வெள்ளி, 9 மே, 2014

நினைவோட்டம் 80



சென்ற பதிவில் திரு T.R‌. மகாலிங்கம் அவர்கள் பாடிய செந்தமிழ் 
தேன்மொழியாள் என்ற பாட்டு இன்றைக்கும் எல்லோராலும் விரும்பப்படும் 
பாடல் என்று சொல்லியிருந்தேன்.


அவர் பாடிய பாடலை அநேகமாக எல்லோரும் கேட்டிருக்க கூடும். அதனால் 
திருமதி ஜமுனா ராணி அவர்கள் பாடிய சோகப் பாடலுக்கான காணொளியை 
மட்டும் அந்த பதிவில் இணைக்க எண்ணியிருந்தேன். ஆனால் ஏனோ இணைக்கமுடியவில்லை.  இதோ அந்த பாடலின் காணொளியை கீழே. இணைத்துள்ளேன் நீங்கள் பார்த்து, கேட்டு  இரசிப்பதற்காக. (காணொளி 
உதவி திரு கிருபாகரன் சௌந்தரராஜ். அவருக்கு நன்றி






கல்லூரியில் இறுதித் தேர்வுக்கு நடத்தப்படவேண்டிய பாடங்கள் நடத்தி 
முடிந்ததும் தேர்வுக்கு படிப்பதற்காக விடுமுறை (Study Holidays) விடுவதற்கு 
முதல் நாள் மதியம் மூன்று மணிக்கு மேல் புகுமுக வகுப்பு படிக்கும் எல்லா மாணவர்களையும் அவர்களது ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். 

கல்லூரி முதல்வர் அருட் தந்தை எரார்ட் (Rev Fr Ehrhart SJ) அவர்களுடனும் 
Rector (கல்லூரிகள் குழுமத்தின் தலைவர்/முகவர்) அவர்களுடனும் 
ஒவ்வொரு பிரிவு (Group) மாணவர்களையும் தனித்தனியாக நிற்கவைத்து, 
அவர்களது ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்தார்கள்.

(சென்னையில் உள்ள இலயோலா கல்லூரி,பாளையங்கோட்டையில் உள்ள 
தூய சவரியார் கல்லூரி (St.Xavier College), திருச்சியில் உள்ள புனித 
வளவனார் கல்லூரி ஆகிய மூன்றும் ஒரு Rector இன் கீழ் இயங்கின. 
திருச்சி தான் அவரது தலைமையிடம் அப்போது)

அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் கீழே


(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க சுட்டியை படத்தின் மேல் வைத்து சொடுக்கவும்)






புகைப்படத்தில் நடுவில் அமர்ந்திருப்பவர் Rector.அவருக்கு இடப்புறம் 
அமர்ந்திருப்பவர் தான் கல்லூரி முதல்வர் அருட் தந்தை எரார்ட் அவர்கள். 
வலப்புறம் இருப்பவர் துணை முதல்வர் அவர்கள்.

சைக்கிள் நிறுத்தும்  இடத்தில் எனது சைக்கிளை நிறுத்தாதற்காக துணை 
முதல்வர் அபராதத் தொகை விதித்தார் என்று நினைவோட்டம்73 இல்  சொல்லியிருந்தேனல்லவா, அந்த நிகழ்வு இந்த படத்தில் துணை முதல்வர் அவர்களைப் பார்க்கும்போது, ஏனோ நினைவுக்கு வருகிறது.

இந்த புகைப்படத்தில் நிற்பவர்களில்முதல் வரிசையில் வலமிருந்து 
நான்காவதாக டை அணிந்து நிற்பது நான் தான். நிற்போரில் மூன்றாவது 
வரிசையில்  வலமிருந்து ஐந்தாவதாக நிற்பவர் தான், இவரைப்பற்றி 
நினைவோட்டம் 69 இல், வகுப்புக்கு நான் சென்ற முதல் நாள் என் 
இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த இருந்து பழகிய சில மணி 
நேரத்திலேயே, எனக்கு நெருங்கிய நண்பராக ஆனவர் என்று சொல்லியிருந்தெனால்லவா? 

