சனி, 1 பிப்ரவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 14ஏற்காடு சென்றுவிட்டு இரவு 10.15 மணிக்கு சேலம் திரும்பிய நாங்கள், மறுநாள் காலை ஹொகனக்கல் செல்ல காலை 6.30 மணிக்கே தயாராக இருக்கவேண்டும் என நண்பர்கள் சொன்னதால் உடனே உறங்க சென்றோம்.

காலை 5.30 மணிக்கே எழுந்து குளித்து தயாராகி தங்கியிருந்த விடுதிக்கு அருகே இருந்த சரவ பவன் உணவு விடுதியில் காஃபி அருந்திவிட்டு, முதல் நாள் காத்திருந்த Empire Arcade கட்டிடம் அருகே மற்ற நண்பர்கள் வருகைக்காகக் காத்திருந்தோம். முதல் நாள் எங்களோடு ஏற்காடு பயணித்த  நண்பர்களில் திரு K.கோவிந்தராஜனும் திரு மீனாட்சிசுந்தரமும் வேறு பணி இருப்பதால் ஹோகனக்கல் வர இயலவில்லை என தெரிவித்து முதல் நாள் இரவே திரும்பிவிட்டனர்.
ஆனால் முதல் நாள் பயணத்தில் எங்களோடு கலந்துகொள்ள முடியாவிட்டாலும் இரண்டாம் நாள் பயணத்தில்  கலந்து கொள்ள, ஹைதராபாத்தில் இருந்து எங்கள் வகுப்புத்தோழர் திரு P.T.நடராஜன் வந்து சேர்ந்துகொண்டார். எங்களது சந்திப்பில் நண்பர் நடராஜனும் சேர்ந்துகொண்டதால், வகுப்புத்தோழர்கள் மட்டும் திரும்பவும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
திருமதி அய்யம்பெருமாள் அவர்கள் தான் புகைப்படம் எடுத்தார்கள். நண்பர் ஜனார்த்தனன் புகைப்படம் எடுத்து முடிந்ததும் அவருக்கும் வேறு பணி இருந்ததால் எங்களிடம்  சொல்லிக்கொண்டு அவர் தம் துணைவியாரோடு கும்பகோணம் சென்றுவிட்டார்.
திருமதி அய்யம்பெருமாள் அவர்கள் எடுத்த புகைப்படம் கீழே. இந்த தடவை பேருந்து செல்லும் தடம் சமவெளி என்பதால் ஹொகனக்கல் செல்ல ஒரு பெரிய பேருந்தை ஏற்பாடு செய்திருந்தனர் நண்பர்கள். எல்லோரும் வந்து புகைப்படம் எடுத்து முடித்து கிளம்பவே  மணி 7.30 மணிக்குமேல் ஆகிவிட்டது.
இந்த தடவை பேருந்தில் எனது அறைத் தோழர்களாக இருந்த நண்பர்கள் நாச்சியப்பன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையே நான் அமர்ந்து கொண்டேன்.பேருந்து புறப்பட்டதிலிருந்து ஹோகனக்கல் செல்லும் வரை ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு இருந்தோம்.
சேலத்திலிருந்து ஹொகனக்கல் 107 கிலோ மீட்டர். அங்கு போவதற்கு 2 மணி நேரத்திற்குமேல் ஆகும் என்பதால், காலை சிற்றுண்டியை  சேலத்திற்கும் தர்மபுரிக்கும் இடையே உள்ள தொப்பூர் என்ற ஊரில் உள்ள அடையார் ஆனந்த பவனின் A2B உணவு விடுதியில் சாப்பிடலாம் என நண்பர்கள் சொல்லியிருந்தார்கள்.
நல்லவேளையாக சேலம்  வந்த அன்று,(அதாவது அக்டோபர் 9 ஆம் தேதி)  என்னைப் பார்க்க வந்த தர்மபுரி சிண்டிகேட் வங்கியின் உதவி மேலாளரும் என்னோடு சேலத்தில் பணி புரிந்தவருமான திரு கந்தசாமி, அவரது மேலாளரான திரு A.K.விஜயகுமார் அவர்களுடன் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவரிடம் எங்களது ஹொகனக்கல் பயணம் பற்றி சொன்னபோது, எங்கு காலை சிற்றுண்டி சாப்பிட இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் தொப்பூர் A2B உணவு விடுதியில். என்றதும் அவர் உடனே, சார். அந்த உணவு விடுதி நெடுஞ்சாலையில் உள்ளதால்  கூட்டம் அதிகமாக இருக்கும்.உங்கள் அனைவருக்கும் உடனே சிற்றுண்டி கிடைக்காது. காத்திருக்கவேண்டும்.
அங்கு பணிபுரியும் விடுதி மேலாளர் எனக்குத் தெரிந்தவர். அவரிடம் சொல்லி உங்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியை  தயாராக வைத்திருக்க சொல்கிறேன். இல்லாவிடில் நீங்கள் அனைவரும் சாப்பிட்டு முடிக்கவே நேரமாகிவிடும். என்றார். அதுபோலவே அவரிடம்  சொல்லி ஏற்பாடு செய்து விட்டு, என்னைக் கூப்பிட்டு நீங்கள் நேரே அவரைப் போய் பாருங்கள்.அவர் ஆவன செய்வார். என்றார். நானும் நண்பர் பழனியப்பனிடம் அது பற்றி சொன்னபோது அவரும் அப்படியே செய்வோம். என்றார்.
நாங்கள் அந்த உணவு விடுதியை அடையவே காலை மணி 8.45 ஆகிவிட்டது. நான் போய் அந்த விடுதி மேலாளரை பார்ப்பதற்குள் சிலர் போய் காலியாக இருந்த மேசையில் அமர்ந்து சிற்றுண்டிக்கு ஆர்டர் கொடுத்து சாப்பிடத் தொடங்கிவிட்டனர்.
நான் நண்பர் பழனியப்பனுடன் போய் அந்த மேலாளரைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்டதும், அவர், சார் உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன். 50 பேருக்கான சிற்றுண்டி தயார் செய்து வைத்திருக்கிறோம். இதோ இந்த அடையாள சீட்டை (Coupon) உங்கள் குழுவினரிடம் கொடுத்துவிடுங்கள். உணவு பரிமாறுவோர் வரும்போது இதைக் கொடுத்தால் அவர் உங்களுக்கான சிற்றுண்டித் தட்டை கொண்டுவந்து தருவார். கடைசியில் மொத்தம் உபயோகிக்கப்பட்ட அடையாள சீட்டை கணக்கிட்டு உங்களிடம் பணம் வாங்கிக் கொள்கிறேன்.என்றார்.
முன்பே சாப்பிடக்தொடங்கியவர்கள் போக பாக்கி உள்ளவர்களுக்கு நண்பர் அடையாள சீட்டைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். சீட்டு கொடுத்த எல்லோருக்கும் கேசரி, இட்லி, வடை, பொங்கல் தோசை பூரி என தட்டில் வைத்து கொடுத்தார்கள். மற்றவர்களுக்கு சில உணவு வகைகள் கிடைக்கவில்லை. இந்த குழப்பத்தில் நாங்கள் சாப்பிட்டு முடித்து பணம் கொடுத்து மேலாளருக்கு நன்றி சொல்லி பேருந்தில் ஏறும்போதே மணி 10 ஆகிவிட்டது.
அங்கிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹொகனக்கல் சென்றடையும்போது மணி 11.30 ஆகிவிட்டது. மதிய உணவு அங்குள்ள  தமிழ்நாடு சுற்றுலாத்துறை உணவு விடுதியில் ஏற்பாடு செய்திருந்ததால், அங்கு பேருந்தை நிறுத்தினார் ஓட்டுனர். 
எல்லோரும் பேருந்திலிருந்து இறங்கியதும் பயணம் ஏற்பாடு செய்திருந்த சேலம் நண்பர்கள் அருவியில் குளிக்க விரும்புபவர்கள் குளித்துவிட்டோ அல்லது பரிசலில் பயணம் செய்ய விரும்புவோர் பயணம் செய்து விட்டோ வரலாம். ஆனால் அனைவரும் திரும்பவும் இதே இடத்திற்கு மதியம் 1.30 மணிக்குள் வந்துவிடவேண்டும். அப்போதுதான் சாப்பிட்டுவிட்டு 2.30 மணிக்கு கிளம்பி சேலத்திற்கு மாலை  5 மணிக்கு போய் சேர முடியும். அப்பொது தான் ஊருக்கு திரும்ப எண்ணியுள்ளவர்களுக்கு சௌகரியமாக இருக்கும். என்றனர்.
மூன்று மணி நேரத்தில் எப்படி பார்க்கபோகிறோம் என நினைத்துக்கொண்டே   அருவியைப் பார்க்க கிளம்பினோம்.
இந்த இடத்தில் ஹொகனக்கல் அருவியைப் பார்க்க விரும்புவோருக்கு ஒரு யோசனை. குழுவாக இருந்தால் முதல் நாள் மாலையே தர்மபுரி சென்று இரவு அங்கு தங்கி, காலையில் ஹொகனக்கல் போய் சாவகாசமாக குளித்து பரிசலில் பயணித்து சுற்றுலாவை அனுபவித்து வரலாம். குடும்பத்தோடு என்றால் முதல் நாளே ஹொகனக்கல் சென்று அங்குள்ள  தமிழ்நாடு சுற்றுலாத்துறை உணவு விடுதியில் தங்கி காலையில் அருவிக்கு சென்று நிதானமாக எல்லாவற்றையும் பார்த்து வரலாம். இல்லாவிடில் எங்களைப்போல் அவசரஅவரமாக எல்லாவற்றையும் பார்த்து வரவேண்டியதுதான்.
(இந்த பதிவு எழுதிக்கொண்டிக்கும்போது, எங்கள் வகுப்புத்தோழரும் எங்களோடு ஏற்காடு, ஹொகனக்கல் ஆகிய இடங்களுக்கு வந்தவருமான வேலூரைச் சேர்ந்த நண்பர் D கோவிந்தராஜன் அவர்கள் மாரடைப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற சோக செய்தியைக் கேள்விப்பட்டு  அதிர்ச்சியடைந்தேன், எனது வகுப்பு நண்பர்கள் அனைவரும் அவ்வாறே அதிர்ச்சியுற்றார்கள். ஏற்காட்டிற்கு பேருந்தில் பயணித்தபோது என் அருகே அமர்ந்து திரு D கோவிந்தராஜன் பேசிக்கொண்டு இருந்தார் என மீண்டும் சந்தித்தோம்! 4 இல் குறிப்பிட்டிருந்தேன். 10 பதிவுகள் எழுதுவதற்குள் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை உலுக்கியது உண்மை. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவரது குடும்பத்தாருக்கு எங்கள் வகுப்புத்தோழர்கள்சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.)தொடரும்

14 கருத்துகள்:

 1. உங்கள் பதிவு நாங்கள் ஹொகனேகல் சென்று வந்ததை நினைவூட்டியது. நான் என் மனைவி என் அண்ணா அண்ணி , மற்றும் அவர்களது இரு பேரக் குழந்தைகள் என்று ஆறு பேரும்பரிசலில் ஏறிவிட்டோம் அந்தப் பரிசலில் சற்றுதூரம் சென்று அருவியில் குளித்து பரிசலிலேயே சிறிது தூரம் சென்று வந்தோம். அங்கு சிறுவர்கள் மலை முகட்டிலிருந்து நீரில் குதித்துக் காசு வாங்கிக் கொண்டிருந்தார்கள். கரை ஏறிய பிறகு அந்தப் பரிசலில் சென்று வந்தது நினைத்து ஆச்சரியப் பட்டோம். எங்களில் ஒருவருக்காவது நீச்சல் தெரியாது. பாதுகாப்புக்கு என்று ஏதும் அணியவில்லை. இன்னொரு முறை பரிசலில் போகும் தைரியம் இருக்குமா தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! பரிசல் பயணம் எங்கள் குழு மேற்கொண்டதா என்பதைப்பற்றி வரும் பதிவுகளில் எழுதுவேன்.

   நீக்கு
 2. D கோவிந்தராஜன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், எங்கள் வகுப்புத்தோழர் D.கோவிந்தராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 3. கோவிந்தராஜன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், எங்கள் வகுப்புத்தோழர் D.கோவிந்தராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திதற்கும் நன்றி திரு இராதா மனோகரன் அவர்களே!

   நீக்கு
 4. வேலூரைச் சேர்ந்த உங்கள் நண்பர் D கோவிந்தராஜன் அவர்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! அன்னாரது ஆன்மா சாந்தியடைய, இறைவனிடம் வேண்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், எங்கள் வகுப்புத்தோழர் D.கோவிந்தராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 5. சுற்றுலா செல்லும் பொழுது எனக்கு (அதுவும் இந்தியாவில்) முக்கிய பிரச்சனையே சாப்பாடுதான். எனக்கு மிகவும் சென்ஸிடிவ் வயிறு. முடிந்தவரை நான் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவேன். வேளைக்கு ஒரு உணவகத்தில் எப்படித்தான் அனைவராலும் சமாளிக்க முடிந்ததோ?
  திரு. D கோவிந்தராஜன் அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! என்னைப் பொருத்தவரை எந்த உணவக சாப்பாடும் ஒத்துக்கொள்ளும் காரணம் 9 ஆம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே உணவு விடுதிகளில் சாப்பிடத்தொடங்கியவன் நான்.

   எங்கள் வகுப்புத்தோழர் D.கோவிந்தராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்தற்கு நன்றி

   நீக்கு
 6. இப்படி ஒரு அருமையான சுற்றுலா அனுபவத்தை உங்களுடைய பதிவுகளின் வாயிலாக எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இதற்கிடையில் உங்களுடைய நண்பர் மரித்த செய்தியும் உங்களை நிச்சயம் அதிர்ச்சியடைய வைத்திருக்கும். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து துயறுரும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!
  எங்கள் வகுப்புத்தோழர் D.கோவிந்தராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்தற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான பகிர்வு... உங்களுடன் பயணம் செய்த நண்பர் மறைந்தது அதிர்ச்சியைத் தந்தது.... அவரது ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகளும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! எங்கள் வகுப்புத்தோழர் D.கோவிந்தராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்தற்கும் நன்றி

   நீக்கு