சனி, 14 டிசம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 8

ராஜராஜேஸ்வரி கோவில் உள்ள இடத்திலிருந்து சுமார் 5 அல்லது 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள Lady's Seat இருக்கும் இடத்தை நோக்கி காலை 11.50 மணிக்கு புறப்பட்டோம்.

ஏற்காடு ஏரியை சுற்றி செல்லும் சாலை வழியே சென்று அந்த இடத்தை அடைந்தபோது நேரம் மணி பகல் 12.30.அந்த இடத்தின் சிறப்பே அங்குள்ள ஒரு செங்குத்தான பகுதியில் (Cliff) இருக்கும் ஒரு சிறிய பாறைதான். இந்த பாறையில் தினம் மாலை வேளையில் ஒரு ஆங்கிலேய பெண்மணி அங்கு அமர்ந்து இயற்கையை இரசிப்பாராம். அதனால் இதற்கு Lady's Seat எனப் பெயர் வந்தது என்கிறார்கள்.

Lady's Seat உள்ள அந்த பாறை அருகே யாரையும் செல்ல அனுமதிப்பதில்லை. அதற்கு முன்பு கட்டப்பட்டுள்ள உயரமான கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி (Telescope) மூலம் கட்டணம் செலுத்திவிட்டு, காப்பித் தோட்டங்கள் மற்றும் காடுகள் ஊடே வளைந்து வளைந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளையும், தொலைவில் உள்ள சேலம் நகரையும், பார்த்து இரசிக்கலாம்.

இரவு வேளைகளில் அங்கிருந்து பார்த்தால் மின்னோளியில் ஒளிரும் சேலம் நகரம் ஆயிரம் நட்சத்திரங்கள் வானில் ஜொலிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துமாம்.

நான் சேலம் சிண்டிகேட் வங்கியின் கிளையில் முதுநிலை மேலாளராக பணியாற்றியபோது இங்கு பலமுறை வந்திருக்கிறேன்.முதன் முதல் இந்த இடத்திற்கு வந்தபோது, அங்கிருந்த ஊழியர் தொலை நோக்கி மூலம் சேலம் நகரையும், மேட்டூர் நீர் தேக்கத்தையும் பார்க்கலாம் என்றார். அவர் சொன்னதைக் கேட்டு தொலை நோக்கி மூலம் நான் பார்த்தபோது எனக்குத் தெரிந்தவை வெறும் கட்டிடங்கள் மட்டும் தான்! காரணம் வானம் மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் தான் அவைகளைப் பார்க்க இயலும்.

ஒரு தடவை சேலம் வந்த எங்கள் மண்டலத்தின் துணைப் பொது மேலாளரை இங்கு அழைத்து வந்திருக்கிறேன். அவர் பார்ப்பதற்கு கறார் மனிதர் போல் தோன்றினாலும் வேடிக்கையாக பேசக்கூடியவர்.

அவரை இந்த தொலை நோக்கி உள்ள கட்டிடத்திற்கு அழைத்து வந்து ‘சார்.இந்த தொலை நோக்கி மூலம் சேலம் நகரைப் பார்க்க முடியும்.’ என்றேன். ‘அப்படியா?’ என்று சொல்லிவிட்டு அவர் பார்த்தார்.

அவர் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, நான் ‘சார். சேலம் நகர் தெரிகிறதா?’ என்றபோது, அவர் உடனே ‘சபாபதி! சேலமும் தெரிகிறது. அங்கு செவ்வாய்பேட்டையில் உள்ள நமது வங்கியின் கிளையும் தெரிகிறது.அதில் நம் வங்கி ஊழியர் சங்கத்தினர் என்னை ‘வரவேற்று’ வைத்திருக்கும் தட்டிகளும் தெரிகின்றன.’ என்று. ஒன்றும் தெரியவில்லை என்பதை அப்படி வேடிக்கையாக சொன்னார்.

(அவர் வந்த சமயம் வங்கி ஊழியர்கள் சங்கம் அவர்களது கோரிக்கைகளை எழுதி தட்டிகளில் ஒட்டி கிளையில் வைத்திருந்தார்கள்.)

Lady's Seat இருக்கும் இடத்திற்கு நாங்கள் சென்றபோது வழியில் இருந்த கடைக்காரர்கள் எங்களை சூழ்ந்துகொண்டு பழங்கள் வாங்கி செல்லுங்கள் என்று வற்புறுத்தினார்கள்.அவர்களிடம் ஏதாவது வாங்காமல் நம்மை மேலே செல்ல விடமாட்டார்கள் போல என நினைத்துக்கொண்டு நாங்களும் அங்கு அவர்கள் விற்ற கொய்யா பழங்களை (பழங்கள் என நினைத்து) வாங்கிக்கொண்டு நடந்தோம்.

அவைகளை சுவை(!)க்கும் போதுதான் தெரிந்தது அவைகள் பழமும் அல்ல செங்காயும் அல்ல என்று. ஒரே துவர்ப்பு. காசைக் கொடுத்து தேளைக் கொட்டிக்கொண்டாற்போல், காசைக் கொடுத்து வாயில் கசப்பு சுவையை ஏற்றிக் கொண்டது தான் மிச்சம்.

நாங்கள் சென்றபோது நிறைய சுற்றுலா பயணிகள் அங்கு இருந்தனர். அவர்கள் தொலை நோக்கி மூலம் பார்த்து முடித்த பின்னர் எங்கள் குழுவினர் உள்ள 50 பேரும் பார்க்க நேரம் ஆகும் என்பதால் நாங்கள் மேலே ஏறி சென்று பார்க்கவில்லை.

அதற்கு அருகே ஒரு வட்டவடிவில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் இருந்தும் வெறும் கண்களால் இயற்கை அழகை இரசித்தோம்.

தொலைநோக்கி அமைந்துள்ள கட்டிடமும் அதற்கு அருகே உள்ள கட்டிடமும் கூகிளார் உதவியுடன் கீழே






அதற்கு அருகே பாதுகாப்பிற்காக வேலி போல் அமைக்கப்பட்டிருந்த வலை அருகே நின்று நண்பர்கள் சிலர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.





அந்த இடத்தில் இருந்து நான் எடுத்த புகைப்படம் கீழே





இந்த இடத்தைப் பற்றி திரைப்பட இரசிகர்களுக்கான சுவாரஸ்யமான தகவல் ஒன்று. நான் முன்பே எழுதியிருந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பான, 1950 ஆம் ஆண்டு Ellis R.Dungan என்ற அமெரிக்க இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த, புகழ் பெற்ற மந்திரிகுமாரி என்ற திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சி இந்த இடத்தில் தான் எடுக்கப்பட்டதாம்.

ராஜ குருவின் மகன் பார்த்திபன் (S.A.நடராஜன்) அரசகுமாரியை தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக, தனது மனைவியான மந்திரிமகளான அமுதவல்லியை (மாதுரி தேவி) இந்த மலையுச்சிக்கு தந்திரமாக அழைத்து வந்து கொல்லப் போவதாக சொன்னதும் அவள் புத்திசாலித்தனமாக அவனை மூன்று முறை வணங்குவதுபோல் நடித்து கீழே தள்ளி கொன்றுவிடுவார்.

இந்த உச்சக்கட்ட காட்சிக்கு முன்னர் வரும் ‘வாராய் நீ வாராய்’ என்று திருச்சி லோகநாதன் அவர்களும் திருமதி ஜிக்கி அவர்களும் பாடிய பாடல் பிரசித்திபெற்ற ஒன்று. அந்த காட்சியின் காணொளி உங்களுக்காக கீழே தந்திருக்கிறேன்.







இந்த படம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியில் வரும் நிகழ்வு ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்திற்கு திரைக்கதை உரையாடல் எழுதியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். இந்த படத்திற்கு கதாநாயகனாக நடிக்க தனது நண்பரான திரு எம்.ஜி‌.ஆர் அவர்களை கலைஞர் மாடர்ன் தியேட்டேர்ஸ் சுந்தரம் அவர்களிடம் சிபாரிசு செய்ததாகக் கேள்வி.


Lady's Seat ஐ பார்த்து விட்டு அருகில் இருந்த அரசினர் ரோஜா தோட்டத்திற்கு சென்றோம்.



தொடரும்


16 கருத்துகள்:

