செவ்வாய், 29 அக்டோபர், 2013

நினைவோட்டம் 75

எங்களுக்கு ஆங்கில பாட வகுப்பு நடத்தியவர் பேராசிரியர் பானுமூர்த்தி
அவர்கள். அவருக்கு முன்பு பேராசிரியர் கமலபதி இருந்ததாகவும்,அவர்
நாங்கள் கல்லூரியில் சேருமுன்பே, எங்கள் கல்லூரியிலிருந்து விலகி
ஜமால் ஜமால் முகமது கல்லூரியில் சேர்ந்து பணிபுரிவதாகவும்
சொன்னார்கள்.

அவர் பாடம் நடத்தும் விதமே அலாதியாம். ஷேக்ஸ்பியரின்
‘ஒத்தெல்லோ’வை நடத்தும்போது அவரே அந்த கதாபாத்திரமாக மாறி
நடிப்பாராம்.அதனால் அவரது ஆங்கில வகுப்பே ஒரு நாடக மேடைபோல்
இருக்கும் என்று கேள்விப்பட்டேன்.

எங்களுக்கு திரு பானுமூர்த்தி அவர்கள் தான் ஆங்கில ஆசிரியர்
என்றாலும், அவர் விடுப்பில் இருக்கும்போது துறைத்தலைவர்
Rev Fr லாரன்ஸ் சுந்தரம் SJ அவர்களும், Rev Fr T.N.செக்யூரா SJ
அவர்களும் சில சமயம் பாடம் நடத்தியதுண்டு.

திருச்சி புனித வளவனார் கல்லூரி, சென்னை இலயோலா கல்லூரி
மற்றும் பாளையம்கோட்டை புனித சவேரியார் கல்லூரி
(St.Xavier’s College) மூன்றும் ஒரே முகவர் (Rector) கீழ் இருந்ததால்
ஒரு கல்லூரியிலிருந்து இன்னொரு கல்லூரிக்கு பேராசிரியர்கள்
மாற்றலாகி வருவதுண்டு.அதனால் Rev Fr லாரன்ஸ் சுந்தரம் SJ
அவர்களும், Rev Fr T.N.செக்யூரா SJ அவர்களும் சென்னை
இலயோலா கல்லூரியில் பணியாற்றியவர்கள் தான்.

Rev Fr லாரன்ஸ் சுந்தரம் SJ அவர்கள் சிரித்த முகத்துடன் பாடத்தை
நடத்துவார். ஆனால் Rev Fr T.N.செக்யூரா SJ அவர்களோ பாடம்
நடத்தும்போது எங்களை சிரிக்க வைப்பார். ஆனால் மிகவும்
கண்டிப்பானவர்.

பேராசிரியர் பானுமூர்த்தி அவர்களும் துணை பாடம் (English
Non Detailed Lesson
)நடத்தும்போது, சில சமயம் அந்த பாடத்தில்
வரும் உரையாடலை சொல்லும்போது அந்த கதாபாத்திரம் பேசுவது
போலவே பேசுவார். அதனால் துணைப்பாட வகுப்பு மிகவும்
சுவாரஸ்யமாக இருக்கும்.

நான் படித்தபோது எங்களுக்கு சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens)
அவர்களின் பிரசித்திபெற்ற நாவலான Great Expectations ஆங்கில
துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்தது. ஒரு அநாதை சிறுவன்,
முகம் தெரியா புரவலர் ஒருவரால் பண்புள்ள மனிதனாக ஆக்கப்பட்டது
பற்றிய மிக அருமையான நாவல் அது

எனக்கு ஆங்கில பாடங்களை விட துணைப் பாடங்கள் தான் பிடிக்கும்.
ஏனெனில் அதில் தானே கதைகள் இருக்கும்! நான் 10 ஆம் வகுப்பு
படிக்கும்போது எனது ஆசிரியர் திரு A.கிருஷ்ணசாமி அவர்கள் நடத்திய
அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) எழுதிய The Count of
Monte Cristo
வையும், S.S.L.C படிக்கும்போது எங்களது தலைமை
ஆசிரியர் திரு வெங்கடராம ஐயர் அவர்கள் நடத்திய ஜோநாதன் ஸ்விஃப்ட்
(Jonathan Swift) அவர்களின் Gulliver's Travels வையும்
மறக்க முடியுமா என்ன?

Great Expectations நாவல் எங்களுக்கு பாடமாக வைக்கப்
பட்டிருந்தபோது, திருச்சியில் கண்டோன்மெண்ட் பகுதியில் இருந்த
‘பிளாசா’ திரை அரங்கத்தில் அதே நாவல் Great Expectations என்ற
பெயரிலேயே திரைப்படமாக வெளியாகி இருந்தது. அந்த கதையை
1946 இல் David Lean என்ற இயக்குனர் John Mills மற்றும்
Valerie Hobson ஆகியோரை முக்கிய பாத்திரத்தில் நடிக்கவைத்து
இயக்கி இருந்தார்.

பேராசிரியர் திரு பானுமூர்த்தி அவர்கள் அந்த படம் அப்போது
திரையிடப் பட்டிருப்பதை சொல்லி எங்கள் எல்லோரையும்
திரைப்படத்தைப் பார்க்க சொன்னார். நானும் என் அண்ணனிடம்
அனுமதி பெற்று, அந்த திரை அரங்கில் திரைப் படத்தைப் பார்த்தேன்.
மிக அருமையான படம். அதைப் பார்த்துவிட்டு வந்தபின் பாடத்தை
கவனிக்கும்போதுகதையை புரிந்துகொள்ள மிகவும் சுலபமாக இருந்தது.

இந்த பதிவை எழுதும்போது அந்த திரைப்படத்தை திரும்பவும் பார்க்க
எண்ணி, வலையில்தேடியபோது கிடத்த காணொளியை
கீழே தந்துள்ளேன்.






அவசியம் நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்.

தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் வந்தவைகள் அப்போது திரைப்
படங்களாக வந்ததும், அவைகளைப் பார்க்க ஆசிரியர்களே சிபாரிசு
செய்ததும் தான் ஆச்சரியம்.

அடுத்து நான் மறக்க முடியாத ஆசிரியர் இயற்பியல் (Physics)
சொல்லிக் கொடுத்த பேராசிரியர் திரு அனந்தகிருஷ்ணன் அவர்கள்.
பெருந்தலைவர் காமராசர் போல் முழங்கை வரை உள்ள கதர் சட்டை
அணிந்து தோளில் துண்டுடன் வேட்டி உடுத்தி வகுப்பு எடுக்க வருவார்.
நெற்றியில் குங்குமம் துலங்க,கையில் எப்போது வெற்றிலைப்பெட்டி
இருக்கும்.

வகுப்புக்கு வந்ததும் வெற்றிலைப் பெட்டியை மேசையின் ஒரு ஓரத்தில்
வைத்துவிட்டு பாடத்தை துவங்குவார்.

அவர் பாடம் நடத்தும்போது வகுப்பு அமைதியாய் இருக்கும்.அவர்
யாரையும் கண்டித்ததில்லை. ஆனாலும் அவரிடம் ஒரு பயம் கலந்த
மரியாதை எங்களுக்கு. Screw gauge யும் Vernier calliper யும் அதுவரை
பார்த்திராத,கேள்விப்பட்டிராத புரியும்படி சொல்லி அவைகளை எங்களுக்கு
அறிமுகப்படுத்தியது அவர்தான். பின்பு வேளாண் அறிவியல் பட்டப்
படிப்பில் சேர்ந்தபோது, முதலாம் ஆண்டில் இருந்த இயற்பியல் பாடம்
சுலபமாக புரிய காரணமாக இருந்தது அவர் போட்ட அடித்தளம் தான்
என்பதில் சந்தேகம் இல்லை.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

23 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    நினைவோட்டம்75.வதுதொடர் பதிவு அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  2. வணக்கம்! என்ன பொருத்தம் பாருங்கள். நான் ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றைப் பற்றி பதிவில் வெளியிடுவதற்காக கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் முற்றுப் பெறவில்லை. அதில் நீங்கள் குறிப்பிடும் பேராசிரியர் சி எஸ் கமலபதி பற்றியும் எழுதி உள்ளேன். சீக்கிரம் வெளியிட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தாங்கள் வெளியிட இருக்கும் ஷேக்ஸ்பியர் நாடகம் பற்றியும் பேராசிரியர் திரு கமலபதி பற்றியும் அறிய காத்திருக்கிறேன்.

      நீக்கு
  3. // எனக்கு ஆங்கில பாடங்களை விட துணைப் பாடங்கள் தான் பிடிக்கும். ஏனெனில் அதில் தானே கதைகள் இருக்கும்! நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது எனது ஆசிரியர் திரு A.கிருஷ்ணசாமி அவர்கள் நடத்திய அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) எழுதிய The Count of Monte Cristo வையும், S.S.L.C படிக்கும்போது எங்களது தலைமை ஆசிரியர் திரு வெங்கடராம ஐயர் அவர்கள் நடத்திய ஜோநாதன் ஸ்விஃப்ட் (Jonathan Swift) அவர்களின் Gulliver's Travels வையும் மறக்க முடியுமா என்ன? //

    உண்மைதான். மறக்க முடியாத் சுவையான ஆங்கில இலக்கிய நாவல்கள். ஆனால் நான் அவைகளின் தமிழாக்கம் மட்டுமே படித்துள்ளேன்.

