செவ்வாய், 12 செப்டம்பர், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 38

மறுநாள் காலை நாங்கள் பயணித்த ‘மன்னை’ விரைவு இரயில் 13-09-2016 அன்று அதிகாலை 5.10 க்கு மாம்பலம் இரயில் நிலையம் அடைந்ததும், நண்பர் சேதுராமன் எங்களிடம் விடைபெற்று இறங்கிக்கொண்டார். நாங்கள் எழும்பூர் இரயில் நிலையம் அடைந்தபோது காலை மணி 5.50.




முதல் நாள் இரவு தஞ்சையிலிருந்து புறப்படுமுன்பே Fast Track நிறுவனத்திடம் மறு நாள் காலை சுமார் 6 மணிக்கு சென்னை எழும்பூர் இரயில் நிலைத்திலிருந்து அண்ணா நகர் செல்ல மகிழுந்து வேண்டும் என சொல்லியிருந்தேன். அவர்களும் எனது வேண்டுகோளை ஏற்று காலையில் நான் குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு வாகனத்தை அனுப்புவதாக சொல்லியிருந்தார்கள்.

அது போல காலையில் அந்த நிறுவனம் எனக்கு வரும் வாகனத்தின் எண் மற்றும் வாகன ஓட்டியின் பெயர், மற்றும் அவரது கைப்பேசி எண் ஆகியவைகளை குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தது.

நாங்கள் இரயிலிலிருந்து இறங்கியதும், அந்த ஓட்டுனரை கூப்பிட்டு நாங்கள் வந்துவிட்டோம் என்றும், அவர் எங்கிருக்கிறார் என்றும் கேட்டேன். அதற்கு அவர் தான் பெரியமேட்டில் இருப்பதாகவும், இரயில் நிலையத்திற்கு வந்துகொண்டு இருப்பதாகவும் சொன்னார்.

பெரியமேடு, எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வெகு அருகில் இருப்பதால் அவர் விரைவில் வந்து வருவார் எனக் காத்திருந்தோம். கால் மணி ஆகியும் அவர் வராததால், அவரை தொடர்பு கொண்டபோது, அவர் ‘இதோ வந்துகொண்டு இருக்கிறேன்’ என்று சொன்னாரே ஒழிய, தான் எங்கிருக்கிறேன் என்பதை சொல்லவில்லை. அரை மணி ஆனபிறகும் வராததால் நேரே Fast Track நிறுவனத்தை தொடர்புகொண்டு விவரத்தை சொன்னபோது, அவர்கள் வேறு வாகனம் ஏற்பாடு செய்வதாக சொன்னார்களே தவிர, ஏன் முன்பு சொன்ன வாகனம் வரவில்லை என்பதை சொல்லவில்லை.

அதற்குள் காலை மணி 6.40 ஆகிவிட்டது.மேலும் இரயில் நிலைய நடைமேடையில், அந்த இரயிலிலிருந்து இறங்கிய எங்களைத்தவிர மற்றவர்கள் வெளியே போய்விட்டனர். இனி Fast Track ஐ நம்பி பயனில்லை என்பதால் வாகனம் வேண்டாம் என சொல்லிவிட்டு ஒரு தானி யில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். இந்த Call Taxi ஓட்டுனர்களில் சிலர் (அதுவும் Fast Track நிறுவனத்தோடு இணைந்துள்ளவர்கள்) காலை வேளையில் சொன்னால் வருவதில்லை. எனக்கு பலமுறை இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.

நாங்கள் சென்னைக்கு வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு நண்பர் பாலு பொன் விழா சந்திப்பில் முதல் நாள் காலை எடுத்திருந்த புகைப்படங்களில் சிலவற்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். பின்னர் அன்று காலை எடுத்த அனைத்து படங்களையும் குறுந்தகட்டில் அனுப்பிவிட்டார்.

பின்னர் இந்த ஆண்டு சனவரி 3 ஆம் நாள் அவரும் முருகானந்தமும் சேர்ந்து அனுப்பிய புத்தாண்டு வாழ்த்துகளோடு, பொன் விழா சந்திப்பில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடல்லாமல், அந்த விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைவரையும் பெயர் குறிப்பிட்டு தஞ்சை நண்பர்கள் சார்பில் நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும் நண்பர்கள் ஒவ்வொருவரும் அளித்த பங்குத் தொகையான ரூபாய் 6000 த்தோடு அவர்கள் அளித்த மேலதிகத்தொகையையும் குறிப்பிட்டு, முந்தைய சந்திப்பில் செலவழிந்தது போக மீதி இருந்த தொகை மற்றும் அதற்கான வட்டி மொத்தம் ரூபாய் 21,500 என்றும் அவைகளையும் சேர்த்து இந்த விழாவிற்கு சேர்ந்த தொகை ரூபாய் 4,67,753 என்றும் தெரிவித்திருந்தார்.

