வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

எத்தனைக்காலம்தான்... ? 2

தங்கியிருந்த விடுதியில் குளித்துவிட்டு எங்கு
சாப்பிடலாம் என விசாரித்தபோது,விடுதிக்கு
எதிரே இருந்த ஒரு உடுப்பி ஓட்டலை காட்டினார்கள்.
அங்கு சென்று சாப்பிட்டுவிட்டு நேர்முகத்தேர்வு
நடக்க இருக்கும் இடத்தை பார்க்க திரும்பவும்
ஒரு சைக்கிள் ரிக்சா பிடித்து சென்று பார்த்துவிட்டு
திரும்பும்போது ‘சார்மினார்’ சென்றோம்.

சார்மினாரில் கடைசிதளம் வரை பார்க்க
அனுமதித்தார்கள். (இப்போது அவ்வாறு
அனுமதிப்பதில்லை என நினைக்கிறேன்.)
ஹைதராபாத் நகரத்தை மேலிருந்து
பார்த்து,இரசித்து விட்டு வந்தோம்.

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து குளித்து
சாப்பிட்டுவிட்டு நேர்முகத்தேர்வு நடக்கும்
இடத்திற்கு சென்றோம்.
(நேர்முகத்தேர்வு பற்றி பின் எழுதுவேன்)

நேர்முகத்தேர்வு முடிந்து,சாப்பிட்டுவிட்டு, அறையை
காலி செய்துவிட்டு மதியம் 3 மணிக்கும் சென்னைக்கு
கிளம்பும் இரயிலைப்பிடிக்க நேரே ஸ்டேஷன் வந்துவிட்டோம்.

நாங்கள் திரும்பி வர முன்பதிவு செய்யாததால்,
பயண சீட்டு வாங்கிக்கொண்டு முன்பதிவில்லா
பெட்டியில் பயணம் செய்ய பிளாட்பாரத்தில்
காத்திருந்தோம்.

பதிவு செய்யாமல் பயணம் செய்ய இருந்தோர் கூட்டமோ
அதிகம்.வண்டி வந்தால் எப்படி ஏறுவது என இருவரும்
பேசிக்கொண்டிருந்தபோது,தூய வெள்ளை ஜிப்பா
மற்றும் வேட்டிஅணிந்த ஒருவர் எங்கள் அருகே வந்தார்.

அவர் கையில் அன்றைய‘தினத்தந்தி’நாளேடு இருந்தது.
எங்களிடம்‘என்ன சார்,சென்னைக்குத்தானா?’ என்றார்.
‘ஆமாம்’என்றதும்,‘சார்,நான் கூட சென்னைக்குத்தான்
திரும்புகிறேன்.திடீரென கிளம்பியதால்முன் பதிவு
செய்யவில்லை.நீங்கள் எப்படி?’என்றார்.

நாங்களும் தமிழ் பேசும்ஒருவர் கிடைத்தாரே என்ற
சந்தோஷத்தில்‘நாங்களும் ரிசர்வ் செய்யவில்லை.
எப்படி இந்த கும்பலில் ஏறுவது எனத்தெரியவில்லை.’
என்றோம்.உடனே அவர் ‘கவலைப்படாதீர்கள்.
எனக்கு தெலுங்கு தெரியும் இந்த போர்ட்டர்களிடம்
பேசி நமக்கு‘யார்டிலேயே’துண்டு போடச்சொல்லிவிடுகிறேன்.
ஒரு இடத்திற்கு நாலணா கொடுத்தால் போதும்’ என்றார்.

நாங்கள்‘ரொம்ப நன்றிங்க.அப்படியே செய்யுங்கள்’
என்றோம்.அவரும் ஒரு போர்ட்டரிடம் தெலுங்கில்
பேசி எங்களுக்கு முன்பதிவில்லா பெட்டியில்
‘ரிசர்வ்'(!)செய்யச்சொன்னார்.

பேச்சுவாக்கில் அவர் சென்னையில் வியாபாரம்
செய்வதாகவும், வேலை நிமித்தம் ஹைதராபாத்
வந்ததாகவும் சொன்னார்.என்னிடம்‘சாருக்கு
எந்த ஊர்?’என்று கேட்டபோது விருத்தாச்சலம்
அருகே உள்ள ஒரு சிறிய ஊர்’என்றபோது,
அவர் அவரது வியாபார விஷயமாக
விருத்தாச்சலம் வந்திருப்பதாகவும் சொன்னார்.

