திங்கள், 9 செப்டம்பர், 2013

பொரி பொரித்தன்னைக்கும் பட்டினிதான்!



 சென்னை வாழ் மக்களை ஆட்டோ ஓட்டுனர்களின் அசுரப்பிடியிலிருந்து காப்பாற்ற 2000 ஆம் ஆண்டு வாக்கில் அவதாரம் எடுத்தவைதான் Call Taxi கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் Call Taxi க்கும் எனக்கு ஏதோ ஏழாப்பொருத்தம் போல. முதன் முதல் இவ்வகை டாக்ஸிகள் சென்னையில் அறிமுகமானபோது, நான் பணி புரிந்துகொண்டிருந்த  கண்ணூரிலிருந்து சென்னைக்கு வந்தபோது  சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த ஒரு கால் டாக்ஸியை எனது இருப்பிடம் செல்ல கூப்பிட்டேன். அந்த டாக்ஸியை ஒட்டியவர்  இராணுவத்தில் சேவை புரிந்து ஓய்வு பெற்ற திரு இராமநாதன் என்பவர்.அவரே சொந்தமாக வண்டியை வாங்கி, எந்த நிறுவனத்துடனும்  இணைக்காமல் ஒட்டிக்கொண்டிருந்தார்.

அவரது அணுகுமுறையும், பேச்சும் நல்ல முறையில் இருந்ததால் அவரது கைப்பேசி எண்ணை குறித்து வைத்துக்கொண்டு எப்போது சென்னை வந்தாலும் அவரைத்தான் அழைப்பேன். அவரும் சொன்ன நேரத்தில் வந்து உதவிக்கொண்டி இருந்தார்.

ஏனோ தெரியவில்லை பல மாதங்களுக்குப் பிறகு அவரை தொடர்பு கொண்டபோது தொடர்புகொள்ள முடியவில்லை. அவரால் தன்னந்தனியனாக மற்ற நிறுவனங்களின் கடும்போட்டியை எதிர்கொள்ள முடியவில்லை போலும்.

அதற்குப் பிறகு Chennai Call Taxi யின் சேவையை உபயோகப்படுத்த தொடங்கினேன். ஆரம்பத்தில் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து சேவை செய்தவர்கள் பின்பு ஒரு தடவை அழைத்தபோது மழைக்காலங்களில் எங்கள் பகுதிக்கு (அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம்) டாக்ஸி வர இயலாது என கறாராக சொல்லிவிட்டதால் Fast Track Call Taxi நிறுவனத்தின்  சேவையை நாட வேண்டியதாயிற்று.

அவர்களும் ஆரம்பத்தில் காண்பித்த, குறை காணமுடியாத சேவையை ஏனோ பின்பு தொடரவில்லை. காரணம் அவர்களோடு இணைத்துக்கொண்டிருக்கும் டாக்ஸி ஓட்டுனர்கள் தான். தங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் Fast Track Call Taxi அவர்களை நம் இடத்திற்கு வர சொன்னாலும் சொன்ன நேரத்திற்கு வராமல், நம்மை இக்கட்டில் விட்டுவிடுவார்கள். எனக்கே இது போல் மூன்றுமுறை நடந்தது.

ஒரு தடவை கொல்கத்தா செல்ல வீட்டிலிருந்து விமான நிலையம் செல்ல Call Taxi யை Book செய்திருந்தேன். மாலை 4 மணிக்கு விமானம் புறப்படும் நேரமாக இருந்ததால் மதியம் 1.30 மணிக்கே வரச்சொல்லியிருந்தேன். 1.30 மணிக்கு வரவில்லை என்றதும் அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டபோது அவர்கள் எனக்காக வரும் டாக்ஸி ஒட்டுனரின் பெயரையும் அவரது கைபேசி எண்ணையும் கொடுத்தார்கள்.

அவரை தொடர்பு கொண்டபோது இதோ வந்துகொண்டு இருக்கிறேன். என்று சொன்னரே தவிர எங்கிருக்கிறார் என்று சொல்லவில்லை. திரும்பவும் 15 நிமிடம் கழித்து கேட்டபோது வேளச்சேரியில் இருப்பதாகவும் விரைவில் வந்துவிடுவதாகவும் சொன்னார்.  

வேளச்சேரியில் அவர் அண்ணா நகர் வந்து என்னை அழைத்துக்கொண்டு திரிசூலம் விமான நிலையம் செல்வதற்குள் விமானம் புறப்பட்டுவிடும் என்பதால் உடனே ஒரு ஆட்டோவைப் பிடித்து  கூட்ட நெரிசலில் நீந்தி  விமான நிலையம் சென்று Boarding Pass எடுப்பதற்கும் Counter மூடுவதற்கும் சரியாக இருந்தது.

அடுத்த தடவை என் மகன் மும்பை செல்ல காலை 10 மணிக்கு வர சொல்லியிருந்தேன், ஆனால் 10.30 மணி வரை டாக்ஸி வரவேயில்லை. பின்பு 10.30 மணிக்கு எனது காரில் மகனை அழைத்துக்கொண்டு போய் விட்டு வந்தேன்.

மூன்றாவது தடவை கோவை விரைவு இரயிலில் செல்ல Call Taxi ஐ காலை 5 மணிக்கு வரச்சொல்லியிருந்தேன். 5 மணிக்கு டாக்ஸி வராததால் அவர்கள் கொடுத்திருந்த கைபேசியில் அழைத்தபோது, அந்த டாக்ஸி ஓட்டுனர் மிகவும் சாதாரணமாக வர இயலாது சார். என்று கூறிவிட்டார். அவரோடோ மற்றும் அந்த நிறுவனத்தோடு அப்போது மல்லுக் கட்ட நேரம் இல்லாததால், வழக்கம்போல் அருகில் இருந்த பேருந்து நிறுத்தம் சென்று  கிடைத்த ஆட்டோவில் அவர் கேட்ட கட்டணத்தைக் கொடுத்து இரயிலைப் பிடித்தேன்,

மேற்கூறிய அனுபவங்களால் Call Taxi என்றாலே எனக்கு ஒவ்வாமை   
(Allergy) தான். ஆனாலும் அவ்வப்போது இந்த Call Taxi களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று காலை ஒரு வேலையாக மதுரை போய்விட்டு, நான், என் மனைவி என் மகள் மற்றும் அண்ணி ஆகியோருடன் நேற்று இரவே பாண்டியன் விரைவு இரயிலில் சென்னை திரும்பி வந்துகொண்டிருந்தேன்.

இன்று அதிகாலை 5-15 க்கு இரயில் செங்கல்பட்டு சந்திப்பு வந்ததும், Call Taxi ஐ கூப்பிட்டு இரயில் நிலையத்திற்கு வர சொல்லலாமே என நினைத்து  Fast Track Call Taxi நிறுவனத்தை தொடர்பு கொண்டு மதுரையிலிருந்து இரயிலில் வந்துகொண்டிருப்பதாகவும், சுமார் 6-15 மணிக்கு சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு இரயில் வந்து சேரும் என எதிர்பார்ப்பதால் அப்போது டாக்ஸி வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அந்த நிறுவனத்தின் ஊழியர். சார். வண்டி ஏதும் இல்லை. காலை எட்டு மணிக்கு மேல்தான் வண்டி கிடைக்கும். எனக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

சரி இவர்களால் உதவ முடியாவிட்டால் என்ன, அடிக்கடி தொலைக்காட்சியில் நம்மிடம் தாங்கள் தான் சேவை செய்யவே பிறந்தவர்கள் என்பது போல் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் NTL Call Taxi ஐ கூப்பிடுவோமே என நினைத்து அழைத்தபோது அவர்கள்  சொன்னார்கள். 3 மணி நேரத்திற்கு முன்னால் பதிவு செய்தால்தான் வண்டியை அனுப்பமுடியும். இப்போது பதிவு செய்தால் 8 மணிக்கு மேல் தான்  அனுப்ப இயலும்.என்று

அதற்கு நான் வீட்டிலிருந்து கிளம்பினால் 3 மணி என்ன 5 மணிக்கு முன் கூட பதிவு செய்யலாம். ஆனால் இரயிலில் வரும்போது எப்போது வந்து சேருவோம் எனத் தெரியாதபோது, எப்படி 3 மணிக்கு முன்னால் பதிவு செய்யமுடியும்?’ என்றதற்கு அவர் உதவமுடியாததற்கு சாரி சார்.என்று பேச்சை முடித்துக் கொண்டார் அந்த தன் புகழ் பாடும் நிறுவனத்தின் ஊழியர்.  

என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் இரயில் மாம்பலம் வந்துவிட்டது. அப்போது அங்கு சுவற்றில் எழுதப்பட்டிருந்த Bharathi Call Taxi யின் தொலைபேசி எண்ணைப் பார்த்து என் மகள் அப்பா. இந்த நிறுவனத்தைக் கூப்பிட்டு பாருங்களேன். என்றாள். உடனே அந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு விவரம் சொன்னேன். அவர் சார் இன்னும் 5 மணித்துளிகளில் உங்களுக்கு ஒதுக்கப்ப்ட்டிருக்கும் டாக்ஸியின் ஓட்டுனர் உங்களை தொடர்புகொள்வார். நீங்கள் எழும்பூர் வரும்போது எங்கு சந்திக்கவேண்டும் என்பதை அவர் சொல்வார் என்றார்.