அதோடு தஞ்சை நண்பர்கள் முருகனாந்தம், பாலசுப்பிரமணியன், நாகராஜன், சரவணன், பெத்தபெருமாள், ஜனார்த்தனன் ஆகியோர் பெயரில் அனுப்பியிருந்த விரிவான கணக்கு விவர அறிக்கையில், விழாவில் செலவு செய்யப்பட்ட தொகைகள், எதற்காக செலவிடப்பட்டன என்பதை வகைப்படுத்தி, மொத்த செலவு ரூபாய் 3,76,622 ஆயிற்று என்றும் மீதி ரூபாய் 91131 இருப்பதாகவும், அதை நண்பர்கள் அனுமதித்தால் கோவையில் 2018 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சந்திப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அது பற்றி எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டிருந்தார்கள்.

(நாங்கள் எல்லோரும் அந்த கருத்தை ஆமோதித்ததால் அந்த தொகை வங்கியில் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ளது.)

மேலும் எங்களது சந்திப்பு பற்றி நாளேடுகளில் வந்திருந்த செய்திகளையும் அனுப்பியிருந்தார் நண்பர் பாலு.


நாளேடுகளில் வந்த செய்திகள்

நண்பர் பாலுவுக்கு நான் நன்றி தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சலில், தஞ்சை நண்பர்களின் ஒப்புவமையற்ற சீரிய பணிக்கு நன்றி தெரிவிப்பதைத் தவிர சொல்ல வேறொன்றுமில்லை எனக் குறிப்பிட்டிருந்தேன்.

நண்பர் அய்யம்பெருமாள் கனடா சென்ற பிறகு 2016 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் எங்கள் அனைவருக்கும் அனுப்பிய அஞ்சலில் 2017 ஆம் ஆண்டு ஜூன்/ஜூலை/ஆகஸ்ட் மாதங்களில் கனடாவில் மேற்கொள்ள இருக்கும் 10 நாட்கள் பயணத்திற்கான பயண நிரல் (Itinerary) அனுப்பியிருந்தார்.

பின்னர் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திருத்தப்பட்ட பயண நிரலை அனுப்பியிருந்தார். அதில் நயாக்ரா அருவி (நீர் வீழ்ச்சி என்பது சரியான சொல் ஆளுகை அல்ல என்பதால் அருவி என்று குறிப்பிட்டிருக்கிறேன்.), டொராண்டோ (Toronto), ஒட்டாவா (Ottawa), மொண்ட்ரியால் (Montreal), கியூபெக் (Quebec) ஆகிய இடங்களுக்கு செல்வது பற்றி விரிவாக எழுதியிருந்தார்,

அந்த பயணத்திற்காக பயண முகவர் (Travel Agent) ஒருவரை அணுகியபோது, அவர் சொன்ன இடங்கள் மற்றும் நாட்கள் குறைவாக இருந்ததால் நண்பர் அய்யம்பெருமாள் உதவியுடன் நாங்களே பயண ஏற்பாட்டை செய்வதென முடிவு செய்தோம். நாட்கள் நெருங்கிவிட்டதால் அந்த பயணத்தை 2018 ஆம் ஆண்டிற்கு தள்ளிப்போட்டுவிட்டோம்.

எங்களை கல்லூரி நாட்களுக்கு அழைத்துச் சென்று ,மனதளவில் இளமையாக்கி, எங்களுக்கு உற்சாகமூட்டிய, தஞ்சை பொன்விழா சந்திப்பின் நிகழ்வுகளை, மகிழ்ச்சியுடன் மனதில் அசை போட்டுக்கொண்டு, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் கோவை சந்திப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.


பின் குறிப்பு: எங்களது பொன் விழா சந்திப்பு கடந்த ஆண்டு இதே நாளில் நிறைவுற்றது. இந்த தொடர் பதிவும் அதே நாளில் ஓராண்டு கழித்து நிறைவுபெறுவது தற்செயலாக நடந்தது அல்ல!

22 கருத்துகள்:

  1. அருமையான நண்பர்கள் பட்டாளம் இது ,அமேரிக்கா ,கனடாவில் இருந்தும் இதற்காக்வே நண்பர்கள் வந்துள்ளார்களே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும். பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

      நீக்கு
  3. வளர்க உங்கள் நட்பு வட்டாரம்! த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,வாழ்த்திற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  4. எனக்கு பதிவுலக நண்பர்கள் சந்திப்பையும் எங்கள் அம்பர்நாத் அலும்னி சந்திப்பு பற்றியும் ஒப்பு நோக்காமல் இருக்க முடியவில்லை பதிவர் விழாவுக்கு வருகிறேன் என்றுசொல்லி வாராமல் போனவர்களுக்கு அதன் தாக்கம் புரிந்திருக்கவில்லை என்றே தோன்று கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! பழைய நண்பர்களை சந்திப்பதில் சிலர் ஆர்வம் காட்டாததன் காரணம் அவர்களுக்கு புதிய உறவுகளும் நட்புகளும் ஏற்பட்டததால் தான் என நினைக்கிறேன்.

      நீக்கு
  5. தங்களது நண்பர்கள் பெருமைக்குறியவர்களாகவே அமைந்து இருக்கின்றார்கள் இந்த நட்பு வட்டம் எல்லோருக்கும் வராது.

