திங்கள், 13 ஏப்ரல், 2009

நினைவோட்டம் 9

ஐயா பாடம் மட்டும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை ஆடல் பாடலும் சொல்லிக்கொடுத்தார்.பாடம் கற்றுத்தருவதில் இருந்த அதே கண்டிப்பு கலைகளைக் கற்றுத்தருவதிலும் இருந்தது.

பிள்ளையார் சதுர்த்தியில் தொடங்கி ஆயுத பூஜை வரை எங்களுக்கு பாடங்கள் இருக்காது. அதற்கு பதில் மதியம் எங்களுக்கு கோலாட்ட பயிற்சி கொடுப்பார்.

இன்றைக்கு 'தாண்டியா' ஆட்டம் என அதிசயத்தோடு நாம் காணுகின்ற ஆட்டத்தை ஐம்பதுகளிலேயே எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார் என்பது சிலருக்கு வியப்பாக இருக்கலாம்.

கோலாட்டம் ஆடுவதற்கு ஒவ்வொருவரும் ஒரு ஜோடி கோலாட்ட கழிகளை கொண்டு வரவேண்டும். கோலாட்ட கழிகள் சுமார் 15 அங்குல நீளத்தில் நுனி சிறுத்தும் அடி பெருத்தும் இருக்கும்.நாங்கள் பிள்ளையார் சதுர்த்தி வருவதற்கு முன்பே எங்கள் ஆசாரியாரிடம் சொல்லி கோலாட்ட கழிகளை தயார் செய்து விடுவோம். கழிகளை அடையாளம் காண்பதற்காக வெவ்வேறு வண்ணம் பூசி எடுத்து செல்வோம்.

ஐயா விநாயக சதுர்த்தி அன்று அவைகளை வைத்து படைத்து கொடுப்பார். ஐயா ஜால்ரா தாளத்தோடு பாட நாங்களும் பாடிக்கொண்டு ஆடவேண்டும். திரு அருட்பா போன்ற பாடல்களை சொல்லிகொடுப்பார்.

கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் என்று ஒன்று உண்டு. ஒரு வட்டமான கட்டையில் ஓரத்தில் சுற்றி சுமார் 10 அல்லது 12 துளை போடப்பட்டிருக்கும். அதில் ஒவ்வொரு துளையிலும் நீண்ட மணியான் கயிறு எனப்படும் மெல்லிய உறுதியான கயிறு கோர்க்கப்பட்டு தோரணமாக விடப்பட்டு இருக்கும். அந்த கட்டையை கொக்கி மூலம் மரத்தின் கிளையில் கட்டிவிட்டு ஒவ்வொரு கயிறையும் எங்களிடம் கொடுத்து எங்களின் ஒரு கோலாட்ட கழியில் சுற்றிக்கொள்ள சொல்வார்.அதை இடது கையில் பிடிக்கவேண்டும் பின்பு இன்னொரு கழியை குறுக்கே 'T' போல வைத்துக்கொண்டு சுற்றி வட்டமாக நிற்க சொல்வார்.

ஐயா ஜால்ரா போட்டு பாட ஆரம்பித்ததும் நாங்கள் வலது கையில் உள்ள கழியை கயிறு சுற்றி இருக்கும் கழியில் தட்டி குறுக்கும் நெடுக்கும் தாளத்திற்கு தகுந்தவாறு ஆடிக்கொண்டு செல்லவேண்டும்.ஒவ்வொரு பாட்டுக்கும் வெவ்வேறு விதமான முறையில் 'மூவ்மென்ட்' உண்டு.

பாட்டு முடியும்போது அந்த கயிறுகள் பின்னிக்கொண்டு சடை போலவும் முருங்கைக்காய் போலவும் தெரியும்.அதே போல் திரும்பவும் ஆடி முன்பு இருந்த நிலைக்கு வரவேண்டும். யாராவது தப்பாக ஆடிவிட்டால் ஆட்டம் முடியும்போது கயிற்றுப்பின்னல் சரியாக இருக்காது.

ஐயா உடனே எல்லா கயிற்றையும் பிடித்துக்கொண்டு அவற்றை பிரித்து யார் கயிறு தவறாக சுற்றி இருக்கிறதோ அவர்கள் தலையில் அதே கோலாட்ட கழியை வைத்து இன்னொரு கோலாட்ட கழியால் வேகமாக அடிப்பார். சில சமயம் அவர் கையிலிருக்கும் ஜால்ராவால் வேகமாக தட்டுவதும் உண்டு. அந்த வலியை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்! ஐயாவிடம் இந்த தண்டனை வாங்காதவர்கள் யாரும் இல்லை.

பயிற்சி முடிந்ததும், 'வாழிப்பாடல்கள்' எனப்படும் தெய்வத்திற்கான வாழ்த்துபாடலகளை எல்லோரையும் மனப்பாடம் செய்ய சொல்லுவார். இந்த பாடல்களை விஜயதசமிக்கு பிறகு ஊரில் உள்ள எல்லா கோவில்களுக்கும் சென்று கோலாட்டம் அடித்து அந்த பாடலை பாடவேண்டும். ஒவ்வொரு கோவிலுக்கும் யார் பாடுவது ஐயாவே தீர்மானித்து அவர்களை பாட சொல்லுவார்.

விஜயதசமி அன்று எல்லோருடைய கோலாட்டக் கழிகளையும் கொலுவில் வைத்துப் படைத்த பின் பிள்ளையார் கோவிலில் ஆரம்பித்து ஊரில் உள்ள எல்லா கோவில்களிலும் கோலாட்டம் அடிப்போம்.
பின்பு படிக்கும் பிள்ளைகளின் ஒவ்வொரு வீட்டுக்கும் போய் கோலாட்டம் அடிக்கவேண்டும். சில வீட்டு முன்னால் பின்னல் கோலாட்டமும் இருக்கும். ஒருவீட்டில் அடித்து முடிந்ததும் அந்த வீட்டுப் பையன் அல்லது பெண் 'வாழி' பாட்டு பாடவேண்டும். கடைசியாக அந்த வீட்டு பிள்ளைகள் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தோடு பணம் வைத்து ஆசி பெறுவது வழக்கம். பின்பு கோலாட்டம் ஆடிய பிள்ளைகளுக்கு அந்த வீட்டில் அவல் பொரி வெல்லம் போன்றவைகளை தருவார்கள்.

இந்த ஆட்ட பாட்டங்கள் சுமார் 10 நாட்களுக்குமேல் இருக்குமாதலால் எங்களுக்கெல்லாம் 'குஷி' தான். ஏனென்றால் ஐயாவின் கெடுபிடி அப்போது இருக்காது என்பதால்.

இத்தனை வருடங்கள் ஆகியும் இப்போது கூட என்னால் கோலாட்டத்தை மறக்க முடியவில்லை என்றால் அதற்கு ஐயா கொடுத்த கடும் பயிற்சியே ஆகும்.

'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே!'

என வள்ளலாரின் அருட்பாவை நாங்கள் பாடி ஆடியது இன்னும் என் கண்முன்னே நிற்கிறது.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

6 கருத்துகள்:

  1. சிக்கலைத் தீர்க்க சிறு வயதிலேயே பயிற்ச்சி. கொடுத்து வைத்தவர் அய்யா நீங்கள். நண்பன் கோவிந்தராஜன்

    பதிலளிநீக்கு
  2. இன்றுதான் சபாநாயகம் அய்யவின் நாவலை இரண்டாவது முறையாக படித்தேன் பிள்ளையார் சதுர்த்தி பற்றி தான் இன்று படித்தேன் உங்கள் வலைபூவிலும் படித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி திரு கோவிந்தராஜன் அவர்களே.தங்களது கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. ஐயாவினுடைய பயிற்சிதான் பிற்காலத்தில் பணியில் இருக்கும்போது உதவியது என்பதை பெருமையுடன் ஒத்துகொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் இரத்தின புகழேந்தி அவர்களே. திரு.சபாநாயகம் அவர்கள் எனது அண்ணன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்.

    கோலாட்டம் போன்ற விளையாட்டுகள்,மாணவர் ஒருங்கிணைந்து செயல்படும் ஆற்றல், ஒருமுக கவனம், புலன்பயிற்சி போன்றவற்றைத் தரவல்லவை.

    விளையாட்டு முறைக் கல்வி, செயல்முறை கற்றல் என்றெல்லாம் இன்று நவீன வகுப்பறைகளில் அறிமுகப்படுத்தப்படும் உத்திகளை அன்றே உங்கள் ஆசிரியர் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் என்றறிய வியப்பு.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! தாங்கள் கூறுவது உண்மைதான். கோலாட்டம் ஆடும்போது ஒருமுக கவனம், எல்லோரோடும் இணைந்து செயலாற்றுதல் போன்றவற்றை நம்மை அறியாமல் கற்றுக்கொள்கிறோம். ஐயா அதிகம் படிக்காதவர் தான். ஆனால் வாழ்க்கைக்கு தேவையானவற்றை சொல்லிக்கொடுத்தார்.

      நீக்கு