    மீண்டும் ஒருமுறை இந்த பதிவை படிப்பேன். நேரம் கிடைக்கும் போது தாங்கள் இணைத்துள்ள வீடியோவைக் காண்கிறேன் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் குறிப்பிட்டுள்ள மூன்று நாவல்களுமே மிகவும் சுவாரஸ்யமானவை. நேரம் கிடைக்கும்போது காணொளியை பார்த்து மகிழுங்கள். நேரம் கிடைப்பின் The Count of Monte Cristo வையும் இந்த இணைப்பை சொடுக்கி பார்த்து மகிழலாம். http://www.youtube.com/watch?v=TcT4TxCxn_Q கருத்துக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  4. அடித்தளம் அமைத்த அருமையான ஆசிரியர்களைப்பற்றி சுவர்ரஸ்யமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  5. உங்களின் நினைவாற்றலுக்கு வாழ்த்துக்கள் ஐயா... காணொளியை நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  6. ஆச்சரியமாக இருக்கு சார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வகுப்பு எடுத்த அனைவருடைய பெயர்களையும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? நினைவில் நிற்பவைகளை சுவைபட எழுதுவதிலும் அழகு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நான் புகுமுக வகுப்பு முடித்து 52 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை மறக்கமுடியுமா என்ன?

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  8. I am reminded of Pulavar Radhakrishnan, Tamil department National College Tiruchirappalli. He was having a tuft and an expert in Kambha Ramayanam. Some times when lecturing in the class, his tuft automatically got untied. But he was so involved in the topic that he never minded. He was a scholar in Sanskrit also. My language option was Sanskrit initially. Attracted and influenced by Sri.Radhakrishnan, I changed my option from Sanskrit to Tamil after attending Sanskrit classes for almost two months.

    பதிலளிநீக்கு
  9. This reminds me of Tamil professor Radhakrishnan of National college who used to enchant students by his mono acting from verses from Kamba Ramanayam. A versatile speaker. He was equally knowledgable in Sanskrit. His tuft used to get untied when he became emotional during his speech. But he was unmindful of that. Once when he was giving a lecture, his period was over, and the lecturer who was to take next period had arrived. We were so absorbed that this esacaped our attention. The next lecturer was also absorbed in the lecture and enjoyed the same without announcing his arrival. I had initially taken Sanskrit as language. He was instrumental in changing my option to Tamil.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! நான் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களிடம் படிக்காவிட்டாலும் அவரது பேச்சை கேட்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். பொள்ளாச்சியில் சிண்டிகேட் வங்கியில் 1970-73 களில் பணியாற்றியபோது, அங்கு விநாயகர் கலை மன்றம் நடத்திய பட்டிமன்றத்தில் நடுவராக பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் இருக்க, பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களும், பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களும் ‘இராமனின் அணுக்கத்தொண்டன் இலக்குவனா அல்லது அனுமனா’ என்ற தலைப்பில் நடத்திய சொற்போரை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அவரைப்போன்று ஒரு சிலரே கம்ப ராமாயணத்தை வெகு எளிதாக, சுவையாக பேசி கேட்போரை தன் வயப்படுத்த முடியுமென நினைக்கிறேன். நினைவலைகளை தூண்டியமைக்கு நன்றி!

      நீக்கு
  10. சில விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கிறதென்றால், அவற்றால் ஒருவருக்கு மகிழ்ச்சி இருக்கவேண்டும், அல்லது அதே அனுபவம் மீண்டும் வராமல் இருப்பதற்காக நினைவில் நிற்கவேண்டும். தாங்கள் எழுதியுள்ளதைப் பார்த்தால் கல்லூரி வாழ்க்கையை நன்கு அனுபவித்து கழித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எப்படியிருப்பினும் தங்களது ஞாபகசக்தி வியக்கவைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது உண்மை.அதனால் தான் அப்போது நடந்த எல்லாம் ‘பசுமரத்தாணி’ போல் மனதில் பதிந்துவிட்டது.

      நீக்கு
  11. கமலபதி பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்,அக்காலத்தில் ஷேக்ஸ்பியர் நடத்துவதில் திறமை வாய்ந்த பலர் இருந்தனர்.உங்கள் விரிவுரையாளர்கள் பற்றி நினைவு கூர்ந்த விதம் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  12. நான் லயோலா கல்லூரியில் (1971-75)படித்தபோது Rev Fr T N செக்யூரா, Moral science வகுப்பெடுப்பார். அவர் பெயரில் வழங்கிய தங்க மெடலையும் பெற்றேன்
    மீண்டும் வராத நாட்கள் அவை். தங்கள் பதிவு என் கல்லூரி தினங்களின் நினைவுகளை கொணர்ந்தது. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரகுநாதன் அவர்களே! எனது பதிவு தங்களது கல்லூரி நாட்களை நினைக்கவைத்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி. நாம் இருவரும் ஒரே குழுமத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் படித்துள்ளோம் என அறிந்து மேலும் மகிழ்ச்சி. உண்மையில் அந்த நாட்கள் இனி வராதுதான்.

      நீக்கு