத்தார்.நானும் பதிலுக்கு புன்னகைத்தேன்.

‘என்ன பாடம் ஆரம்பித்துவிட்டாரா?’ என அவரிடம் கேட்டபோது ‘இல்லை.
இல்லை இப்போது சுய அறிமுகம் நடந்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் எழுந்து நின்று தங்கள் பெயர். ஊரின் பெயர் மற்றும் படித்த பள்ளியின் பெயரை சொல்லவேண்டும்.அதுதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.’என்றார் அவர்.

அப்போதுதான் கவனித்தேன். தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல, பக்கத்து
மாநிலமான கேரளாவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் ஏன் ஆப்பிரிக்க நாட்டிலிருந்தும் வந்திருக்கும் மாணவர்கள் எனது வகுப்பில் உள்ளார்கள் என்று.

எனது முறை வந்தபோது எழுந்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
எனது அடுத்த இருக்கையில் இருந்தவர் எழுந்து அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர் திருத்துறைப்பூண்டியிலிருந்து வந்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டேன்.

எனது வகுப்பு மாணவர்களில் சிலர் ராஜேந்திர பிரசாத், அண்ணாதுரை, 
கருணாநிதி என புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் பெயரைக் 
கொண்டிருந்ததையும் கண்டேன். ஒரு பயிற்சி பாதிரியாரும் எங்களோடு 
மாணவனாக இருப்பதையும் கண்டேன்.    

அறிமுகப்படலம் முடிந்ததும் பேராசிரியர், பள்ளிமாணவனாக இருந்த நாங்கள் கல்லூரியில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டு, 
உடனே பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார். அவர் முதன்முதல் நடத்திய பாடம் இன்னும் நினைவில் இருக்கிறது. அது Jerome K. Jerome எழுதிய  
Uncle Podger hangs a picture என்ற நகைச்சுவை கட்டுரை.

அவரது வகுப்பு முடிந்து, அடுத்து தர்க்கவியல் எனப்படும் Logic பாடம் நடத்த
ஆசிரியர் திரு ஃபெர்னாண்டெஸ் வந்தார். அவர் சிரித்த முகத்தோடு பாடம் நடத்தினாலும், ஒன்றுமே புரியவில்லை. காரணம், புரியாத பாடத்தை ஆங்கிலத்தில் கேட்டதால். இந்த அனுபவம் அந்த காலத்தில் தமிழ்வழிக் கல்வி படித்துவிட்டு கல்லூரி வந்த எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் இரண்டாவது மாதமே எல்லாம் சரியாகிவிட்டது.

மதிய உணவு இடைவேளை விட்டதும் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவை
எங்கு வைத்து சாப்பிடுவது எனத் தெரியாமல் தயங்கியபோது, எனது பக்கத்து இருக்கை நண்பர் சொன்னார். ‘நான் ‘க்ளைவ் உணவுவிடுதியில்’ 
தங்கியுள்ளேன். அங்கு எனது அறையில் நீங்கள் வந்து  மதிய உணவை 
சாப்பிடலாம்.’ என்றார். பழகிய சில மணி நேரத்திலேயே, எனக்கு 
நெருங்கிய நண்பராக மாறிவிட்ட அவரைப்பற்றி பின்னர் சொல்லுவேன்.    



நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி

புதன், 14 ஆகஸ்ட், 2013

நினைவோட்டம் 68



திருச்சி புனித வளவனார் கல்லூரியிலிருந்து,சேர்க்கை அட்டையோடு 
கல்லூரி திறக்கும் நாள் மற்றும் கல்லூரிக்கு கட்டவேண்டிய தொகை 
குறித்த கடிதம் வந்ததும் புதிதாய் வாங்கிய பெட்டியில் எல்லாவற்றையும் 
எடுத்து வைத்துக்கொண்டு, கல்லூரி திறக்க இருக்கும் இரண்டு நாட்களுக்கு 
முன்னதாகவே திருச்சிக்கு செல்ல தயாரானேன்.

ஏற்கனவே கண்டிப்புக்கு பெயர் போன புனித வளவனார் கல்லூரியில், 
எனது மாமன் மகன்களும் பெரியம்மா மகனும் படித்திருந்ததார்கள். 
அதனால் அந்த கல்லூரியின் கற்பிக்கும் முறையும், ஆசிரியர்கள் 
கண்டிப்பாக இருந்ததால் அங்கு படிக்கும் மாணவர்கள் கட்டுப்பாடுடன் 
இருப்பார்கள் எனத் தெரியுமாதலால் அங்கே எனக்கு இடம் கிடைத்தது 
குறித்து வீட்டில் அனைவருக்கும் சந்தோஷமே.

நான் படித்த அந்த கல்லூரியில் பெற்ற அனுபவம் பற்றி விரிவாக பின்னால் எழுத இருக்கிறேன் என்றாலும் புனித வளவனார் கல்லூரி பற்றிய ஒரு சிறிய 
அறிமுகத்தை இங்கு தரலாம் என நினைக்கிறேன்.

திருச்சி புனித வளவனார் கல்லூரி நான் பிறப்பதற்கு 100 ஆண்டுகள் 
முன்பே, தொடங்கப்பட்ட பழமையான கல்லூரியாகும். 1844 ஆம் ஆண்டு  
Fathers of Society of Jesus (The Jesuits) ஆல் நாகப்பட்டினத்தில் 
தொடங்கப்பட்ட இந்த கல்லூரி ,1866 ஆம் ஆண்டுதான் சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டதாம். பின்னர் 1883 ஆம் ஆண்டுதான் திருச்சிக்கு 
மாற்றப்பட்டதாம்.

(தற்சமயம் தன்னாட்சி பெற்ற கல்லூரியாக  திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன்)

முன்னாள் குடியரசுத்தலைவர் Dr.அப்துல்கலாம் அவர்கள், எழுத்தாளர்கள் சுஜாதா, சாண்டில்யன், நடிகர்கள் அசோகன், நெப்போலியன்  திரைப்பட இயக்குனர்கள் வசந்த், பிரபு சாலமன், நீதிபதி அசோக் குமார் போன்ற பிரபலங்கள் படித்ததும் இந்த கல்லூரியில் தான்.

ஊருக்கு செல்லும் நாள் வந்ததும், எங்கள் ஊரிலிருந்து விருத்தாசலம் டவுன்
இரயில் நிலையம் வரை எங்கள் வீட்டு மாட்டுவண்டியில் பயணம் செய்து, 
அங்கிருந்து மதியம் செல்லும் பாசஞ்சர் இரயிலில் திருச்சி சந்திப்பு சென்றேன். அண்ணன் வீட்டிற்கு சென்ற வழி தெரியுமாதலால், அங்கிருந்து ஒரு வாடகை மாட்டுவண்டியில் ஏறி வீடு போய் சேர்ந்தேன்.

(அப்போதெல்லாம் திருச்சி சந்திப்பில் மாட்டுவண்டிகளும் வாடகைக்கு 
கிடைக்கும்)

மறுநாள் காலை கல்லூரிக்கு சென்று சேர்க்கைத் தொகையை கட்ட கிளம்பினேன். எனக்கு அண்ணன் வீட்டிலிருந்து புனித வளவனார் கல்லூரிக்கு எந்த பேருந்தில் செல்வது எனத் தெரியாததால், எனது மாமா மகனான திரு சீனிவாசன் அவர்களும் கல்லூரி போய் வர வழி காட்ட கூட வந்தார்.

மின் வாரிய துணை மின் நிலைய வளாகம் அருகே இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு சென்று காத்திருந்தோம். அங்கு  இரயில் சந்திப்பிலிருந்து 
உறையூர் வழியாக Main Guard Gate செல்லும் பேருந்து வந்ததும், அதில் ஏறி 
கோட்டை இரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் தாண்டியவுடன் 
மாதா கோவிலின் மதிற் சுவரை ஒட்டி இருந்த பேருந்து நிறுத்தத்தில் 
இறங்கினோம்.

அப்போதெல்லாம் அங்கு கடைகள் ஏதும் கிடையாது. (இப்போது மாதா 
கோவில் நிர்வாகமே மதிற் சுவரை இடித்துவிட்டு வரிசையாய் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.)

மாதா கோவிலைத் தாண்டி கல்லூரியை அடைந்து அலுவலகத்தை அடைந்தோம். அங்கு என்னைப்போலவே கட்டணம் கட்ட வந்தவர்கள் கூட்டம் 
இருந்தது. வரிசையில் காத்திருந்து, எனது சேர்க்கை அட்டையை 
காண்பித்து, கட்டணத்தைக் கட்டினேன்.