எனக்கு மிக்க மகிழ்ச்சி. அப்பா. இவர்களாவது உதவ இருக்கிறார்களே என்று. எழும்பூர் நிலயத்தை அடைந்ததும் வெளியே வந்து 15 மணித்துளிகள் காத்திருந்தேன்.யாரும் என்னை கைபேசியில் கூப்பிடாததால் திரும்பவும் அந்த நிறுவனத்தை கூப்பிட்ட போது,’இருங்கள்.சார். பார்த்து சொல்கிறேன். என்றார்.

சில மணித்துளிகள் காத்திருந்த பின் இன்னும் 5 மணித்துளிகளுக்குள் உங்களை ஓட்டுனர் கூப்பிடுவார். என்றார் அந்த ஊழியர்.15 மணித்துளிகள் ஆகியும் யாரும் கூப்பிடாததால் திரும்பவும் கூப்பிட்டபோது திரும்பவும் அதே பல்லவி தான். சரி இவர்களும் நம்மை காலை 8 மணி வரை எழும்பூர் இரயில் நிலையத்தில் காத்திருக்க வைப்பார்கள் போல என எண்ணி அந்த நிறுவனத்தைக் கூப்பிட்டு நேரமாகுமானால் டாக்ஸி வேண்டாம் என சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

வழக்கம்போல் ஆட்டோ நண்பர்கள் மொய்த்துக்கொள்ள, ஒரு ஆட்டோவை தேர்ந்தெடுத்து  அண்ணா நகரில் உள்ள என் இருப்பிட முகவரியை விவரமாக சொல்லி அங்கு வரமுடியுமா?’ என அந்த ஓட்டுனரிடம் கேட்டபோது சரி. போகலாம் ஏறுங்கள்.ஆனால் Fixed Rate தான்.என்றார் அவர்.  புதிய கட்டணப்படியல்லவா நீங்கள் கட்டணம் வசூலிக்கவேண்டும். என்றதற்கு, சார் அது அக்டோபர் 15 க்குப் பின் தான். இன்னும் மீட்டரை புதிய கட்டண விகிதத்திற்கு மாற்றவில்லை. என்று பதிலளித்தார்.

வேறு வழியின்றி அவர் கேட்ட கட்டணத்தைக் கொடுப்பதாகக் கூறி ஆட்டோவில் ஏறினோம்.வீட்டை நெருங்கும்போது இவ்வளவு தூரம் இருக்குமென்று நீங்கள் சொல்லவில்லையே?’ என்று சென்னை ஆட்டோ ஓட்டுனர்களில் பெரும்பாலோர் சொல்லும் வசனத்தை ஆரம்பித்தார்.

அவரிடம் இறங்கும் இடத்தையும் தூரத்தையும் விவரமாக சொன்ன பிறகுதானே வருவதாக சொன்னீர்கள்.இப்போது இப்படி சொல்கிறீர்களே.என்றேன். அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் முணுமுணுத்துக்கொண்டே வந்தார். இறங்கியதும் மேலும் போட்டுக்கொடுங்கள். என்றதும்.தலை விதியை நொந்துகொண்டு, காலை வேளையில் சண்டை வேண்டாமே என்பதால் அவர் கேட்டதை  கொடுத்து அனுப்பினேன். Call Taxi யில் வந்திருந்தால் 260 ரூய்கள் தான் ஆகியிருக்கும். ஆனால் நான் கொடுத்ததோ ரூபாய்கள் 300.

தங்களால் வாடிக்கையாளர்களுக்கு சொன்ன நேரத்தில் டாக்ஸி ஏற்பாடு செய்யமுடியாதெனில் இந்த Call Taxi நிறுவனங்கள் எதற்காக வீண் தம்பட்டம் அடித்துக்கொள்ளவேண்டும்?

அரசு ஆட்டோ கட்டணம் நிர்ணயித்தும் ஏன் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அதை மதிக்காமல் பொதுமக்களிடம் தண்டம் வசூலிக்கிறார்கள்?

என்று இந்த விடை காணமுடியாத கேள்விகள் என்னுள் எழுகின்றன.

காலம்தான்  இதற்கு பதில் சொல்லவேண்டும்!




18 கருத்துகள்:

  1. விளம்பர உலகம் ஐயா இது. இங்க எதுவுமே வியாபாரம்தான்.

    பதிலளிநீக்கு
  2. எத்தனை வருடங்கலாக இதே ப்ரச்சனை! இந்த ப்ரச்சனை பெரும்பாலாக மற்ற நகரங்களில் இல்லாத போது இங்கு மட்டும் ஏன்? கொடுமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு Bandhu அவர்களே! இந்த நகரத்தில்/நரகத்தில் இவ்வாறு இருப்பதன் காரணம் அரசியல்தான்.

      நீக்கு
  3. call taxi கள் விளம்பரம் செய்வது போல் சேவை அவ்வளவு உயர்வாக இல்லை என்பது உண்மையே.தானிகளைப் பொறுத்தவரை அவர்கள் என்றும் மாற மாட்டார்கள்.எந்த அளவுக்கு மீட்டர்,ரேட்கார்ட் எல்லாம் வெற்றி பெறப் போகிறது பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! புதிய கட்டணங்கள் தானிகளில் அமல் படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியதே.

      நீக்கு
  4. ஒன்றும் செய்ய முடியாது... அவரவர் உணர்ந்து திருந்த வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!


      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா

    சரியான தகவல்தான் ஆட்டோ கட்டணம் அரசு வெளியிட்ட பின் எரிபொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்வதால் அவர்களும் தன் பாட்டுக்கு உயர்த வேண்டி தேவைதான் என்னதான் செய்வது நீங்கள் சொல்வது போல
    காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்
    கருத்து அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! நினைத்தது நடக்கும் என நம்புவோம்.

      நீக்கு
  6. //காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்!//

    இதற்கு காலம் கூட பதில் சொல்லாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! காலம் பதில் சொல்லவேண்டும் என நினைக்கிறேன். அவ்வளவுதான்.

      நீக்கு
  7. இந்த மாதிரி அனுபவம் எனக்கும் நிறைய இருக்கு. நீங்க சொன்ன கால் டாக்சி நிறுவனங்கள் எல்லாமே அப்படித்தான். முக்கியமா ஏர்போர்ட்டுக்கு போகணும்னா இவங்கள நம்பவே மாட்டேன். என் கார்லயே போயி ஓவர்நைட் பார்க்கிங் ப்ளேஸ்ல நிறுத்திட்டு போயிருவேன். ரெண்டு நாளைக்கு மேல தங்கணும்னா மட்டும்தான் கால் டாக்சி. ஆனால் எங்க பேங்க் கான்ட்ராக்ட்ல இருக்கற கம்பெனியிலதான் சொல்லுவேன். நிரந்தர ஆர்டர் கிடைக்கறதால ஏமாத்தாம வந்துருவான்.

    ரிட்டையர் ஆனதுலருந்து ஆவடியிலயே இருக்கற ஒரு சின்ன கம்பெனி கோல்டன் டாக்சியிலதான்... இதுவரைக்கும் பரவாயில்லை. பெருசானா எப்படியோ தெரியலை.

    ஆனா இங்கன்னு மட்டுமில்லை, மும்பை, கேரளா, பூனே, எல்லா நகரத்துலயும் ப்ரைவேட் கால் டாக்சி காரங்க இப்படித்தான். ஆர்டர புடிக்கறதுல இருக்கற ஆர்வம் டெலிவரி பண்றதுல இருக்காது. ஒருதடவை பூனா NIBMலருந்து திரும்பறப்போ ஃப்ளைட் கிளம்பறதுக்கு அரை மணிக்கு முன்னாலதான் கொண்டு விட்டான். நெட்ல போர்டிங் பாஸ் எடுத்திருந்ததால தப்பிச்சேன்.

    ஆனா இப்போ அதையெல்லாம் திரும்பிப் பாக்கறப்போ இதெல்லாம் ஒருவித அனுபவம்னுதான் தோனுது...

    உங்க அனுபவத்த படிச்சப்போ என்னுடைய அனுபவங்களையும் அசைபோட வச்சிது. அதுக்கும் ரொம்ப நன்றிங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! ஒவ்வொரு அனுபவமும் புதுமை தான்!

      நீக்கு
  8. Call Taxis are same not only in Chennai, but also through out TN. Happened same type of incidents in different places in Tn.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு இராமுடு அவர்களே! சென்னை Call Taxi கள் மற்ற ஊர் டாக்ஸிகளுக்கு முன் மாதிரி போல!

      நீக்கு
  9. நாம் வீட்டிலிருந்து வெளியூர் சென்றுவர கால் டாக்சிகள் சவுகரியம். (அதுவும் அவர்கள் நமது இருப்பிடத்திற்கு அருகில் இருக்க வேண்டும்) முன்பின் பழக்கம் இல்லாத இடங்களில் அங்கே நிற்கும் கிடைக்கும் வாகனங்களில் ஏறிச் செல்வதுதான் நல்லது. ஏனெனில் அப்போது நமக்குள்ள நேரம் விலை மதிப்பில்லாதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! Call Taxi களை தவிர்க்க நினைத்தாலும், இந்த ஆட்டோ ஓட்டுனர்களின் பணம் பறிக்கும் நடவடிக்கைகளால் அவைகளை நாட வேண்டியுள்ளது.

      நீக்கு