செவ்வாய், 14 ஜூலை, 2015

பெருமை முயற்சி தரும்!நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கள் 08-07-2015 அன்று அவரது வலைத்தளத்தில் தமிழ்மணமும்,எதிர்மறை வாக்கும்! என்ற தலைப்பில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.வலைப்பூவில் தமிழில் தான் எழுதுகிறோமா என்று அவர் யோசித்துப் பார்த்தபோது தொடக்க காலத்தில் இயன்ற அளவு வேற்று மொழிக் கலப்பின்றி எழுதி வந்ததாகவும் பின்னர் .தெரியாத சொற்கள் வரும்போது ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லைத் தேடிப் பயன் படுத்தியதாகவும் காலப்போக்கில் அந்நிலை மாறி மொழிக்கலப்பை ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் எழுதியிருந்தார்.

எனவே பதிவர்கள் வலைப்பூவில் பிறமொழி கலப்பின்றி எழுத முற்படவேண்டும் என்றும் அதற்கு உடன்படுவோர் வலைப்பூவில் எழுதும்போது மொழிக்கலப்பு செய்தால் அதற்கு தண்டனையாக அவர்களது பதிவிற்கு யாரேனும் ஒருவர் தமிழ் மணத்தில் எதிர்மறை வாக்களித்து பின்னூட்டத்தில் மொழிக்கலப்பைச் சுட்டிக்காட்டுவதை ஏற்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.

இதற்கு உடன்படுவோர் தங்கள் வலைப்பூவின் பெயருக்குக் கீழ் ”தனித் தமிழ் வலைப்பூ”என்று சேர்த்தால் அது ஒரு அடையாளமாக இருக்கும் என்றும் இந்த உரத்த சிந்தனையை செயல்படுத்த இயலுமா என்ற கேள்வியையும் அவ்வாறெனில் அதை எவ்வாறு என்பதெல்லாம் நம்முடைய யோசனைக்கு விடுவதாகவும் எழுதியிருந்தார்.

அதற்கு பின்னூட்டமிட்ட நான் இவ்வாறு கூறியிருந்தேன். .

"இது உரத்த சிந்தனை மட்டுமல்ல சிறந்த சிந்தனையும் கூட. முதலில் பிறமொழிக் கலப்பு வேண்டாம் என்பதை அழுத்தி சொல்வோம். எதிர்மறை வாக்குகள் தருவதை சிறிது காலம் அவகாசம் கொடுத்து செயல்படுத்துவது நல்லது. ஏனெனில் திடீரென பிறமொழிக் கலப்பில்லாமல் எழுத பலருக்கு கடினமாய் இருக்கும்."


திரு சென்னை பித்தன் அவர்களது பதிவில் எனது விரிவான கருத்தை தந்தால் அது நீண்டு போகும் என்பதால் தனியாக தர நினைத்ததன் விளைவே இந்த பதிவு.

கடந்த 40-50 ஆண்டுகளில் நம்மையறியாமல் ஆங்கிலத்தை கலந்து பேசிக்கொண்டு தமிழில் பேசிக்கொண்டிருப்பதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அதனால்தான் அப்படியே எழுதிக்கொண்டும் இருக்கிறோம். அதற்கு முன்பு வடமொழி சொற்களைக் கலந்து பேசிக் கொண்டிருந்தோம்.

1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழோடு நீக்கமற நிறைந்திருந்த வடமொழி சொற்களை பயன்படுத்தாமல் அதற்கு ஈடான தமிழ் சொற்களை, எடுத்துக்காட்டாக ‘சர்வகலாசாலை’ என்பதை பல்கலைக்கழகம் என்றும், ‘உப அத்யட்சகர்’ என்பதை துணைவேந்தர் என்றும் ‘மகா கனம்’ என்பதை மாண்புமிகு என்றும் ‘அபேட்சகர்’ என்பதை வேட்பாளர் என்றும் ‘மந்திரி சபை’ என்பதை அமைச்சரவை என்றும் ‘சமேதர’ என்பதை உடனுறை என்றும் உபயோகிக்க தொடங்கினோம்.

ஆனால் அதே நேரத்தில் தேவையில்லாத இடங்களில் சரியான தமிழ் சொற்கள் இருந்தும் ஆங்கிலத்தை கலக்க தொடங்கியதால் இப்போது நாம் தமிழ் பேசுவதாக எண்ணிக்கொண்டு ஆங்கிலம் கலந்த தமிழை பேசிக்கொண்டிருக்கிறோம்.

நான் 1968 ஆம் ஆண்டு புது டில்லியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது என்னோடு புது தில்லியில் ‘கரோல் பாக்’ கில் இருந்த உண்டுறை விடுதியில் என்னோடு தங்கியிருந்த எனது அறை நண்பர் ஒருவர் சொன்ன ஒரு நிகழ்வு பற்றி இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்போடு வருத்தமும் வருகிறது.

அவரும் அவரோடு பணிபுரியும் தமிழர் ஒருவரும் மைய அரசின் தலைமை செயலகத்திற்கு செல்ல ஆர்ய சமாஜ் சாலையில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார்களாம்.அப்போது வந்த பேருந்தில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து எனது அறைத் தோழரின் நண்பர் ‘தமிழில்’ ஏதோ சொன்னாராம். அதை காதில் வாங்கிய அந்த பெண் அவரை இந்தியில் திட்டியிருக்கிறார்.

உடனே அந்த நண்பர் என் நண்பரிடம் ‘நான் தமிழில் சொன்னது எப்படி எந்த பெண்ணுக்குப் புரிந்தது?’ என கேட்டாராம். அதற்கு என் நண்பர் சொன்னாராம்.’ நீ எங்கப்பா தமிழில் சொன்னாய். அந்த சிந்தி லேடி பியூட்டிபுல் இல்லை? என்றல்லவா சொன்னாய். அதனால் அந்த பெண் புரிந்துகொண்டு உன்னை திட்டியிருக்கிறார்.’ என்று.

இந்த தமிங்கல (தமிழ் + ஆங்கிலம்) மொழி பயன்பாட்டை நிறுத்தாவிடில் வருங்கால தலைமுறையினருக்கு இந்த கலப்பின(!) தமிழ் தான் தமிழ் என்றாகும் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு என்பதை உணர்ந்த தமிழ் ஆர்வலர்கள் இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதுண்டு.

அவர்கள் சிலரின் முயற்சியால், 70 களில் கோவையில் வணிக நிறுவனங்கள் எல்லாம் நல்ல தமிழில் பெயர் பலகையை வைக்க தொடங்கினார்கள். ஆங்கிலத்தில் உள்ள சொற்றொடரை அப்படியே தமிழில் எழுத்துப் பெயர்ப்பு (Transliteration) செய்யாமல் அதற்கு இணையான தமிழ் சொற்களை பயன்படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக ‘பேக்கரி’ என எழுதாமல் ‘அடுமனை’ என்றும் ‘லிட்’ (லிமிட்டட்)
என்பதை ‘வ.து’ (வரையறுக்கப்பட்டது ) என்றும், ‘ஸ்டேஷனரி மார்ட்’ என்பதை ‘எழுதுபொருள் அங்காடி’ என்றும் எழுத ஆரம்பித்தார்கள். ஆனால் ஏனோ இந்த முறை தமிழகம் முழுதும் கடைபிடிக்கப்படவில்லை என்பது வருத்தப்படக்கூடிய ஒன்று.

சென்னையில் கூட மாநகராட்சியின் ஆணைக்கிணங்க ஆங்கிலத்தோடு தமிழிலும் பெயர் பலகை வைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும். அதுவும் மறைந்துவிட்டது.

