வெள்ளி, 13 செப்டம்பர், 2013

நினைவோட்டம் 70

எனது பக்கத்து இருக்கை நண்பர் அவரது விடுதியில் உள்ள அறையில் வந்து நான் கொண்டு சென்றிருந்த மதிய உணவை சாப்பிடலாம் என்றதும் அவருடன் க்ளைவ் விடுதிக்கு புறப்பட்டேன்.

புனித வளவனார் கல்லூரியில் நான் சேர்ந்தபோது, மாணவர்கள் தங்குவதற்காக இருந்த விடுதிகள் மூன்று. கத்தோலிக்க மாணவர்கள் தங்க, Fathers Lodge அருகே ஒரு விடுதியும், மற்ற மாணவர்கள் தங்கிப் படிக்க கல்லூரிக்கு மேற்கே New Hostel என்ற பெயரில்ஒரு விடுதியும், கல்லூரிக்கு கிழக்கே எனது வகுப்பு நண்பர் தங்கியிருந்த ‘க்ளைவ் விடுதி’யும் இருந்தன.

எங்கள் கல்லூரிக்கு எதிரே இருந்த குறுகிய வீதியைத் தாண்டி, நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட பிரசித்த பெற்ற தெப்பக்குளத்தை சுற்றிக்கொண்டு, அதன் கீழ் பகுதியில் இருந்த அந்த க்ளைவ் விடுதிக்கு என் புதிய நண்பர் என்னை அழைத்து சென்றார். ஒரு கல்லூரியின் விடுதிக்குள் நான் நுழைவது அதுவே முதல் தடவை.

திருச்சி, கர்நாடக போரின்போது திரு ராபர்ட் க்ளைவ் வசமிருந்தபோது அந்த கட்டிடத்தில் 1752 இல் தங்கியிருந்தாராம். இன்றைக்கும் அங்குள்ள கல்வெட்டில் இந்த தகவலைக் காணலாம். அதனால்தான் அந்த விடுதிக்கு அவர் பெயரை சூட்டியிருக்கிறார்களாம். அந்த விடுதியின் நுழைவாயிலைப் பார்க்கும்போது அந்த கட்டிடம் ஒரு முஸ்லீம் கனவானுடைய இருப்பிடமாக
இருந்திருக்கவேண்டும். திரு ராபர்ட் க்ளைவ் தங்குவதற்காக,அதை வாங்கி
புதுப்பித்திருக்கக் கூடும். அந்த விடுதியின் நுழைவாசலின் இருபுறமும் வெளியே பல அங்காடிகள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன என நினைக்கிறேன்.

கட்டிடத்தின் உள்ளே, இடப்புறம் காலை சிற்றுண்டியும் மதியம் உணவு சாப்பிடுவோருக்கும், வலப்புறம் காலை உணவும் மதியம் சிற்றுண்டி சாப்பிடுவோருக்கான உணவகங்களும், நடுவே பெரிய விளையாட்டு மைதானமும் அதற்கு இடப்புறம் மாணவர்கள் தங்கு அறைகளும், வலப்புறம் மாணவர்கள் அமர்ந்து படிக்க ஒரு பெரிய விசாலமான அறையும் (Hall) கொண்ட விடுதி அது. அங்கிருந்து பார்த்தால் மலைக்கோட்டையும் உச்சிப் பிள்ளையார் கோவிலும் நன்றாகத் தெரியும். அவைகளைப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.

என்னை நண்பர் நேரே தனது அறைக்கு அழைத்து சென்று, ‘நீங்கள் இங்கு அமர்ந்து உணவை சாப்பிட்டு விட்டு காத்திருங்கள். அதற்குள் நான் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு சேர்ந்து கல்லூரிக்கு செல்வோம் என்று சொல்லி இருந்தார். நான் மதிய உணவை முடித்திட்டுவிட்டு அவருக்காக காத்திருந்தேன்.

அவர் உணவருந்திவிட்டு வரும்போது அவருடன் இன்னொருவரும் வந்தார். அவரை தனது அண்ணன் என்று எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர். அவர் அண்ணனும் எங்களது கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருப்பதாகவும் அவரும் அதே அறையில் தான் தங்கி இருப்பதாகவும் சொன்னார். பிறகு மூவரும் கல்லூரிக்கு கிளம்பினோம்.