அவர் வேறு யாருமல்ல இன்றைக்கு தமிழகத்தில் பிரபலமாக உள்ள 
ஒருவரின் அண்ணன் தான் அவர். எனக்கு புகுமுக வகுப்பில் முதல் நாள் அறிமுகத்திலேயே எனக்கு நெருங்கிய நண்பராகி, அன்றே என்னை அவரது 
விடுதி அறைக்கு அழைத்து சென்ற அவரின் பெயர் வினோதகன்.

புகைப்படம் எடுத்துக்கொண்டதை தவிர பிரிவு உபசார விழா என்று 
ஒன்றும் கல்லூரியில் நடத்தப்படவில்லை. ஆண்டுத் தேர்வுக்காக நான் 
தீவிரமாக படித்து தேர்வன்று சென்று தேர்வு எழுதினேன். தேர்வு முடிந்த 
நாளன்று இரவு உறையூர் பத்மாமணியில் தெய்வப்பிறவி திரைப்படம் 
பார்த்ததும் இப்போதும் நினைவில் உள்ளது. 

தேர்வு முடிந்த மறுநாள் எனது நண்பர் திரு வினோதகன் அவரது ஊரான திருத்துறைப்பூண்டிக்கு செல்ல இருப்பதாக சொன்னதும், நான் அவரை வழி 
அனுப்ப திருச்சி இரயில் நிலைய சந்திப்புக்கு சென்றேன். அவரை தஞ்சை 
செல்லும் இரயிலில் ஏற்றிவிட்டு அதிர்ஷ்டம் இருப்பின் மருத்துவக் 
கல்லூரியில் சந்திப்போம். என சொல்லி பிரியா விடைபெற்றேன்.

அவர் நினைத்தபடி தஞ்சை மருத்துவக்கல்லூரியில் படித்து மருத்துவரானார். 
என் அண்ணன் முனைவர் ஞானப்பிரகாசம் அவர்களின் மைத்துனர் மருத்துவர் பாலகிருஷ்ணன் அவர்களின் வகுப்புத்தோழர் என்பதால் எனது அண்ணனின் திருமணத்தின் போது 1964 இல் ஆக்கூருக்கு வந்திருந்தார். அப்போது  சந்தித்ததுதான்.அதற்குப் பிறகு அவரை சந்திக்க வாய்ப்பில்லை. அவர் 
இப்போது அமரராகிவிட்டபடியால் இனியும் சந்திக்க வாய்ப்பில்லை என நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

எனது தேர்வு நடந்துகொண்டிருக்கும்போது என் அண்ணன் திரு சபாநாயகம் 
அவர்கள் திருச்சியில் ஆசிரியர்களுக்காக தேசிய உயர்நிலைபள்ளியில்
(National High School) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோடைகால பயிற்சி 
முகாமிற்கு வந்திருந்தார். (இப்போது அந்த பள்ளி இருந்த இடத்தில் 
திருமதி இந்திராகாந்தி அவர்கள் பெயரில் கல்லூரி இருக்கிறது.)
 
தேர்வின் கடைசி நாளன்று என் தந்தையும் கண் மருத்துவரை பார்க்க 
அப்போது திருச்சி வந்திருந்தார்கள். என் தேர்வு முடிந்த மறுநாள் காலை 
நாங்கள் மூவரும் இரயிலில் புறப்பட்டு விருத்தாசலம் வந்தோம்.

ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், நேரந்தவறாமையையும் எனக்கு 
கற்றுக்கொடுத்த திருச்சி புனித வளவானர் கல்லூரியில் படித்தது குறித்து 
இன்றைக்கும் எனக்கு பெருமையே. வங்கியில் பணியில் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி. நேரந்தவறாமையை நான் கடைப்பிடிப்பதற்கு காரணம் 
எங்கள் கல்லூரியில் கற்ற/பெற்ற அனுபவம் தான்.

நினைவோட்டம் 71 இல், எங்கள் கல்லூரி மாணவர்களை மற்ற கல்லூரி 
மாணவர்கள் Slaves of St.Josephs என சொல்லி கலாட்டா செய்வதுண்டு என சொல்லியிருந்தேன். அதைக் கேட்டு அப்போது வருத்தப்பட்டது உண்டு. 
இப்போது அதை நினைக்கும்போது  அந்த பதின்ம வயதில் (Teen age)  
வயதில் கட்டுப்பாடு அவசியம் என்றே நினைக்கிறேன்.

