வியாழன், 19 செப்டம்பர், 2013

நினைக்காதது நடந்தது!




அதிசயம்! ஆனால் உண்மை. சென்னை வாழ் மக்கள் தங்கள் சந்ததியர்களாவது அவர்களது காலத்தில், பேரம் பேசாமல் அல்லது தானி (Auto) ஓட்டுனர் கேட்கும் கட்டணத்தைக் கொடுக்காமல்,அளவி (Meter) காட்டும் தொகையை கொடுத்து 
தானியில்பயணிப்பார்களா என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அந்த
அதிசயம் அவர்களது காலத்திலேயே நடந்துவிட்டது!

ஆம். செப்டம்பர் 16, 2013 க்குப் பிறகு தானி ஒட்டுனர்கள் அவசியம் புதிய கட்டணப்படித்தான் கட்டணம் வசூலிக்கவேண்டும்.என்றும் அவர்கள்
அரசு வெளியிட்டுள்ள புதிய கட்டண அட்டையை வைத்திருக்காவிட்டால்,
அதாவது அந்த அட்டை தானியில் பயணம் செய்பவர்களுக்குகத் தெரியும்
விதமாக ஓட்டுனர் இருக்கைக்குப் பின்புறம் ஒட்டப்பட்டிருக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்களது தானி பறிமுதல் செய்யப்படும் என அரசு  அறிவித்திருந்தது. மேலும் திருத்திய புதிய கட்டணம் கொண்டுள்ள அளவிகளை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் தானிகளில் பொறுத்தவேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

சென்னையில் உள்ள 72000 தானிகளில், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை
52000 தானி உரிமையார்கள் மட்டுமே அரசு வெளியிட்டிருந்த புதிய கட்டண அட்டையை  வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெற்றுக்
கொண்டதாகவும், மீதமுள்ள 20000 தானி உரிமையார்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதற்காக  போக்குவரத்து அதிகாரிகள்
40 பேர் தனித் தனி குழுக்களாக 16 ஆம் தேதி முதல் சென்னை முழுதும்
தீவிர கண்காணிப்பில் ஈடுபடப் போவதாக நாளேடுகளில் செய்திகள் வந்தன.

அதே நேரத்தில் வழக்கம்போல் தானி ஓட்டுனர்கள் அரசின் ஆணையை
நிறைவேற்ற கால அவகாசம் தரவேண்டும் என்றும் அதுவரை நடவடிக்கை
எதுவும் எடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டு இருப்பதாகாவும்
இன்னொரு பக்கம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

கடந்த கால அனுபவத்தால், நிச்சயம் நமது சென்னையில் உள்ள தானி
ஓட்டுனர்கள் இந்த புதிய கட்டணத்தை அமல்படுத்த விடமாட்டார்கள்.
அரசும் நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன். நீ அழுவதுபோல் அழு. என்று
சொல்வது போல் வெறும் அறிக்கைகளோடு நின்றுவிடும் என
நினைத்திருந்தேன்.

ஆனால் எனது நினைப்பு தவறாகிவிட்டது. சொன்னதோடு நிற்காமல் அரசு அலுவலர்கள் நேரடியாக களத்தில் இறங்கியதால் 16 ஆம் தேதியே அரசின் 
ஆணைப்படி இயங்காத 100 தானிகளுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டன
என்றும் என்று கேள்விப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

அதே நேரத்தில் சில தானி ஓட்டுனர்கள் புதிய கட்டணப்படி தான் கட்டணம் 
தருவோம் என்ற பயணிகளை வசை மாரி பொழிந்ததாகவும் நாளேடுகளில்
வந்த செய்திகளை படித்தபோது, போக்குவரத்துஅலுவளர்களின்  இந்த
தைரியமான நடவடிக்கை தொடரவேண்டும் என எல்லோரையும் போல
நானும் விரும்பினேன்.

புதிய கட்டணப்படி தானி ஓட்டுனர்கள் வசூலிக்கிறார்களா என சரிபார்க்க
எனக்கு நேற்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனது வீடு இருக்கும் அண்ணாநகர்
மேற்கு முனை குடியிருப்பிலிருந்து (DAV பள்ளி அருகே)
கோடம்பாக்கத்திலிருக்கும் Best Hospital போக  நேற்று அந்த பள்ளி அருகே, 
தானிக்காக எனது துணைவியாருடன் காத்திருந்தேன். முதலில் வந்த தானியை
கை காட்டி நிறுத்தியதும் தான் கவனித்தேன். அதில் அளவி பொருத்தப்பட்டிருக்கவில்லையென்று.

ஒட்டுனர் என்னிடம் எங்கு போகவேண்டும் எனக் கேட்டதற்கு பதில்
சொல்லாமல் அளவி இல்லையா?’ என்றேன் அதற்கு அவர் புதிய கட்டணத்தை  திருத்த கொடுத்திருக்கிறேன். எங்கு போகவேண்டும்? சொல்லுங்கள். என்றார்.