மாலை கல்லூரி விட்டு கிளம்பு முன் நண்பர் சொன்னார். ’நீங்கள் நாளை காலை நேரே எனது அறைக்கு வந்துவிடுங்கள். உணவுப் பையை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு வந்துவிட்டு, திரும்பவும் அதை இங்கு எடுத்துக்கொண்டு எதற்காக அலைய வேண்டும். இங்கேயே வைத்துவிட்டு சென்றால், மதியம் இங்கு வந்து உணவருந்தலாமே.’ என்றார்.

அவருக்கு நன்றி சொல்லி, நகரப் பேருந்தில் வீடு திரும்பினேன். அதற்குப் பிறகு தினம் அவரது அறைக்கு சென்று பையை வைத்துவிட்டு அவருடன் கல்லூரிக்கு போய் வந்தேன். மதியம் அவருடன் விடுதிக்குத் திரும்பி மதிய உணவை முடித்து திரும்புவேன். சில நாட்கள் அவரது விருந்தினராக அந்த விடுதி உணவகத்தில் சாப்பிட்டிருக்கிறேன்.

ஒரு மாதத்திற்குள் சைக்கிள் ஊரில் இருந்து வந்துவிட்டதால் (இது பற்றி பின்னர் எழுதுவேன்) தினம் வீட்டிலிருந்து சைக்கிளில் கிளம்பி க்ளைவ் விடுதிக்கு சென்று அதை வைத்துவிட்டு நண்பருடன் கல்லூரி சென்று திரும்புவேன். மாலை அங்கிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன் டிசம்பர் மாதம் வரை.

நண்பருடன் விடுதிக்கு சென்றாலும், தினம் தனிமையில் அறையில் உணவருந்துவது என்னவோ போல் இருந்தது.வெளியிலிருந்து வரும் நண்பர்கள் கல்லூரியில் மதியம் மற்ற மாணவர்கள் உணவருந்தும் இடத்திலேயே நானும் உணவருந்தலாம் என நினைத்தேன். அதை என் நண்பரிடம் சொல்லிவிட்டு, கல்லூரியில் இருந்த சைக்கிள் நிறுத்தும் இடத்திலேயே சைக்கிளையும் உணவுப் பையையும் வைத்துவிட்டு மதியம் என்னைப்போல் வெளியிலிருந்து வரும் நண்பர்களோடு மரத்தடியில் சாப்பிட்ட ஆரம்பித்தேன். நண்பர்களோடு ஜாலியாக பேசிக்கொண்டே சாப்பிட்டது சந்தோஷத்தைக் கொடுத்தது என்பது நிஜம்.

நான் விடுதியில் தங்கவில்லையே தவிர அந்த ஆறு மாதங்களும் விடுதியில் தங்கியது போன்ற உணர்வை ஏற்படுத்தியதற்கு என் நண்பருக்கு நன்றி சொல்லவேண்டும்.(என்ன இன்னும் அந்த நண்பரின் பெயரை சொல்லவில்லையே என்கிறீர்களா? பொறுங்கள் சரியான இடத்தில் அவரை அறிமுகப்படுத்துவேன்!)

க்ளைவ் விடுதிக்கு மதிப்பிற்குரிய அருட் தந்தை எரார்ட் (Rev Fr Ehrhart SJ) அவர்கள் தான் விடுதிக் காப்பாளர் (Hostel Warden). முன்பே சொன்னதுபோல் அவர் கனிவானவர் தான் ஆனால் கண்டிப்பானவரும் கூட. மாலை கல்லூரி விட்டு வந்ததும் கண்டிப்பாக எல்லோரும் விளையாட்டு மைதானத்தில் இருக்கவேண்டும். யாராவது அறையில் இருக்கிறார்களா என்று நேரில் வந்து பார்த்து, அப்படி யாராவது விளையாடப் போகாமல் இருந்தால் அவரே அழைத்து வந்து மைதானத்தில் விட்டுவிடுவார்.