அலுவலகத்தில் இருந்த எழுத்தர் பணம் பெற்றுக்கொண்டதற்கான வரவுச் சீட்டைக் கொடுத்துவிட்டு, ‘இதில் குறிப்பிட்டுள்ள D. No. ஐ நினைவில் 
கொள்ளுங்கள்.’ என்று கூறினார். அப்போது இருந்த மகிழ்ச்சியான மன நிலையில் அதனுடைய முக்கியத்துவத்தை அப்போது உணர வில்லை!

திருச்சி இரயில் சந்திப்பிலிருந்து வரும் பேருந்துகள் நாங்கள் இறங்கிய 
இடத்திலிருந்து Main Guard Gate  தாண்டி சென்று நின்றுவிட்டு, ஒரு வழிப்பாதை காரணமாக இப்ராஹிம் பூங்கா வழியாக, திரும்ப திருச்சி சந்திப்பு 
செல்ல, Holy Cross கல்லூரியை அடுத்து இருந்த பேருந்து நிறுத்தம் 
வழியாக வருமாதலால், வீட்டிற்கு திரும்ப அங்கு காத்திருந்து, வந்த 
பேருந்தில் ஏறி வீடு திரும்பினோம்

கல்லூரி திறந்த அன்று, அண்ணியார் செய்து கொடுத்த மதிய உணவுப் பொட்டலத்தையும், முதல் நாள் என்பதால் ஒரே ஒரு நோட்டு புத்தகத்தையும், 
ஒரு பையில் வைத்துக்கொண்டு காலையில் 9 மணிக்கே பேருந்து நிலையம் 
சென்று, பேருந்தில் ஏறி கல்லூரியை 9.30 மணிக்கு அடைந்தேன்.

கல்லூரி அறிவிப்புப்பலகை அருகே ஒரே கூட்டம். என்னவென்று 
விசாரித்ததில் மாணவர்களின் எடுத்துள்ள Group படி பிரித்து வகுப்புக்கள் ஒதுக்கியிருப்பதாகவும். அந்த வகுப்புக்கள் எந்தெந்த வகுப்பு அறையில் 
நடக்கும் என தட்டச்சு செய்து ஒட்டியிருப்பதாக சொன்னார்கள்.

Group மற்றும் மாணவர்களின் பெயரைப்போட்டு வகுப்பு அறை எண் 
போட்டிருப்பார்கள் என நினைத்துக்கொண்டு, எனது பெயர் எங்குள்ளது என 
அறிவிப்புப் பலகையைப் பார்த்தபோது தூக்கிவாரிப்போட்டது. அங்கே பெயரையும் Group யும் போடாமல் வெறும் D.Number ஐ மட்டும் போட்டு, 
வகுப்பு அறை எண்ணைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அப்போதுதான் நினைவுக்கு வந்தது. கல்லூரிக் கட்டணம் கட்டும்போது அந்த 
எழுத்தர் D. No. ஐ நினைவில் வைத்துக்கொள்ள சொன்னது. எல்லோரும் கட்டணம் செலுத்திய வரவு சீட்டைக் கொண்டு வந்திருந்ததால், அவர்களது அறை எண்ணைக் கண்டுபிடித்துப் போய்க்கொண்டிருந்தார்கள். நானோ அந்த 
வரவு சீட்டையும் கொண்டு செல்லவில்லை. அந்த எண்ணையும் நினைவில் வைத்திருக்கவில்லை.

எனக்கு என்ன செய்வது எனத்தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். 
யாரையாவது கேட்கலாம் என நினைத்தால் அவரவர்கள் தங்கள் அறை 
எண்ணைத் தேடும் வேலையில் மும்முரமாய் இருந்தார்கள். அப்பொது கூட 
அலுவலக அறைக்கு சென்று விசாரிக்கலாம் எனத் தோன்றவில்லை.

அதற்குள் நேரம் 10 மணியை நெருங்கிவிட்டபடியால், வகுப்புத் தொடங்கும் 
மணியை அடித்து விட்டார்கள். அவ்வளவுதான் கூட்டம் முழுதும் திடீரென 
கலைந்து செல்ல, நான் மட்டும் தன்னந்தனியாய் அந்த அறிவிப்புப் பலகையின் 
முன் செய்வதறியாது நின்றிருந்தேன்.    


நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி