திங்கள், 23 டிசம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 10அதுவரை சாப்பாட்டைப் பற்றியே நினைக்காமல் இயற்கை அழகை 
இரசித்துக் கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்த நாங்கள். 
காஃபி போர்டின் அரங்கத்தை அடைந்தவுடன்தான் வயிறென்ற ஒன்று 
இருப்பதும், சாப்பிடவேண்டும் என்பதும் நினைவுக்கு வந்தன.

காலையில் எங்களுக்கு தேநீர் தந்த நிறுவனமான Ruchi  
உணவகத்திடமே  மதிய உணவையும் தயார் செய்து அந்த அரங்கத்திற்கு 
கொண்டு வர நண்பர் பழனியப்பனும் வெங்கடராமணனும் ஏற்பாடு
செய்திருந்தார்கள். 

குறித்த நேரத்தில் மதிய உணவை அங்கு கொண்டு வருவதற்காக 
எங்கள் வகுப்பு நண்பர் D.கோவிந்தராஜன் எங்களோடு சுற்றுலாத் 
தலங்களைப் பார்க்க வராமல் அந்த உணவகத்திலேயே தங்கி அவர்கள் 
உணவைத் தயார்செய்து மதியம் நாங்கள் அந்த அரங்கத்திற்கு வருமுன்பே 
அது வந்து சேருமாறு பார்த்துக்கொண்டார். 

அரங்கம் சிறியதாக இருந்ததால் அனைவரும் உட்கார்ந்து 
சாப்பிடமுடியாது என்பதால் எடுத்தூண் (Buffet) முறையில் 
சாப்பிடுவதற்காக உணவு வகைகள் அங்கிருந்த மேசைகள் மேல் 
வைக்கப்பட்டிருந்தன. வெஜிட்டபிள் பிரியாணியுடன் மதிய விருந்து 
தடபுடலாக செய்யப்பட்டிருந்தது.

அசைவம் உண்போருக்கும் அசைவ உணவும் இருந்தது.அனைவரும் 
தட்டுகளில் அவரவர் விரும்பியதை எடுத்துக்கொண்டு கூடிப்பேசியபடி  
நின்றுகொண்டே இரசித்து உணவை சாப்பிட்டு முடித்தோம்.

எல்லோரும் சாப்பிட்டு முடிக்கவே மணி 3 ஆகிவிட்டது. மாலை   
திரும்பவும்  4.30 மணிக்கு அதே அரங்கத்திற்கு திரும்பவும் 
வரவேண்டும் என்பதால் எங்கள் பயண திட்டத்தின் படி எல்லா 
இடங்களையும் பார்க்க முடியாது எனத் தெரிந்துவிட்டது. அதனால் 
ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்யவும் அண்ணா பூங்காவிற்கு 
செல்ல மட்டுமே முடிவு செய்தோம்.

நாங்கள் பார்க்க நினைத்த Pagoda Point சென்று வர நேரமில்லை. 
ஏற்காடு ஏரியிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர்  தொலைவில் 
இருக்கும் இந்த இடத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன். இதை 
பக்கோடா முனை என்று சொல்வார்கள். பக்கோடாவிற்கும் இதற்கும் 
சம்பந்தம் இல்லையென்றாலும் தமிழில் Pagodaவை 
சொல்லும்போது அது பக்கோடா ஆகிவிட்டது!

இதை அங்குள்ள மலைவாழ் மக்கள் கருங்கற்களை வைத்து பிரமிட் 
போல் கட்டியதாக சொல்கிறார்கள். இது ஏதோ ஒரு நிகழ்வுக்காக 
கட்டியிருக்கவேண்டும். இங்கிருந்து பார்த்தால் வடக்கே தர்மபுரி 
மாவட்டத்தில் உள்ள ஹரூருக்கு(Harur) செல்லும் பாதையும் 
கிழக்கே ஆத்தூர் செல்லும் சாலையையும் பார்க்கலாம். வானம் மேக 
மூட்டமில்லாமலிருந்தால் அயோதத்தியா பட்டணத்தையும் 
பார்க்கலாம்.

இப்போது அதன் அருகே ஒரு இராமர் கோவிலும் 
கட்டியிருக்கிறார்களாம். இந்த இடத்தை எங்களால் பார்க்கமுடியாமல் 
போனது நேரமின்மையால் தான்.

Pagoda Point இன் படம் கீழே (கூகிளார்க்கு நன்றி.)
அடுத்து நாங்கள் பார்க்கத் தவறியது ஏற்காடு ஏரியிலிருந்து 
3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த  கிளியூர் நீர்வீழ்ச்சி! தமிழில் 
சரியாக சொல்லவேண்டுமென்றால் இதை கிளியூர் அருவி என்றே 
சொல்லவேண்டும். 

ஆனால் நாம் எல்லோரும் Water Falls என்பதை நேரடியாக மொழிபெயர்த்து 
நீர்வீழ்ச்சி என்று தவறாக சொல்வதால்,அரசின் தகவல் பலகையில் கூட 
அது கிளியூர் நீர்வீழ்ச்சி என்றே எழுதப்பட்டிருக்கிறது. ஏற்காடு செல்லும் அனைவரும் பார்க்கவேண்டிய அருவி. ஏற்காடு 
ஏரியிலிருந்தும் சேர்வராயன் மலையின் மற்ற பகுதியிலிருந்தும் வரும் 
உபரி நீர் கிளியூர் பள்ளத்தாக்கில் 300 அடி உயரத்திலிருந்து விழுவதால் 
ஏற்படும் அருவி இது.  

இங்கு  குறைந்தது இரண்டு  நாட்களாவது தங்கினால்தான்   
இவைகளையெல்லாம் பார்க்க முடியும். நாங்கள் பார்க்காததை   
நீங்களாவது பாருங்களேன் கூகிளார் உதவியால்.

அண்ணா பூங்காவும் ஏற்காடு ஏரியும் அருகே இருந்ததால் நாங்கள் 
அனைவரும் நடந்தே அருகில் உள்ள அண்ணா பூங்காவை 
அடைந்தோம். எங்களில் சிலர் மட்டும் ஏரியில் படகு சவாரி செய்துவிட்டு   
பின் பூங்காவிற்கு வருவதாக  சொல்லிச் சென்றனர். நானும் 
என் துணைவியாரும் முன்பே படகு சவாரி செய்திருந்ததால் பூங்காவிற்கு சென்றுவிட்டு பின்பு வெளியே வரும்போது ஏற்காடு ஏரியை படம் 
எடுக்கலாம் என எண்ணி நேரே மற்ற நண்பர்களோடு பூங்காவினுள் 
நுழைந்தோம். 


தொடரும்

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 3. பயணமும் படங்களும் நல்ல சுவை! Water Falls – நீர் வீழ்ச்சி வேறு அருவி என்பது வேறு என்பதைச் சரியாகச் சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 4. பகோடா பாயிண்ட் கல்லூரி சுற்றுலாவில் பார்த்தது. ஏரியிலும் படகுச் சவாரி செய்தோம்.

  மீண்டும் ஒரு முறை குடும்பத்தோடு செல்லவேண்டும்.....

  தொடருங்கள்... தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு
 5. ////ஏற்காடு ஏரியிலிருந்தும் சேர்வராயன் மலையின் மற்ற பகுதியிலிருந்தும் வரும் உபரி நீர் கிளியூர் பள்ளத்தாக்கில் 300 அடி உயரத்திலிருந்து விழுவதால் ஏற்படும் அருவி இது. //

  வருடம் முழுவதும் இந்த அருவியில் நீர்வரத்து இருக்குமா? அல்லது சீசனில் மட்டும்தானா? ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று அனைத்து இடங்களிலும் ஏரிகள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. சென்றமுறை குற்றாலம் சென்றிருந்தோம். தங்களது கட்டுரையிலிருந்து, அடுத்த தடவை ஏற்காடு செல்லலாம் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! வருடம் முழுதும் அருவியில் நீர் இருந்தாலும் மழைக்குப் பிறகு அதிகமாக இருக்கும். ஊட்டி கோடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில் இயற்கையாய் அமைந்த பள்ளத்தாக்குகளில் வந்து சேரும் உபரி நீரே ஏரிகளாக மாறி உள்ளன. தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் வாணியம்பாடி அருகே உள்ள ஏலகிரி மலையும் ஏற்காடு போன்றதுதான். அங்கும் அழகான ஏரிஉண்டு. அவசியம் பார்க்கவேண்டிய இடம்.

  பதிலளிநீக்கு