சரியாக மாலை 7 மணிக்கு Silence Hours க்கான மணி அடித்ததும் யாரும் சத்தம் போட்டு பேசக்கூடாது. மாலை 7 மணியிலிருந்து மறுநாள் காலை 7 மணி வரை Silence Hours கடைபிடிக்கப்படும் போது அவரே விடுதியை சுற்றி வந்து மாணவர்கள் படிக்கிறார்களா எனப் பார்ப்பார்.

அதே நேரத்தில் மாணவர்களின் பொழுதுப்போக்கு விஷயங்களில் அவர் முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். தினம் மதியம் உணவருந்த மாணவர்கள் வரும்போது புதிய திரைப்பட பாடல்களை கேட்க அவர் தடை செய்ததில்லை.

அப்போது ஆஷா பரேக் மற்றும் ஷம்மி கபூர் நடித்திருந்த Dil Deke Deko- என்ற இந்திப்படம் திருச்சியில் முருகன் திரை அரங்கில் திரையிட்டிருந்தார்கள். 17 வயது இள நங்கை ஆஷா பரேக் நடித்த படம் என ஊர் முழுதும் விளம்பரப் படுத்தியிருந்தார்கள். அப்போது இந்தி மொழி எதிர்ப்பு தீவிரமாக இல்லாதால், திரை அரங்கில் கூட்டம் அலைமோதியதென்பதை சொல்லவா வேண்டும். (நானும் அதில் ஒருவன்!)

அதில் உள்ள எல்லா பாட்டுக்களுமே இனிமை என்றாலும் ஷம்மி கபூர் ஆஷா பரேக் ஆகிய இருவருக்கும், முகமது ரஃபியும் ஆஷா போஸ்லேயும் பாடிய Bade Hain Dil Ke Kaale என்ற பாடல் தான் கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பிரபலம். யாரோ அதே மெட்டில் (ஆனால் அதே பொருளில் அல்ல) தமிழில் ஒரு பாட்டை எழுதி இசைத்தட்டாக கொண்டு வந்து விட்டார்கள்.

தினம் மதியம் அதை உணவு இடைவேளையின் போது க்ளைவ் விடுதியில் அந்த இசைத்தட்டை போடுவார்கள். அந்த பாட்டின் வரிகள் 53 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதை தந்திருக்கிறேன். அதைப் படிக்குமுன் கீழே தந்துள்ள அந்த இந்தி திரைப்படத்தின் பாடலை காணொளியில் இரசித்துவிட்டு படிக்கவும்.




வேடிக்கையாக எழுதப்பட்டு அதே மெட்டில் இசையமைக்கப்பட்ட அந்த பாடல் இதோ.



மச்சான் உன் லைஃபே  ஜாலி, 
ஹவ் டு யு டு?
எப்போ போடுவே தாலி?


ஆகா கற்கண்டு அமெரிக்கா சென்று
வந்ததும் திருமணம் உண்டு.

மச்சான் உன் லைஃபே  ஜாலி, 
ஹவ் டு யு டு?
எப்போ போடுவே தாலி?


ஆகா கற்கண்டு அமெரிக்கா சென்று
வந்ததும் திருமணம் உண்டு.


அப்படி யா யா யா .
அப்படித்தான் தான் தான்.




எனது கல்லூரி அனுபவங்கள் வரும் பதிவுகளில்.....



நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

26 கருத்துகள்:

  1. சரியாக மாலை 7 மணிக்கு Silence Hours க்கான மணி அடித்ததும் யாரும் சத்தம் போட்டு பேசக்கூடாது. மாலை 7 மணியிலிருந்து மறுநாள் காலை 7 மணி வரை Silence Hours கடைபிடிக்கப்படும் //

    எனக்கும் பள்ளிப்பருவத்தில் ஒரு கிறிஸ்த்துவ பாதிரியார்கள் நடத்திய விடுதியில் தங்கி படித்த அனுபவம் உண்டு. அங்கும் இதே விதிதான். ஆனால்
    மாணவர்களை தங்களுக்குள் சைகை பாஷையிலேயே பேசிக்கொள்வோம். அதாவது பாதிரியாளர்கள் இல்லாதபோது. அதை இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக உள்ளது.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

      நீக்கு
  2. நண்பரையும் அறிய ஆவல்... ரசிக்க வைக்கும் இனிமையான அனுபவம்... ஆகா கற்கண்டு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! அந்த நண்பர் யார் என அறிய காத்திருங்கள்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  4. தங்கள் நினைவாற்றல் கண்டு வியக்கிறேன்! ஐயா! சொல்லும் விதமும் அருமை!

    பதிலளிநீக்கு
  5. அனுபவப் பகிர்வுகளில் உங்களை அடிக்க ஆள் கிடையாது சார்! நான் 1967இல் சிறிது காலம் மலைக்கோட்டைப் பகுதியில் சுற்றியதெல்லாம் நினைவுக்கு வருகிறது
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

      நீக்கு
  6. கல்லூரியில் பல பாடல்களை இப்படி மாற்றி பாடி அசத்தும் மாணவர்கள் இருந்தார்கள்..... எனது நினைவுகளையும் மீட்டி விட்டது உங்கள் நினைவுகள்.....

    இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், இந்த பதிவு உங்கள் நினைவுகளை மீட்டியதாக சொன்னதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  7. Sir, Writing few lines and making others to understand is easy thing, but taking them to the grand old days and making them to feel the situation is very difficult task. You are doing it very nicely with usage of very simple words. I am really wondering the command you have in the language... Keep the good work going sir.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே! தங்களது பாராட்டுக்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்தி நன் முறையில் எழுதத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.

      நீக்கு
  8. அனுபவங்களை சுவையாக சொல்வது ஒரு கலை. அந்தக் காலையில் கை தேர்ந்தவராக இருக்கிறீர்கள்.
    தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  9. பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு கவிப்ரியன் அவர்களே!

      நீக்கு
  10. //என்னைப்போல் வெளியிலிருந்து வரும் நண்பர்களோடு மரத்தடியில் சாப்பிட ஆரம்பித்தேன்//

    அவ்வளவு பெரிய கல்லூரியில் டேஸ் ஸ்காலர்களுக்காக, அமர்ந்து உண்ண ஒரு கேண்டீன் கூடவா இல்லை? எங்கள் கல்லூரியில் 95 விழுக்காட்டு மாணவர்கள் விடுதியில்தான் தங்கியிருந்தோம். அங்கேயே டேஸ் ஸ்காலர்களுக்காக நல்ல வசதிகள் இருந்தன.

    எனக்கு ஹிந்தியில் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபியும் ஆஷா போஸ்லேயும்தான். இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N,பக்கிரிசாமி அவர்களே! அப்போது புனித வளவனார் கல்லூரியில் அப்போது (1960 களில்) கேண்டீன் வசதிகள் இல்லை. ஒருவேளை இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனாலும் மரத்தடியில் இருந்த ‘பெஞ்ச்’சில் அமர்ந்து சாப்பிட்டது சந்தோஷமாகத்தான் இருந்தது.

      நீக்கு
  11. நியூ ஹாஸ்டல், பாதர்ஸ் லாட்ஜ் பக்கம் இப்போதெல்லாம் வெளியாட்களை அனுமதிப்பதில்லை. கிளைவ்ஸ் கட்டடமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தங்கள் நினைவோட்டம் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  12. “விடிவெள்ளி“ என்ற திரைப்படத்தில்

    “ கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
    நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை “

    என்று தொடங்கும் பாடல் நீங்கள் பதிவில் குறிப்பிட்ட இந்தி பாடல் மெட்டில் அமைந்தது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பாடல்களுமே வெவ்வேறு மெட்டில் உள்ளது போல் எனக்கு தோன்றுகிறது. கருத்துக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  13. கல்லூரி அனுபவங்கள் அருமை. கொடுத்தவிதம் ரசித்துப் படிக்கும்படி இருந்தது.

    பகிர்வுக்கு நன்றி ஐயா..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பதிவை இரசித்துப் படித்தமைக்கும் நன்றி திரு தங்கம் பழனி அவர்களே!

      நீக்கு