பின்னர் எங்களது பேச்சு அப்போது அடுத்து தமிழ் நாட்டில்
வர இருக்கின்ற தேர்தல் பக்கம் திரும்பியது அது பற்றி
சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தபோது, சென்னை
செல்லும் இரயில்,யார்டிலிருந்து வந்துவிட்டது.

சொன்னபடியே அந்த போர்ட்டரும் ஒரு பெட்டியில்
எங்கள் மூவருக்கும் இடம் போட்டிருந்தார்.அவருக்கு
பணத்தைக்கொடுத்துவிட்டு நாங்கள் வண்டி ஏறினோம்.
இருக்கையில் அமர்ந்ததும்,அந்த நண்பர் பிளாட்பாரத்தில்
தனது உடமைகள் இருப்பதாகவும் அதை
எடுத்துவருவதாக கூறி கீழே இறங்கி சென்றார்.

சிறிது நேரத்தில் ஒரு பெரிய ‘PYE’ ரேடியோ பெட்டியை
ஒருகையிலும் இன்னொரு கையில் ஒரு பெரிய
வாழைப்பழ குலையையும்தூக்கமுடியாமல்
தூக்கிக்கொண்டு வந்து அவரது இடத்துக்கு
மேலே உள்ள இடத்தில் வைத்துவிட்டு
‘அப்பாடா! என்ன கனம்’ என்றார்.

நான் அவரிடம்‘ரேடியோவை இங்கு வாங்குவானேன்.
சென்னையிலேயே வாங்கி இருக்கலாமே.’ என்றதும்
அவருக்கு தெரிந்த நபர் மூலம் அதை சென்னையைவிட
குறைந்த விலைக்கு வாங்கியதாக சொன்னார்.பின்பு
எங்களது பேச்சு திரும்பவும் அரசியல் பக்கம் திரும்பியது.
பேச்சு சுவாரஸ்யத்தில், வண்டி கிளம்பியதோ அடுத்த
நிற்கும் இடமான செகந்தராபாத் வந்ததோ தெரியவில்லை.

வண்டி நின்றதும் அவர்,‘இங்கு இரயில் சிறிது நேரம்
நிற்கும். இரவு டிபன் வண்டியில் நன்றாயிருக்காது
என்பதால் நான் இங்கேயே IR
உணவு விடுதியில் வாங்கப்போகிறேன்.
உங்களுக்கும் வேண்டுமா? என்றார். நாங்கள்
‘இல்லையில்லை.நாங்கள் வண்டியிலேயே,
சாப்பிட்டுக்கொள்கிறோம்’ என்றோம்.

அவர் ஜிப்பாவிலிருந்து ஒரு நூறு ரூபா நோட்டை எடுத்து,
‘இந்த அவசரத்தில் சில்லறை இல்லை என்பார்கள்.
உங்களிடம் நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கிறதா?’
என்றார். நான் வெளியே சட்டைப்பையில் முப்பத்தி நாலு
ரூபாய்தான்வைத்திருந்தேன்.‘அதுதான் இருக்கிறது’ என்றேன்.

உடனே எனது ஆசிரியர் என்னிடம் ‘பாக்கி இருக்கிறது’
எனக்கூறி மீதி அறுபத்தி ஆறு ரூபாயையும் கொடுத்தார்.
அவர் அதை வாங்கிக்கொண்டு ‘இதோ வந்துவிடுகிறேன்.
எனது பொருட்களை பார்த்துக்கொள்ளுங்கள்’ எனக்கூறி
கீழே இறங்கி சென்றார். நாங்கள் இருவரும் விட்ட
இடத்திலிருந்து திரும்பவும் பேச்சை ஆரம்பித்தோம்.



தொடரும்

2 கருத்துகள்:

  1. முக்கியமான கட்டத்தில் நிறுத்தி விட்டீர்களே!சஸ்பென்ஸ் தாங்கவில்லை!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
    ஒரு நாள் பொறுங்கள். சஸ்பென்ஸ் தானே விலகும்!

    பதிலளிநீக்கு