தமிழில் எழுதவேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் மொழி பெயர்த்து எழுதவேண்டியதில்லை. தமிழில் இல்லாத சொற்களுக்கு ஈடான தமிழ் சொற்களை புதிதாய் தோற்றுவித்து உபயோகிக்கலாம். எடுத்துக்காட்டாக Computer என்பதை கணினி என்றும் Internet என்பதை இணையம் என்றும் Blog என்பதை வலைப்பதிவு என்றும் சொல்வதைப்போல. முடியாத இடங்களில் ஆங்கிலத்திலோ அல்லது மற்ற மொழிகளில் உள்ளதை அப்படியே பயன்படுத்தலாம்.

இதை அரசின் தமிழ் வளர்ச்சி துறையோ அல்லது குறிப்பிட்ட குழுவோ செய்யும் என எண்ணாது பதிவர்களாகிய நாம், திரு சென்னை பித்தன் அவர்கள் சொன்னதுபோல் வலைப்பூவில் பிறமொழி கலப்பின்றி எழுத முற்படுவோம்.
அப்படி உடனே எழுத முடியாதவர்களுக்கு எதிர்மறை வாக்கு அளிக்காமல் அவர்களது பதிவுக்கு தரும் பின்னூட்டத்தில் மொழிக்கலப்பைச் சுட்டிக்காட்டலாம்.

சரியான தமிழ் சொற்கள் தெரியாவிடில் இணையத்தில் உள்ள எத்தனையோ ஆங்கில தமிழ் அகராதிகளை பார்த்து எழுதலாம். சிறிது முயற்சி செய்தால் திரு சென்னை பித்தன் அவர்களின் எண்ணம் ஈடேறும்.

என்னைப் பொறுத்தவரை முடிந்த அளவு பிற மொழிக் கலப்பின்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன்.


அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

என்ற குறள் சொல்லும் வழியில் பதிவுலக நண்பர்கள் அனைவரும் பிற மொழிக் கலப்பின்றி எழுத இன்றே முயற்சிப்போம்.


33 கருத்துகள்:

 1. சென்னை பித்தன் ஐயா அவர்கள் எழுதின அன்றே யோசித்தேன்... தொழிற்நுட்ப பதிவுகளை அவ்வாறு எழுத முடியுமா...? என்று நினைத்த போது, சிறிது முடிவை மாற்றிக் கொண்டேன்...

  நண்பர்களின் தளத்திற்கு உள்ளே செல்லும் போது, தமிழ் அல்லது ஆங்கிலம் என பலரும் வைத்துள்ளார்கள்... அதிலும் 75 சதவீதம் ஆங்கிலமே... அதனால் முதல் தொழிற்நுட்ப பதிவு முதல் இன்று வரை சிலவற்றை ஆங்கிலத்திலேயே சொல்லவேண்டி உள்ளது... மீசுட்டு மொழி (HTML) என்றால் யாருக்கு புரியப் போகிறது...? நீங்கள் சொல்வது போல் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 2. கருத்திட வரும் நண்பர்களுக்கு உதவும் என்கிற நோக்கில் கீழ் உள்ளதை தெரிவிக்கின்றேன்...

  தளத்தில் உள்ள பலவற்றையும் தமிழில் வர வைக்க : இந்தப் பதிவில் --->(http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html) மூன்றாவது தலைப்பில் உள்ளது போல் செய்தால் போதும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தொழில் நுட்பத்தை விளக்கும்போது ஆங்கில சொல்லை பயன்படுத்தலாம். ஒருவேளை அதற்கான இணையான சொல் இருக்குமானால் அதை அடைப்புக்குறிக்குள் தெரிவிக்கலாம். அப்போதுதான் அந்த சொல் பயன்பாட்டிற்கு வரும். ஆனால் மற்ற நேரங்களில் கூடியவரை தமிழ் சொற்களை பயன்படுத்தவேண்டும் என்பதே எனது கருத்து.
   தாங்கள் கொடுத்திருக்கும் இணைப்புக்கும் நன்றி!

   நீக்கு
 3. என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனாலும் ஏதாவது செய்தே ஆகவேண்டும். இல்லையெனில் தமிழ் அழிவதற்கு தமிழனே காரணமாவான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. முயன்றால் முடியாததொன்றுமில்லை. இல்லையெனில் வரலாறு நம்மை மன்னிக்காது.

   நீக்கு
 4. தூய சிந்தனைக்கு
  துணை நிற்போம்!
  தமிழ் மொழியின் தரம் சிறக்க கரம் கொடுப்போம்!
  முயற்சி செய்கிறேன் அய்யா!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  த ம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை.வேலு அவர்களே!

   நீக்கு
 5. எழுதும்போது இயல்பாக எது வருகிறதோ அதையே எழுதி வருகிறேன். சில இடங்களில் ஆங்கிலம் உபயோகிப்பதுண்டு.தமிழில் சரியான இணைச்சொல் கிடைக்காவிட்டாலோ நினைவில் வராவிட்டாலோ பெரிதாகதமிழில் எழுத முயற்சி செய்து பார்த்ததில்லை, அண்மையில் ரமணி அவர்களின் பதிவில் சில அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து எழுதி இருந்ததைப் படித்த நினைவு,என்னைப் பொறுத்தவரை எண்ணங்களைக் கடத்த எழுதுகிறோம் கூடியவரை தமிழில் மொழிக்கலப்பில்லது எழுதுகிறோம் என்றே நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! எழுதும்போது இயல்பாக எழுதலாம். ஆனால் சரியான தமிழ் சொற்கள் இருக்கும்போது வீணே எதற்கு வேறு மொழியை பயன்படுத்தவேண்டும்? நீங்கள் சொன்னதுபோல் இப்போது கூடியவரை பிற மொழிக் கலப்பில்லாமல் எழுதத் தொடங்குவோம். பின்னர் முழுக்க முழுக்க தமிழில் எழுதுவோம்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 7. பழையன கழிதலும் புதியவை புகுதலும் வழுவல. கால வகையினானே. கோவையில் பெயர் மாற்றம் என்ற மறைவில் "கோட்டை வடிநீர் குளம்பியகம்" போன்ற சில தவறான மொழி பெயர்ப்புகளும் நடந்தன. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் மலையாளம் கலந்த தமிழ் உபயோகிப்பதையும் கோவை நாயுடுக்கள் மற்றும் வெல்லூர் சேலம் பகுதிகளில் உள்ளவர்கள் தெலுங்கு கலந்த தமிழ் உபயோகிப்பதையும் காணலாம்.

  தமிழ்ப் பதிவர்கள் முடிந்த வரை மொழிக்கலப்பு இல்லாமல் தமிழில் பதிவிட வேண்டும் என்று பதிவர் கூட்டத்தில் முறையிடலாம். மாற்றுக் குறைத்தல் (negative mark) போன்றவை அவசியமில்லை.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! வட்டார வழக்கில் அருகில் உள்ள மாநிலங்களின் மொழியின் தாக்கத்தால் அவைகளையும் கலந்து பேசுவதுண்டு.அதை தவிர்க்க இயலாது. ஆனால் எழுதும்போது தமிழ் சொற்கள் இருக்கும்போது வேறு மொழி சொற்களை கலக்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து. ஏனெனில் எழுத்தில் வருபவை ஆவணங்களாக மாறும்போது வருங்காலத் தலைமுறையினருக்கு இவைதான் சரியான தமிழ் என்றாகிவிட வாய்ப்புண்டு. அதுபோல பெயர்ப் பலகையிலும் பிறமொழிக்கலப்பில் எழுதினால் மொழி சிதைய/மறைய வாய்ப்புண்டு.

   இது நம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல அண்டை மாநிலங்களில் கூட இது போன்று செய்கிறார்கள். நான் கேரளாவில் 7 ஆண்டுகள் பணி புரிந்தபோது மலையாள மொழியைக் கற்றுக்கொண்டேன். அங்கேயும் பெயர்ப் பலகையில் ஆங்கில சொற்களை அப்படியே எழுதுவதை பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன். எடுத்துக்காட்டாக இருபாலர்களும் படிக்கும் Mixed School என்பதை அப்படியே மலையாளத்தில் മിക്സെദ് സ്കൂൾ என்றும் Sweet Stall என்பதை സ്വീറ്റ് സ്ടാൽ என்றும் எழுதுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால் எதிர்காலத்தில் மக்கள் ஆங்கில சொற்களுக்கிடையே ஒரு சில மலையாள சொற்களை இணைப்பாகப் பயன்படுத்தி அதுவே ஒரு புது மொழியாகி தாய்மொழியான மலையாளம் மறைய வாய்ப்புண்டு என்பதை அங்குள்ள நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறேன்.

   ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் இல்லையென்றால் ஆங்கில சொல்லை பயன்படுத்தலாம். ஆனால் ஒரு சில தமிழ் சொற்கள் சரியாக தோற்றுவிக்கப்படவில்லை என்பதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கிவிடக்கூடாது. எனவே நாம் இனிமேலாவது முடிந்தவரையில் பிறமொழி கலக்காமல் பதிவிட முயற்சிப்போம்.

   நீக்கு
 8. நல்ல சிந்தனை. பல சமயங்களில் நாம் எழுத நினைக்கும் வார்த்தைக்கு தமிழில் வார்த்தை கிடைக்காது தடுமாறுவதுண்டு. நானும் சில ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் வார்த்தை தேட, இணையத்தில் ஆங்கிலம்-தமிழ் அகராதி பயன்படுத்துவதும் உண்டு.

  முடிந்த வரை தமிழில் எழுதுவோம்.

  த.ம. +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத நம்மால் முடியும். அதை இன்றே செய்வோம்.

   நீக்கு
 9. இது போன்ற எண்ணங்களும் செயற்பாடுகளும் நம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் தோன்றினால், நம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர் நமக்குத் தந்துவிட்டுப்போன விலைமதிப்பற்ற சொத்து இருக்கும்.

  ஒவ்வொருவரும் அதற்கான முயற்சியை நம்மில் இருந்து தொடங்குவோம்.

  வாழ்த்துகளும் வணக்கங்களும் ஐயா.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நீங்கள் கூறியதுபோல் முயற்சியை நம்மிடமிருந்தே தொடங்குவோம்.

   நீக்கு
 10. வணக்கம்
  ஐயா
  தெளிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் ...த.ம5

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

   நீக்கு
 11. முடிந்தவரை நான் தமிழில் எழுதிவருகிறேன். தொழில்நுட்ப, அறிவியல் சார்ந்த சொற்களைப் புரிந்துகொள்ளும் வகையில் பயன்படுத்துகிறேன். சூழலை மனதில் கொள்வதும் நன்று. ஒரு சிறு நிகழ்வினைப் பகிரவிரும்புகிறேன். பதிப்பகத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நூல் வாங்க வந்த ஒருவருக்கு முடிந்த அளவு நூல் கழிவு தரும்படி கூறினார். (மேலாளரோ ஒரு தமிழ்ப்புலவர். பெரும்பாலும் தமிழையே பயன்படுத்துவார்.) நான் உடனே அச்சுப்பொறி உதவியாளரிடம் சென்று நூல் கழிவு பெற்றுவந்தேன். என்னப்பா இவ்வாறு செய்துவிட்டாய். நான் சொன்னது நூல் கழிவு அல்லவா? என்றார். அவர் அதனை முன்னரே தெளிவாகக் கூறியிருக்கலாம். முற்றிலும் தமிழைப் பயன்படுத்துவதாக எண்ணி அவர் குழம்பியதோடு எங்களையும் குழப்பிவிட்டார். அவர் சொல்ல நினைத்தது Give maximum discount. நாங்கள் புரிந்துகொண்டது Give him more cotton waste. இவ்வாறு பல நிலைகளை நான் எதிர்கொண்டுள்ளேன். இவரே ஒரு முறை ஸ்டார் பிரஸ் என்பதற்கு காசோலை எழுத குறிப்பு வைக்கும்போது சுடார் (ஸ் வடமொழியாம்) பிரசு என்று எழுதி அக்காசோலை திரும்பி வந்தது இன்னொரு கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு B.ஜம்புலிங்கம் அவர்களே! ஆங்கில கலப்பில்லாமல் தமிழ் பேச வேண்டும் /எழுதவேண்டும் என்ற ஆவலில் சிலர் மக்களுக்கு பழக்கமில்லா சொற்களை பயன்படுத்தி குழப்புவதுண்டு.ஒரு சொல்லை பயன்பாட்டிக்கு கொண்டுவருவதற்கு முன் அவைகளை மக்கள் முன் அறிமுகப்படுத்தவேண்டும். அப்படி செய்ததால் தான் நாம் பஸ் என்று சொன்னதை பேருந்து என சொல்ல பழகிக்கொண்டோம். ஆனால் பெயற்சொற்களை தமிழாக்கம் செய்யவேண்டியதில்லை.

   நீக்கு
 12. நம்மில் இருந்து தொடங்குவோம் ஐயா

  ///இதற்கு உடன்படுவோர் தங்கள் வலைப்பூவின் பெயருக்குக் கீழ் ”தனித் தமிழ் வலைப்பூ”என்று சேர்த்தால் அது ஒரு அடையாளமாக இருக்கும் என்றும் இந்த உரத்த சிந்தனையை செயல்படுத்த இயலுமா என்ற கேள்வியையும் அவ்வாறெனில் அதை எவ்வாறு என்பதெல்லாம் நம்முடைய யோசனைக்கு விடுவதாகவும் எழுதியிருந்தார். ///
  எனது வலையிலும் சேர்க்கிறேன் ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! நல்ல முயற்சியை தொடங்க இருப்பது அறிந்து மகிழ்ச்சி!

   நீக்கு
 13. விரிவான விளக்கமான அருமையான பகிர்வு.அனைவரும் உறுதியுடன் முயன்றால் நிச்சயம் நிறைவேறும் நம் எண்ணம்.நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நல்ல முயற்சியை தொடங்க நீங்கள் வித்திட்டீர்கள். நான் உரமிட்டிருக்கிறேன். இனி தண்ணீர் பாய்ச்சி இதை காப்பாற்றவேண்டியது நம் எல்லோருடைய கடமையாகும். நினைத்தது நடக்கும் என நம்புவோம்.

   நீக்கு
 14. இங்கு பதிவுகளைப் படிக்கும்பொழுதும், பதிவில் தமிழ் எழுதப்படும் பாங்கினைக்கொண்டு பதிவர் எத்தனை வயதுக்காரர் என்று ஓரளவுக்கு ஊகிக்க முடியும் என்று நினைக்கிறேன். பதிவரின் வயது குறையக் குறைய தமிழின் அழகும் குறைந்து காணப்படுகிறது. அதாவது தமிழின் வளர்ச்சி குறைந்து வருவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. இந்த நிலை மாறுவது கடினம். இருந்தாலும் முடிந்த அளவு முயற்சி செய்வது நல்லது என்று நானும் நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உங்கள் நம்பிக்கை வீண் போகாது .

   நீக்கு
 15. உங்கள் பதிவினைப் படிக்கும் போதெல்லாம், நானும் உங்களைப் போல ஆங்கிலம் மற்றும் பிற மொழிச் சொற்கள் கலவாது எழுத வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனாலும், சில ஆங்கில சொற்களை (குறிப்பாக டிராக்டர், ராக்கெட் போன்ற பெயற் சொற்களை) அப்படியேதான் எழுத வேண்டி உள்ளது. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.

  த.ம.9

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! டிராக்டர் என்பதை இயந்திரக் கலப்பை என்றோ அல்லது உழுவை என்றோ சொல்லலாம். ராக்கெட் என்பதை ஏவு கலன் என்றோ அல்லது ஏவு கணை என்றோ சொல்லலாம். நீங்கள் கற்றது தமிழ் ஆயிற்றே. உங்களுக்குத் தெரியாததா?

   நீக்கு
 16. நல்லதொரு யோசனை! நானும் முடிந்தவரை என் பதிவுகளில் ஆங்கிலம் கலக்கா வண்ணம் எழுத முயல்கின்றேன்! தமிழ் வலைப்பதிவுகள் சிறக்கட்டும்! நன்றி!

  பதிலளிநீக்கு

 17. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! தங்கள் பதிவுகளில் ஆங்கிலம் கலக்கா வண்ணம் எழுத இருப்பதற்கு நன்றி! கூடியவரை பிற மொழி பயன்பாட்டையும் தவிர்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 18. A lot of thought has apparently gone into this blog. You have rightly pointed out that more time is needed to inculcate this habit of writing only in Tamil avoiding words of other languages. But this would take a long time . Even illiterate people are seen using more and more English words that are common like "tiffin/time/bus/film/car/late" etc . Note that although Tamil equivalents are available by and large people tend to use only English words. Sincere attempts should be made to use only Tamil words as far as possible, the way you have been doing. I have seen that unless absolutely unavoidable you have been studiously avoiding words of other languages and using only Tamil words in your writings.More should be done to popularize usage of Tamil words.It is gratifying that some attempts are made here and there. The popular TV programme " ORU VARTHAI ORU LATCHAM' is an example. Preference to those who have studied in Tamil should be given in Job market. An attempt was made by DMK govt few years back when Mr.Karunanidhi made an announcement in KOVAI during a Tamil conference to this effect .No one knows if it has been actually implemented. The craze for English is understandable and is obvious. It is a window to the outside world. There have been comparisons with China/Russia etc. In my view one should be proficient in mother tongue and at the same time know other languages like English/Hindi etc.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி திரு வாசு அவர்களே! முயன்றால் யாரும் பிற மொழிக் கலப்பின்றி பதிவிடலாம். மற்றவர்கள் தொடங்கட்டும் பின் நாமும் தொடர்வோம் என்றில்லாமல் ஒவ்வொருவரும் தமிழில் பதிவிடத் தொடங்கினால் நினைத்தது நடக்கும். நடக்கும் என நம்புவோம்.

   நீங்கள் சொல்வதுபோல் விஜய் தொலைக்காட்சி ஒரு வார்த்தை ஒரு இலட்சம் என்ற நிகழ்ச்சி மூலம் பள்ளி மாணவர்களை தமிழ் சொற்களை பயன்படுத்த உதவுகிறது என்பது உண்மை. நிகழ்ச்சியின் தலைப்பில் கூட வார்த்தை என சொல்லாமல் சொல் என வைத்திருக்கலாம்.

   தமிழ் படித்தோருக்கு வேலை என திமுக அரசு கொண்டு வந்த திட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதற்குப் பின் வந்த அரசு, அது திமுக ஆரம்பித்த திட்டம் என்பதின் காரணமாகவே அதை ஊக்குவிக்காமல் இருந்திருக்கலாம்.

   நம் தாய்மொழியில் நன் முறையில் தேர்ச்சிபெற்ற பின் பிறமொழிகளை கற்றுக்கொள்ளலாம் என்ற தங்கள் கருத்தோடு நான் உடன்படுகின்றேன். அதனால் தான் நான் தமிழ் மற்றுமல்லாமல் ஆங்கிலம், இந்தி ,கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்டேன்.

   தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி!

   நீக்கு