புதன், 14 அக்டோபர், 2015

சென்னை பித்தனின் ‘சாக்லேட் பெண்கள்’ கதைக்கான முடிவு.


அடையார் அஜீத் என்று வலையுலகில் அறியப்பட்டவரும், சமீபத்தில் ‘தமிழ் இந்து’ நாளிதழால் ‘பதிவர்களில் கபாலி’ என்று பட்டம் சூட்டப்பட்டவரும், பிரபல வலைப்பதிவருமான சென்னை பித்தன் அவர்கள் அவரது ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ என்ற வலைப்பதிவில் ஒரு சிறுகதை தொடரை எழுதியிருந்தார்.



இரண்டு பதிவுகளில் சுவாரஸ்யத்தைக் கூட்டி ‘தொடரும்’ எனப் போட்டு மூன்றாவது பதிவில் கதையை முடிக்காமல் இதற்குப் பல முடிவுகள் உள்ளன.எனவே ‘’நீங்களே முடியுங்களேன்!’ என்று சொல்லி நம்மைப் போன்ற வாசகர்களை முடிவை எழுத சொல்லிவிட்டார். பிறகு அவரும் தனது முடிவை எழுதுவதாக தெரிவித்திருக்கிறார்.

எனவே நானும் அந்த முயற்சியில் ஈடுபட்டு எனது முடிவை தந்திருக்கிறேன். அதைப் படிக்குமுன் கீழே தந்துள்ள இணைப்புகள் மூலம் திரு சென்னை பித்தன் அவர்களின் தொடர் பதிவுகளை படித்துவிட்டு எனது முடிவை படிக்கவும்.

1. சாக்லேட் பெண்கள் !
2. சாக்லெட் பெண்கள்-2
3. சாக்லெட் பெண்கள்.......என்னதான் முடிவு?!


இதோ எனது முடிவு.

சாக்லெட் டப்பா கிடைத்ததும் மாலினிக்கு நன்றி சொல்லிவிட்டு அதை குழந்தை மைத்ரியிடம் கொடுத்து அனுப்பினாள் சுமா. மைத்ரியின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்த்ததும் நல்ல வேளை தன் கணவன் வாங்கி வர மறந்தாலும் தன்னாலாவது கடைசி நேரத்தில் மைத்ரி கேட்ட சாக்லெட் வாங்கித் தரமுடிந்ததே என்று சுமாவுக்கும் அளவில்லா மகிழ்ச்சி.

மைத்ரியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு சுமா வேலையில் மூழ்கி சுமார் அரை மணி கடந்திருக்கும். திடீரென தொலைபேசி மணி ஒலித்தது. தொலை பேசியை எடுத்து யார் என கேட்பதற்குள் ‘இது மைத்ரி வீடுதானே?’ என அதிகார தோரணையில் கேட்டார் ஒருவர்.

‘ஆமாம் . நீங்கள் யார்?’ எனக் கேட்டதும் ‘நான் காவல் துறை ஆய்வாளர். பேசுகிறேன். குழந்தை மைத்ரி உங்கள் பெண் தானே?’ என்று கேட்டதும், சுமா பதறி ‘ஐய்யய்யோ! என் குழந்தைக்கு என்ன ஆயிற்று ? என்று ஓங்கிய குரலில் அழுதுகொண்டே கேட்டதும். அந்த முனையில் பேசிய ஆய்வாளர்,’பயப்படாதீர்கள். உங்கள் குழந்தைக்கு ஒன்றும். ஆகவில்லை. தைரியமாய் இருங்கள். ஆனால் உங்களிடம் விசாரிக்கவேண்டும். உடனே பள்ளிக்கு வருகிறீர்களா?’ என்றார்.

சுமாவுக்கு திடீரென நெஞ்சை அடைப்பதுபோல் இருந்தது. தன்னிடம் ஏதோ மறைக்கிறார்கள் என எண்ணிக்கொண்டு. ‘நீங்கள் வரவேண்டாம். இதோ நானே வருகிறேன்.’எனக் கூறிவிட்டு.வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு ஒரு தானி பிடித்து பள்ளிக்கு சென்றாள்.

பள்ளியில் தலைமை ஆசிரியை அறையில் காவல் துறைஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருக்க குழந்தை மைத்ரி அழுதுகொண்டு நிற்தைப் பார்த்ததும் தான் சுமாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது.

அம்மாவை பார்த்ததும் அழுது கொண்டே ஓடிவந்த மைத்ரியை அணைத்துக்கொண்டு காவல்துறை ஆய்வாளரிடம் ‘என்ன ஆயிற்று சார்?’ என்று கேட்கும்போது கவனித்தாள் அவர் கையில் காலையில் தான் கொடுத்து அனுப்பிய சாக்லெட் டப்பாவை.

அவர் அந்த டப்பாவைக் காண்பித்து இது நீங்கள் உங்கள் மகளிடம் கொடுத்து அனுப்பியது தானே?’என்றதும், ஆமாம். நான் தான் கொடுத்து அனுப்பினேன். அதற்கென்ன? என்றாள் சுமா.

‘இந்த சாக்லெட் டப்பாவை எங்கு வாங்கினீர்கள்? என்று அவர் கேட்டபோது ஒன்றும் புரியவில்லை. சுமாவிற்கு.‘சார். இன்று எனது மகளுக்கு பிறந்த நாள். சக வகுப்பு குழந்தைகளுக்குத் தர நான் தான் கொடுத்து அனுப்பினேன். அதிலென்ன தவறு?’ என்று கோபமாக கேட்டாள்.

அதற்கு அவர் ‘சாக்லெட்டாக இருந்தால் நீங்கள் இங்கு வந்திருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால் இது சாக்லெட் இல்லை.அதனால் தான் விசாரிக்க உங்களைக் கூப்பிட்டோம். ம். இப்போது சொல்லுங்கள் இதை எங்கு வாங்கினீர்கள்? அல்லது நீங்களே தயாரிக்கிறீர்களா?’ என்றார்.

அப்போதுதான் சுமாவுக்கு ஏதோ தப்பு நடந்திருக்கிறது என புரிந்து கொண்டு, ‘சார் இதை நான் எங்கும் வாங்கவில்லை எனது சிநேகிதி ஒருவர் பரிசாக கொடுத்தார்.’ என்றாள். உடனே ‘அவரது வீட்டைக் காட்ட நீங்களும் வாருங்கள்.’என்றதும் என்ன செய்வது எனத் தெரியாமல் ‘சார்.அவர் எனக்கு முக நூல் மூலம் அறிமுகம் ஆன சிநேகிதி . ஆனால் அவரது வீட்டிற்கு இதுவரை சென்றதில்லை.’ என்றாள். ‘தொலைபேசி எண். இருக்கிறதல்லவா? அவரைக் கூப்பிட்டு முகவரையை கேளுங்கள் அங்கு செல்வோம்.’ என்றார் ஆய்வாளர்.

உடனே மாலினியை தொலைபேசியில் கூப்பிட்டு அவளது முகவரியைக் கேட்டதும் அவள் சொல்லிவிட்டு ‘எதற்கு” என ஆரம்பித்ததும் ஆய்வாளர் காட்டிய சைகையால் பதில் சொல்லாமல் கைப்பேசி தொடர்பை துண்டித்துவிட்டு கிளம்பினாள்.

காவல் துறை வண்டியில் செல்லும்போது, என்ன நடந்திருக்கும்? ஏன் இந்த ஆய்வாளர் விவரம் ஒன்றும் சொல்லாமல் அழைத்து செல்கிறார்? என சுமா குழம்பிக்கொண்டு இருக்கும்போது மாலினியின் வீடு வந்துவிட்டது.இறங்கி சென்று அழைப்பு மணியை அடித்ததும் கதவைத் திறந்த மாலினிக்கு சுமாவோடு காவல் துறையினரை பார்த்ததும் ஒரே அதிர்ச்சி.

உள்ளே நுழைந்த ஆய்வாளர் மாலினியிடம், நீங்கள் தானே இந்த சாக்லெட் டப்பாவை இவரது மக்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்தீர்கள்?’என்றதும், அவள் ‘ஆமாம். நான்தான் கொடுத்தேன்.’என்றாள்.

‘இதை எங்கு வாங்கினீர்கள்? ‘ என்ற ஆய்வாளரிடம் , ‘சார். இதை நான் கடையில் வாங்கவில்லை. எனது கணவர் வைத்திருந்தார். அதைத்தான் கொடுத்தேன். என்றாள்.

'உங்கள் கணவர் என்ன செய்கிறார்?' என்றதற்கு, ‘அவர் ஒரு சிறிய ‘பல் பொருள் அங்காடி’ நடத்தி வருகிறார்.இப்போது கூட கடையில் தான் இருக்கிறார்.’ என்று சொல்லிவிட்டு, ‘ஏன் கேட்கிறீர்கள்? ‘என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் ‘அவரது அறையை நான் பார்க்கவேண்டுமே’ என்றதும் ஏதோ தப்பு நடந்திருக்கிறதுஎன்பதை புரிந்து கொண்டு அறையைக் காட்டினாள் மாலினி.

உள்ளே காவலர்களுடன் நுழைந்த ஆய்வாளர் பூட்டப்பட்டிருந்த பீரோ சாவியில்லாததால் மேசையை திறந்து பார்த்தார்.அதில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்த அவர். ‘நான் நினைத்தது சரிதான்.’ என்றார். ‘என்ன என்று?’ கேட்டதற்கு ‘அம்மா உங்கள் கணவர் நீங்கள் நினைப்பதுபோல் கடையில் பொருட்களை விற்கவில்லை. தடை செய்யப்பட்ட கஞ்சா விற்றுக்கொண்டு இருக்கிறார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா விற்பது தெரியக்கூடாது என்பதால் அதை சாக்லெட் போல் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இன்று நீங்கள் பரிசாக கொடுத்த ‘சாக்லெட்’டை நல்ல வேளையாக குழந்தைகள் சாப்பிடவில்லை. சுமா அவர்களின் குழந்தை முதலில் வகுப்பு ஆசிரியருக்கு ‘சாக்லெட்’ கொடுத்திருக்கிறது. அதை வாங்கி வாயில் போடப்போன அவர் ,அதில் வித்தியாசமான வாசனை வருவதைக்கண்டு சந்தேகப்பட்டு மற்ற பிள்ளைகளை சாப்பிடவிடாமல் தடுத்துவிட்டு எங்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தார்.

நாங்கள் பள்ளிக்கு சென்று பார்த்ததில், இது கஞ்சா என்று தெரிந்தது. உடனே இது எங்கிருந்து வந்தது என விசாரித்தபோது உங்கள் வீட்டில் என தெரிந்ததால் இங்கு வந்தோம். ‘வாருங்கள். உங்கள் கடைக்கு போவோம். உங்கள் கணவரை நாங்கள் விசாரிக்கவேண்டும் . எனக் கூறிவிட்டு, சுமாவை பார்த்து, ‘அம்மா . நீங்கள் காவல் நிலையம் வந்து ஒரு வாக்குமூலம் கொடுத்துவிட்டு போங்கள் என சொல்லிவிட்டு மாலினியை அழைத்துக்கொண்டு அவளது கணவரை மாமியார் வீட்டிற்கு அழைத்து செல்ல கிளம்பினார்.

சுமாவும் தான் வேண்டிய தெய்வங்களுக்கு திரும்பவும் நன்றி சொல்லி காவல் நிலையம் நோக்கி சென்றாள்.



13 கருத்துகள்:

  1. பதட்டமாக சென்றது கதை ரசித்தேன் நண்பரே... இப்படியும் முடிக்கலாம் 80 புரிகிறது

    நண்பரே ''தானி'' என்றால் .... ரிக்ஷாவா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கதையின் முடிவை இரசித்தமைக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! ‘தானி’ என்பது Autorickshaw வைக் குறிக்கும்.

      நீக்கு
    2. The ending is full of suspense and interesting. Just like James Hadely Chase thriller, Tamil Rajesh Kumar thriller. Thani means call taxi?

      நீக்கு
    3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு அனானி அவர்களே!தானி என்பது ஆட்டோ.

      நீக்கு
  2. அருமை!
    என்னுடைய ஒரு முடிவோடு ஓரளவு ஒத்துப் போகிறது!
    மிக்க நன்றி
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நான் தந்த முடிவு தங்களின் முடிவோடு ஒத்து போவது மகிழ்ச்சி.

      நீக்கு
  3. நானும் ஒரு முடிவு எழுதியுள்ளேன்! இதோ வெளியிடுகிறேன்! உங்கள் முடிவு சிறப்பாக இருந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! தங்களின் பதிவையும் பார்த்து பின்னூட்டம் தந்திருக்கிறேன்.

      நீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    முடிவு வித்தியாசமாக உள்ளது தொடர் பதிவுக்கு வாழ்த்துக்கள் த.ம 4
    தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:  

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! போட்டியில் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  5. ஓரளவுக்கு யூகிக்கக் கூடிய முடிவுதான் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு