புதன், 4 டிசம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 7
சேர்வராய பெருமாள் கோவிலிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
ராஜராஜேஸ்வரி கோவில் நோக்கி காலை 11.20 மணிக்கு புறப்பட்ட நாங்கள்
பயணித்த சாலை குறுகியதாய் இருந்தும் 10 மணித்துளிகளில் அங்கு சென்றுவிட்டோம். 

இந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும். மீண்டும் சந்தித்தோம் 4 ஆம் 
பதிவை படித்த திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இவ்வாறு பின்னூட்டமிட்டிருந்தார். நாகமலை எஸ்டேட் செல்லும் வழியில் 
ஞானானந்தகிரி ஆசிரமம் அமைந்திருக்கிறது..!

அவர் குறிப்பிட்டது ராஜேஸ்வரி கோவில்தான் என அறியாமல் அடுத்த 
தடவை போகும்போது செல்வேன் எனக்கூறியிருந்தேன்.காரணம் அவர் 
நாகமலை எஸ்டேட் செல்லும் வழி என்று எழுதியிருந்ததை நான் தவறாக புரிந்துகொண்டேன்.நாங்கள் சென்ற கோவில் நாகலூர் ஏற்காடு சாலையில் இருந்ததால், அது வேறு என நினைத்துவிட்டேன்.

இந்த கோவில் ஒரு குறுகிய வளைவான சாலையில் சற்று உயரமான 
இடத்தில் உள்ளது. பேருந்தை விட்டு இறங்கி சாலையை கவனமாக 
கடக்கவேண்டும். என்னவோ தெரியவில்லை இந்த இடத்தில் வாகனப் 
போக்குவரத்து அதிகமாக உள்ளது. சற்று கவனக்குறைவாக இருந்தால் 
விபத்து ஏற்படுவது நிச்சயம். நாங்கள் காத்திருந்து சாலையைக் கடந்தோம்.  

அந்த சாலையில் நான் எடுத்த படம் கீழே. அந்த கோவிலின் முகப்புத் தோற்றத்தையும் படம் எடுத்தேன். ஏனோ தெரியவில்லை.அது சரியாக வரவில்லை. இருப்பினும் உங்களுக்காக 
கூகிளாரிடம் பெற்ற படத்தை கீழே தந்திருக்கிறேன். 
 

இந்த ஆலயம் திருக்கோவிலூர் தபோவனம் ஸ்ரீலஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் பரம்பரையில் வந்த ஸ்ரீ வித்யாநந்தகிரி சுவாமிகள் அவர்களின் சீடர் தவத்திரு பூர்ணானந்தகிரி சுவாமிகள் அவர்களால் 1983 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.

சுமார் முப்பது படிகள் ஏறி மேலே சென்று, வலப்புறம் திரும்பி அங்கு
எழும்பியுள்ள அழகான கோவிலில், சுமார் 4 அடி உயரத்தில் உள்ள 
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனை தரிசித்தோம்.

ராஜராஜேஸ்வரி கோவிலின் படம் கீழே (கூகிளார்க்கு நன்றி)


அங்கிருந்த அர்ச்சகர் தீபாராதனை காட்டி எங்களை அம்மனை வழிபட 
செய்ததுடன், அம்மனின் வலக்கை புறம் லக்ஷ்மி தேவியும், இடக்கை புறம் 
சரஸ்வதி தேவியும், இடது பாதத்துக்கு அருகே கணபதியும்,வலது பாதத்துக்கு 
அருகே முருகப்பெருமானும் இருப்பதைக் காட்டி, அவைகள் 
அந்த கோவிலுக்கே உள்ள தனி சிறப்பு என்றும் சொன்னார். .

மேலும் அங்கே பூர்ணானந்தகிரி சுவாமிகள் பிரதிஷ்டை செய்த 
நவபாஷாண லிங்கம் பாதரச லிங்கம் மற்றும் இரு லிங்கங்களையும் 
எங்களுக்கு காட்டினார். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியிலும் நவராத்திரி நாட்களிலும்,ஆடி மாத வெள்ளிக் கிழமைகளிலும் விசேட பூஜை நடப்பதையும் அவரிடமிருந்து தெரிந்துகொண்டோம்.

ராஜராஜேஸ்வரி அம்மனின் படம் கீழே.  (Panoramio வுக்கு நன்றி)
 

வெளியே வரும்போது கோவிலை சுற்றிலும் உள்ள அழகிய செடி கொடிகள் வளர்க்கப்பட்டிருப்பதை இரசித்துக்கொண்டே, அவைகளின் தாவரப் பெயர்கள் 
(Botanical Names) பற்றி ஒருவரோடோருவர் கேட்டுக்கொண்டு, 
பல்கலைக்கழகத்தில் படித்ததை நினைவுபடுத்திக்கொண்டோம்.