    நிகழ்வுகளை அழகாக விளக்கி எங்களையும் சந்தோஷப்படுத்திமைக்கு நன்றி.

    அடுத்து கோவையில் நடப்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! நான்கு ஆண்டுகள் விடுதியில் அடுத்தடுத்த அறைகளில் தங்கி ஒன்றாய் படித்த எங்களிடம் ஏற்பட்ட நெருக்கத்தையும் நட்பையும் மறந்துவிட முடியுமா என்ன? நீங்கள் குறிப்பிட்டதுபோல் இது போன்ற நட்பு வட்டம் எல்லோருக்கும் அமையாது என்பது சரியே.

      நீக்கு
  6. நல்ல நண்பர்கள். நல்ல இதயங்கள்.உங்கள் அனைவருடனும் நானும் தொடர்ந்து வந்ததைப் போன்ற உணர்வு. இந்த தொடரில் மட்டுமல்லாது, உங்கள் பதிவுகள் அனைத்திலுமே இருக்கும் உங்களுடைய தூயதமிழ் உணர்வுக்கு நன்றியும் பாராட்டுகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தமிழ் படித்த தங்களிடமிருந்து பாராட்டு பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருகைக்கும், நட்பு தொடர வாழ்த்தியமைக்கும் நன்றி திருமதி புதியமாதவி சங்கரன் அவர்களே!

      நீக்கு
  8. 38 பகுதிகளில் எங்களைக் கட்டிப் போட்டு தொடரை நடாத்திய திறமைக்கு நன்றி.

    இந்தத் தொடரைப் பயணக் கட்டுரை என்பதா, நண்பர்களின் சந்திப்பு நிகழ்வுகளின் படப்படிப்பு என்பதா, சம்பந்தப்பட்டவர்கள் என்றென்றும் நினைவில் கொள்வதற்கு வசதியான ஆவணப் பெட்டகம் என்பதா, நல்ல தமிழ் சொற்களுடன் வாசிப்பு அனுபவம் கொண்டதற்கான வரம் என்பதா என்கின்ற நினைப்பையெல்லாம் மீறி இவை எல்லாம் கலந்த ஒரு உணர்வு அடிமனத்தில் தங்கியிருக்கிறது.

    ஒரு தொடரை முடிப்பதற்கான வழக்கத்தில் முடித்திருக்கிறீர்களே தவிர எஞ்ஞான்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கும், வாசித்தோருக்கும் இந்தத் தொடர் நினைவில் நிற்கும் என்பது உறுதி.

    அதுவே இந்தத் தொடருக்கான வெற்றியும் கூட.

    வாழ்த்துக்கள், நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நண்பர்களின் சந்திப்பை ஒரு பயணத்தொடர் போல் எழுதியிருக்கிறேன். நிச்சயம் எனது வகுப்புத் தோழர்களுக்கு இது ஒரு ஆவணப் பெட்டகமாக இருக்கவேண்டும் என்பது என் அவா. நீங்கள் கூறியதுபோல் இந்த தொடர் எல்லோர் நினைவிலும் நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு.

      இது என் வகுப்புத் தோழர்களின் சந்திப்பு பற்றிய தொடராக இருந்தபோதிலும், தங்களைப்போல் இதை படித்து இன்புற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

      தங்களின் உளமார்ந்த ஊக்குவிக்கின்ற விமரிசனத்திற்கு நன்றி!

      நீக்கு
  9. பொன் விழா சந்திப்பு நிறைவுற்ற நாளில் இப்பதிவும் நிறைவுறுவது கண்டு மகிழ்ச்சி. தொடராக அனைத்தையும் நினைவுகூர்ந்து பதிந்த விதம், நண்பர்களின் ஈடுபாடு, பொறுமை அனைத்தையும் காணமுடிந்தது. மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! இந்த தொடரை 18-10-2016 அன்று எழுத ஆரம்பித்தபோது எவ்வளவு பதிவுகள் வரும் என்றோ எப்போது முடிக்கவேண்டும் என்றோ யோசித்து ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள் வந்ததும் நிறைவுப் பகுதியை செப்டம்பர் 12 ஆம் நாள் முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு முடித்திருக்கிறேன். அதனால் தான் பின் குறிப்பில் இது தற்செயலாக நடந்தது அல்ல எனக் குறிப்பிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. இனிய நண்பர்களின் இனிப்பான தொடர்புகள் தொடரும்...
    வாழ்த்துகள் ஐயா!

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி திரு ஜீவலிங்கம் யாழ்பாவணன் காசிராஜலிங்கம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு சாமானியன் அவர்களே! எனது மடிக்கணினி செயலிழந்து விட்டதால் வலைப்பக்கம் வரவில்லை. அதனால் தங்களது பின்னூட்டத்தைப் பார்க்கவில்லை. தங்களுக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!

      தங்களது பதிவைப் படித்து கருத்திட இருக்கிறேன்.

      நீக்கு