புதன், 4 டிசம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 7




சேர்வராய பெருமாள் கோவிலிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
ராஜராஜேஸ்வரி கோவில் நோக்கி காலை 11.20 மணிக்கு புறப்பட்ட நாங்கள்
பயணித்த சாலை குறுகியதாய் இருந்தும் 10 மணித்துளிகளில் அங்கு சென்றுவிட்டோம். 

இந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும். ‘மீண்டும் சந்தித்தோம் 4’ ஆம் 
பதிவை படித்த திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இவ்வாறு பின்னூட்டமிட்டிருந்தார். “நாகமலை எஸ்டேட் செல்லும் வழியில் 
ஞானானந்தகிரி ஆசிரமம் அமைந்திருக்கிறது..!”

அவர் குறிப்பிட்டது ராஜேஸ்வரி கோவில்தான் என அறியாமல் அடுத்த 
தடவை போகும்போது செல்வேன் எனக்கூறியிருந்தேன்.காரணம் அவர் 
நாகமலை எஸ்டேட் செல்லும் வழி என்று எழுதியிருந்ததை நான் தவறாக புரிந்துகொண்டேன்.நாங்கள் சென்ற கோவில் நாகலூர் ஏற்காடு சாலையில் இருந்ததால், அது வேறு என நினைத்துவிட்டேன்.

இந்த கோவில் ஒரு குறுகிய வளைவான சாலையில் சற்று உயரமான 
இடத்தில் உள்ளது. பேருந்தை விட்டு இறங்கி சாலையை கவனமாக 
கடக்கவேண்டும். என்னவோ தெரியவில்லை இந்த இடத்தில் வாகனப் 
போக்குவரத்து அதிகமாக உள்ளது. சற்று கவனக்குறைவாக இருந்தால் 
விபத்து ஏற்படுவது நிச்சயம். நாங்கள் காத்திருந்து சாலையைக் கடந்தோம்.  

அந்த சாலையில் நான் எடுத்த படம் கீழே. 







அந்த கோவிலின் முகப்புத் தோற்றத்தையும் படம் எடுத்தேன். ஏனோ தெரியவில்லை.அது சரியாக வரவில்லை. இருப்பினும் உங்களுக்காக 
கூகிளாரிடம் பெற்ற படத்தை கீழே தந்திருக்கிறேன். 




 

இந்த ஆலயம் திருக்கோவிலூர் தபோவனம் ஸ்ரீலஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் பரம்பரையில் வந்த ஸ்ரீ வித்யாநந்தகிரி சுவாமிகள் அவர்களின் சீடர் தவத்திரு பூர்ணானந்தகிரி சுவாமிகள் அவர்களால் 1983 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.

சுமார் முப்பது படிகள் ஏறி மேலே சென்று, வலப்புறம் திரும்பி அங்கு
எழும்பியுள்ள அழகான கோவிலில், சுமார் 4 அடி உயரத்தில் உள்ள 
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனை தரிசித்தோம்.

ராஜராஜேஸ்வரி கோவிலின் படம் கீழே (கூகிளார்க்கு நன்றி)






அங்கிருந்த அர்ச்சகர் தீபாராதனை காட்டி எங்களை அம்மனை வழிபட 
செய்ததுடன், அம்மனின் வலக்கை புறம் லக்ஷ்மி தேவியும், இடக்கை புறம் 
சரஸ்வதி தேவியும், இடது பாதத்துக்கு அருகே கணபதியும்,வலது பாதத்துக்கு 
அருகே முருகப்பெருமானும் இருப்பதைக் காட்டி, அவைகள் 
அந்த கோவிலுக்கே உள்ள தனி சிறப்பு என்றும் சொன்னார். .

மேலும் அங்கே பூர்ணானந்தகிரி சுவாமிகள் பிரதிஷ்டை செய்த 
நவபாஷாண லிங்கம் பாதரச லிங்கம் மற்றும் இரு லிங்கங்களையும் 
எங்களுக்கு காட்டினார். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியிலும் நவராத்திரி நாட்களிலும்,ஆடி மாத வெள்ளிக் கிழமைகளிலும் விசேட பூஜை நடப்பதையும் அவரிடமிருந்து தெரிந்துகொண்டோம்.

ராஜராஜேஸ்வரி அம்மனின் படம் கீழே.  (Panoramio வுக்கு நன்றி)




 

வெளியே வரும்போது கோவிலை சுற்றிலும் உள்ள அழகிய செடி கொடிகள் வளர்க்கப்பட்டிருப்பதை இரசித்துக்கொண்டே, அவைகளின் தாவரப் பெயர்கள் 
(Botanical Names) பற்றி ஒருவரோடோருவர் கேட்டுக்கொண்டு, 
பல்கலைக்கழகத்தில் படித்ததை நினைவுபடுத்திக்கொண்டோம்.

கீழே இறங்கு முன்பு அங்கே சூடான பொங்கல் பிரசாதம் தந்தார்கள். 
அருகே ஊறுகாய் போன்றவைகள் விற்பனைக்கும் இருந்தன. நண்பர்கள் சிலர் தேவையானவற்றை வாங்கிக்கொண்டனர்.

பிறகு எல்லோரும் காலை 11.50 மணிக்கு Lady's Seat அமைந்துள்ள இடத்தை   
நோக்கிப் புறப்பட்டோம். 



தொடரும்