புதன், 9 ஜூலை, 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 5நண்பர் கிருஷ்ணனை எதற்காக மேலாளர் அழைத்திருக்கிறார் என எண்ணிக்கொண்டிருந்தபோது, என்னையும் மேலாளர் அழைப்பதாக 
ஊழியர் ஒருவர் வந்து சொன்னார்.


நிச்சயம் நண்பர் கிருஷ்ணன் தான் அனுப்பியவரை நான் தான் 
அனுப்பினேன் என்று சொல்லியிருப்பார். அதைப்பற்றி என்னிடம் 
விசாரிக்கத்தான் கூப்பிடுகிறார் என்று தெரிந்தாலும் எந்தவித பயமும் 
இல்லாமல் மேலாளர் அறைக்கு சென்றேன்.

காரணம் எங்கள் மேலாளர் கோபப்படமாட்டார் என எனக்குத் தெரியும்.
அப்போது எங்களுக்கு மேலாளராக இருந்தவர் கேரளாவில் உள்ள 
கோழிக்கோட்டைச் சேர்ந்த திரு N.V.ஷெனாய் அவர்கள். இவரைப்பற்றி  
Boss கள் பலவிதம்! 36  என்ற பதிவில் விரிவாக எழுதியுள்ளேன். 
இவரைப் போன்ற மேலாளர்களின் கீழ் பணிபுரிந்ததை இன்றும் 
பெருமையோடு நினைத்துப் பார்க்கிறேன்.

நான் உள்ளே நுழைந்ததும் திரு ஷெனாய் அவர்கள், என்ன சபாபதி. 
அந்த ஆள் உங்களிடம் முதலில் வந்தாரா? என்ன சொன்னார்?  
என்று கேட்டார். நான்,’சார். என்னிடம் வந்து, தான் நம் கோழிக்கோடு 
கிளை மேலாளரிடம் கார் ஓட்டுனராக இருப்பதாகவும், வந்த இடத்தில் 
பணம் குறைவதால் கொடுத்து உதவவேண்டும் எனக் கேட்டார்.

அவருக்கு உதவ வேண்டும் என நினைத்தாலும், எனக்கு மலையாளம் 
தெரியாததால் அவர் சொல்வது உண்மைதானா என் அறிய 
திரு கிருஷ்ணனிடம் அனுப்பினேன். நீங்கள் கோழிக்கோடு கிளை 
மேலாளராக இருந்ததால் உங்களுக்கு உண்மை நிலை தெரியும் 
என்பதால் திரு கிருஷ்ணன் உங்களிடம் அனுப்பிவிட்டார் போலிருக்கிறது. 
தொந்தரவு கொடுத்தமைக்கு மன்னிக்கவேண்டும் சார். என்றேன்.

அதற்கு அவர். இல்லை. இல்லை.நீங்கள் செய்தது சரியே. நம் வங்கியில் 
கோழிக்கோடு கிளை மேலாளருக்கு கார் ஓட்டுனர் என்று யாரும் இல்லை. 
நான் கூட அங்கிருந்தபோது எனது காருக்கு ஓட்டுனர் வைத்துக் 
கொள்ளவில்லை. இப்போது அங்கிருக்கும் மேலாளர் திரு சந்திரசேனன் 
கூட ஓட்டுனர் வைத்துக்கொள்ளாமல் இருக்கிறார்.

வந்திருப்பவர் பொய் சொல்கிறார். நம்மை ஏமாற்றப்பார்க்கிறார் எனத் 
தெரிந்தும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் எப்போது வந்தீர்கள்? 
உங்களுக்கு இங்கு யாரும் உறவினர் இல்லையா?’ எனக் கேட்டேன். 
உடனே அதற்கு அவர் எனது உறவினர்கள் கோவையில் இருக்கிறார்கள். 
அங்கு போனால் பணம் கிடைக்கும். என்றார்.

சரி. பொறுங்கள் என சொல்லி உள்ளே சென்று வந்து அவரது கையில் 
இரண்டு ரூபாய் கொடுத்து, இங்கிருந்து கோவைக்கு பேருந்தில் செல்ல 
ஒரு ரூபாய் 10 காசுகள் தான். அங்கு செல்ல நிறைய பேருந்துகள் உண்டு. 
கோவைக்கு போய் உங்கள் உறவினரிடம் தேவையான பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். என்றேன்.

அவர் அதை  எதிர்பார்க்கவில்லை போலும். நான் உள்ளே சென்றதும் 
அவர் கேட்ட பணத்தை கொண்டு வந்து கொடுக்கப்போகிறேன் 
நினைத்திருக்கிறார். நான் இரண்டு ரூபாயைக் கொடுத்ததும் 
அதிர்ச்சியடைந்து என்ன சார். நான் கேட்ட பணத்தை கொடுப்பீர்கள் 
என நினைத்தேன். வெறும் இரண்டு ரூபாய் கொடுக்கிறீர்களே?’ என்றார்.

அதற்கு நான் உங்கள் உறவினர்கள்தான் கோவையில் இருக்கிறார்களே. 
அவர்களிடம் போய் வாங்கிக்கொள்ளலாமே. அதற்குத்தான் அங்கு போக 
பேருந்து செலவுக்கு பணம் தந்திருக்கிறேன் என்றதும், அவர் நான் 
சொன்னது பொய் சார். அங்கு யாரும் இல்லை. நீங்கள் உறவினர்கள் 
யாரும் இல்லையா எனக் கேட்டதால் அவ்வாறு சொன்னேன். 
நீங்கள் தான் பணம் கொடுத்து உதவ வேண்டும். ஊருக்குப் போனதும் 
உடனே அனுப்பிவிடுகிறேன். என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்.

நான் உடனே அதுவும் எனக்குத் தெரியும். நீங்கள் கோழிக்கோடு 
கிளையில் ஓட்டுனராக இல்லை என்பதும் தெரியும். நம் ஊர்க்காரராக 
இருக்கிறீரே என்பதால் போலீசுக்கு தெரிவிக்காமல் இந்த பணத்தைக் 
கொடுத்து இத்தோடு விடுகிறேன்.. இனி இப்படி செய்யாதீர்கள். 
போய் வாருங்கள். என அனுப்பிவிட்டேன். என்றார்.

பிறகு என்னிடம் .நல்ல வேளை. நீங்கள் அனுதாபப்பட்டு பணம் ஏதும் கொடுக்கவில்லை. இதுபோன்ற ஆட்களிடம் ஜாக்கிரதையாக 
இருக்கவேண்டும். என்று சொல்லிவிட்டு, உங்கள் பெயரும் நீங்கள் 
சிண்டிகேட் வங்கியில் பணிபுரிகிறீர்கள் என்பதும் எப்படி என்று 
அவருக்கு எப்படி தெரிந்தது? நீங்கள் தங்கியுள்ள விடுதியில் 
அது பற்றி விசாரியுங்கள். என்றார்.

நான் மதிய உணவு இடைவேளைக்கு வெளியே சென்றபோது 
விடுதிக்கு சென்று விசாரித்தேன். என்ன நடந்திருக்கிறதென்றால் 
அன்று காலை விடுதியில் உரிமையாளரின் மகன் திரு மூர்த்தி 
சேவை முகப்பில்(Counter) அமர்ந்திருந்தபோது இந்த நபர் வந்து தங்க 
அறை வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். 

அவர் அறை ஏதும் காலியாக  இல்லை என்றதும் சரி என 
சொல்லிவிட்டு, அங்கு அருகில் இருந்த தங்கியிருப்போரின் அறை 
எண்ணும் அவர்களது பெயர் உள்ள பலகை அருகே நின்று 
பார்த்திருக்கிறார். அதில் என் அறை எண்ணுக்கு கீழே எனது பெயரோடு 
கூடிய அறிமுக அட்டை (Visiting Card) இருந்ததால் நான் வங்கியில் 
பணி புரிகிறேன் என்பதையும் எனது பெயரையும் தெரிந்துகொண்டு 
நேரே என்னிடம் வந்திருக்கிறார்.

நான் திரு மூர்த்தியிடம் எப்படி அவரை மேலே எனது அறைக்கு 
வர விட்டீர்கள்?’ எனக் கேட்டதற்கு, நான் வேலையில் கவனமாக 
இருந்ததால்அவர் மேலே சென்றதை கவனிக்கவில்லை. என்றார். 
நான் நடந்ததை அவரிடம் சொல்லிவிட்டு எனது அறிமுக அட்டையை 
அங்கிருந்து எடுத்துவிட்டேன்.

வங்கியில் பணி நிரந்திரமானதும் இளநிலை அலுவலர்களுக்கு 
(Junior Officers) அறிமுக அட்டை கொடுப்பார்கள். அதை பெருமையோடு 
விடுதியில் கொடுத்ததால் வந்த வினை அது. அதற்குப் பிறகு 
தேவைப்பட்டால் ஒழிய அறிமுக அட்டையை உபயோகித்தது இல்லை.  

இதே போன்ற ஆனால் வேடிக்கையான வேறொரு நிகழ்வு பற்றி 
அடுத்த பதிவில்.
     

 

தொடரும்

25 கருத்துகள்:

 1. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்தநாட்டிலே... நம்நாட்டிலே....

  ஐயா, எனது பதிவு தற்போது... ''எனக்குள் ஒருவன்''

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
  2. இப்போது எனது வலைப்பதிவை தங்களால் படிக்கமுடிகிறது என நினைக்கிறேன்.

   நீக்கு
  3. ஆமாம் ஐயா எந்தப்பிரட்சினையும் இல்லை.
   எனது பதிவில் வந்து எனது குரல் பிடித்திருக்கிறது என்று சொன்ன முதல்நபர் தாங்கள்தான் ஐயா, சந்தோசம் இருப்பினும் சந்தேகத்துடன்,,,,, நன்றி.

