புதன், 2 ஜூலை, 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 4



எங்கள் வங்கியின் கோழிக்கோடு கிளை மேலாளரிடம் தான் கார் 
ஓட்டுனராக இருப்பதாகவும், பழனிக்கு வந்த இடத்தில் பணம் 
போதவில்லை என்றும், 200 ரூபாய் கொடுத்தால் ஊர் போனதும் 
திருப்பி அனுப்பவதாக மலையாளத்தில் என்னிடம் சொன்னவரிடம், 
மேற்கொண்டு விவரங்கள் விசாரிக்க மொழி தெரியாத காரணத்தால் 
பாலக்காட்டை சேர்ந்த என்னோடு வங்கியில் பணிபுரியும் 
நண்பர் கிருஷ்ணன் வீட்டிற்கு அவரை அனுப்பி விவரத்தை 
சொல்லி வரச் சொன்னேன்.  


இப்போதுபோல் கைப்பேசி இருந்திருந்தால் அவரை கூப்பிட்டு பேசி 
நிலைமையை சொல்லியிருப்பேன். மேலும் தொலைபேசி வசதியும் 
அப்போது இல்லை. அவரை நண்பர் கிருஷ்ணனிடம் அனுப்பிய பிறகு, 
செல்லும் செல்லாததற்கு செட்டியார் பக்கத்தில் இருக்கிறார். 
என்பதுபோல் அவரை மாட்டிவிட்டு விட்டேனா? என்ற குற்ற உணர்ச்சி 
எனக்கு ஏற்பட்டதாக சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.
 
அது என்ன செல்லும் செல்லாததற்கு செட்டியார் பக்கத்தில் இருக்கிறார். 
என்பதை  இந்த பதிவில் சொல்லுவதாக சொல்லியிருந்தேன்.
அந்த கதை இதுதான்.

ஒரு சமயம் ஒரு சிறு வணிகரும் அவரது ஊரைச்சேர்ந்த ஒருவரும் 
அருகில் உள்ள ஊருக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு 
வரும்போது மாலை நேரம் ஆகிவிட்டது.

அவர்கள் தங்கள் ஊருக்கு திரும்ப கள்ள பயம் இருந்த ஒரு காட்டைக் 
கடந்துதான் செல்லவேண்டும்.அவர்கள் இருவரிடமும் கொஞ்சம் பணம் 
இருந்ததால், இருவரும் பயந்துகொண்டே நடந்தனர்.

காட்டின் மய்யப் பகுதிக்கு வந்தபோதே எதிரே கள்ளர்கள் மூவர் 
வருவதைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துக்கொள்ளலாம் என இருவரும் 
முடிவெடுத்து மறை விடத்தை தேடியபோது, அருகில் இருந்த 
புதர் ஒன்றில் அந்த வணிகர் ஓடி மறைந்துகொண்டார். கூட வந்தவர் 
இடம் தேடுவதற்குள் கள்ளர்கள் அருகில் வந்துவிட்டதால் 
வந்தது வரட்டும் என எண்ணி உடனே பாதையில் படுத்துவிட்டார்.

இருட்டில் பாதையில் படுத்து இருந்தவரை கள்ளர்களில் ஒருவர் 
மிதித்துவிட்டார். அந்த கள்வர் குடி போதையில் இருந்ததால் 
தான் மிதித்தது மனிதன் எனத் தெரியாமல் என்ன குறுக்கே 
ஒரு கட்டை கிடக்கிறதே? என்றிருக்கிறார்.  

அப்போது படுத்து இருந்தவர் சும்மா இருக்காமல், என்ன. மரக்கட்டை 
இடுப்பில் காசு முடிந்துகொண்டு படுத்திருக்குமா?’ என்றாராம். 
உடனே மற்ற கள்ளர்கள், அடடே. யாரோ ஆள் பணத்தோடு 
படுத்திருக்கிறான் என்று சொல்லி அவரை அடித்து அவரிடம் இருந்த
பணத்தை பிடுங்கினார்களாம்.

அந்த கள்ளர்களில் ஒருவன் அந்த காசை எடுத்துப் பார்த்து இது 
செல்லுமோ செல்லாதோ என்று இன்னொருவரிடம்  கேட்டபோது, 
அப்போதும் இவர் சும்மா இருக்காமல் செல்லும் செல்லாது என
சொல்ல செட்டியார் பக்கத்தில் இருக்கிறார். என சொல்லி அந்த 
வணிகர் மறைந்திருந்த இடத்தை காட்டிவிட்டாராம்.
அவர்கள் உடனே அந்த வணிகரை பிடித்து இழுத்து அவரிடம் இருந்த  
அதிக பணத்தையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்களாம். 

நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல்’, அவர் தன் பணத்தை 
பறி கொடுத்தது மட்டுமல்லாமல் தன்னோடு வந்த வணிகரின் 
பணத்தையும் பறிகொடுக்க வழி செய்துவிட்டாராம்.
(இதே கதையை சிறிது மாற்றம் செய்து, ஒரு திரைப்படத்தில் நடிகர் செந்தில், 
நடிகர் கவுண்டமணி அவர்களை திருடர்களிடம் மாட்டிவிடுவதுபோல் 
நகைச்சுவையாக காட்டியிருப்பார்கள்.)  

இதைத்தான் இன்றும், தான் மாட்டியதுமல்லாமல் பிறரை 
மாட்டிவிடுகிறவர்களை பற்றி சொல்லும்போது இந்த சொல்லாடலை 
கையாள்வதுண்டு.

நான் அனுப்பிய அந்த நபர் காலை 9 மணி வரை எனது அறைக்கு 
வரவில்லை. சரி காலை சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு கிளைக்கு 
செல்வோம் என கிளம்பியபோது நண்பர் கிருஷ்ணன் என அறைக்கு 
வந்துவிட்டார்.

அவரை நான் ஏதும் கேட்கு முன்பே அவர் என்ன சபாபதி. அந்த ஆளை 
என்னிடம் அனுப்பிவிட்டீர்கள்?’ என்றார். அதற்கு நான் அந்த நபர் என்னை 
சந்தித்தது, பணம் கேட்டது பற்றி சொல்லி, உண்மையில் அந்த நபர் நமது கோழிக்கோடு வங்கிக் கிளை மேலாளரின் ஓட்டுனராக இருந்து, அவருக்கு 
பண உதவி தேவைப்பட்டால் கொடுக்கலாமே என நினைத்தேன். ஆனால் 
மலையாள மொழி  எனக்குத் தெரியாததால் உங்களிடம் அனுப்பினால் 
அவரிடம் மலையாளத்தில் பேசி உண்மை நிலையை அறிந்து சொல்வீர்களே என்றுதான் அனுப்பினேன்.என்ன ஆயிற்று? அவரிடம் விசாரித்தீர்களா? 
அவர் சொல்வது சரிதானா? அவர் ஏன் திரும்ப என்னிடம் வரவில்லை?'
என கேள்வி மேல் கேள்வி கேட்டேன்.

அதற்கு அவர் எனக்கென்னவோ அவர் சொன்னதில் நம்பிக்கை இல்லை.
மேலும் நமது கோழிக்கோடு கிளை மேலாளருக்கு கார் உண்டா எனத் 
தெரியவில்லை. நமது தற்போதைய மேலாளர் திரு N.V ஷெனாய் அவர்கள் 
இங்கு வருமுன் கோழிக்கோடு கிளையில் இருந்ததால் ஒருவேளை இவர் 
அவருடைய கார் ஓட்டுனராக இருந்திருப்பாரோ என நினைத்தேன். 
அதனால் மகாலிங்கபுரத்தில் உள்ள நமது மேலாளரின் வீட்டு முகவரியைக் 
கொடுத்து கோழிக்கோடில் இருந்த மேலாளர் இங்குதான் இருக்கிறார். 
அவரைப் பார்த்து உங்கள் நிலையை சொல்லுங்கள் என அனுப்பிவிட்டேன். 
மேலும் தேநீர் அருந்த அவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்தேன் என்றார். 
(அப்போது பொள்ளாச்சியில் காபி விலையே 20 காசுகள்தான்!)

இது ஏது இடைமாற்று ஒட்டப்பந்தயம் (Relay Race) போல் ஆகிவிட்டதே 
என எண்ணிக்கொண்ட நான் அவருடன்  உணவகம் சென்று காலை 
சிற்றுண்டியை முடித்துவிட்டு வங்கிக் கிளைக்கு சென்றேன். நாங்கள் 
சென்ற சிறிது நேரத்தில் மேலாளர் வந்துவிட்டார். வந்து அமர்ந்ததும் 
நண்பர் கிருஷ்ணனை அவரது அறைக்கு வரச்சொல்வதாக ஊழியர் 
ஒருவர் சொன்னார்.