கீழே இறங்கு முன்பு அங்கே சூடான பொங்கல் பிரசாதம் தந்தார்கள். 
அருகே ஊறுகாய் போன்றவைகள் விற்பனைக்கும் இருந்தன. நண்பர்கள் சிலர் தேவையானவற்றை வாங்கிக்கொண்டனர்.

பிறகு எல்லோரும் காலை 11.50 மணிக்கு Lady's Seat அமைந்துள்ள இடத்தை   
நோக்கிப் புறப்பட்டோம். தொடரும்16 கருத்துகள்:

 1. விசேசமான தகவலுடன் படங்களும் அருமை... தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 2. கோவிலில் ஸ்படிகமணி , ருதராட்சம் எல்லாம் தேர்ந்தெடுத்து விற்பனை செய்கிறார்கள்..

  ஸ்படிகமணிகள் இரண்டை உரசிக்காட்டினார்கள் ..
  தீப்பொறி பறந்த அற்புதம் கண்டோம்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தகவலுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! எங்கள் குழுவினருக்கு நேரம் இல்லாததால் அதிக நேரத்தை அங்கே செலவிடவில்லை.அதனால் ஸ்படிகமணி,ருத்திராட்சம் போன்றவைகளை பார்க்கவில்லை.

   நீக்கு
 3. படங்களும் தகவல்களும் அருமை
  தொடருங்கள்
  தொடர்கிறேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

   நீக்கு
 4. ஸ்படிகமணிகள் உரசினால் தீப்பொறி பறக்க வேண்டும். நல்ல ஸ்படிகமணிகளா என்று சோதனை செய்ய இந்த உபாயம். .என் பேரக் குழந்தைகள் எங்களுடன் வரத் தயங்குவார்கள். ஏன் என்றால் நாங்கள் செல்லும் அநேக இடங்கள் கோவில் சம்பந்தப் பட்டவையாய் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

   நீக்கு
 5. // சூடான பொங்கல் பிரசாதம் தந்தார்கள்//

  கோயிலுக்கு செல்ல வேண்டுமென்றால் குழந்தைகள் கேட்கும் முதல் கேள்வி சாப்பிட என்ன தருவார்கள் என்பதுதான். போட்டோவில் ஊர் பார்க்க சுத்தமாக உள்ளது. தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! சிறுவர்கள் மட்டுமல்ல குறிப்பிட்ட கோவில்களில் தரும் பிரசாதத்தை பெரியவர்கள் கூட விரும்புவதுண்டு.
   ஏற்காடு மலைப் பிரதேசமாதலால் மழைபெய்தாலும் உடனே வடிந்துவிடும் அதனால்தான் சாலைகள் நன்றாக உள்ளன. நீங்கள் சென்னைக்கு வந்து பாருங்கள். அரை மணி மழை பெய்தாலும் சாலையில் கணுக்காலுக்குமேல் தண்ணீர் நிற்கும்.சில இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்பதுண்டு. அதனால் சாலைகள் காலப்போக்கில் குண்டும் குழியுமாய் ஆகிவிடும்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 7. நானும் உங்களுடன் பயனத்தை தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

   நீக்கு
 8. // அந்த கோவிலின் முகப்புத் தோற்றத்தையும் படம் எடுத்தேன். ஏனோ தெரியவில்லை.அது சரியாக வரவில்லை. //

  இது மாதிரி சரியாக விழாத படத்தையும் (ஒரிஜினல்) கம்ப்யூட்டரில் சேர்க்கவும். அந்த படத்தினை ஒரு காப்பி செய்யுங்கள். அந்த காப்பி படத்தினை ரைட் க்ளிக் செய்து open with > தேர்வு செய்து Microsoft Office Picture Manager பக்கம் வாருங்கள். Edit Pictures தேர்வு செய்து படத்தினை உங்கள் விருப்பம்போல் எடிட் செய்யுங்கள். எந்த படத்தை எடிட் செய்வதாக இருந்தாலும் காப்பி எடுத்து செய்யுங்கள். (Microsoft Office சிஸ்டம் வசதி எல்லா கம்யூட்டரிலும் உண்டு. உங்களுக்கு ஏறகனவே இந்த எடிட் முறை தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஆர்வக் கோளாறு காரணமாக இதைச் சொன்னேன். மன்னிக்கவும் )

  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயில் பற்றிய பகிர்வுக்கு நன்றி.


  பதிலளிநீக்கு

 9. வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!நீங்கள் சொல்லித்தான் இந்த முறையில் படத்தை ஒழுங்கு படுத்தலாம் எனத் தெரிந்துகொண்டேன்.எனவே உங்களது ஆலோசனையை ஆர்வக்கோளாறாக நான் நினைக்கவில்லை.

  பதிலளிநீக்கு