இடத்தை சொன்னதும் எவ்வளவு கொடுப்பீர்கள்?’ என்று ஆரம்பித்தார். நான்
ஏன் உங்களிடம்  புதிய கட்டண அட்டை இல்லையா?’ என்றேன். அதற்கு அவர் இன்னும் வாங்கவில்லை. என்று சொன்னதும். அதனாலென்ன என்னிடம் புதிய கட்டண அட்டை உள்ளது. என்றேன்.

வீட்டைவிட்டு கிளம்பும்போதே நாளேட்டில் வந்திருந்த கட்டண விவரம் கொண்ட பக்கத்தை எடுத்து பையில் வைத்திருந்தேன். அவ்வளவுதான், எதுவும் பேசாமல் விருட்டென்று தானியை கிளப்பி சென்றுவிட்டார்.

சற்று நேரம் கழித்து வந்த மற்றொரு தானியை நிறுத்தினேன். அதில் அளவி 
இருந்தது. தானியின் முகப்பிலும் புதிய கட்டண முறைப்படி அளவி திருத்தப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. கோடம்பாக்கம் போகவேண்டும் 
என்று சொல்லி புதிய கட்டணம் தானே. என்றேன். ஆமாம்.என்றார். 
சந்தோஷம் பொங்க ஏறி உட்கார்ந்தோம்.

போகும்போது அவர் நிறைய பேசிக்கொண்டிருந்தார். அரசைச் சாடினார். பின்பு
Share Auto க்களையும் சாடினார். பிறகு மெதுவாக சார். பல ஆண்டுகள் 
உபயோகத்தில் இல்லாததால் இந்த தானி சரியாக வேலை செய்ய இன்னும்
சில மாதங்கள் ஆகலாம்.பாருங்கள் நேற்று இப்படித்தான் அடையாறிலிருந்து
கிண்டி வந்தேன். அளவி சரியாக வேலை செய்யவில்லை. பயணி தான்
பார்த்துப் போட்டுக் கொடுத்தார். என்றார்.

எனக்குப் புரிந்துவிட்டது. இவர் எதற்கு அடி போடுகிறார் என்று. உடனே.
நான் கவலை வேண்டாம். என்னுடைய இடத்திலிருந்து அந்த மருத்துவ 
மனை 10 கிலோ மீட்டர் தூரத்துக்குள் தான் உள்ளது.என்னிடம் புதிய கட்டண 
விவரம் கொண்ட நாளேடு உள்ளது. அதைப் பார்த்து சரியான கட்டணத்தைத் தருகிறேன்.என்றேன். அவ்வளவுதான் அதற்குப் பிறகு அவரிடமிருந்து எந்த
பேச்சும் இல்லை.

சிறிது தூரம் சென்றதும் வண்டி நின்றுவிட்டது(!) அந்த ஒட்டுனர், இரண்டு
மூன்று தடவை தானியை கிளப்ப முயற்சித்துவிட்டு,  பின்னர் என்னிடம்
சார்.ஏதோ 'ப்ராப்ளம்'. என்னவென்று தெரியவில்லை. வேறு வண்டியில்
செல்லுங்கள். என்று சொல்லிவிட்டார். ஒருவேளை இறங்கும் இடத்தில
அதிகம் கேட்டால் தரமாட்டேன் என நினைத்தாரோ என்னவோ! அளவி
காட்டிய தொகையைக் கொடுத்து விட்டு, அந்த இடத்தில் வேறு வாகனம்
வர வாய்பில்லையாதலால் நடக்க ஆரம்பித்தோம்.

சிறிது தூரம் சென்றதும் வந்த Share Auto வில் ஏறி மருத்துவமனை அருகே இறங்கிக்கொண்டோம். பின் மருத்துவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது  வெளியே நின்றிருந்த தானியின் ஒட்டுனரிடம்,’அண்ணா நகர் போகவேண்டும் வருக்கிறீர்களா?’ என்றேன். 

சரி. என்றதும், புதிய கட்டணம் தானே?’ என்றேன். ஆமாம் சார். திருத்தப்பட்ட 
அளவி உள்ளது. வாருங்கள். போகலாம். சரி. இவர் வழியில் என்ன சொல்லப்போகிராரோ என நினைத்துக் கொண்டே ஏறி அமர்ந்தோம். திரும்பும் 
வழியில் அவர் எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு வந்ததும் அளவியைப் பார்த்தேன்.ரூ.113 தான் காட்டியது.

சில்லறை இல்லாததால் சந்தோஷத்தோடு ரூ.120 ஐக் கொடுத்தேன். அவரும் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டார். இதே மருத்துவ மனைக்கு சென்ற மாதம் வந்தபோது ரூ 200 கேட்ட ஓட்டுனருக்கு ரூ 180 ஐ கொடுத்திருக்கிறேன்.

அப்போது கேட்டேன். இந்த புதிய கட்டண முறை வந்ததும் நிறைய  வாடிக்கையாளர்கள்  வருகிறார்களா?’ என்று. அதற்கு அவர் முன்பை விட
அதிகம் பேர் வருகிறார்கள். என்றார். எனக்கு கேட்க சந்தோஷமாக இருந்தது.

இன்றைக்குக் கூட நாளேடுகள் தரும் தகவல்கள் படி, இதுவரை பறிமுதல் 
செய்யப்பட தானிக்கள் 400 க்கும் மேலாம். சில ஓட்டுனர்கள் காவல் துறைக்கும் போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கும் பயந்து, தானிக்களை ஒட்டாமல்
நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். மேலும் தானி நிறுத்துமிடங்களில் உள்ள 
ஓட்டுனர்கள் இன்னும் பழைய முறையைத்தான் கடைபிடிக்கிறார்களாம்.

எனவே காவல்துறையினரும் போக்குவரத்துத் துறையினரும் எல்லா தானி நிறுத்துமிடங்களிலும் ஆய்வு செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். இந்த
திட்டம் வெற்ற பெற நாமும் அளவி திருத்தப்படாத, தானிகளில் பயணம்
செய்யாமல் புறக்கணிப்போம்.

இந்த சமயத்தில்  Times Of India நாளேட்டிற்கு நாம் நன்றி சொல்லத்தான்
வேண்டும். ஓராண்டிற்கு முன்னால் மீட்டர் எங்கே? என்று அவர்கள்
ஆரம்பித்த வைத்த அந்த பொது நல கேள்விதான் பொது மக்களிடையே
ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி எல்லோரும் ஒருமித்து குரல் எழுப்பவும், தயங்கிக்கொண்டிருந்த அரசு இயந்திரமும் விழித்துக்கொண்டு நடவடிக்கை
எடுக்கவும் காரணமாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

சும்மாவா சொன்னார்கள் எழுதுகோலின் முனை வாள் முனையை விட
வலியது என்று. 

28 கருத்துகள்:

  1. சட்டம் முழுமையாக செயல் படுத்தபட மக்களும் தாங்கள் சொன்னபடி நடக்க வேண்டும் காவல் துறையும் ஒத்துழைக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எனது கருத்தை ஆமோதித்ததற்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  2. அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் ஒருங்கிணைந்து இதை செயல்படுத்தினால் பொதுமக்களுக்கும் ஆட்டோக்கள் மீது முழுமையான நம்பிக்கை பிறக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கவிதைவீதி சௌந்தர் அவர்களே!

      நீக்கு
  3. சும்மாவா சொன்னார்கள் ‘எழுதுகோலின் முனை வாள் முனையை விட
    வலியது’ என்று.

    நேரடி அனுபவம் சுவாரஸ்யமானது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  4. இது தொடர வேண்டும்... மற்ற எல்லா ஊர்களுக்கும் வர வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! மற்ற ஊர்களிலும் இது நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற அனைவரின் விருப்பம் நிறைவேறும் என நம்புவோம்.

      நீக்கு
  5. பதிவின் தலைப்பு "நினைக்காதது நடந்தது" என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு ஆட்டோ என்றாலே அலர்ஜி. பஸ்ஸில் கூட சென்றுவிடுவேன். ரோட்டின் புழுதி அத்தனையும் முகத்தில் அடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொன்னது போல் தலைப்பை மாற்றிவிட்டேன்.

      நீக்கு
    2. நான் சாதாரணமாகத்தான் கூறினேன். அதையும் எடுத்துக்கொண்டு தலைப்பை மாற்றியதற்கு நன்றி.

      நீக்கு
    3. நீங்கள் தந்த தலைப்பு சரியே என நினைத்ததால் மாற்றிவிட்டேன். அவ்வளவே. நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

      நீக்கு
  6. திட்டம் வெற்ற பெற நாமும் அளவி திருத்தப்படாத, தானிகளில் பயணம்
    செய்யாமல் புறக்கணிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்தை ஆதரித்ததற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      நீக்கு
  7. திட்டம் வெற்ற பெற நாமும் அளவி திருத்தப்படாத, தானிகளில் பயணம்
    செய்யாமல் புறக்கணிப்போம்.

    மக்கள் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. கேக்கறதுக்கு சந்தோஷமா இருக்கு. நாட்டுல நல்ல ஆட்டோ ஓட்டிகளும் இருக்கறத பாத்தா... ஆனா இது தொடரனும்.... சென்னையில ஏறக்குறைய இருபதாயிரம் ஆட்டோக்களை காணமாமே... கேள்விப்பட்டீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர். ஜோசப் அவர்களே! காணாமல் போன அந்த இருபதாயிரம் தானிக்களும் தற்சமயம் அரசு அலுவலர்கள் மற்றும் காவலர்களின் கெடுபிடிக்கு பயந்து ‘ஓய்வெடுத்துக்’ கொண்டிருக்கின்றன. ஒரு வேளை அரசு இயந்திரம் மெத்தனமாக இருந்தால் அவைகள் திரும்பவும் சாலைகளுக்கு வரலாம் அளவி இல்லாமல். நாம் தான் அவைகளை புறந்தள்ளவேண்டும்.

      நீக்கு
  10. தில்லியில் பல முறை மீட்டர் படியே சென்றிருக்கிறேன். சென்னை வந்தால் இவர்கள் கேட்கும் பணத்தினால் இந்த வண்டிகளில் பயணிக்கவே விரும்பவதில்லை....

    சரியானபடி தொடர்ந்தால் நல்லது தான். பார்க்கலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நீங்கள் அடுத்த முறை சென்னை வரும்போது, தானிகள் ஓட்டுனர்களின் தொல்லை இருக்காது என நினைக்கிறேன்.

      நீக்கு
  11. அய்யா! நாட்டில் ஓடும் பல ஆட்டோக்கள் போலீஸ்காரர்களின் மனைவிகள் பெயரில் அல்லது அந்த அம்மணிகளின் பினாமிகள் பெயரில்தான் இருக்கின்றன என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்புறம் ஆட்டோவாவது மீட்டராவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அப்படிப்பட்ட தானிகள் தற்சமயம் சாலையில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கேள்வி. ஒருவேளை அரசின் கெடுபிடி குறைந்தால் அவைகள் திரும்பவும் தலை காட்டுமோ என்னவோ. நாம் தான் அவைகளை புறக்கணிக்கவேண்டும்.

      நீக்கு
  12. இங்கே மதுரையிலும் இந்த திட்டம் அமுலாவது எப்போ ?
    கால் டாக்சியை விட தானிக்கட்டணம் இங்கே கொள்ளை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு K.A.பகவான்ஜி அவர்களே! தங்களின் ஆதங்கம் புரிகிறது. சென்னையில் இந்த முயற்சி ‘வெற்றிகரமாக’ அமலாக்கப்பட்டதும், மதுரையிலும் மற்ற ஊர்களிலும் அமல்படுத்துவார்கள் என நம்புவோம்.

      நீக்கு
  13. முன்பெல்லாம் அடையாரிலிருந்து பனகல் பூங்கா போக ரூ.150 கொடுத்தேன். இப்போது மீட்டர் படி 96.80தான்;நான் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தேன்! ஆனால் எல்லா ஆட்டோக்காரர்கள்ம்ம் எப்போது சரியான கட்டணம் வசூலிக்கப்போகிறார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தானி ஓட்டுனர்களில் அறுபது விழுக்காடு அளவி காட்டும் தொகையை ஒத்துக்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிட்டாலும் மீதி பேர் இன்னும் ‘நொண்டிச்சாக்கு’ சொல்லிக்கொண்டு பேரம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அரசு இவர்களை கொஞ்சம் அதிகமாக கவனிக்கவேண்டும்.

      நீக்கு
  14. I share with many of the views expressed in this blog,

    As has been rightly pointed out, people over the years have become used to getting fleeced and view the present action against erring autos with skepticism.The movement enforcement slackens, people are afraid that auto drivers would return to their old ways. It should be understood that authorities can't keep a watch on all the autos day in and day out and sooner or later enforcement squad would withdraw from the scene secure in the belief that they have done their job. It is in the hands of the public to ensure that auto drivers do not return to their old ways. With so many options available for travel these days, one need not entirely depend on autos for travel. If the public are vigilant, and boycott those autos without meters for some time , they would have no alternative but to follow the rules. Yes Times of India deserves all praise for launching a campaign nearly a year ago and publishing several articles repeatedly . Praise is also due to the person who filed a PIL in Supreme court which finally forced the Govt to act. vasudevan




    a

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! இந்த தானி ஓட்டுனர்களின் அட்டகாசம் பற்றி நீங்களும் அடிக்கடி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தீர்கள் என்பதை நான் அறிவேன். எனவே தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! ஊர் கூடி தேர் இழுப்பது என சொல்வதுபோல் நாம் அனைவரும் அளவி இல்லாத தானியில் ஏறுவதில்லை, அதிக கட்டணம் வசூலிக்கும் தானிகளில் ஏறுவதில்லை என முடிவு செய்தாலே இவர்களின் கொட்டத்தை அடக்கிவிடலாம். செய்வோமா?

      நீக்கு