சனி, 30 நவம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 6



குகைக் கோவிலின் உள்ளே குனிந்து சென்றால் சிறிது தூரம் சென்றதும் 
நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு உயரம் உள்ள இடத்தில்,சேர்வராயப்பெருமாள் 
சிலையும் காவேரி அம்மன் சிலையும் ஒரு பீடத்தில் வைத்திருக்கிறார்கள். 
அந்த இடத்தில் மேலே உள்ள ஒரு துவாரத்தின் வழியாக வெளிச்சம் 
வருவதால், நின்று சௌகரியமாக தரிசனம் செய்ய முடிந்தது.

வருவோருக்கு அங்கு உள்ள தெய்வங்களைப் பற்றி சொல்லி, தீபாராதனை 
செய்ய ஒரு பூசாரியும் அங்கே இருந்தார். நாங்கள் நிறைய பேர் இருந்ததால், 
அவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது! காரணம் 
சொல்லவேண்டியதில்லை என நினைக்கிறேன்.

சேர்வராய மலைக்கும்,காவேரி ஆற்றுக்குமான அந்த தெய்வங்கள் 
காவல் தெய்வங்கள் என்று சொல்லிவிட்டு, அந்த குகை இன்னும் நீண்டு செல்வதாகவும் அதன் வழியே சென்றால் காவேரி உற்பத்தியாகும் 
இடத்திற்கே செல்லலாம் என்றும் சொன்னார். அதை நம்புவதா 
வேண்டாமா எனத் தெரியவில்லை.

ஏனெனில் காவேரி உற்பத்தியாகும் இடமோ மேற்குத் தொடர்ச்சி மலையில், 
குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலையில், பாகமண்டலா அருகே 
உள்ள தலைக்காவேரி என்ற இடத்தில்.இது கர்நாடகாவில் உள்ளது.ஏற்காடு 
இருப்பதோ கிழக்குத்தொடர்ச்சி மலையில். இரண்டுக்கும் இடையே 
சுமார் 400 அல்லது கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். 
நேராக சென்றால் (As the crow flies) கூட 200 கிலோ மீட்டர் தொலைவு 
இருக்கலாம். அவ்வளவு தொலைவிற்கு இந்த குகைப்பாதை செல்லுமா எனத் தெரியவில்லை. இருப்பினும் அவர் சொன்னதை நம்பினோம்!

கோவிலுள்ளே புகைப்படம் எடுக்கலாமோ கூடாதோ என்பதால் கையில் 
கேமரா இருந்தும் உள்ளே படம் எடுக்கவில்லை. அப்புறம்தான் 
கேள்விப்பட்டேன் புகைப்படம் எடுக்க தடை ஏதும் இல்லையென்று. 
அடடா! நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோமே என நினைத்தாலும் 
கூகிளார் உதவுவார் என்பதால் கவலைப்படவில்லை. 

இதோ சேர்வராயப்பெருமாள் மற்றும் காவேரி அம்மன் இருக்கும் படத்தை உங்களுக்காக கீழே தந்திருக்கிறேன் கூகிளார் உதவியுடன்.





சேர்வராய பெருமாள் கோவிலின்  தோற்றம் அருகில் உள்ள உயரமான இடத்திலிருந்து. இதுவும் கூகிளார் உபயம்தான். 






திரும்பி வெளியே வந்ததும் சிறிது தூரம் நடந்தால் அருகில் சற்று 
உயரமான இடத்தில், சுற்றுலா பயணிகள் மலையையும், பள்ளத்தாக்கையும், 
ஏற்காடு நகரத்தையும் அருகில் உள்ள நாகலூர் என்ற இடத்தையும் கண்டு 
இரசிக்க வட்டவடிவில் பாதி திறந்த கூண்டு போன்ற அமைப்பில் 
View Tower கட்டியிருக்கிறார்கள். இதுபோல் இன்னொன்றும் சிறிது தூரத்தில் இருக்கிறது. இதில் நின்று பார்த்தால் ஏற்காடு மலையின் அழகை இரசிக்கலாம்.

இங்கு சில நண்பர்களை, நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் கீழே.





அந்த பார்வையாளர் கூண்டிலிருந்து நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த 
இன்னொரு புகைப்படம் கீழே




அந்த பார்வையாளர் கூண்டுக்கு அருகில் இருந்து நான் எடுத்த புகைப்படம் 
கீழே. தூரத்தில் தெரிவது ஏற்காடு நகரம் அருகே தெரிவது நாகலூர்.





திருமதி அய்யம்பெருமாள் எடுத்த ஒரு புகைப்படம் கீழே.





