வெள்ளி, 9 நவம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 14


பொருளாதார வசதியின்மையால், தகுதி உள்ள மாணவர்கள்
தொழிற்கல்வி உட்பட உயர் கல்வியை பெறமுடியாமல்
படிப்பை நிறுத்தக்கூடாது என்பதற்காக, மைய அரசு
மேலே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்விக் கடனை
தரவேண்டும் என்று வங்கிகளுக்கு ஆணை இடுவதும்,
அப்படியும் கடன் தர மறுக்கின்ற அல்லது தயங்குகின்ற
வங்கிகளின் கிளைகளுக்கு நீதிமன்றமே தலையிட்டு
கல்விக் கடன் கொடுக்கும்படி ஆணையிடுவதும் இப்போது
நடக்கின்ற மற்றும் நாம் பார்க்கின்ற ஒன்று.

ஆனால் வங்கிகள் நாட்டுடைமையாக்கப் படுவதற்கு முன்பே,
அதாவது 19 ஜூலை 1969 க்கு முன்பே, மாணவர்களும்
பெற்றோர்களும் படும் கஷ்டத்தை உணர்ந்து, மாணவர்கள்
கல்லூரியில் படிப்பைத் தொடர கல்விக் கடன் திட்டத்தை
கொண்டு வந்தது எங்கள் வங்கிதான் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
 
மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற படித்தவுடன்
பணி கிடைக்கக்கூடிய படிப்புக்குத்தான் முதலில் கடன் தர
எங்கள் வங்கி ஆரம்பித்தது. பின்னால் மற்ற படிப்புகளுக்கும்
அதை விரிவுபடுத்தியபோது அதனால் பயன் பெற்றோர் பலர்
என்பது பதிவு செய்யவேண்டிய செய்தி. 

ஆனால் எங்கள் வங்கியில் அந்த சிறப்புத்திட்டம் இருந்தும்  
ஒரு சில கிளை மேலாளர்கள், கல்விக்கடன் கொடுக்க 
தயங்கினர் என்பது உண்மை.  

கல்விக் கடனைப் பெற்றவர்கள் படித்து முடித்தபின் ஏழு   
ஆண்டுகளில் தவணைத்தொகையாக  திருப்பி செலுத்தலாம்  
என்பது வங்கியின் விதி. 

கல்விக்கடன் தரும் மேலாளர்கள், மூன்றிலிருந்து ஐந்து 
வருடங்கள் தான் ஒரு கிளையில் இருப்பார்கள்.அவர்கள்  
இருக்கும் வரை அவர்கள் தந்த அந்த கடன்களை திருப்பி  
செலுத்தும் காலம் வராது என்பதால் அவர்களால் அந்த  
கடன் பெற்றவர்கள் தவணை கட்டும் காலத்தில் ஒழுங்காக  
தவணைத் தொகையை திருப்பிக் கட்டினார்களா  
என்பதை  Follow up செய்யமுடியாது.


அடுத்து வரும் மேலாளர் அதை வசூலிப்பதில் சுணக்கம்
காட்டினால்,கடன் கொடுத்த மேலாளர் ஓய்வு பெறும்போது
அந்த வாராக் கடன்களால் அவருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு
உண்டு என்பது தான் சிலர் கல்விக்கடன் தர தயங்கிய
காரணம்.

நான் சக ஊழியர்களிடம் சொல்வதுண்டு. ‘கடன்
தேவைப்படுவோருக்கு உதவவே, இந்த பொறுப்பை வங்கி
நமக்கு தந்திருக்கிறது. எனவே பதவியில் இருக்கும்போது
அதை நல்லபடியாக செய்வோம் என்று’.

கல்விக் கடன் பெற்றவர்கள் தாங்கள் உயர் கல்வி பெற
உதவிய வங்கியை ஏமாற்றமாட்டார்கள் என்ற நம்பிக்கை
எனக்கு இருந்ததால், வங்கிக் கிளையின் மேலாளராக இருந்த
15 ஆண்டுகளில், நான் அநேகம் பேருக்கு கல்விக்கடன்
கொடுத்து அவர்கள் படிப்பைத் தொடர உதவியிருக்கிறேன்.  

அப்படி எனது கிளையில் கல்விக் கடன் பெற்ற இரு இளம் வாடிக்கையாளர்களோடு ஏற்பட்ட அனுபவம் நான் சந்தித்த
மற்ற வாடிக்கையாளர்களோடு ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து
மாறுபட்டது. 


