வியாழன், 20 ஆகஸ்ட், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.2இந்த தொடர் பதிவில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த நிகழ்வுகளை மட்டுமே எழுத நினைத்திருந்தேன்.ஆனால் இந்த இந்தி திணிப்பு போராட்டம் எப்போது ஆரம்பமானது, யார் யார் அதில் முதலில் பங்கேற்று நடத்தினார்கள் என்ற தகவல்களை புள்ளி விவரங்களோடு சொன்னால் தான் இதனுடைய பின்னணி இன்றைய தலைமுறையினருக்கு புரியும் என்பதால் அவைகளைத் தந்துவிட்டு பின்னர் அந்த நிகழ்வுகளைத் தரலாம் என எண்ணுகிறேன்.புள்ளி விவரங்கள் சிலருக்கு படிக்க அலுப்பைத் தரலாம் . இருந்தாலும் அவை இங்கு முக்கியமானவை என்பதால் பொறுத்தருள வேண்டுகிறேன். (புள்ளி விவரங்கள் உபயம் : தஞ்சை நலங்கிள்ளி அவர்கள். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி! )

இந்தி திணிப்பு போராட்டம் சிலர் நினைப்பதுபோல் நாடு விடுதலை அடைந்த பிறகு ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கு முன்பாகவே 1938 லேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் கடைசி காலத்தில், அதாவது 1937 இல் தங்கள் அரசின் கீழ், மாநிலங்களை இந்தியர்களே ஆள அனுமதித்தனர். அவ்வாறு அமையப்பெற்ற அரசுகள் Local Provincial Government என அழைக்கப்பட்டன.

அத்தகைய மாகாணங்களில் (Province) ஒன்றான சென்னை ராஜதானி (Madras Presidency) என அழைக்கப்பட்ட நமது மாநிலத்தில், தற்போதைய ஆந்திர மாநிலம், ஒரிசா மாநிலம், கர்நாடகத்தில் உள்ள பெல்லாரி,தென் கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்கள், கேரளாவில் உள்ள மலபார் மாவட்டங்கள் (பாலக்காடு கோழிக்கோடு கண்ணூர், காசர்கோடு) ஆகியவைகள் இணைந்திருந்தன.

சென்னை ராஜதானியில் 1937 இல் நடந்த தேர்தலுக்கு பிறகு மூதறிஞர் இராஜாஜி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, திரு இராஜாஜி அவர்கள் தான் முதன் முதலில் இந்தியை பள்ளிகளில் கட்டாய பாடமாக்கினார். அப்போது தான் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது.

(பின்னர் திரு ராஜாஜி அவர்களே 1965 இல் இந்தி திணிப்பை எதிர்த்தது காலத்தின் கோலமா அல்லது காலத்தின் கட்டாயமா எனத் தெரியவில்லை.)

அரசு இந்தியை கட்டாய பாடமாக்க இருப்பதை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3 ஆம் நாள் திரு இராஜாஜி அவர்களின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய 73 பெண்கள் உட்பட 1271 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கேதான் முதன் முதல் இந்தி திணிப்பு போராட்டதிற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது!

பின்னர் 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 27 ஆம் நாள் காஞ்சீபுரத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21 ஆம் நாள் இந்தி பள்ளிகளில் கட்டாய பாடமாக்கப்பட்டது. அதை எதிர்த்து அதே ஆண்டு மே திங்கள் 28 ஆம் நாள் மாநிலம் முழுதும் உள்ள தமிழ் பற்றாளர்கள் (கவனிக்கவும். எந்த அரசியல் கட்சியினரும் அல்லர்.) ஒன்று கூடி நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களைக் கொண்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கம் ஒன்றை தொடங்கினார்கள். அதே ஆண்டு ஜூன் திங்கள் 3 ஆம் நாள் சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டை தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் தலைமை தாங்கி நடத்தினார்கள்.

இதுபோன்று 1938 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1 ஆம் நாள் திருச்சியிலிருந்து சென்னைக்கு பாத யாத்திரையும் செப்டம்பர் திங்கள் 10 ஆம் நாள் சென்னை கடற்கரையில் தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொண்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டமும் நடந்தேறியது. 1938-39 ஆம் ஆண்டுகளில் தமிழகம் முழுதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

1939 ஆம் ஆண்டில் முழுதும் பெண்கள் மட்டுமே கலந்துகொண்டு நடத்திய இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை திருமதி தருமாம்பாள் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள். அதே ஆண்டு சனவரி திங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் சிறையிலே மரணமடைந்தார்கள். இதுவே இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் துறந்தோருடைய முதல் நிகழ்வு.

(இவர்கள் நினைவாகவே எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் உள்ள அரசு கட்டிடத்திற்கு தாளமுத்து நடராசன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது)

1938 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து பிப்ரவரி திங்கள் 21 ஆம் நாள் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக, அப்போதைய சென்னை ராஜதானியின் ஆளுநர் Lord Erskine அவர்களால் இந்தியை கட்டாய பாடமாக ஆக்கப்பட்ட ஆணை திரும்பப் பெறப்பட்டது. அதனால் இந்தி திணிப்பு எதிர்ப்பும் தணிந்தது.