  1. நீண்ட நாட்களாகி விட்டது தங்கள் வலைப பக்கம் வந்து. 8 பகுதிகளையும் ஒரே மூச்சாகப் படித்து விட்டேன். ஏற்காடு பயணத்தை சுவாரசியமாகவும் படங்களுடனும் தங்களுக்கே உரிய பாணியில் அழகாகப் பதிவிட்டிருக்கிறீர்கள். நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  2. பல நாட்களுக்குப்பிறகு ஒரு இடத்தை பார்க்கும்போது அது சம்பந்தப் பட்ட பழைய நினைவுகளும் வருதலை நகைச்சுவையோடு எழுதி உள்ளீர்கள் உங்கள் உயரதிகாரி சேலத்தைப் பார்த்த கதையைச் சொல்கிறேன். தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  3. அருமையான பாடலாச்சே...! நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  4. டூரிஸ்ட் இடங்களில் ஏமாற்றுவது, தலையில் தானே மண் கொட்டிக்கொள்வது போல. ஒருமுறை ஏமாந்தவர்கள், நிச்சயம் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். அவநம்பிக்கையோடு, புதிதாக வருபவர்களும் பொருட்களை வாங்க யோசிப்பார்கள். சில சமயங்களில் அப்படி விற்பவர்களையும் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. எனக்கு துவர்ப்பு, கசப்பு பிரச்சனையில்லை. விரும்பியே சாப்பிடுவேன். ஏற்காட்டில் மலைவாழ் மக்கள் இருக்கிறார்களா? தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! ஏற்காடு ஒரு காலத்தில் மலைவாழ் மக்களின் இருப்பிடமாக இருந்ததாம். பின்னர் தொண்டை நாட்டு மக்கள் குடியேறியதன் காரணமாக அவர்களது சனத்தொகை தற்போது குறைந்து விட்டது. மலையில் வாழ்வதால் மலைவாழ் கவுண்டர்கள் என அழைக்கப்பட்ட இவர்கள், பின்னர் காலப்போக்கில் மலையாளி கவுண்டர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் உண்மையில் மலையாளிகளுமல்லர். கவுண்டர்களும் அல்லர். இவர்கள் சீர் மரபினர் வகுப்பின் கீழ் வருவதால் இவர்களுக்கு அரசினுடைய சலுகைகள் உண்டு. ஆனால் சில வகுப்பினர் தங்களையும் மலையாளி கவுண்டர்கள் என கூறிக்கொண்டு அந்த சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள் என்பது தான் வேதனையான தகவல்.

      நீக்கு
  5. இந்தப் பாடல் மிகவும் கருத்தாழம் கொண்டது. இப்படிப்பட்ட பாடல்கள் இப்போது எங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி. கந்தசாமி அவர்களே! இப்போது கருத்தாழம் மிக்க பாடல்கள் எங்கே இருக்கின்றன. வேற்றுமொழி கலந்த, பொருளற்ற பாடல்களோடு கூடிய வெறும் சப்தங்கள் தானே காதை கிழிக்கின்றன.

      நீக்கு
  6. அருமையான கட்டுரை. கல்லூரி காலத்தில் ஏற்காடு சுற்றுலா சென்றது..... மீண்டும் செல்லவேண்டும் குடும்பத்துடன்......

    கருத்துள்ள பாடல். பழனி. கந்தசாமி ஐயா சொல்வது போல இப்போது இப்படிப்பட்ட பாடல்கள் வருவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! அடுத்த தடவை தில்லியிலிருந்து தமிழகம் வரும்போது அவசியம் குடும்பத்தோடோடு ஏற்காடு போய் வாருங்கள்.

      நீக்கு
  7. Ladies Seat பாறை பற்றி நிறைய செய்திகள் சுவையாகத் தந்தீர்கள். துவர்ப்பும் ஒரு சுவைதான். அதனை உங்களிடம் ருசிக்கச் செய்த கடைக்காரர்களைத் திட்ட வேண்டியதில்லை. அவர்கள் அந்த பழங்களை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று பழுக்க வைத்து
    சாப்பிடுவீர்கள் என்று நினைத்து இருக்கலாம்.

    எல்லீஸ் டங்கன், கலைஞர், மந்திரிகுமாரி – சினிமா செய்தியும் அந்த மலையும், பாடலும் நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு

  8. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! துவர்ப்பும் ஒரு சுவைதான் ஆனாலும் நமது நாக்கு இனிப்புச் சுவையையல்லவா விரும்புகிறது!

    பதிலளிநீக்கு
  9. ஒரு தடவை சேலம் வந்த எங்கள் மண்டலத்தின் துணைப் பொது மேலாளரை இங்கு அழைத்து வந்திருக்கிறேன். அவர் பார்ப்பதற்கு கறார் மனிதர் போல் தோன்றினாலும் வேடிக்கையாக பேசக்கூடியவர். //

    பார்ப்பதற்கு கறாராக இருப்பவர்கள் உண்மையில் sense of humour உள்ளவர்களாக இருப்பதை நானும் பார்த்திருக்கிறேன். என்னையும் கூட அப்படி சொன்னவர்கள் உண்டு.

    படங்கள் அத்தனையும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

      நீக்கு