வியாழன், 22 அக்டோபர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.9


1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26 ஆம் நாளன்று, தென்னக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை முதன்மை அலுவலக மொழியாக கொண்டு வர, மய்ய அரசு முயற்சியைத் தொடங்கியவுடன் தி.மு.க முதலில் சனவரி 26 ஆம் நாளை துக்க நாளாக கொண்டாட இருப்பதாக அறிவித்து பின்னர் அதை சனவரி 25 ஆம் நாளுக்கு மாற்றிக்கொண்டது..ஆனால் சென்னை மாநில அரசோ அவர்கள் அதை செய்யவிடாமல் தடுக்க வேண்டி அறிஞர் அண்ணா மற்றும் 3000 க்கு மேற்பட்ட தி.மு.க தொண்டர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்பே கைது செய்து சிறையில் அடைத்தது.

அதே நாளில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களும் தங்களின் எதிர்ப்பைக் காண்பிக்க ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து ஊர்வலம் நடத்தினார்கள்.(அப்போது தமிழ் நாட்டில் இந்த இரண்டு பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருந்தன)

தமிழகத்தில் இருந்த அனைத்து பள்ளி மாணவர்களும் ஆங்காங்கே ஊர்வலம் நடத்தினார்கள். அந்த எதிர்ப்புக்கு ஆதரவாக அன்றைக்கு தமிழகத்தில் பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டிட்டிருந்தன.

பொது மக்கள் ஆதரவுடன் கூடிய அதுபோன்ற ஒரு பெரிய எதிர்ப்பு தமிழக வரலாற்றில் அதற்கு முன்பு இருந்ததில்லை என்பதுதான் உண்மை. அன்று சென்னையில் மட்டும் 50,000 க்கு மேற்பட்ட மாணவர்களும் பொது மக்களும் ஊர்வலம் நடத்தினார்கள். ஊர்வலத்தில் மாணவர்கள் பதாகைகள் ஏந்தி, இந்தி திணிப்பு எதிர்ப்பு போர்க்குரல் எழுப்பினாலும் அந்த ஊர்வலம் அமைதியாகவே நடைபெற்றது.

கோவையில் மாணவர்கள் தமிழகத்தில் இந்தி திணிப்பு ‘இறந்து’ போய்விட்டது என்பதற்கு அடையாளமாக ‘இந்தி அரக்கி’ என்ற ஒன்றை உருவகப்படுத்தி அதனுடைய உடல் போன்ற ஒன்றை பாடையில் வைத்து நால்வர் சுமந்து செல்ல அதன் பின்னால் மாணவர்கள் மார்பினில் அடித்துக்கொண்டு ஊர்வலம் போனார்கள். அந்த மிகப்பெரிய ஊர்வலத்தில் சென்றவர்கள் மிக சத்தமாக தங்களது எதிர்ப்புக்குரலை எழுப்பிக்கொண்டு சென்றாலும் அந்த ஊர்வலமும் அமைதியாகவே நடந்து முடிவுற்றது.

தமிழகத்தில் இருந்த அனைத்து பள்ளி மாணவர்களும் பெருமளவில் ஊர்வலத்தில் கலந்து கொண்டு முரசுகள் கொட்டிக்கொண்டும், ஊதுகொம்புகள் மூலம் முழக்கம் செய்துகொண்டும் தங்களது இந்தி திணிப்பு எதிர்ப்பை தங்களுக்குத் தெரிந்தவகையில் தெரிவித்தார்கள்.

நான் படித்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் மாணவர்களாகிய நாங்களும் இந்தி திணிப்பு எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினோம். எங்களது ஊர்வலம் காலை சுமார் 9 மணிக்கு அப்போது Eastern Hostel என அழைக்கப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதியின் முன் தொடங்கியது. சுமார் 3000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற அந்த ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தை கடந்து சிதம்பரம் நகரில் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியே சுற்றி வந்து பேருந்து நிறுத்தம் அருகே இருந்த மணிக்கூண்டு அருகே முடிவடைந்தது.

இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்ட குரல் முழங்கி நடத்தப்பட்ட எங்கள் ஊர்வலமும் அமைதியாகவே முடிவடைந்தது. கூட்ட முடிவில் மாணவர் ஒருவர் ‘நண்பர்களே! நாளை குடியரசு விழாவில் நடக்கும் NCC பிரிவை சேர்ந்த நம்மில் சிலர் பங்கேற்பது பற்றி முடிவு செய்ய பல்கலைக் கழக விளையாட்டு திடலில் கூடுவோம்.’ என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக் கழகத்தில், விடுதலை நாள் மற்றும் குடியரசு நாட்களில் கொடியேற்றும் போது நடைபெறும் படை அணிவகுப்பில் (March-past) தேசிய மாணவர் படை (National Cadet Corps)யை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பது வழக்கம். அப்போதெல்லாம் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைவரும் கட்டாயம் ‘தேசிய மாணவர் படை’யில் சேர வேண்டும்.

புகுமுக வகுப்பு மாணவர்கள் ஒரு ஆண்டும், மூன்று ஆண்டு (கலை மற்றும் அறிவியல்) படிக்கும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளும், நான்கு ஆண்டுகள் (வேளாண் அறிவியல்) படிக்கும் மாணவர்கள் மூன்று ஆண்டுகளும், ஐந்து ஆண்டுகள் (பொறியியல்) படிக்கும் மாணவர்கள் நான்கு ஆண்டுகளும் கட்டாயம் தேசிய மாணவர் படையில் சேரவேண்டும்.

அப்போது நான் வேளாண் அறிவியல் பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்ததால் நானும் தேசிய மாணவர் படையில் இருந்தேன். தேசிய மாணவர் படையில் இருந்த நாங்கள் எல்லோரும் பல்கலைக் கழக விளையாட்டு திடலில் கூடினோம்.

அங்கே பல்கலைக்கழக உணவு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுள் ஒருவரான பொதுச் செயலாளரும் வந்திருந்தார். கூடியிருந்த மாணவர்களில் ஒருவர் ‘தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்பு மன்றத்தில் தேசிய மாணவர் படையில் ஆணை சொற்கள் இந்தியில் இருப்பதால் அவற்றை ஆங்கிலத்திற்கு மாற்றும் வரை தேசிய மாணவர் படையில் மாணவர்கள் பங்கேற்கக்கூடாது என முடிவு எடுத்துள்ளார்கள். எனவே நாளை நடக்கும் அணிவகுப்பில் நாம் பங்கேற்பதா வேண்டாமா என்பதை நமது பொதுச் செயலாளர் சொல்லவேண்டும்.’ என்றார்.

அதற்கு பொதுச் செயலாளர் ‘ நான் இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, அவரவர்கள் விருப்பம்போல் முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.’ என்று சொல்லி நழுவிக்கொண்டார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்பதை அறிய காத்திருங்கள்!


தொடரும்


பி.கு. பதிவுலகில் 2009 ஆம் ஆண்டு சனவரித் திங்களில் காலடிஎடுத்து வைத்த எனக்கு இது 400 ஆவது பதிவு என அறியும்போது, ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதுவரை எனது பதிவுகளை படித்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்திய அனைத்து பதிவுல நண்பர்களுக்கும் நன்றிகள்!


இந்த நேரத்தில் இந்த வலைப்பதிவை தொடங்க கிரியா ஊக்கியாக இருந்த அருமை நண்பர் திரு A.அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்களுக்கு திரும்பவும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.25 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 2. தங்களின் வெற்றிகரமான 400வது பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. வரலாறு காணாத முறையில், மாணவர்கள் போராட்டக் களத்தில் இறங்கிய [நியாயமாகச் சொல்லப்போனால் போராட்டக் களத்தில் மாணவர்களை இறக்கிய] வரலாற்றினைக் கூறியுள்ள தங்களின் இந்தத்தொடர் பதிவு வழக்கம்போல மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து படித்து வருகிறேன். மேலும் தொடரட்டும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. வரலாறு காணாத முறையில், மாணவர்கள் போராட்டக் களத்தில் இறங்கிய [நியாயமாகச் சொல்லப்போனால் போராட்டக் களத்தில் மாணவர்களைத் தூ ண் டி வி ட் டு இறக்கிய] வரலாற்றினைக் கூறியுள்ள தங்களின் இந்தத்தொடர் பதிவு வழக்கம்போல மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து படித்து வருகிறேன். மேலும் தொடரட்டும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து ஓர் போராட்டத்தில் குதித்தால், அவர்களின் படிப்பு மட்டுமல்லாமல், நாட்டின் சகஜ நிலையும் எவ்வாறு சீரழியும் என்பதனை அன்றுதான் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருமே முற்றிலுமாக அறிய முடிந்தது என்பதும் மறுக்கவே முடியாததோர் உண்மைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! மாணவர்கள் அப்போது இந்த போராட்டத்தில் முழுமூச்சில் ஈடுபட்டதற்கு அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களுமே பொறுப்பு. அன்றைய அரசு போராட்டத்தையும் மாணவர்களின் உணர்வுகளையும் சரியாக புரிந்துகொள்ளாததால் தான் போராட்டம் வலுவடைந்து பலர் உயிர் துறக்க நேரிட்டது.

   நீக்கு
 6. 400-பதிவுகள். மனம் நிறைந்த பாராட்டுகள்..... மேலும் பல பதிவுகள் உங்கள் தளத்தில் வெளியிட எனது வாழ்த்துகள்.....

  ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு
 7. ஏன் சொன்னார்? அறியக்காத்திருக்கிறேன்
  500.600.......1000 என்று வளரட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! அவர் ஏன் அப்படி சொன்னார் என்பதை அடுத்த பதிவில் தெரிந்துவிடும். அதுவரை தயை செய்து காத்திருங்கள்.

   நீக்கு
 8. பதிவுகளின் பதியானார் பண்பாளர் அய்யா
  நதியாக நலம் சேர்த்தார் நல்லாளர் அய்யா
  நானூறு பதிவுகளை பதியம் செய்த அய்யா
  நடன சபாபதி அய்யா
  வலைப் பூங்கா நாயகரே வாழியவே!
  நல்வாழ்த்துகள்
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்திற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

   நீக்கு
 9. வணக்கம்
  ஐயா

  பல ஆயிரம் பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள் த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி கவிஞர் திரு ரூபன் அவர்களே!

   நீக்கு
 10. நினைத்துப் பார்க்கிறேன் ஒரு மெகா சீரியல்? வாழ்த்துக்கள். தொட ர்கிறேன்.

  ஜெயகுமார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜெயகுமார் அவர்களே! நான் நினைத்து பார்ப்பதை எழுதும்போது அது நிச்சயம் ஒரு பெரிய தொடராகத்தான் இருக்கமுடியும். இந்த தொடரில் கூட முதலில் நான் படித்தபோது நடந்த நிகழ்வைத்தான் எழுத நினைத்திருந்தேன். அது நடைபெற்றதற்கான காரணத்தை எழுதாவிட்டால் இக்கால இளைஞர்களுக்கு அந்த நிகழ்வின் காரணம் புரியாது என்பதால் பழைய வரலாற்று நிகழ்வுகளை எழுதவேண்டியதாயிற்று.இந்த தொடர் பதிவை தொலைக்காட்சி தொடர்போல வேண்டும் என்றே நீட்டவில்லை என்பதே உண்மை.

   நீக்கு
 11. வாய்ப்பிருப்பின் இத்தொடர் பதிவை நூலாகக் கொணர வேண்டுகிறேன். 400 பதிவுகள் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டிற்கும்,ஆலோசனைக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 12. இந்தி திணிப்பு எதிர்ப்பா இந்தி எதிர்ப்பா என்று அறியாமலேயே போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டப்பட்டதாகத் தெரிகிறது 400க்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! இந்தி மொழி கட்டாயமாக திணிக்கப்படுகிறது என அறிந்தே என்னைப் போன்றோர் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டோமேயன்றி இந்தி மொழிமேல் உள்ள வெறுப்பால் அல்ல என்பதை உரத்து சொல்வேன்.

   முதலில் இந்தி திணிப்பு எதிர்ப்பாக இருந்தது, நடுவண் அரசின் பிடிவாத போக்கும், மக்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் வீம்பாக பொதுமக்கள் வரிப்பணத்தில் இந்தியை திணிக்க முயற்சித்ததும்தான் இந்தி எதிர்ப்பாக மாறிவிட்டது.அவ்வளவே.

   நீக்கு
 13. இந்தி திணிப்பு எதிர்ப்புக் களத்தில் நீங்கள் படித்த அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் ஆற்றிய முக்கிய பங்கினைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதியமைக்கு நன்றி. இது தங்களது 400 ஆவது பதிவு எனும்போது மிக்க மகிழ்ச்சியே. என்னுடைய வாழ்த்துக்கள் அய்யா!

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கும், வாழ்த்திற்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

  பதிலளிநீக்கு
 15. ஹிந்தியைப் பற்றிய நிறைய விடயங்கள் அறிந்தேன் நண்பரே தொடர்கிறேன்
  தங்களின் 400 வது பதிவு விரைவில் 500 ஐத் தொட வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி தேவக்கொட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு