செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.3


1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு மய்ய மற்றும் மாநில அரசுகள் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு வந்தன. அப்போது மய்ய அரசு இந்தியை இந்தி பேசாத மக்களின் மீது திணிக்க எல்லா முயற்சியையும் மேற்கொண்டது.



இதைப்பற்றி மேலும் அறியு முன்பாக இந்தியாவின் பொது மொழியாக எது இருக்கவேண்டும் என்று அரசமைப்பு சட்டப் பேரவை (Constituent Assembly of India) யில் நடந்த விவாதம் பற்றி தெரிந்துகொள்வது நல்லது.

ஆங்கிலேய அரசு இந்தியாவுக்கு விடுதலை அளிக்கும் நிலையில் இருந்ததால் இந்தியாவுக்கான வரைவு அரசியலமைப்பை (Draft Constitution) உருவாக்குவதற்காக அரசமைப்பு சட்டப் பேரவை தோற்றுவிக்கப்பட்டது. 208 உறுப்பினர்களைக் கொண்ட அந்த அரசமைப்பு சட்டப் பேரவை இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு முதன் முதலாக 1946 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9 ஆம் நாள் கூடியது.

இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள், 11 முறை 166 நாட்கள் கூடிய அந்த பேரவை 1950 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 24 ஆம் நாள் தனது கடைசி கூட்டத்துடன் முடித்துகொண்டது. அந்த பேரவையின் தலைவராக பீகாரை சேர்ந்த டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்களும், துணைத் தலைவராக வங்காளத்தை சேர்ந்த திரு ஹரிந்திர குமார் முகர்ஜீ என்பவரும் இருந்தார்கள்.

(நாடு விடுதலை அடைந்த பிறகு டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் குடியரசுத் தலைவராகவும் திரு ஹரிந்திர குமார் முகர்ஜீ அவர்கள் மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும் ஆனார்கள்.)

இந்த அரசமைப்பு சட்டப் பேரவையில் அரசியலமைப்பு சட்டங்களை உருவாக்குவதற்காக 15 க்கும் மேற்பட்ட குழுக்கள் (Committees) அமைக்கப்பட்டன. அவைகள் தந்த சிபாரிசுகள் வரைவுக்குழுவின் தலைவரான டாக்டர் அம்பேத்கார் அவர்களால் விரிவான வரைவு அரசியலமைப்பு (Detailed Draft constitution) தயாரிக்கப்பட்டு பொது மக்களின் விவாதத்திற்காக வெளியிடப்பட்டு பின்னர் பேரவையில் விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

1950 ஆம் ஆண்டு இந்தியா குடியரசாக ஆனதும், முதல் பொதுத்தேர்தல் நடக்கும் வரை அதாவது 1952 ஆம் ஆண்டு வரை அரசமைப்பு சட்டப் பேரவை (Constituent Assembly of India) பாராளுமன்றமாக மாற்றப்பட்டு அதன் முதல் அவைத்தலைவராக திரு G.V.மாவ்லங்கர் அவர்கள் ஆனார்கள்.

(இதுபற்றி மேலும் விரிவாக எழுதினால் பதிவு நீண்டு விடும் என்பதால் இத்தோடு குறைத்துக்கொள்கிறேன்)

இந்தியாவுக்கான பொது மொழி பற்றி அரசமைப்பு சட்டப் பேரவை விவாதிக்க இருக்கும்போதே, 1948 ஆம் ஆண்டு திரு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசு பள்ளிகளில் திரும்பவும் இந்தி பாடத்தை கட்டாயமாக்கியது.

அதே ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் சென்னையில் தந்தை பெரியார் அவர்கள் கூட்டிய இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை திரு.வி.க அவர்கள் தொடங்கி வைக்க திரு மறைமலை அடிகளார் தலைமை ஏற்று நடத்தினார்கள்.அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்களும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்களும் உரையாற்றினார்கள்.

பேராசிரியர் இலக்குவனார் அவர்களும் அதே ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1 ஆம் நாள் இன்னொரு இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாட்டைதலைமை தாங்கி நடத்தினார்கள்.

இதற்கிடையே திராவிடர் கழகம் 1948 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் பள்ளிகளின் முன்பு அநேக இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அப்போது இந்தியாவின் Governor General ஆக இருந்த திரு ராஜாஜி அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 27 ஆம் நாள் சென்னை வந்தபோது திராவிடர் கழகம் இந்தி திணிப்பை எதிர்க்கும் முகமாக அவருக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதே ஆகஸ்ட் 27 ஆம் நாள் தந்தை பெரியார் அவர்களும் அறிஞர் அண்ணா அவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

ஆனால் அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ளாததால் பள்ளிகளில் இந்தி தொடர்ந்து கட்டாய பாடமாகவே இருந்தது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமும் தொடர்ந்து நடந்துகொண்டு இருந்தது. திரும்பவும் டிசம்பர் 18 ஆம் நாள் தந்தை பெரியார் அவர்களும் மற்ற திராவிட கழக தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதற்கு பிறகு இந்தியை விருப்ப பாடமாக வைப்பதில் அரசுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களும் ஏற்பட்ட ஒத்திசைவால் (Compromise) அரசு ஆர்பாட்டக்காரர்கள் மேல் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. ஆர்ப்பாட்டக்காரர்களும் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டார்கள்.

இதற்கிடையே அரசமைப்பு சட்டப் பேரவை (Constituent Assembly of India) யில் இந்தியாவுக்கான பொது மொழி பற்றி 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 12 ஆம் நாள் முதல் 14 ஆம் நாள் வரை முக்கியத்துவம் வாய்ந்த காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

நாட்டிற்கான தேசிய மொழி பற்றியும் அரசியலமைப்பு எந்த மொழியில் இருக்கவேண்டும் என்பது பற்றியும், அவையின் நடவடிக்கைகளை எந்த மொழியில் நடத்தப்படவேண்டும் என்பது பற்றியும், விவாதிக்கப்பட்டன.

இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்களான திருவாளர்கள் அல்கு ராய் சாஸ்த்ரி, ஆர்.வி துலேகர் பாலகிருஷ்ண சர்மா , புருஷோத்தம தாஸ் டாண்டன் , பாபு நாத் குகா, ஹரி விநாயக் படாஸ்கர், சேத் கோவிந்தா தாஸ் ஆகியோர் இந்தியை மட்டும் தேசிய மொழியாக்க பல இந்திக்கு ஆதரவான சட்ட முன் வரைவு திருத்தபட்டியலை (Amendments) கொண்டு வந்து தீவிரமாக வாதாடினார்கள்.

அதிலும் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 10 ஆம் நாள் திரு ஆர்.வி துலேகர் (R,V.Dhulekar) சொன்னது எந்த அளவுக்கு தீவிரமானது என்பதை கீழே உள்ள அவரது உரையில் காணலாம்.

"People who do not know Hindustani have no right to stay in India. People who are present in this House to fashion a Constitution for India and do not know Hindustani are not worthy to be members of this Assembly. They had better leave."

இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவிலேயே இருக்க தகுதியற்றவர்கள் என்று சொல்லும் அளவுக்கு அவர் எந்த அளவுக்கு இந்தி வெறியராக இருந்தார் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன?

இந்தி ஆதரவாளர்களிடையே இரு பிரிவுகள் இருந்தன. இந்தி மட்டுமே தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்ற பிரிவில் திருவாளர்கள் புருஷோத்தம தாஸ் டாண்டன், ரவி சங்கர் சுக்லா, சம்பூர்ணானந்த், கே.எம்.முன்ஷி ஆகியோரும், உருது கலந்த இந்துஸ்தானியே இருக்கவேண்டும் என்ற பிரிவில் திரு ஜவஹர்லால் நேரு மற்றும் திரு அபுல் கலாம் ஆசாத் ஆகியோரும் இருந்தார்கள்.

இந்தி தேசிய மொழியாவதை தென்னகத்தை சேர்ந்த திருமதி க.துர்கா பாய் திருவாளர்கள் டி.டி கிருஷ்ணமாச்சாரி, டி.ஏ.இராமலிங்கம் செட்டியார், என்.ஜி.ரங்கா,என்.கோபாலசாமிஐய்யங்கார்,மற்றும் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ராவ் ஆகியோர் எதிர்த்து ஆங்கிலேமே அரசு மொழியாக நீடிக்க வாதாடினார்கள்.

அதே சமயத்தில் தமிழ்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாகவேண்டும் என்று ஒரு தமிழர் வாதிட்டது எவ்வளவு பேருக்கு தெரியும்?

அவர் யார் என அறிய அடுத்த பதிவு வரை காத்திருங்கள்.


தொடரும்






24 கருத்துகள்:

  1. இந்தித் திணிப்பு பற்றிதெளிவாக கடந்த கால வரலாற்றை தெரிவித்தீர்கள்! அடுத்த பதிவிற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  3. அறியாத பலதகவல்களை அறிந்துகொள்ள முடிகின்றது! ஆவலுடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு ‘தளிர்’சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  4. போராட்டத்தின் பின்னணியை வரிசையாகத் தொகுத்து தந்து அசத்தியிருக்கிறீர்கள்.;ஆனால் கடைசியில் மர்ம முடிச்சு ஒன்று?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! பதிவின் கடைசியில் சொன்னது நாம் மறந்துவிட்ட அல்லது நம்மில் பலருக்கு தெரியாத உண்மை என்பதை அடுத்த பதிவில் அறிவீர்கள்.

      நீக்கு
  5. பலதகவல் களஞ்சியம் அறிந்து கொண்டேன் அந்த தமிழரை காண ஆவலுடன்.....
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  6. இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  7. அனைத்தும் புது தகவல்கள். 1968 தான் இந்தி எதிர்ப்பு ஆரம்பம் என தவறாக எண்ணி இருந்தேன். ஆனால் ஒன்று. இந்தி அறிவு இல்லாமல் ஒரு வங்கியாளனாக வட இந்தியாவில் வெகுவாக சிரம பட்டேன் என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருக்துக்கும் நன்றி திரு பரமசிவம் அவர்களே! நம்மவர்கள் இந்தி தெரியாமல் வட இந்தியா சென்றாலும் மூன்றே மாதங்களில் இந்தியைக் கற்று சரளமாக பேசக்கூடியவர்கள் என்பதை நீங்களும் அனுபவத்தில் அறிந்திருப்பீர்கள். என்னதான் நாம் இந்தியை இங்கு படித்தாலும் பேச்சு மொழியை அங்கு சென்றால் தான் கற்கமுடியும் என்பதே உண்மை.

      நீக்கு
    2. நானும் அரபிக் அறிவு இல்லாமல் ஒரு கணக்காளனாக அரேபியாவில் வெகுவாக சிரம பட்டேன் என்பது உண்மை. அதனால் அனைத்து தமிழ் நாட்டு பள்ளிகளிலும் அரபிக் சொல்லி கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். கேட்க்க லூசுதனமாக இல்லை? நீங்க வட இந்தியாவில் வேலை பார்க்க வேண்டுமென்பதற்காக 6 கோடி தமிழர்களும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா?

      நீக்கு
    3. வருகைக்கும் காரசாரமான கருத்துக்கும் நன்றி திரு கெவின் மேத்யூஸ் அவர்களே! நீங்கள் திரு பரமசிவம் அவர்களின் கருத்துக்கு பின்னூட்டம் அளித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அவர் தான் கஷ்டப்பட்டதை சொல்லியிருக்கிறார். எல்லோருக்கு இந்தி கற்றுத்தரவேண்டும் அவர் சொல்வதாக நீங்கள் நினைத்தால் அவர் தான் பதில் சொல்லவேண்டும்.

      நீக்கு
    4. Paramasivam26 ஆகஸ்ட், 2015 ’
      /////அனைத்தும் புது தகவல்கள். 1968 தான் இந்தி எதிர்ப்பு ஆரம்பம் என தவறாக எண்ணி இருந்தேன். ஆனால் ஒன்று. இந்தி அறிவு இல்லாமல் ஒரு வங்கியாளனாக வட இந்தியாவில் வெகுவாக சிரம பட்டேன் என்பது உண்மை./////

      யார் எங்கு போராங்களோ அங்குள்ள் அந்த மொழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்- எனதே தான் நியதி--அதற்காக---எதுக்கு எங்களுக்கு ஹிந்தி?போறவன் படிகாட்டும் ஆட்சேபனை இல்லை.
      என்றும் எந்த மொழியும் படித்துபிறகு பெசமுடியாது--அந்த மக்களடன் பழகினால்--மூன்றே மாதத்தில் கற்றுகொள்ளலம். இந்தியாவல் ஆங்கிலம் படித்து விட்டு இங்கு வந்து எவன் இவர்களுக்கு புரியறமாதிரி பேசறான

      அது எல்லாம் வேண்டாம்தமிழ்நாட்டில் வேலைக்கு வரவன் வங்கியில் வெளி செய்யும் வடக்கத்திக்காரன் அவன் என்ன தமிழிலா பெசார்ன்---ஹிந்தியில் தான பேசறான். அவன் வந்தாலும், நாம் அங்கு போனாலும் நாம் தான் அவன் மொழியை கற்றுக் கொள்ளவேண்டுமா+

      நீக்கு
    5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு நம்பள்கி அவர்களே! தமிழகத்திலிருந்து வெளி மாநிலம் அல்லது வெளி நாடு செல்வோர் சூழ்நிலை மற்றும் நிர்ப்பந்தம் காரணமாக அந்த பகுதியின் மொழியைக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் வட இந்தியாவிலிருந்து வருவோர் நீங்கள் சொல்வதுபோல் யாரும் தமிழில் பேசுவதில்லை என்பது உண்மைதான். அதற்கு காரணம் தாங்கள் இங்கு இருக்கப்போவது சில ஆண்டுகள்தானே என்ற எண்ணம்கூட இருக்கலாம்.

      எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கக்கூடாது என்பதே என் கருத்து. விரும்புவோர் எந்த மொழியையும் படிப்பார்கள்.

      நீக்கு
  8. அந்தத் தமிழர் யார் என அறிய ஆவலோடு காத்திருக்கிறோம். கடைசியிலிருந்து நான்காம் பத்தியில் அப்துல் கலாம் ஆசாத் என்றுள்ளது. அது அபுல்கலாம் ஆசாத் என்றிருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் அந்த தமிழர் யார் என அறிய காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! நீங்கள் சுட்டிக் காட்டிய தவறை திருத்திவிட்டேன். மேனாள் குடியரசுத் தலைவரின் பெயரே மனதில் இருந்ததால் தட்டச்சு செய்யும்போது அந்த பெயரை தட்டச்சு செய்துவிட்டேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

      நீக்கு
  9. சரித்திர நிகழ்வுகளை நினைவூட்டும் பதிவு. ஒரு கொசுறு செய்தி. ராஜாஜிக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டப் பட்டபோது “நான் கருப்புக் கண்ணாடி அணிந்திருப்பதால் வித்தியாசம் ஏதும் தெரியவில்லை” என்றாராம் பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் தகவலுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! இதுபோலவே திரு கருணாநிதி முதல்வராக இருந்த சமயம் சட்டக்கல்லூரி விழாவில் பங்கேற்க சென்றபோது, சில மாணவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க கருப்புக் கொடி காட்டினார்களாம்.அதற்கு அவர், ‘ வழக்கறிஞர்களின் மேலங்கி கருப்பு என்பதால் இந்த கருப்புக்கொடி காட்டுதலை அவர்களது முறையில் தனக்கு தரும் வரவேற்பு என நினைப்பதாகவே சொன்னாராம்.

      நீக்கு
  10. வணக்கம் அய்யா!
    "இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.3 "
    தங்களது பதிவை படித்துவிட்டு, இங்குள்ள சில மூத்த தமிழறிஞர்களிடம் தெரிவித்தபோது என்னோடு சேர்ந்து அவர்களும் தங்களது பதிவை வரவேற்று பாராட்டினார்கள்.மேலும் அவர்களது பல பழைய நினைவுகளையும், தெரிவித்தார்கள் இந்த போராட்டம் தமிழகத்தைப் போல புதுவையில், காரைக்காலில் எப்படி நிகழ்ந்தது போன்ற அப்போதைய நிகழ்வுகளை நேரடிக் காணொளிக் காட்சியாகவே எனக்கு வழங்கினார்கள் அய்யா!. இதுபோன்றதொரு வாய்ப்பினை எனக்கு வழங்க வழி வகுத்தது தங்களது அறிய அற்புத பதிவு!
    நன்றி அய்யா!
    த ம 6
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! எனது பதிவை வரவேற்று பாராட்டிய அங்குள்ள மூத்த தமிழறிஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!

      நீக்கு