   நீக்கு
 2. நாம் ஏமாந்தாலும் பரவாயில்லை. நம்மால் அடுத்தவர் ஏமாந்தால் அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் உறுத்தும். உங்களை சுற்றி இருந்தவர்களும் சுதாரிப்பவர்களாக இருந்ததால் உங்கள் தலை தப்பியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். என்னால் மற்றவர்கள் நஷ்டப்பட்டிருந்தால் அது என்னை உறுத்தியிருக்கும். நல்லவேளை அபப்டி ஏதும் நடக்கவில்லை.

   நீக்கு
 3. என் மைத்துனர் இப்படித்தான்சில வருடங்களுக்கு முன் திருப்பதியில் ஏமாந்து இருக்கிறார் ,இன்று வரை அது காணிக்கை கணக்கில் போய்விட்டது என்று சொல்வார் !
  த ம 2
  உங்களுக்கான என் நன்றி ,காண்க >>>http://www.jokkaali.in/2014/07/blog-post_8.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! என்னை நினைவுக்கூர்ந்து நன்றி சொன்னமைக்கு நன்றி!

   நீக்கு
 4. ஒருமுறை ஏமாந்தால் மறுமுறை கவனமாய் இருக்கலாம். ஆனால் ஏமாற்றவும் ஏமாறவும் பல வாசல்கள் திறக்கின்றனவே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! உண்மைதான் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் திரும்பவும் ஏமாற வாய்ப்பு உண்டு.

   நீக்கு
 5. வணக்கம்
  ஐயா.

  மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஏமாற்றுவது ஒரு கலையாக உள்ளது இப்போது.... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

   நீக்கு
 6. ஏமாற்றுபவர்கள் அதில் செலுத்தும் மூளையை நல்ல விசயத்தில் செலுத்தி சம்பாதிக்கலாம்! இப்படியெல்லாம் செய்து பேரைக் கெடுத்துக்கொண்டு பாழாகிறார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’சுரேஷ் அவர்களே!

   நீக்கு
 7. மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை அனுபவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி. கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 8. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 9. எங்கள் வீட்டு வெளி சுவற்றில் எனது பெயர், படிப்பு, பணிபுரியும் வங்கி ஆகியவற்றுடன் கூடிய பெயர்ப் பலகை (NAME BOARD) மாட்டி இருந்தேன். நான் வேலைக்கு சென்று இருந்த சமயம், ஒரு ஆசாமி பெயர்ப் பலகையில் உள்ள விவரங்களை வைத்துக் கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் என்னைத் தெரிந்தது போல் காட்டிக் கொண்டு ஏமாற்ற முயன்றுள்ளான். நல்லவேளை யாரும் ஏமாறவில்லை. (அப்போது செல்போன் இல்லாத காலம்)

  ஏமாற்றுவதும் ஒருவகை திருட்டுதான். களவும் கற்று மற என்றார்கள். ஆனால் ஏமாற்றுவோர் களவையும் ஒரு கலையாக்கி விட்டார்கள்.

  தங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.
  த.ம.4

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும்,விரிவான கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! உங்களைப்போலவே என் நண்பர் ஒருவரும் வீட்டிற்கு வெளியே பெயரோடு வங்கியின் பெயரையும் எழுதி வைத்திருந்ததால், அவர் ஊரில் இல்லாதபோது கள்வர்கள் வீட்டினுள் நுழைந்து பொருட்களை களவாடி சென்றுவிட்டனர். சிலசமயம் பெயர்ப் பலகைகளை வைக்காதிருப்பதே நல்லது.

   ஏமாற்றுவோர் களவை கலையாக மாற்றிவிட்டார்கள் என்பதை குறிக்கத்தான் இந்த தொடர் பதிவிற்கு அதை தலைப்பாக வைத்திருக்கிறேன்.

   நீக்கு
 10. நானும் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற துவக்க காலத்தில் என்னுடைய அறிமுக அட்டையைத்தான் வாசற்கதவில் ஒட்டி வைத்திருப்பேன். உங்களுக்கு நடந்ததுபோலவே எனக்கும் ஒருமுறை நடந்தது. முன் பின் தெரியாத ஒருவர் என் பெயரைச் சொல்லி நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என் மனைவியிடம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் உடனே எனக்கு தொலைபேசி செய்து கேட்டதால் அவருடைய குட்டு வெளிப்பட்டுவிட்டது. அன்றே அந்த அறிமுக அட்டையை கதவிலிருந்து எடுத்துவிட்டேன். அத்துடன் எங்கு குடிசென்றாலும் நான் வங்கியில் அதிகாரியாக இருப்பதை எவரிடமும் தேவையில்லாமல் தெரிவித்ததில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! வங்கியில் அலுவலராய் இருந்ததை நானும் வெளியில் சொன்னதில்லை.

   நீக்கு
 11. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ஜகன் குமார் அவர்களே! அவசியம் தமிழன் குரல் இணைய தளத்தைப் பார்ப்பேன்.

  பதிலளிநீக்கு
 12. பல சமயங்களில் விசிட்டிங் கார்டு நமக்கே எதிரியாகி விடுகிறது....

  நல்ல வேளை நலமாகவே முடிந்தது எல்லாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு