வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 15


ஹொகனக்கல் அருவியை எப்படி மூன்று மணி நேரத்தில் சுற்றிப் பார்த்துவிட்டு குளித்துவிட்டு மதியம் 1.30 மணிக்குள் வருவது என பேசிக்கொண்டு எல்லோரும்  கிளம்பினோம். நாங்கள் பார்த்த இடங்கள் பற்றி எழுது முன் இந்த இடத்தைப்பற்றி சொல்லிவிட்டு எழுதலாமென நினைக்கிறேன்.
   
சிலருக்கு இந்த இடத்தின் பெயர் ஹொகனக்கல்லா அல்லது ஒகனக்கல் லா என்ற சந்தேகம் வரலாம். உண்மையில் இந்த இடத்திற்கு தமிழில் மாரிக்கொட்டாயம் என்று பெயராம். மாரிக்கொட்டாய் என்றும் சொல்வதுண்டு, 

ஆனால் ஹொகனக்கல் என்ற பெயர் எப்படி வந்தததென்றால், இந்த இடம் கர்நாடக எல்லையில் இருப்பதால் இங்கே கன்னடம் பேசுவோரும் உண்டு. கன்னடத்தில் ஹொகே என்றால் தமிழில் புகை என்று பொருள். தமிழில் உள்ள கல்’, கன்னடத்திலும் கல் தான். 

கல்லில் விழும் நீர்த்துளி புகை போல் எழும்பும்போது அது கல்லிலிருந்து வருவதுபோல் இருப்பதால் அந்த கல் புகையை உண்டாக்கும் கல் என்ற பொருளில் புகைக்கல் அதாவது ஹொகனக்கல் என்று அழைக்கப்படுகிறது.
  
ஹ.ஷ,,, க்ஷ போன்ற எழுத்துக்கள் வடமொழி எழுத்துக்கள் என்பதால் தமிழில் எழுதும்போது, கூடியவரை அவைகளை உபயோகப்படுத்துவதைத் தவிர்த்து அதற்கு ஈடான தமிழ் எழுத்துக்களை உபயோகிப்பதுண்டு. 

அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டினன் என சொல்வதைப் போல, ஹொகனக்கல், ஒகனக்கல் ஆனது.
  
(இதுபோல ஹோசூர், ஓசூர் எனவும் மாரண்ட ஹள்ளி மாரண்ட அள்ளியாகவும் அழைக்கப்படுகின்றன.)
  
இந்த ஹொகனகல்லில் உள்ள அருவியை இந்தியாவின் நயாக்ரா என அழைப்பதும் உண்டு. இங்குள்ள பாறைகள் கார்போனைட்(Carbonatite) வகையைச் சேர்ந்தவையாம்.  ஆசியாவிலேயே இங்குள்ள பாறைகள் மிகப் பழைமையானது என்றும் உலகில் உள்ள இவ்வகையான பாறைகள் உள்ள இடங்களில் இதுவும் ஒன்று என்பது நமக்கு பெருமையான விஷயம்தானே.
  
சமீபத்தில் இந்த ஊரின் பெயர் அதிகம் ஊடகங்களில் அதிகம் அடிபட்டதன் காரணம் 13.34 பில்லியன் ரூபாய்கள் செலவில் தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் தான். இந்த திட்டத்திற்கு ஜப்பானின் பன்னாட்டு கூட்டுறவு வங்கி மட்டும் 12.4 பில்லியன் ரூபாய்களை கடனாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
   
இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது கர்நாடக அரசில் அப்போது முதல்வராக இருந்த திரு எடியூரப்பா அவர்கள் இடையூறப்பாவாக மாறி திட்டத்தை முடக்க நினைத்ததாலும், இடையே நம் மாநில அரசியல்வாதிகள் குறுக்கு சால் ஒட்டியதாலும், குடிநீர் வழங்கல் தொடங்கி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும்  இன்னும் இந்த திட்டம் முழுமையாகவில்லை என்பதுதான் வருத்தப்படக் கூடிய செய்தி. 

நாங்கள் இறங்கிய இடத்திற்கு நேரே இருந்த காவிரிக்கரை குளிக்கும் மற்றும் பரிசலில் ஏறும் துறைக்கு சற்று மேற்கே தள்ளி இருந்தது. அங்கே இறங்கி கரையோரமாகவே குளிக்கும் இடம் வரை நடந்தோம்.  

அப்படி போகும் வழியில் நான் எடுத்த சில புகைப்படங்கள் கீழே.   


இரு பக்கமும் மரங்களும் செடிகொடிகளும் இருக்க அவைகளின் ஊடே சுழித்துக்கொண்டு ஓடும் காவிரி ஆற்றை இரசித்துக் கொண்டே, 
குளியல் துறையை அடைந்தோம்.

எங்கள் குழுவைக் கண்டதும் எண்ணைய்க் குளியல் போடுகிறீர்களா, எண்ணைய் தேய்த்து விடலாமா எனக் கேட்டு நான்கைந்து பேர் சூழ்ந்துகொண்டனர். அவர்களிடமிருந்து விலகி குளிக்கும் இடம் சென்றோம். 

எங்களில் பலர் குளிக்கத் தயாராக மாற்றுடை கொண்டு வந்திருந்தனர். அவர்கள் குளிக்க சென்றுவிட்டனர். நான் கொண்டு செல்லாததால் குளிக்கவில்லை. கரையிலேயே நின்று கொண்டேன். மகளிர்களுக்கென்று தனி குளியல் அறை இருந்ததால் நண்பர்களின் மனைவிமார்கள் சிலரும் அங்கே குளிக்க சென்றுவிட்டனர்.

குளியல் துறையில் நின்றிருந்தபோது நான் எடுத்த புகைப்படங்கள் சில கீழே.