தொடரும்

சனி, 3 நவம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 13



வழக்கமாக உற்சாகத்தோடு பேசும் அந்த வாடிக்கையாளர்
சுரத்தில்லாமல் விடைகொடுத்த காரணம் தெரியாமல் கிளைக்கு
திரும்பிய நான் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனாலும் அவர் அடுத்தமுறை கிளைக்கு வரும்போது அதன்  
காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என
நினைத்திருந்தேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு நான்
ஆய்வாளர்களுடன் ‘பிஸியாக’ இருந்ததால் அதைப்பற்றி 
நினைக்க நேரமில்லை.

ஆய்வு முடிந்து ஆய்வாளர்கள் போனபின், பல முறை அந்த
வாடிக்கையாளர் கிளைக்கு வந்தார். ஆனால் என்னைப் 
பார்ப்பதை ஏனோ தவிர்த்து வந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் அவரது மிகைப்பற்று கணக்கை 
புதுப்பிக்கக்கூட, என்னிடம் வராமல் அவரது கணக்கைக் 
கவனித்து வந்த அலுவலரிடம் ஆவணங்களைக் கொடுத்து 
புதுப்பித்துக்கொண்டார்.அவரது அந்த செயல் எனக்கு 
விசித்திரமாகப் பட்டது.

ஐந்து ஆண்டுகள் அந்த கிளையியில் பணியாற்றியபின், 
என்னைஅருகில் உள்ள இன்னொரு மாவட்டத்தின் 
தலைநகரில் இருந்த முதன்மை கிளைக்கு மாற்றி 
ஆணை வந்தது.

நான் அந்த கிளையிலிருந்து விடைபெறும் நாளன்று, அந்த
வாடிக்கையாளர் அவரது வேலையாக வங்கிக்கு வந்தபோது
Counter ல் இருந்த அலுவலர் சொல்லியிருக்கிறார் நான் 
மாற்றலாகி வேறு ஊருக்குப் போகிறேன் என்று.

உடனே என்னைப் பார்க்க எனது அறைக்குள் வந்தார். பல 
நாட்கள் கழித்து வந்த அவரைப் பார்த்து மகிழ்ச்சியோடு 
வரவேற்று உட்கார சொன்னேன். பின்னர், ‘ஏன் இத்தனை 
நாட்கள் என்னைப் பார்ப்பதை தவிர்த்தீர்கள் எனத்தெரிந்து கொள்ளலாமா?’என்றேன்.

அதற்கு அவர், ‘சார் உங்கள் பேரில் எனக்கு அசாத்திய கோபம்.
வருத்தமும் கூட. அதனால்தான் உங்களை பார்ப்பதைத் 
தவிர்த்தேன். இன்று கூட நீங்கள் இந்த ஊரைவிட்டு 
போகிறீர்கள் என்று கேள்விப்பட்டதும், எனது ஆதங்கத்தை 
உங்களிடம் சொல்லவேண்டும் என்பதால் வந்தேன்.’என்றார்.

எனக்கு ஒரே ஆச்சரியம். என்மேல் இவர் கோபம் கொள்ளும் 
அளவுக்கு நான் என்ன செய்தேன் என்று தெரியாததால்,அதை 
அவரிடமே கேட்க எண்ணி, ‘என்ன காரணத்திற்காக என் மேல் 
உங்களுக்கு கோபம் எனத் தெரிந்துகொள்ளலாமா?’ 
என்று கேட்டேன்.

உடனே அவர், ‘சார். இந்த வங்கி ஆரம்பித்த நாளிலிருந்து 
கணக்கு ஆரம்பித்து பரிவர்த்தனை செய்து வந்திருக்கிறேன்.
என்றைக்காவது எனது கணக்கில் வரையறுக்கப்பட்ட 
அளவுக்குமேல் பணத்தை எடுத்ததுண்டா அல்லது 
காலாண்டு வட்டியைத்தான் கட்டாமல் இருந்திருப்பேனா?’ 
என்று ஆவேசமாகக் கேட்டார்.  

அதற்கு, ‘நான் அப்படி சொல்லவில்லையே.
சொல்லப்போனால் எங்களிடம் உள்ள மிகச் சிறந்த 
மிகைப்பற்றுக் கணக்குகளில் உங்களுடையதும் ஒன்று 
என்றல்லவா நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
அப்படி இருக்கையில் நீங்கள் இப்படிக் கேட்கவேண்டிய 
அவசியம் என்ன?’ என்றேன்.

‘இப்படி சொல்லும் நீங்கள் அன்றைக்கு உங்கள் வங்கியின்
ஆய்வாளருடன் வந்தபோது அவர் எனது கணக்கு பற்றி
கேட்டதற்கு நீங்கள் அவ்வாறு சொல்லவில்லையே?’என்றார்.

‘இல்லையே உங்கள் கணக்கைப் பற்றி நல்ல விதமாகத்தானே
சொன்னேன். நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லையே.’
என்றேன்.

இல்லை சார் நீங்கள் சொன்னதை மறந்துவிட்டீர்கள்.அவரிடம்
‘He is enjoying overdraft facility.’  என்று நீங்கள் சொன்னீர்கள். 
அப்படி சொன்னதில் எனக்கு வருத்தம் தான். நான் ஒன்றும் 
கடன்வாங்கி விட்டு வட்டி கட்டாமல் இருந்ததில்லையே.

உண்மையில் நானே ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் 
கிளைக்கு வந்து எவ்வளவு வட்டி கட்டவேண்டும் எனக் 
கேட்டு கட்டியிருக்கிறேன்.அப்படியிருக்கும்போது, நான் 
overdraft facility ஐ  enjoy பண்ணுகிறேன் என்று நீங்கள் 
சொன்னது சரியில்லை.அதனால்தான் உங்கள் பேரில் 
எனக்குக் கோபம்.' என்றார்.

அதைக்கேட்டு எனக்கு சிரிப்பாகவும் அதே நேரத்தில் 
அதிர்ச்சியாகவும் இருந்தது. உண்மையில் என்ன நடந்தது 
என்றால் ஆய்வின்போது அந்த அலுவலர் அவரது 
கணக்கைப்பற்றிக் கேட்டபோது, நான்’ ‘He is enjoying 
Overdraft facility and the limit is one lakh.’ என்றேன்.

வங்கியில் வாடிக்கையாளர்கள் பெற்றிருக்கின்ற கடன்கள் 
பற்றி சொல்லும்போது, வங்கியின் மொழிப்பாணியில் 
(Banking Parlance), He has availed a loan என்றோ அல்லது 
He is enjoying the facility என்றோ சொல்வது வழக்கம்.

அந்த வாடிக்கையாளர், அவ்வாறு நான் சொன்னதை 
தவறாகப்புரிந்துகொண்டு, வங்கியின் பணத்தை அவர் 
அனுபவிப்பதாக நான்  கூறுவதாக எண்ணியிருக்கிறார்.
அதனால் ஏற்பட்டகோபத்தால் என்னைப் பார்ப்பதையும், 
என்னிடம் பேசுவதையும் அதுவரை தவிர்த்து 
வந்திருக்கிறார்.

உடனே நான் அவரிடம் நான் அந்த கருத்தில் 
சொல்லவில்லைஎன்றும் வங்கியின் நடைமுறையில் கடன் 
பெற்றுள்ளதைகுறிப்பிடும்போது அவ்வாறுதான் சொல்வது 
வழக்கம் என்றும்,அவர் கடன் பெற்று, கட்டாமல் 
அனுபவிப்பதாக சொல்லவில்லை என்றும் கூறினேன்.

அவர் அதை நம்பவில்லை என்று அறிந்ததும், ‘What are the 
facilitiesenjoyed by the party?’ என வங்கியின் வட்டார 
அலுவலகத்திலிருந்துகேட்டு வந்த கடிதங்கள் பலவற்றையும் 
காட்டினேன். அவர் அதைக்கேட்டு சமாதானம் அடைந்து 
திரும்பினாலும், நான் பேசியதைஅவர் தவறாக 
புரிந்துகொண்டு இத்தனை நாட்கள் பேசாமல் இருந்துவிட்டாரே 
என்ற வருத்தம் ஏற்பட்டது நிஜம்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு, ஆங்கிலம் (முழுதும்) தெரியாத
வாடிக்கையாளர் முன்னால் ஆங்கிலத்தில் பேசுவதை தவறு
என்பதை தெரிந்துகொண்டதால், அவ்வாறு பேசுவதை 
தவிர்த்தேன்.அப்படி பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, 
அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான 
ஆங்கிலத்திலேயே பேசினேன். 

தொடரும்