இங்குள்ள மலைகளில் பாக்ஸைட் தாது அதிகம் இருப்பதால் அருகில் 
உள்ள மலைகள் அந்த பாக்ஸைட் தாதுக்காக சுரண்டப்பட்டு பொலிவிழந்து வெறுமையாய் இருப்பதையும் காணமுடிந்தது. இன்னும் இந்த மலைகளை சுரண்டிக்கொண்டு இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. 

இப்படித்தான் கர்நாடகாவில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள குதிரேமுக் என்ற மலையில் இரும்புத் தாது இருப்பதால் Kudremukh Iron Ore Company Ltd.,  
(KIOCL)  என்ற அரசு நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு மேலாக மலையைச் 
சுரண்டி மொட்டையடித்துக்கொண்டிருந்தது. 

சுற்றுசூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தீவிர முயற்சியின் காரணமாக, 
உச்ச நீதிமன்றம் அங்கு இரும்புத் தாதை வெட்டி எடுக்க தடை விதித்ததன் 
காரணமாக 2006 இல் அந்த அரசு நிறுவனம் தனது பணியை   
நிறுத்திக்கொண்டது. 

(அங்கு உள்ள மலை, தோற்றத்தில் குதிரையின் முகம் போன்றிருப்பதால்
அதை கன்னடத்தில் குதிரேமுக் என அழைக்கிறார்கள் 
நாம் மதுரை வேளாண்மை கல்லூரி அருகே உள்ள மலையை 
யானை மலை என அழைப்பதைப் போல.)

அந்த பார்வையாளர் கூண்டருகே சுமார் 20 மணித்துளிகள் இருந்து 
இயற்கை அழகை இரசித்து விட்டு, காலை 11.20 மணிக்கு ராஜராஜேஸ்வரி
கோவில் நோக்கி புறப்பட்டோம்.





தொடரும்








12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  2. இப்படி ஒரு குகை வாசலிலிருந்து சுரங்கப் பாதை வழியே எங்கெல்லாமோ செல்ல முடியும் என்று பல இடங்களில் கூறக் கேட்டிருக்கிறேன். நாமும்நம்புவதுபோல் நடிக்கிறோம். ஏனென்றால் யார் எதைச் சொன்னாலும் நம்பும் gullible people நாம். !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே!

      நீக்கு
  3. அழகிய படங்களுடன் ரசிக்க வைக்கும் இனிய பயணம் ஐயா... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  4. நல்ல பயணம். அருமையாகச் சொன்னீர்கள்.

    // கோவிலுள்ளே புகைப்படம் எடுக்கலாமோ கூடாதோ என்பதால் கையில் கேமரா இருந்தும் உள்ளே படம் எடுக்கவில்லை. அப்புறம்தான் கேள்விப்பட்டேன் புகைப்படம் எடுக்க தடை ஏதும் இல்லையென்று. //

    நான் எந்த கோயிலுக்குச் சென்றாலும் அங்குள்ளவர்களிடம் , இங்கு போட்டோ எடுக்கலாமா என்று உடனே கேட்டு விடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! இனி இந்த தவறை செய்யமாட்டேன்.

      நீக்கு
  5. ஒரு பயண முகவர் போல அழகாக சொல்லிக்கொண்டு செல்கிறீர்கள். நாங்களும் சேர்ந்து பயணிப்பதுபோல் உள்ளது. இந்த மலைகளில் வன விலங்குகள் இருந்தனவா? எதையும் பார்க்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! குரங்கைத் தவிர எந்த விலங்கையும் நாங்கள் சென்ற பாதையில் வரவில்லை. மனித நடமாட்டம் அதிகம் இருந்ததால் அவைகள் வெளியே வரவில்லை போலும். ஆனால் காட்டுக்கு உள்ளே சென்றால் காட்டெருமை, மான், நரி,கீரிப்பிள்ளை, தூக்கணாங்குருவி, சிட்டுக்குருவி, Bulbul எனப்படும் பாடும் பறவை, பாம்பு போன்றவைகளைப் பார்க்கலாமாம்.

    பதிலளிநீக்கு
  7. பயண குறிப்புகளுடன், அரிய விடயங்களையும் எளிமையாக பகிர்ந்திருக்கிறீர்கள்...அருமை.. அருமை..!!

    என்னுடைய வலையில் இன்று:

    வணக்கம்...

    நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

    அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

    சரியா...?

    உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

    அப்போ தொடர்ந்து படிங்க...

    ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சுப்புடு அவர்களே!தங்களது பதிவில் தந்துள்ள தகவலுக்கும் நன்றி!

      நீக்கு