அப்போது எங்கள் கல்லூரியில் இருந்த கட்டுப்பாட்டை விட இப்போது 
தமிழகத்தில் உள்ள அநேக பொறியியல் கல்லூரிகளில் அதிக 
கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆனால் ஒன்றை 
மட்டும் சொல்வேன். இந்த கல்லூரிகள் புனித வளவனார் கல்லூரியும் அல்ல. மாணவர்களும் அந்த கால மாணவர்கள் அல்லர்.  

எனவே அதிக கட்டுப்பாட்டை விதிப்பதை விட, மாணவர்களுக்கு 
கட்டுப்பாடுள்ள சுதந்திரம் தரலாம் என்பது எனது கருத்து.


நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி



28 கருத்துகள்:

  1. அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தன! அந்நாட்களில் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றவை தான் பின்னாளில் பலமான அடித்தளமாக அமையும். சொல்லப்போனால் ஒழுக்கத்தையும் அறிவையும் கட்டுப்பாட்டையும் திறமைகளையும் வளர்த்த அன்றைய கல்விக்கூடங்களில் படித்தவர்கள் என்ற முறையில் மனதில் என்றுமே தனிப்பெருமை நிலவுகிறது!!

    இன்றைக்கும் ' வினோதகன் மருத்துவ மனை" இங்கே தஞ்சையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திருமதி மனோ சாமிநாதன் அவர்களே! ஒழுக்கத்தையும் அறிவையையும் கட்டுப்பாட்டையும் வளர்த்த அன்றைய கல்விக்கூடங்களில் படித்தவர்கள் என்ற முறையில் மனதில் என்றுமே தனிப்பெருமை நிலவுகிறது என்று நீங்கள் சொல்வது சரியே.

      தஞ்சையில் நண்பர் வினோதகனின் மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்குவது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  2. அந்தக் காலப் படங்களை மிகக் கவனமாகக் காத்து வைத்திருப்பது-நினைவுகள் எல்லாம் காத்து வைத்திருப்பது போல்-வியப்புக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இந்த புகைப்படங்கள் வாழ்வில் மிக முக்கியமானவை என்பதால் இதுவரை பாதுகாத்து வைத்திருந்தேன்.

      நீக்கு
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தகவலுக்கு நன்றி நிகண்டு தமிழ் பதிவர் சமூக வலைத்தளம் ஆசிரியக்குழு உறுப்பினர்களே! தங்கள் வலைத்தளம் மூலம் எனது பதிவுகளை பகிர்ந்துகொள்ள தொடங்கிவிட்டேன்.

      நீக்கு
  4. அதிக கட்டுப்பாட்டை விதிப்பதை விட, மாணவர்களுக்கு
    கட்டுப்பாடுள்ள சுதந்திரம் தரலாம் என்பது எனது கருத்து.
    பயனுள்ள கருத்து..

    காணொளி ரசிக்கவைத்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எனது கருத்தை ஆமோதித்ததற்கும், காணொளியை இரசித்தமைக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  5. அன்று படிப்பதற்கும், உலகைப் புரிந்து கொள்ளவும் கல்விக் கூடங்களை நாடினார்கள்.
    இன்று சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டே பள்ளிக்குச் செல்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! தங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.

      நீக்கு
  6. சிறப்பாகவும் விரிவான விளக்கங்களுடனும் ஆர்வம் குறையாது நீங்கள் எழுதும் முறை போற்றத்தக்கது. நீங்கள் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் உள்ளவரா ? அப்படி இருந்தாலும் இவ்வளவு நுண்மையாக எழுதுவது வியப்பை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பாலா அவர்களே! நான் நாட்குறிப்பு எழுதுவது இல்லை. ஆனாலும் முக்கிய நிகழ்வுகளை மனதில் பதிய வைத்துக்கொள்வது வழக்கம். அப்படி நினைவில் உள்ளவற்றை திரும்ப கொண்டு வந்து பதிவிடுகிறேன். அவ்வளவே.

      நீக்கு
  7. பலவற்றையும் பலரையும் மறக்காமல் குறிப்பிட்டது அருமை + அதிக ஞாபக சக்தி...