 


மேலும் சில புகைப்படங்கள் அடுத்த பதிவில்.

தொடரும்

22 கருத்துகள்:

 1. நேரில் பார்த்ததுதான் என்றாலும் படங்கள் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் அய்யா அவர்களே!

   நீக்கு
 2. பெயர் விளக்கம், ஜில்லென்ற படங்கள் அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 3. படங்களைப் பார்த்ததும் “நடந்தாய் வாழி! காவேரி!” – என்று பாடத் தோன்றியது. இது மாதிரியான படங்களை வலைப்பதிவில் தரும்போது, Super X Large இல் தந்து இருதால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தங்களின் ஆலோசனைப்படி படத்தை பதிவேற்ற முயற்சிக்கிறேன்.

   நீக்கு
 4. ஹொகேனக்கல்லில் எண்ணை மசாஜ் செய்து குளித்துவிட்டு மீன் குழம்பும் வறுவலும் சாப்பிடக் கொடுப்பினை வேண்டும் நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் எந்த பலனும் இல்லை என்று 1969 இல் பெங்களூருவில் ஒரு மருத்துவர் சொன்ன அறிவுரைப்படி எண்ணெய் குளியலையே நிறுத்தி விட்டேன். மேலும் மாற்று உடை கொண்டு செல்லாததால் அருவியில் குளிக்கவும் முடியவில்லை. நீர் வாழைக்காய் சாப்பிடுபவன் நான் அல்ல என்பதால், அதையும் ருசிக்கவில்லை. எனவே தாங்கள் சொன்ன கொடுப்பினை எனக்கில்லைதான் ஐயா.

   நீக்கு
  2. ஐயோ, பாவம். வேறு என்ன சோல்ல முடியும்? அடுத்த ஜன்மத்திலாவது இந்தப் பேறு கிடைக்கட்டும்.

   நீக்கு
 5. வணக்கம்
  ஐயா.
  சிறப்பாக உள்ளது.. தொடருங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

   நீக்கு
 6. // இன்னும் இந்த திட்டம் முழுமையாகவில்லை என்பதுதான் வருத்தப்படக் கூடிய செய்தி. //

  நம் வீட்டில் ஏதாவது வேலை செய்ய விருப்பப்பட்டால், எத்தனை முறை யோசித்து பணம் வீணாகப்போகக் கூடாது என்று நினைக்கிறோம்? அரசுப் பணமும் நம் பணம் என்று யாரும் நினைப்பதில்லை. 100 கோடிக்கு மேல் பட்ஜட். அரசியலை விட்டால், அதிகமான நம் அரசியல்வாதிகளுக்கு ஒரு கீழ்மட்ட வேலைகூட எங்கும் கிடைக்காது. ஆனால் அவர்கள்தான் நாட்டின் எதிர்காலத்துக்கு திட்டங்களை தீர்மானிக்கிறார்கள். சோழன் காலத்துக்கப்புறம் புதிதாக எந்த ஆற்றுத்திட்டங்களையும் நாம் செய்ததாக எனக்கு நினைவில்லை. இன்று அந்த ஆறுகளையும் அழிக்க ஆரம்பித்துவிட்டோம். ஒரு வருடம் வருணபகவான் பொய்த்துவிட்டால் எப்படியிருக்கும் என்று நினைத்துப்பார்க்க முடியவில்லை.

  ஹொகேனக்கல் படங்கள் அருமை. அருவியைக் கண்டால் என்னால் குளிக்காமல் வரமுடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் படங்களைப் பாராட்டியதற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நம் நாட்டில் பெரும்பான்மையான அரசியல்வாதிகள் அரசியலுக்கு வருவது சேவை செய்வதற்காக அல்ல.பதவியில் இருக்கிற வரையில் வருமானத்தை ஈ(சுரு)ட்டிக்கொண்டு செல்வதுதானே அவர்களது எண்ணம். அப்படி இருக்கையில் அவர்கள் எப்படி மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை நிறைவேற்றுவார்கள்? இந்த நாட்டின் சாபக்கேடு இவர்கள் நம்மை ஆளுபவர்களாக இருப்பது. அவ்வளவுதான்.

   நீக்கு
 7. ஹோகேனக்கல் பற்றிய விவரங்களை தொகுத்து வழங்கிய விதம் அருமை. சுற்றுலா செல்வதற்கு முன்பு நாம் செல்லவிருக்கும் இடங்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்துக்கொண்டு செல்வதும் ந்ம்முடைய பயணத்தை பயனுள்ளதாக்கும் என்பதை உங்களைப் போன்றோர்களைப் பார்த்து படித்துக்கொள்ள வேண்டும். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும், பாராட்டியதற்கும், தொடர்வதற்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

   நீக்கு
 8. ஐயா நீங்கள் சென்னைவாசி என்று தெரிகிறதுநான் 16-ம் தேதிமுதல் நான்கைந்து நாட்கள் சென்னையில் இருப்பேன். சந்திக்கவோ தகவலுக்கோ உங்கள் மெயில் முகவரியும் தொலை பேசி எண்ணையும் ஆட்சேபணை இல்லையென்றால் தாருங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே! எனது முகவரி மற்றும் தொலைபேசி எண்களை தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன்.

   நீக்கு
 9. நானும் எனது பார்வையில்...
  http://www.kovaineram.com/2012/09/1.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், நன்றி ‘கோவை நேரம்’ திரு ஜீவா அவர்களே! தங்களது பதிவையும் படித்தேன். இரசித்தேன்!

   நீக்கு
 10. அழகான படங்கள். சிறுவனாக இருக்கும்போது சென்றிருக்கிறேன்.. மீண்டும் செல்லவேண்டும் குடும்பத்துடன்!

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

  பதிலளிநீக்கு