சனி, 3 நவம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 13வழக்கமாக உற்சாகத்தோடு பேசும் அந்த வாடிக்கையாளர்
சுரத்தில்லாமல் விடைகொடுத்த காரணம் தெரியாமல் கிளைக்கு
திரும்பிய நான் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனாலும் அவர் அடுத்தமுறை கிளைக்கு வரும்போது அதன்  
காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என
நினைத்திருந்தேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு நான்
ஆய்வாளர்களுடன் பிஸியாக இருந்ததால் அதைப்பற்றி 
நினைக்க நேரமில்லை.

ஆய்வு முடிந்து ஆய்வாளர்கள் போனபின், பல முறை அந்த
வாடிக்கையாளர் கிளைக்கு வந்தார். ஆனால் என்னைப் 
பார்ப்பதை ஏனோ தவிர்த்து வந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் அவரது மிகைப்பற்று கணக்கை 
புதுப்பிக்கக்கூட, என்னிடம் வராமல் அவரது கணக்கைக் 
கவனித்து வந்த அலுவலரிடம் ஆவணங்களைக் கொடுத்து 
புதுப்பித்துக்கொண்டார்.அவரது அந்த செயல் எனக்கு 
விசித்திரமாகப் பட்டது.

ஐந்து ஆண்டுகள் அந்த கிளையியில் பணியாற்றியபின், 
என்னைஅருகில் உள்ள இன்னொரு மாவட்டத்தின் 
தலைநகரில் இருந்த முதன்மை கிளைக்கு மாற்றி 
ஆணை வந்தது.

நான் அந்த கிளையிலிருந்து விடைபெறும் நாளன்று, அந்த
வாடிக்கையாளர் அவரது வேலையாக வங்கிக்கு வந்தபோது
Counter ல் இருந்த அலுவலர் சொல்லியிருக்கிறார் நான் 
மாற்றலாகி வேறு ஊருக்குப் போகிறேன் என்று.

உடனே என்னைப் பார்க்க எனது அறைக்குள் வந்தார். பல 
நாட்கள் கழித்து வந்த அவரைப் பார்த்து மகிழ்ச்சியோடு 
வரவேற்று உட்கார சொன்னேன். பின்னர், ஏன் இத்தனை 
நாட்கள் என்னைப் பார்ப்பதை தவிர்த்தீர்கள் எனத்தெரிந்து கொள்ளலாமா?’என்றேன்.

அதற்கு அவர், சார் உங்கள் பேரில் எனக்கு அசாத்திய கோபம்.
வருத்தமும் கூட. அதனால்தான் உங்களை பார்ப்பதைத் 
தவிர்த்தேன். இன்று கூட நீங்கள் இந்த ஊரைவிட்டு 
போகிறீர்கள் என்று கேள்விப்பட்டதும், எனது ஆதங்கத்தை 
உங்களிடம் சொல்லவேண்டும் என்பதால் வந்தேன்.என்றார்.

எனக்கு ஒரே ஆச்சரியம். என்மேல் இவர் கோபம் கொள்ளும் 
அளவுக்கு நான் என்ன செய்தேன் என்று தெரியாததால்,அதை 
அவரிடமே கேட்க எண்ணி, என்ன காரணத்திற்காக என் மேல் 
உங்களுக்கு கோபம் எனத் தெரிந்துகொள்ளலாமா?’ 
என்று கேட்டேன்.

உடனே அவர், சார். இந்த வங்கி ஆரம்பித்த நாளிலிருந்து 
கணக்கு ஆரம்பித்து பரிவர்த்தனை செய்து வந்திருக்கிறேன்.
என்றைக்காவது எனது கணக்கில் வரையறுக்கப்பட்ட 
அளவுக்குமேல் பணத்தை எடுத்ததுண்டா அல்லது 
காலாண்டு வட்டியைத்தான் கட்டாமல் இருந்திருப்பேனா?’ 
என்று ஆவேசமாகக் கேட்டார்.  

அதற்கு, நான் அப்படி சொல்லவில்லையே.
சொல்லப்போனால் எங்களிடம் உள்ள மிகச் சிறந்த 
மிகைப்பற்றுக் கணக்குகளில் உங்களுடையதும் ஒன்று 
என்றல்லவா நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
அப்படி இருக்கையில் நீங்கள் இப்படிக் கேட்கவேண்டிய 
அவசியம் என்ன?’ என்றேன்.

இப்படி சொல்லும் நீங்கள் அன்றைக்கு உங்கள் வங்கியின்
ஆய்வாளருடன் வந்தபோது அவர் எனது கணக்கு பற்றி
கேட்டதற்கு நீங்கள் அவ்வாறு சொல்லவில்லையே?’என்றார்.

இல்லையே உங்கள் கணக்கைப் பற்றி நல்ல விதமாகத்தானே
சொன்னேன். நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லையே.
என்றேன்.

இல்லை சார் நீங்கள் சொன்னதை மறந்துவிட்டீர்கள்.அவரிடம்
‘He is enjoying overdraft facility.’  என்று நீங்கள் சொன்னீர்கள். 
அப்படி சொன்னதில் எனக்கு வருத்தம் தான். நான் ஒன்றும் 
கடன்வாங்கி விட்டு வட்டி கட்டாமல் இருந்ததில்லையே.

உண்மையில் நானே ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் 
கிளைக்கு வந்து எவ்வளவு வட்டி கட்டவேண்டும் எனக் 
கேட்டு கட்டியிருக்கிறேன்.அப்படியிருக்கும்போது, நான் 
overdraft facility   enjoy பண்ணுகிறேன் என்று நீங்கள் 
சொன்னது சரியில்லை.அதனால்தான் உங்கள் பேரில் 
எனக்குக் கோபம்.' என்றார்.

அதைக்கேட்டு எனக்கு சிரிப்பாகவும் அதே நேரத்தில் 
அதிர்ச்சியாகவும் இருந்தது. உண்மையில் என்ன நடந்தது 
என்றால் ஆய்வின்போது அந்த அலுவலர் அவரது 
கணக்கைப்பற்றிக் கேட்டபோது, நான் ‘He is enjoying 
Overdraft facility and the limit is one lakh.’ என்றேன்.

வங்கியில் வாடிக்கையாளர்கள் பெற்றிருக்கின்ற கடன்கள் 
பற்றி சொல்லும்போது, வங்கியின் மொழிப்பாணியில் 
(Banking Parlance), He has availed a loan என்றோ அல்லது 
He is enjoying the facility என்றோ சொல்வது வழக்கம்.

அந்த வாடிக்கையாளர், அவ்வாறு நான் சொன்னதை 
தவறாகப்புரிந்துகொண்டு, வங்கியின் பணத்தை அவர் 
அனுபவிப்பதாக நான்  கூறுவதாக எண்ணியிருக்கிறார்.
அதனால் ஏற்பட்டகோபத்தால் என்னைப் பார்ப்பதையும், 
என்னிடம் பேசுவதையும் அதுவரை தவிர்த்து 
வந்திருக்கிறார்.

உடனே நான் அவரிடம் நான் அந்த கருத்தில் 
சொல்லவில்லைஎன்றும் வங்கியின் நடைமுறையில் கடன் 
பெற்றுள்ளதைகுறிப்பிடும்போது அவ்வாறுதான் சொல்வது 
வழக்கம் என்றும்,அவர் கடன் பெற்று, கட்டாமல் 
அனுபவிப்பதாக சொல்லவில்லை என்றும் கூறினேன்.

அவர் அதை நம்பவில்லை என்று அறிந்ததும், ‘What are the 
facilitiesenjoyed by the party?’ என வங்கியின் வட்டார 
அலுவலகத்திலிருந்துகேட்டு வந்த கடிதங்கள் பலவற்றையும் 
காட்டினேன். அவர் அதைக்கேட்டு சமாதானம் அடைந்து 
திரும்பினாலும், நான் பேசியதைஅவர் தவறாக 
புரிந்துகொண்டு இத்தனை நாட்கள் பேசாமல் இருந்துவிட்டாரே 
என்ற வருத்தம் ஏற்பட்டது நிஜம்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு, ஆங்கிலம் (முழுதும்) தெரியாத
வாடிக்கையாளர் முன்னால் ஆங்கிலத்தில் பேசுவதை தவறு
என்பதை தெரிந்துகொண்டதால், அவ்வாறு பேசுவதை 
தவிர்த்தேன்.அப்படி பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, 
அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான 
ஆங்கிலத்திலேயே பேசினேன். 

தொடரும்

22 கருத்துகள்:

 1. இப்படி ஆங்கிலம் புரியாததால் நடந்த ஒரு சம்பவம். ஒரு மீட்டிங்கில் என் சக ஊழியர் ஒரு பாயின்டை விடாமல் வற்புறுத்திக்கொண்டே இருந்தார். இன்னொரு சக ஊழியர் "Don't be dogmatic" என்று சொன்னார். இந்த ஆங்கில பிரயோகம் முதல் ஊழியருக்குப் புரியாமல் "என்ன, என்னை நாய் என்றா சொல்கிறாய்?" என்று கோபமாகப் பேச, அப்புறம் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சமாதனம் பண்ணினோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 2. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  பதிலளிநீக்கு
 4. ஒரு சிறிய வார்த்தை என்னவேண்டுமானாலும் செய்யும்...

  தொடர்கிறேன்..
  tm1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 5. அடடா ஆங்கில வார்த்தையால் வந்த அவஸ்தை எத்தனை நாள் அனுபவித்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

   நீக்கு
 6. அரைகுறை ஆசாமிகள் எப்போதுமே அப்படித்தான். நல்ல அனுபவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 7. தற்போது வங்கிப் பணிகளுக்கான பொது நுழைவுத்தேர்வு பற்றி உங்கள் கருத்து என்ன? கடந்த ஆண்டு குறிப்பிட்ட சில வங்கி நேர்காணல்களில் இனம், மொழி அடிப்படையில் தேர்வுகள் நடந்துள்ளது ... தங்களுக்கு வேண்டப்பட்ட சிலரின் சிபாரிசுகளின் அடிப்படையில் பணிகள் கிடைத்துள்ளது இதை தடுக்க இயலாதா? சென்ற முறை 150+ மதிப்பெண்கள் எடுத்தும் பணிக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை ... கிளார்க் பணியில் வட்டார மொழியறிவு மிகவும் அவசியமா? குறிப்பாக எழுத ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு முத்துக்குமார் சின்னசாமி அவர்களே! ஊரில் இல்லாததால் தங்களது ஐயங்களுக்கு உடனே பதில் அளிக்க இயலவில்லை. அவைகளுக்கான எனது கருத்துக்கள்.

   1.தற்போதைய நடைமுறையான பொது நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்து முன்பு, BSRB என்ற வங்கிப்பணிக்கான பணியாளர்கள் தேர்வு வாரியம் ஒவ்வொரு வங்கிக்கும் தனியாக தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்ததால், பணியில் சேர விரும்புவோர் ஒவ்வொரு வங்கிக்கு தனித்தனியாக தேர்வு எழுதியும் அதற்காக கட்டணத்தை தனித்தனியாக கட்டியும், பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகினார். அதைத் தவிர்ப்பதற்கே IBPS எனப்படும் Institute of Banking Personnel Selection என்ற தன்னாட்சி நிறுவனத்தின் மூலம் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வை எழுதி கிடைக்கும் Scorecard ஒரு வருடத்திற்கு எல்லா வங்கிகளின் ஆளெடுப்புக்கும் (Recruitment) செல்லத்தக்கது என்பதால் ஒரு வருடத்திற்கு திரும்பத்திரும்ப தேர்வு எழுதி பணத்தையும், நேரத்தையும் விரயம் செய்யத் தேவை இல்லை. எனவே இது ஒரு வகையில் நல்லதுதான்.

   2.வங்கிகளில் இனம், மொழி அடிப்படையில் தேர்வு நடப்பதில்லை. ஆனால் எழுத்தர்கள்(Clerks) பணிக்கு உள்ளூர் மொழி தெரிந்திருப்பது அவசியம் என்பதால் உள்ளூர் மொழிகள் தெரிந்தவர்களையே தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் கூறுவதுபோல் நடந்ததா எனத்தெரியவில்லை.

   3. வங்கிப்பணிக்கு திறமைக்கே முதலிடம் என சொல்லப்பட்டாலும், சில இடங்களில் நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களில் சிலர் சிபாரிசுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படலாம். இது தவறுதான். ஆனால் இதை ஆதார்வபூர்வமாக நிரூபித்தால் ஒழிய தடுக்கமுடியாது. நிரூபிப்பதும் கடினம்.

   4. IBPS பொதுத் தேர்வு நடத்தினாலும் ஒவ்வொரு வங்கியும் ஆளெடுப்புக்கென்று தனியான விதிமுறை வைத்துள்ளதால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் குறிப்பிட்ட வங்கி வரையறுத்துள்ள மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் அந்த வங்கிக்கு விண்ணப்பிக்கமுடியும். இந்த முறை வருங்காலத்தில் மாற வாய்ப்பு உண்டு.

   5. எழுத்தர் பணிக்கு நிச்சயம் வட்டார மொழியறிவு அவசியம். காரணம் சில இடங்களில், குறிப்பாக வடக்கே காசோலைகளை இந்தியில்தான் எழுதுவார்கள் அதுவும் எண்கள் கூட இந்தியில் தான் இருக்கும். மொழி தெரியாவிடில் கடினம்தான். மேலும் எழுத்தர்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியே மாற்றல் கிடையாது என்பதால் உள்ளூர் மொழி தெரிந்தவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்

   நீக்கு
 8. மறக்க முடியாத அனுபவம்!
  தாமத வருகைக்கு மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 10. அட... ஒரு சின்ன வார்த்தைப் பிரயோகம் அவரை அப்படித் தவறாக எண்ண வைத்து விட்டதா? சுவாரஸ்யமான, மறக்க முடியாத அனுபவம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

   நீக்கு
 11. அன்பின் நடன சபாபதி - தவிர்க்க இயலாத தடுமாற்றம் - மேலதிகாரிக்கு தமிழ் தெரியாடஹ் காரணத்தினால் ஆங்கிலத்தில் பேசப் போய் - அது வாடிக்கையாளரினால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது பதிவில் விவரிக்கப்பட்ட விதம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

  பதிலளிநீக்கு
 13. ஆங்கிலம் தெரியாத வாடிக்கையாளர்கள் முன்னிலையில் ஆங்கிலத்தில் பேசி அது அவ்வாடிக்கையாளருக்கு புரியாமல் போய்விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலை தெளிவாக தமிழில் விவரித்தீர்கள் அதற்கு நன்றி. ஆனால் வங்கி சேவைகளை முழுவதுமாக ஆங்கிலத்தில் வைத்துக்கொண்டு படிவங்களையும் ஆங்கிலத்தில் வைத்துக்கொண்டு மக்களிடமிருந்து அன்னியரைப்போல் விலகித்தானே வங்கிகள் உள்ளன. மக்களோடு மக்களாக மக்களுக்காக அந்த மக்களின் மொழியில் சேவைகளையும் படிவங்களையும் இன்னபிற சங்கதிகளையும் நடத்தாமல் அவ்வாறு சேவைகளை வழங்காமல் மக்களுக்கு புரியாத ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் வங்கிகளை நடத்திக்கொண்டு வருகிறீர்களே அது மூலம் மக்களுக்கு நீங்கள் பெருமளவு மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறீர்களே அதற்கு உங்கள் பதில் என்ன மேலாளரே? படிவத்தில் தமிழ் இல்லையே என்று கேட்டதற்கு படிவம் பற்றார்குறை என்று மனம் போன போக்கில் பதில் சொல்வது சரிதான? தமிழில் அச்சிடப்பட்ட படிவம் பற்றார்குறையை திட்டமிட்டே ஏற்படுத்திவிட்டு ஆங்கிலத்தில் ஹிந்தியில் மட்டும் படிவங்களை உபரியாக அச்சடித்துக்கொண்டு மாற்று பாஷைக்காரர்களுக்கு சேவைகளை செவ்வனே செய்துகொண்டு வருவது எங்கள் மக்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது அதற்கு உங்கள் பதில் என்ன? உங்களுக்குள் ஆயிரத்தெட்டு சொல்லாடல் வைத்துகொண்டு அந்த சொல்லும் சாதாரண ஆங்கிலத்தில் வேறு பொருள் கொடுக்கும் போது வாடிக்கையாளருக்கு ஆங்கிலம் புரியவில்லை என்று அங்கலாய்த்துகொள்வது தான் என்கிற அகம்பாவம் கொண்ட வங்கி சேவை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்!?
  இப்படிக்கு அப்பாவி தமிழன் ராஜேந்திரன் வழக்கறிஞன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் ஆதங்கத்திற்கும் நன்றி வழக்கறிஞர் திரு இராஜேந்திரன் அவர்களே! நீங்கள் எனது பதிவை சரியாக படிக்கவில்லை என நினைக்கிறேன். கிளை ஆய்வுக்கு வந்தவர் வேற்று மாநிலத்தவர் என்பதால் அவருக்கு தமிழ் தெரியாது என்பதால் அவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு வங்கியின் மொழிப்பாணியில் (Banking Parlance) ஆங்கிலத்தில் பதில் சொன்னேன். அந்த பதில் ஆய்வுக்கு வந்தவருக்கே அன்றி வாடிக்கையாளருக்கு அல்ல. இதில் எங்கே தான் என்ற அகம்பாவம் கொண்ட சேவை இருக்கிறது?

   மேலும் வங்கியில் தமிழில் படிவங்கள் இல்லாததற்கு மேலாளரை குறை சொல்கிறீர்கள். நாட்டுடையாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கு மொழியாக ஆங்கிலமும் இந்தியும் இருப்பதால் அந்த இரண்டு மொழிகளில் படிவங்கள் அச்சிடப்படுகின்றன. மேலும் எங்களைப் போன்ற ஊழியர்கள் வட்டார மொழியில் படிவங்கள் வேண்டும் என கேட்டுக்கொள்ளலாமே தவிர ஏன் அவைகள் வட்டார மொழியில் இல்லை என கேட்கமுடியாது.

   உங்களைப்போன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் பொது நல வழக்கு போட்டோ அல்லது சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த சபைகளில் இது பற்றி பிரச்சினை எழுப்பியோ பொது மக்களுக்கு உதவலாம். எய்தவன் இருக்கக் அம்பை நோகிறீர்கள் நீங்கள் என நினைக்கிறேன்.

   நீக்கு