    கரந்தை ஜெயக்குமார் ஐயா சொன்னது மிகச் சரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  8. எனவே அதிக கட்டுப்பாட்டை விதிப்பதை விட, மாணவர்களுக்கு
    கட்டுப்பாடுள்ள சுதந்திரம் தரலாம் என்பது எனது கருத்து.//

    ஆமோதிக்கிறேன். உங்களுடைய கல்லூரி வாழ்க்கையை மிக அருமையாக ஏதோ நேற்று நடந்ததுபோல் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! கல்லூரி மற்றும் பள்ளி நினைவுகள் எப்போதும் பசுமையாய் நினைவில் இருப்பதால், எழுதும்போது நேற்று நடந்ததை எழுதுவது போல் தெரிகிறது என நினைக்கிறேன்.

      நீக்கு
  9. புகைப்படத்தில் நூறு பேருக்கு மேல் இருப்பதுபோல் தோன்றுகிறது. கல்லூரியில் ஒரு வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருந்தார்கள்? தாங்கள் சொல்லியிராவிட்டால், புகைப்படத்தில் அடையாளம் கண்டிருக்க முடியாது.

    காலம் மாறிவிட்டது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருந்த அந்தக்கால மதிப்புடன் கூடிய பிணைப்பு இன்று குறைவுதான் என்று நினைக்கிறேன். மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வரும் பேராசிரியர்களும் இன்று உண்டு என்று அனுபவபூர்மாகத் தெரியும். அதே நேரத்தில், எழுபது வயதுக்குமேல் மாணவர்களுக்காக, உழைத்த பேராசிரியரிடம் பயின்ற அனுபவமும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! எங்கள் வகுப்பில் 75 மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் புகைப்படத்தில் இருப்பது 73 பேர் மட்டுமே.

      இக்கால ஆசிரியர்களில் மிகச் சிலரே கடமை உணர்ந்து பணியாற்றுகிறார்கள் என நினைக்கிறேன்.எனக்கென்னவோ அந்த கால ஆசிரியர்கள் போல இக்கால ஆசிரியர்கள் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

      நீக்கு
  10. எங்கும் எப்போதும் கட்டுப்பாடுகள் திணிக்கப்படக் கூடாது. அவை ஒருவரை ரிபெல் செய்யத் தூண்டும் சுவையான நினைவோட்டம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M. பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  11. நினைவலைகளின் சுவாரசியப் பகிர்வுக்கு நன்றி ஐயா. புகைப்படங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பொன்னான தருணங்களை மீட்டெடுக்கின்றன. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி கீதா மதிவாணன்அவர்களே! புகைப் படங்கள் நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்லும் கால இயந்திரங்கள் என்பதை கோடிட்டு காட்டியமைக்கு நன்றி!

      நீக்கு
  12. நினைவோட்டச் செய்திகள் வழக்கம் போல SJC இன் வரலாற்றுப் பதிவாக சிறப்பாக உள்ளது. புகைப் படத்தில் உள்ள ரெக்டர், முதல்வர், துணை முதல்வர் (இவரை நானும் நண்பர்களும் வெள்ளைக்கார பாதர் என்று சொல்வோம்) மூவரையும் நேரில் பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  13. நினைத்துப் பார்க்கிறேன்..... இத்தனை நிகழ்வுகளையும் உங்கள் நினைவில் வைத்திருப்பது வியப்பளிக்கிறது. நினைவுகளை சுவையாகச் சொல்லிப் போகும் உங்கள் பாங்கு பிடித்திருக்கிறது. தொடரட்டும் நினைவலைகள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! மேலே திரு பாலா அவர்களின் பின்னூட்டத்திற்கான பதிலில் சொன்னதையே இங்கும் சொல்ல விரும்புகிறேன். முக்கிய நிகழ்வுகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து இருப்பதால் அவைகளை என்னால் இலகுவாக பதிவிடமுடிகிறது.

      நீக்கு
  14. பழைய நினைவுகள் வரும்போது அது திரும்பவும் கிடைக்காதா ? என்ற ஏக்கமும் வருகிறது.
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Killergee அவர்களே!

      நீக்கு