நண்பர் கிருஷ்ணன் என்னைப் பார்த்தபடியே மேலாளர் அறைக்கு செல்ல 
நான் அவரை எதற்காக மேலாளர் அழைத்திருக்கிறார் என எண்ணி 
அமர்ந்திருந்தேன்.

 

தொடரும்


19 கருத்துகள்:

  1. ஏமாற்றுவதும் ஒரு தொடராக....!கோவையில் என் மகன் வீட்டில் இருந்தேன். என் இன்னொரு மகன் ரயிலில் கோவை வழியே போவதாக அறிந்து அவனுக்கு இரவு உணவு கொடுக்க நான் என் மனைவி, என் மாமியார் மூவரும் ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். அப்போது ஒரு இளைஞன் எங்கள் எதிரே வந்து நாங்கள் பெங்களூரில் இருக்கும் இடம் அடுத்த வீட்டுக்காரர் பெயர் என்று எல்லாம் கூறிவிட்டு அவன் பெங்களூர் போக வந்ததாகவும் பணம் திருட்டுப் போய் விட்டதாகவும் கூறி ரயில் சத்தத்துக்குப் பணம் கேட்டான். என்னிடம் இருக்கவில்லை. ஆனால் என் மாமியார் தன்னிடம் இருப்பதாகக் கூறி ரூ.200/- கொடுத்தார். அதன் பின் நாங்கள் பெங்களூர் திரும்பி வந்தோம், இன்னும் அவன் வரவில்லை. என் மாமியார் பணம் போச். போயே போச்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  2. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது மட்டும் விளங்குகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  3. செட்டியார் கதை அருமை நமக்கு ஒருகண் போனாலும் பரவாயில்லை அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்தவனுக்கு ரெண்டு கண்ணையும் போகவைத்து சந்தோசப்படுபவர்கள் நிறையபேர் உண்டு வாழ்த்துக்கள் ஐயா. பகுதி எப்பவரும் ?
    குறிப்பு-ஐயா தங்களது பதிவு நிற்பதில்லை மூவிங்கிலேயே இருக்கிறது படிக்கவும் முடியவில்லை, கருத்துரை இடவும் முடியவில்லை. கவனிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com

      நீக்கு


    2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினையை தீர்க்க முயல்கிறேன்.

      நீக்கு
  4. அட அவர் மூன்றாவதாக வேறு ஒருவரிடம் அனுப்பி விட்டாரா..... அடுத்தது என்ன என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! உங்கள் யூகம் சரியா என்பது அடுத்த பதிவில்!

      நீக்கு
  5. பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா.

    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள்...

    என்பக்கம் கவிதையாக
    நீஎன்நெஞ்சில் தந்தகாயங்கள் வாருங்கள் அன்புடன்
    http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/07/blog-post.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! தங்கள் கவிதையைப் படித்தேன். அருமை!

      நீக்கு
  7. விட்டுப்போன இந்த பதிவை இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது. SUSPENSE .... உங்கள் அடுத்த பதிவினை தொடர்கின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  8. அருமையான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்களே? நாளைக்கே அடுத்த பகுதியை போடுவீர்களா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! இரண்டு நாட்கள் ஊரில் இல்லாததால் உடனே பதில் தர இயலவில்லை. ஓரிரு நாட்களில் அடுத்த பதிவை எழுதுவேன்.

      நீக்கு
  9. இவ்வளவு சிரமப்பட்டு ஏமாற்றுவதற்கு பதிலாக மூளையை நல்ல வித்த்தில் உபயோகித்து பிழைக்கலாமே. சென்ற முறை திருப்பதிக்கு நடந்து சென்றபொழுது பாதி மலையில் இதே பாணியில் சிலர் பணம் கேட்டார்கள். ஒருவர் கிடையாது. ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ஒருவர்போல. அவ்வளவு தூரம் நடக்க முடிந்தவர்களுக்கு உழைக்க மனமில்லை. சமூகமே மாறிவிட்டதோ என்று சந்தேகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! ஏமாற்றுவோர்களின் நடிப்பை நம்பி இரக்கப்படுவதால்தான் நாம் ஏமாற்றப்படுகிறோம். உழைக்காமலேயே சம்பாதிக்க நினைப்போர் இருப்பதை பார்க்கும்போது நீங்கள் சொன்னது போல சமூகமே மாறிவிட்டது என எண்ணுகிறேன்.

      நீக்கு