வெள்ளி, 6 நவம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.10

1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களாகியாக நாங்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டக் குரல் முழங்கி அமைதியான முறையில் ஊர்வலத்தை சிதம்பரத்தில் நடத்திவிட்டு பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் கூடினோம்.மறுநாள் அதாவது 26 ஆம் நாள் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் NCC மாணவர்கள் பங்கேற்பதா வேண்டாமா என்று மாணவர் பொதுச் செயலர் சொல்லவேண்டும் எனக் கேட்டபோது அதற்கு அவர் ‘ நான் இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, அவரவர்கள் விருப்பம்போல் முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.’ என்று சொல்லி நழுவிக்கொண்டார். என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.

அதற்கான காரணத்தை சொல்லு முன்பு எங்களது பல்கலைக்கழக விடுதியில் மாணவ பொதுச் செயலரை தேர்ந்தெடுப்பது பற்றி சொல்லலாமேன எண்ணுகிறேன். எங்களது பல்கலைக்கழகத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்காக அப்போது மூன்று உணவு விடுதிகள் இருந்தன. Western hostel என அழைக்கப்பட்ட விடுதியில் பொறியியல் படிக்கும் மாணவர்களும், Eastern hostel என அழைக்கப்பட்ட விடுதியில் கலை, பொது அறிவியல். வேளாண் அறிவியல் மற்றும் வணிகவியல் படிக்கும் மாணவர்களும் தங்கியிருந்தனர். மகளிர்க்காக தனி விடுதி ஒன்றும் இருந்தது.

நான் தங்கியிருந்த Eastern hostel விடுதியில் ஒவ்வொரு ஆண்டும் சூலைத் திங்களில் அங்கிருந்த 14 உணவகங்களுக்காக (Mess), அதில் உணவருந்தும் மாணவர்களிலிருந்து ஒருவரை உணவக சார்பாளராக (Mess Representative) தேர்தல் மூலம் தேர்ந்தேடுப்பதுண்டு. பின்பு அவர் தனக்கு உதவியாக ஐந்து அல்லது ஆறு சக மாணவர்களை உணவகக் குழு உறுப்பினராக (Mess committee members) நியமிப்பார். இவர்கள் விடுதியில் எல்லாம் சரியாக நடைபெறுகிறதா என கண்காணிக்க அவருக்கு உதவியாக இருப்பார்கள்.

இந்த 14 உணவு சார்பாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலோடு, ஒரு பொதுச் செயலர் (General Secretary), ஒரு நுண்கலைச் செயலர் (Fine Arts Secretary), மற்றும் ஒரு பொது நலச் செயலர் (Welfare Secretary),ஆகிய பதவிகளுக்கும் தேர்தல் நடக்கும். இதில் விடுதியில் தங்கி இருக்கும் அனைவரும் போட்டியிடலாம்.

அந்த தேர்தல் நடக்கும் சமயம், விடுதியில் மாலையிலிருந்து இரவு வரை ஒரே கோலாகலமாக இருக்கும். தேர்தலில் நிற்போர் தங்களது ஆதரவாளர்களோடு ஒவ்வொரு அறைக்கும் வந்து மாணவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார்கள். விடுதி வளாகம் முழுதும் வாக்கு கேட்கும் பதாகைகள் (Banners) கட்டப்பட்டிருக்கும்.

அந்த தேர்தலில் அரசியல் கட்சி சார்பில் மாணவர்கள் போட்டியிடாவிட்டாலும் அவர்கள் எந்த கட்சியின் ஆதரவாளர்கள் என்பதை அவர்கள் தரும் துண்டறிக்கை (Notice) யில் உள்ள சொல்லாட்சியும் (Wording) அவர்களது பெயரில் உள்ள வண்ணங்களும் காட்டிவிடும். (அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழக, இந்திய மற்றும் வெளி நாட்டு அரசியலுக்கு பல தலைவர்களை தந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.)

அந்த துண்டறிக்கையில் போட்டியிடும் மாணவர் பெயர் மூவண்ணத்தில் அச்சிடப்பட்டிருந்தால் அவர் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர் என்றும் இரு வண்ணத்தில் அச்சிடப்பட்டிருந்தால் அவர் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரிப்பவர் என்றும் புரிந்துகொள்ளலாம். இது இல்லாமல் நடு நிலை வகிக்கும் மாணவர்களும் போட்டியிடுவதுண்டு.

ஆனால் தேர்தல் முடிந்து தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒவ்வொரு அறைக்கும் வந்து இனிப்பு கொடுத்து முடிந்ததும், விடுதி பழைய நிலைக்கு திரும்பிவிடும். நான் படித்தபோது ஒரு தடவை கூட மாணவர்களிடையே தேர்தலில் மோதல் ஏற்பட்டதில்லை.

(எனது விடுதி வாழ்க்கை பற்றி ‘நினைவோட்டம்’ தொடர் பகுதியில் விரிவாக எழுத இருக்கிறேன்)

அந்த ஆண்டு (1964-65) நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பு மாணவர் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.(இப்போது புரிந்திருக்கும். அவர் ஏன் அந்த போராட்டதில் முடிவெடுக்காமல் விலகிக்கொண்டார் என்று)

இந்தியை முதன்மை அலுவலக மொழியாக கொண்டுவர முயற்சிக்கும் காங்கிரஸ் அரசின் கொள்கையை எதிர்க்கும் போராட்டத்தை, எப்படி காங்கிரஸ் சார்புள்ள ஒருவரால் ஆதரிக்கமுடியும்? அதே சமயம் பெரும்பான்மை மாணவர்களின் முடிவை எதிர்க்கவும் அவரால் முடியவில்லை. அதனால் தான் ‘நான் இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை .அவரவர்கள் விருப்பம்போல் முடிவெடுத்துக்கொள்ளுங்கள் .’ என்று சொல்லி நழுவிக்கொண்டார்.

பெரும்பான்மையான மாணவர்கள் தேசிய மாணவர் படையில் ஆணைகள் இந்தி மொழியில் இருப்பதால் மறு நாள் நடக்க இருக்கும் அணிவகுப்பில் பங்கு கொள்வதில்லை என முடிவெடுத்ததால், நாங்கள் மறுநாள் நடக்க இருக்கும் அணி வகுப்பை புறக்கணிக்க முடிவெடுத்து விடுதிக்குத் திரும்பினோம்.


இதோடு இந்த போராட்டம் தற்காலிகமாக முடிவு பெரும் என நினைத்திருந்த எங்களுக்கு அன்று மாலை 6.30 மணி திருச்சி வானொலியின் தமிழ் செய்தி தந்த தகவல் அதிர்ச்சியைத் தந்தது. அதனால் ஏற்பட இருக்கின்ற சங்கிலித்தொடர் நிகழ்வுகளில் எங்களில் ஒருவரை பலி கொடுக்கப்போகிறோம் என்று அப்போது நினைத்துக்கூட பார்க்கவில்லை.
தொடரும்32 கருத்துகள்:

 1. வணக்கம் நண்பரே
  இவ்வளவு விடயங்களையும் டைரிக் குறிப்பிலிரு்து எடுக்கின்றீர்களா ? அல்லது நினைத்துப் பார்க்கிறேன் என்று நினைகளை கொண்டு எழுதுகின்றீர்களா ? எனபது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது நல்ல இடத்தில் சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள் தெரிந்து கொள்ளும் ஆவலில்...
  தொடர்கிறேன் நண்பரே..
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! நான் நாட்குறிப்பு எழுதுவதில்லை. எனது நினைவில் உள்ளவைகளையே எழுதுகின்றேன்.

   நீக்கு
 2. // ஆனால் தேர்தல் முடிந்து தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒவ்வொரு அறைக்கும் வந்து இனிப்பு கொடுத்து முடிந்ததும், விடுதி பழைய நிலைக்கு திரும்பிவிடும். நான் படித்தபோது ஒரு தடவை கூட மாணவர்களிடையே தேர்தலில் மோதல் ஏற்பட்டதில்லை. //

  ஆமாம் அய்யா. மாணவர் தேர்தலில் அரசியல் அவ்வளவாக கலக்காத நேரம்அது. இந்த தேர்தல் முடிந்ததும் அவரவர் தங்கள் காரியத்திற்கு, படிப்பில் கவனம் செலுத்த தொடங்கி விடுவார்கள். இந்தி எதிர்ப்பிற்குப் பின்னும், தி.மு.க உடைந்த பிறகும் மாணவர் தேர்தல் என்பது கட்சித் தேர்தல் போலாகிவிட்டது. மாணவர்கள் இடையேயும் மோதல்கள் உண்டாகி விட்டன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 4. தங்கள் அனுபவத்துடன் வரலாற்றை விரிவாக சொல்லிச் செல்லும் விதம் அருமை!
  தொடர்கிறேன்.
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.P.செந்தில் குமார் அவர்களே!

   நீக்கு
 5. வணக்கம்.

  உங்கள் எழுத்தின் வழி இறந்தகாலப் பெருவெள்ளம் கண்முன்னே சுழித்தோடுகிறது.

  தன்னனுபவங்களை மொழியில் காட்சிப்படுத்தும் நுட்பங்கள் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை.

  தங்களுக்கு அது கைவந்திருக்கிறது.


  ஒரு நாள் ஆற அமர்ந்து உங்கள் பதிவுகள் அத்தனையும் வாசிக்க வேண்டும்.

  வாசிப்பேன்.


  தொடர்கிறேன்.


  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! எனது எல்லா பதிவுகளையும் ஓய்வாக இருக்கும்போது படித்து தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

   நீக்கு
 6. 1965 .... அப்போது நான் பள்ளியில் 10th Std. படித்து வந்தேன். அப்போதெல்லாம் 11th Std. என்பதே SSLC யாகும். அதன்பின் ஓராண்டு மட்டும் PUC .... அதன்பிறகு மூன்றாண்டுகள் கல்லூரிப் படிப்பு. இப்போதுபோல +1; +2 எல்லாம் கிடையாது.

  அரசியல்வாதிகளால் பள்ளி நிர்வாகங்கள் மிரட்டப்பட்டு, பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, தங்களின் மாணவர்களின் பேரணியைக் கூட்டித் தலைமை ஏற்று, கடும் வெயிலில் ஊர்வலமாகக் கூட்டிப் போவதும், கோஷம் எழுப்புவதுமாக சுமார் மூன்று மாதப்படிப்புகளை வீணாக்கி மகிழ்ந்தார்கள்.

  //அதனால் ஏற்பட இருக்கின்ற சங்கிலித்தொடர் நிகழ்வுகளில் எங்களில் ஒருவரை பலி கொடுக்கப்போகிறோம் என்று அப்போது நினைத்துக்கூட பார்க்கவில்லை.//

  அந்த பலியான மாணவரின் பெயர் இன்றும்கூட எனக்கு நினைவில் உள்ளது. அது சரிதானா என்று தங்களின் அடுத்த பகுதிகளில் தெரிந்து கொள்கிறேன். முதலில் அவரை யாரோ கொன்று போட்டதாகச் சொன்னார்கள். பிறகு அவரே தற்கொலை செய்துகொண்டதாக அவரின் தந்தையை விட்டே வாக்குமூலம் தரச்சொல்லி நிர்பந்தப்படுத்தினார்கள் என எனக்கு ஓர் ஞாபகம் உள்ளது.

  தமிழ்நாடு முழுக்க இதுபோல ஏராளமானவர்கள் பலியானதும், பஸ், ரெயில், கார், டூ வீலர் போன்ற அனைத்து போக்குவரத்து வாகனங்களும் சேதாரப்படுத்தப்பட்டதும், கட்டடங்களுக்கும், கடைகளுக்கும், தபால் ஆபீஸ், ரெயில்வே ஸ்டேஷன், தந்தி ஆபீஸ் போன்ற மத்திய அரசு அலுவலங்களுக்கும் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டதும் மறக்க முடியுமா?

  பெயர் பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் யாவும் அன்று எல்லா ஊர்களிலும் தார் பூசப்பட்டன அல்லவா.

  நாம் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருவதை நினைவூட்டி தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன்அவர்களே! நானும் SSLC +PUC படித்துவிட்டு கல்லூரியில் படித்தவன் தான். நீங்கள் நினைக்கும் மாணவரும் நான் படித்தபோது இறந்தவரும் ஒருவறல்ல. அவர் பற்றி பதிவில் எழுத இருக்கிறேன்.

   அப்போதைய அரசு நினைத்திருந்தால் உயிர்ச் சேதம் பொருட் சேதம் ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம். என்ன செய்ய தன்முனைப்பு (Ego) தடுத்துவிட்டதே!

   நீக்கு
 7. தங்களது சங்கிலித் தொடர்போல் சங்கதியை சொல்லி வரும் பதிவு ஒரு மைல்கல்.

  இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் நிகழ்வுகள் எழுத்துருவில் இருந்தாலும், படிப்போர்க்கு நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்து விடுகிறது.


  இதுபோன்றதொரு கலை , தங்களது இந்த வரலாற்று பதிவில் பளிச்சிடுகிறது அய்யா!

  "தாங்கள் படித்தபோது, ஒரு தடவை கூட மாணவர்களிடையே தேர்தலில் மோதல் ஏற்பட்டதில்லை."
  வியந்தேன்.

  இன்றைய நிலையை எண்ணி தலை குனிந்தேன்.

  பண்பு சொல்லிய பாடம்!

  நன்றி அய்யா!

  தொடரும்.

  த ம +

  நட்புடன்,
  புதுவை வேலு  "தாங்கள் படித்தபோது, ஒரு தடவை கூட மாணவர்களிடையே தேர்தலில் மோதல் ஏற்பட்டதில்லை."
  வியந்தேன்.

  இன்றைய நிலையை எண்ணி தலை குனிந்தேன்.

  பண்பு சொல்லிய பாடம்!

  நன்றி அய்யா!

  தொடரும்.

  த ம +

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும், பாராட்டுக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

   நீக்கு
 8. சம்பவங்களைக் கோர்வையாக அழகாகத் தொகுத்து நடந்ததை கண்முன் காட்டியிருக்கிறீர்கள்;காத்திருக்கிறேன் பின்னர் நடந்தவற்றை அறிய

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 9. வணக்கம்
  ஐயா
  அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் , தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

   நீக்கு
 10. படிக்கப் படிக்க ஆர்வமாக அதே சமயம் என்ன நடக்குமோ என்று நினைக்குமளவு பதிவு உள்ளது. பதிவின் இறுதியில் தாங்கள் தந்துள்ள வரிகள் அடுத்த பதிவினை எதிர்பார்க்கும் வகையில் அமைந்துள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 11. நிகழ்வுகளை கண்முன் காண்பதுபோல தொகுத்து கூறியிருக்கிறீர்கள். தமிழ் மொழியில் அக்கறையிருந்தால் தமிழ் நாடு அரசாங்கம் இத்தகைய விபரங்களை கட்டாயமாகப் பாடநூல்களில் சேர்த்திருக்கக் கூடும். ஆனால் தமிழ் உணர்வினை உபயோகித்து பொருள் சேர்த்தவர்கள்தான் அதிகம் அரசாங்கத்தில் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் மொழியின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! தமிழக அரசுக்கு தமிழ் மொழி மீது அக்கறை இருப்பதாக தெரியவில்லை.தமிழ் மொழிக்காக நடந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தி மய்ய அரசும் பாட நூலில் சேர்க்கிறது. என் செய்ய!

   நீக்கு
 12. இடையில் சில பகுதிகள் விட்டுவிட்டேன்! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கும் தொடர்வதற்கு நன்றி திரு ‘தளிர் சுரேஷ் அவர்களே!

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

  பதிலளிநீக்கு

 15. இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் அய்யா

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வாழ்த்துக்கு நன்றி திரு புதுவை வேலு அவர்களே! தங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 16. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 17. தங்களுக்கும்ஸ தங்களது குடும்பத்தாருக்கும் எமது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! இன்று மாலை தாங்கள் கைப்பேசியில் அழைத்து வாழ்த்து சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாய். இருந்தது.

   நீக்கு