இரண்டு ஆண்டுகள் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் ஏதும் இல்லாததால் 1942 ஆம் ஆண்டு சென்னை ராஜதானி அரசு திரும்பவும் பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்கியது. உடனே இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமும் திரும்பவும் தொடங்கப்பட்டதும் அரசு தனது முடிவில் பின் வாங்கி அந்த ஆணையை திரும்பப் பெற்றது.

1946 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியில் திரு பிரகாசம் அவர்கள் தலைமையில் புதிய காங்கிரஸ் அரசு அமைந்ததும் திரும்பவும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களை இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த பொறுப்பாளராக நியமித்தார். உடனே அரசு முன்போலவே தனது முடிவில் பின் வாங்கி அந்த ஆணையை திரும்பப் பெற்றது.

இப்படியாக அரசுக்கும், இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ‘கண்ணா மூச்சி’ ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது தான் இந்தியா விடுதலை அடைந்தது.


தொடரும்


30 கருத்துகள்:

 1. தேவையான பதிவு. புரிந்துகொள்வதற்காக அடைப்புக்குறிக்குள் கருத்துக்கள் தரப்பட்டுள்ள விதம் பதிவினை எளிதில் தொடர உதவியாக உள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 2. engalai pondra entha thalaimuraigal ellam tamil samugathin varalatri therenthu kolla uthavum migga migga sirapapna pathivu. Mikka Nandri.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பிரதீப் குமார் அவர்களே! இன்றைய தலைமுறையினருக்கு நடந்தது என்ன என்று தெரிவிக்கவே சில விவரங்களை தந்தேன். அது உங்களுக்கெல்லாம உதவியாக இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 3. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.2
  பதிவு இனிக்கிறது.
  குறிப்பாக ஆதியை அறியத் தரும் வரலாறு கண்டு பிரமித்து போய் நிற்கின்றேன் அய்யா!
  ஒவ்வொருவரும் கட்டாயாம் அறிய வேண்டிய வரலாற்றுச் செய்திகள் தாங்கிய பதிவு! தந்தமைக்கு நன்றி அய்யா! தொடர்கின்றேன்.
  த ம 2
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! உங்களின் பாராட்டு என்னை மென்மேலும் எழுதத்தூண்டும்.

   நீக்கு
 4. ஒரு செய்தியைச் சொல்லப் புகுந்தால்,அதை முழுவதுமாகப் பார்த்து அக்கு வேறு ஆணி வேறாக அலசி விடுவதே உங்கள் சிறப்பு.பல புதிய தகவல்;கள் தெரிந்து கொண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தங்களின் தொடர் பாராட்டுக்கள் எனக்கு ஒரு தெம்பூட்டி (Tonic) போல.

   நீக்கு
 5. இந்தித் திணிப்பின் வரலாறு பள்ளி நூல்களில் சரியானபடி கற்பிப்பது அவசியம் என்று நம்புகிறேன். தாங்கள் கொடுத்துள்ள தகவல்களை முதன் முறையாக அறிகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். ஆனால் அரசு இதை செய்யுமா என்பதில் ஐயமே.

   நீக்கு
 6. சிறையில் உயிர் நீத்தவர்கள் கைது செய்யப்பட்டது வேண்டுமானால் இந்து எதிர்ப்புக்காக இருக்கலாம். ஆனால் சிறையில் மரண மடைந்தது காரணம் சரியாகப் பதிவாக்கப் படவில்லையோ. ? சில வரலாற்று நிகழ்ச்சிகள் தெளிவாக இருக்கவேண்டும் என்பதே இக்கருத்துக்குக் காரணம்.

  பதிலளிநீக்கு

 7. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! இந்தி திணிப்பு எதிர்ப்பு காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இருவரும் இயற்கை மரணம் எய்தியதாக சிறை அலுவலர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் நண்பரே பிரமிப்பான தகவல்கள் தங்களின் தேடுதலுக்கு எமது ராயல் சல்யூட்
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!.

   நீக்கு
 9. வரலாறு சம்பந்தப்பட்ட கட்டுரைகளுக்கு புள்ளி விவரங்களை சிலசமயம் சுருக்கமாகவும், சிலசமயம் விரிவாகவும் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது.

  // இந்த இந்தி திணிப்பு போராட்டம் எப்போது ஆரம்பமானது, யார் யார் அதில் முதலில் பங்கேற்று நடத்தினார்கள் என்ற தகவல்களை புள்ளி விவரங்களோடு சொன்னால் தான் இதனுடைய பின்னணி இன்றைய தலைமுறையினருக்கு புரியும் என்பதால் அவைகளைத் தந்துவிட்டு பின்னர் அந்த நிகழ்வுகளைத் தரலாம் என எண்ணுகிறேன். //

  உங்கள் யோசனைப்படியே எழுதுங்கள். நல்ல யோசனை . புதிய தலைமுறையினருக்கு தெரியவேண்டும்.

  தினத்தந்தி வெளியிட்ட “வரலாற்றுச் சுவடுகள்’ என்ற நூலிலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய தகவல்கள் விரிவாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!. தினத்தந்தியில் வந்த இந்தி திணிப்பு போராட்டம் பற்றிய கட்டுரையை நான் இது வரை படிக்கவில்லை. நான் எழுத இருப்பது நான் கண்ட/கலந்துகொண்ட போராட்டம் பற்றித்தான். அதை எழுது முன்பு இந்த தகவலை தரலாம் என்பதால் இதை எழுதினேன்.

   நீக்கு
 10. வரலாறு எப்போதும் போர் அடிப்பதில்லை! பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! உண்மைதான். வரலாற்றை படிப்போருக்கு அலுப்பு தெரிவதில்லை.

   நீக்கு
 11. Excellent historical facts that throw light on the origin of Anti HINDI ( imposition) agitation. Please furnish more such facts unknown to many including me.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே! என்னால் முடிந்த அளவு உண்மையான தகவல்களை தர முயற்சிக்கிறேன்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 13. [[[பின்னர் திரு ராஜாஜி அவர்களே 1965 இல் இந்தி திணிப்பை எதிர்த்தது காலத்தின் கோலமா அல்லது காலத்தின் கட்டாயமா எனத் தெரியவில்லை.]]]

  ஆசை! ஆசை! பேராசை! திமுக ஜெயிக்கும் என்று அந்த குதிரை மேலே சவாரி செய்ய ஆசைப்பட்ட ராஜாஜி.

  இந்தி எதிர்ப்பினால் மட்டும் திமுக ஆட்சிக்கு வரவில்லை--புளுத்துப்போன அரிசி; மாணவர்கள் இறப்பு; முக்கியம்மாக பக்தவத்சலம்.

  ராஜாஜி முதல் அமைச்சர் ஆகலாம் என்ற கனவு (வெறும் மூன்று விழுக்காடு பிராமணர்கள் ஓட்டை வைத்துக்கொண்டு)--ஆனால், அண்ணா ராஜாஜிக்கு ஜெயித்தவுடன் பீம புஷ்டி அல்வா கொடுத்தார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நம்பள்கி அவர்களே! தி.மு.க 1967 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு நீங்கள் சொன்னது போல் இந்தி திணிப்பும் ஒரு காரணம். அது பற்றி தொடரின் இறுதியில் எழுதுவேன். இராஜாஜி அவர்கள் கடைசியில் காங்கிரஸின் மேல் கொண்ட கோபம் காரணமாகவும் இந்தி திணிப்பை எதிர்த்திருக்கலாம். எதற்காக அவர் அந்த நிலைப்பாட்டை எடுத்தார் என்பது இன்றுவரை பல யூகங்களுக்கு இடம் கொடுக்கிறது என்பது உண்மை.

   நீக்கு
 14. ஓரளவு வரலாறு தெரிந்து கொண்ட எனக்கு இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி விரிவாக தெரியவில்லை. தங்களின் தொடர் மூலம். ஆரம்பக்கட்ட தகவல்களை தெரிந்துக்கொண்டேன். அவசியமான தொடர்!
  தாளமுத்து நடராசன் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததாகவும், அதனால்தான் அவர் பெயர் வைக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். அது உண்மையில்லையோ!
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.P.செந்தில்குமார் அவர்களே! திரு நடராஜன் அவர்கள் 1938 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டதாகவும், அதே திங்கள் 30 ஆம் நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 1939 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 15 ஆம் நாள் மரணமடைந்ததாகவும், திரு தாளமுத்து அவர்கள் 1939 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 13 ஆம் நாள் கைது செய்யப்பட்டு மார்ச் திங்கள் 6 ஆம் நாள் நோய்வாய்ப்பட்டு அதே திங்கள் 11 ஆம் நாள் சீதபேதி காரணமாக மரணமடைந்ததாகவும் சொல்லப்பட்டது. அவர்கள் நினைவாகத்தான் எழும்பூரில் உள்ள அரசு கட்டிடத்திற்கு தாளமுத்து நடராஜன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

   நீக்கு
 15. 67ல் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என் வயதினருக்கு தெரியும் .அதற்கு முன் இவ்வளவு நடந்து இருக்கிறதா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி K.A. அவர்களே! நான் சுருக்கமாகத்தான் தந்துள்ளேன். அப்போது நடந்த நிகழ்வுகளை ஒரு சில பதிவுகளுக்குள் அடக்கிவிடமுடியாது என்பதுதான் உண்மை.

   நீக்கு
 16. 1938-ல் ஹிந்தி எதிர்ப்பு... தெரிந்திராத தகவல்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு